கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்?

 

கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.அது 25ஆம் இடம்பெறலாம் என்று தெரிகிறது.இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கலந்து கொள்ளப்போவதிவில்லை என்று அறிவித்திருந்தது.அதற்கு டெலோ ஒரு விளக்கக்  கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது.

பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறி வருகிறார்.ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை.இம்முறை பேச்சுவார்த்தை கடைசிவேளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.முன்னைய அழைப்புக்களைப் போலன்றி இம்முறை பேச்சுவார்த்தை மெய்யாகவே நடக்குமாக இருந்தால், ஜனாதிபதி அவ்வாறு பேச முன்வருவற்கு சுட்டிப்பாக பின்வரும் காரணங்கள் இருக்க முடியும்

இலங்கைத் தீவு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கியிருக்கிறது. அதற்கு பிரதியுபகாரமாக திருகோணமலையில் சம்பூரில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டம் ஒன்றை நிறுவுவதற்கு இந்திய நிறுவனத்மொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதுபோலவே மன்னாரிலும் பூநகரியிலும் இருவேறு மின்சக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியா கடனைக் கொடுத்து கொழும்பின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கலாம்.குறிப்பாக இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கம் என்ன கேட்கிறது? 13வது திருத்தத்தை அடிப்படியாக வைத்து ஒரு தீர்வை வழங்குமாறு கேட்கிறது. உடனடிக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்றும் கேட்கிறது. எனவே இதுவிடயங்கள் தொடர்பாக தமிழ்த் தரப்புடன் ஒரு சமரசத்துக்கு வருவது போன்ற ஒரு தோற்றத்தை காட்டவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.

மேலும்,இம்மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்குபற்றுறுவதற்காக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.இந்திய பிரதமர் மோடியும் கொழும்புக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் அதிகமாக உள்ளன. அவர் இந்தியாவில் இருந்து நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருவார் என்றும் பலாலி விமான நிலையத்தில் இறங்குவார் என்று ஊககங்கள் உண்டு. ஆனால் இந்தியா தனது பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்தை இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவில்லை.

இலங்கைத்தீவின் வடபகுதியோடு இந்தியாவை இணைக்கும் நான்கு  அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா ஏற்கனவே முன்மொழிந்தது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான படகுப் போக்குவரத்து, மூன்றாவது  யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ள கலாச்சார மண்டபம்.நாலாவது மன்னாரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு  ஒரு பயணிகள் படக்குச் சேவை.

இதில் பலாலி விமான நிலையம் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் அவருடைய பதவிக்காலம் முடியும் கடைசிநேரத்தில் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டது.அடுத்த தேர்தலில் ராஜபக்சக்கள் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில் இந்தியாவின் தூண்டுதலால் ரணில் அவ்வாறு அவசரஅவசரமாக பலாலி விமான நிலையத்தை திறந்தார் என்று அப்பொழுது கருதப்பட்டது.அது ஒரு சிறிய விமான நிலையம். உள்ளூர் போக்கு வரத்துக்குரிய வசதிகளைத்தான் கொண்டிருக்கிறது. 70 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய விமானங்கள்தான் அதில் வந்து இறங்கலாம். எனவே விமான நிலையத்தை அடுத்தகட்டத்துக்கு விஸ்தரித்து பன்னாட்டு விமானச் சேவைகளை தொடங்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. அதற்கு வேண்டிய நிதியையும் இந்தியா வழங்கக் காத்திருக்கிறது.ஆனால் பெருந்தொற்று நோயைக் காரணம் காட்டி கோத்தாபய அரசாங்கம் விமான நிலையத்தை திறப்பதை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி அந்த விமான நிலையம் மறுபடியும் இயங்கத் தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படி பல தடவை  அறிவிக்கப்பட்டுவிட்டது.இலங்கை அரசாங்கம் அந்த விமான நிலையத்தை விஸ்தரிக்கும் திறப்பதற்கும் பின்னடிக்கின்றது. ஏனெனில் பலாலி விமான நிலையம் அமைந்திருப்பது இலங்கைத்தீவின் வட பகுதி இராணுவ தலைமையகத்தில் ஆகும். வடபகுதி படைத்துறை கட்டமைப்பின் இதயமான பகுதியில் ஒரு விமான வழியைத் திறப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவுகளைப் பொறுத்தவரை ராணுவமய நீக்கம்தான். ஏனெனில் ஒரு படைக்கட்டமைப்பின் கேந்திரமான இடத்தில் சிவில் போக்குவரத்தை அனுமதிப்பது என்பது அவ்வாறான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் தன் படைத்துறை நோக்கு நிலையிலிருந்தே பார்க்கும். அதனால்தான் விமான நிலையத்தை விஸ்த்தரிப்பதற்கும் திறப்பதற்கும் பின்னடிக்கிறது.

அடுத்தது காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை.அதற்குத் தேவையான பெரிய கப்பல்கள் இப்பிராந்தியத்தில் இல்லை என்றும் அவை பிராந்தியத்துக்கு வெளியிலிருந்து வாடகைக்கு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான படகுச் சேவை ஒன்றை தொடங்குவதற்கான வர்த்தக உடன்படிக்கை ஒன்று இலங்கை மற்றும் இந்திய கொம்பெனிகள் இரண்டுக்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் எழுதப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை மிகவும் பாராட்டி பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு முக்கியஸ்தரான வானதி சீனிவாசன் தனது ருவிட்டரில் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும்கூட. அக்கப்பல் சேவையை எதிர்பார்த்து காரைக்கால் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. கப்பல் சேவையை தொடங்குமாறு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மட்டும் கேட்கவில்லை. அரசாங்கத்தோடு நிற்கும் வியாழேந்திரன் போன்றவர்களும் கேட்கின்றார்கள். கடந்த ஆண்டு வியாழேந்திரன் பாண்டிச்சேரிக்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டார். அங்கே வைத்து அவர் ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார். இதனிடையே இதே கடற்பாதையில் மற்றோரு சொகுசுப் படக்குச் சேவை தொடங்கப்படவிருப்பதாக அண்மையில் ஒரு செய்தி வெளி வந்தது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இக்கடல் வாசலைத் திறக்க பின்னடிக்கிறது. பலாலி விமான நிலையத்துக்கு சொன்ன அதே காரணம் இதற்கும் பொருந்தும். ஏனெனில் காங்கேசன்துறை என்பது வடபகுதி ராணுவ படைக் கட்டமைப்பின் கேந்திரமான இடத்தில் காணப்படும் ஒரு துறைமுகம் ஆகும். அதை சிவில் போக்குவரத்துக்கு திறந்துவிட்டால் அதுவும் நீண்ட கால நோக்கில் அப்பகுதியை ராணுவ மயநீக்கம் செய்துவிடும். எனவே இலங்கை அரசாங்கம் அதற்கு பின்னடிக்கின்றது.அதாவது தனது வடபுகுத்திக்கான படைத்துறைக்கு கேந்திர ஸ்தானத்தில் இந்தியாவை நோக்கி ஒரு வான் வாசலையும் கடல் வாசலையும்  திறந்து விஸ்தரிக்க இலங்கை உடன்படுமா? கடந்தகிழமை புதுடில்லிக்குப் போன பசில் ராஜபக்ச பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கிறார்.அச்சந்திப்பில் இவ்விடயங்கள் உரையாடப்பட்டிருக்குமா? இந்திய பிரதமர் இலங்கைக்கு வருவதாக இருந்தால் மேற்கண்ட திட்டங்களை அவற்றின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்பாரா?அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான சமிக்கைகளை காட்டாது என்ற ஒரு எதிர்பார்ப்பிருந்தால், மோடி இலங்கைக்கு வருவாரா?

மோடியின் வருகை ஜெய்சங்கரின் வருகை போன்றன இன்றுவரையிலும் ஊகங்கள்தான். ஆனால் நெருக்கடி காலத்தில் இந்தியா இலங்கைக்கு கடன் கொடுக்கிறது.அதற்கு பிரதியுபகாரமாக இலங்கை இந்தியாவைத் திருப்திப்படுத்தும் உடன்படிக்கைகளுக்குத் தயாராகிவிட்டது.தமிழ்த் தரப்போடு பேச்சுக்குத் தயார் என்று காட்டுவதும் அந்த நோக்கிலானதே.

இரண்டாவதாக ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஒரு தகவல் திரட்டும் பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்மானத்தின்படி இப்பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது. இப்பொறிமுறை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான சீனாவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் மேற்படி பொறிமுறையை பலவீனப்படுத்தும் விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாக கருதப்படுகிறது. அப்பொறிமுறையின் செயற்படு காலம் முன்பு ஒரு வருடம் என்று அறிவிக்கப்பட்டது. இப்பொழுது ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.அதன் அங்கத்தவர் எண்ணிக்கை முன்பு 12 என்று கூறப்பட்டது.இப்பொழுது எடடாகக் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பொறிமுறையைத் தரம் குறைப்பதில் இலங்கையும் அதன் நண்பர்களும் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

அதோடு உள்நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தொகுதி கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு புதிதாக நிதியை ஒதுக்கி அவை வினைத்திறனோடு செயற்படுவதாக ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்பி வருகிறது.காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு ஒரு லட்ஷம் ரூபாய் நட்டஈடு அறிவித்திருக்கிறது.இவற்றின்மூலம் ஐநாவைச் சமாளிக்கலாம் என்று அரசாங்கம் நம்புகின்றது.

இந்த அடிப்படையில்தான் கூட்டமைப்பை சந்திக்க முற்பட்டுவதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நல்லிணக்கத்துக்கு தயார் என்று ஒரு செய்தியை அவர் ஐநாவுக்கும் வழங்கலாம்,இந்தியாவுக்கும் வழங்கலாம். எனவே இப்போதிருக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், இந்தியாவையும் ஐநாவையும் சமாளிக்கும் நோக்கத்தோடு கோத்தாபய, கூட்டமைப்பை சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.வெளியரங்கில் நெருக்கடிகளைக் குறைப்பதே அவருடைய இந்த அழைப்பின் நோக்கம். ஆனால் நாட்டுக்கு வெளியே அவர் நெருக்கடிகளைத் தணிக்க முயற்சித்துக் கொண்டிருக்க, நாட்டுக்குள்ளேயோ நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அப்படியொரு நெருக்கடி காரணமாகத்தான் கூட்டமைப்புடனான புதன்கிழமை சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *