முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார்.உண்மைதான்.கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே.
இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள்.துக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது,அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி,விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமராக்கள் உலகை நிர்வாணமாக்கிவிட்டன. படுக்கை அறை வரை கமரா வந்துவிட்டது.கழிப்பறைவரை கமரா வந்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில், நினைவுகூர்தல் அதன் ஆன்மாவை இழந்து விடாமல் இருக்கும் விதத்தில் அதை எப்படி ஒழுங்கமைப்பது? யார் ஒழுங்கமைப்பது?
முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஒரு செயற்பாட்டாளர் சொன்னார்…..பரந்தன், சாலையில் தான் குடித்த கஞ்சி மிகச் சுவையாக இருந்தது என்று. காலை ஆகாரத்தை அருந்தாமல் சென்ற தனக்கு அது பசிக்கு விருந்தாக இருந்தது என்று.ஒரு உள்ளூராட்சி சபை உறுப்பினர் சொன்னார்…..நாங்கள் முதலில் கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை. பாலை குறைத்துச் சேர்த்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அதை வழமையான கஞ்சி போல சமைத்தோம் என்று. காலிமுகத்திடலில் காய்ச்சப்பட்ட கஞ்சி மஞ்சள் நிறமாக இருந்தது.சிங்கள மக்கள் தமது சமையலில் மஞ்சளை எப்படியாவது சேர்ப்பார்கள். மேலும் அது கஞ்சியாகத் தெரியவில்லை. அது இறுகிய பால் சோறு போலக் காணப்பட்டது. பல்வேறு இடங்களிலும் சமைக்கப்பட்ட கஞ்சி வெவ்வேறு சுவைகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கஞ்சிக்கு ஒரு பொதுவான சமையல் குறிப்பு பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.
ஒரு பொதுவான சமையல் குறிப்பு வழங்கப்பட வேண்டும்.ஏனென்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு இனப்படுகொலையின் நினைவுப் பொருள்.இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் அகதிகள் புனர்வாழ்வு கழகம் கொட்டில்களை அமைத்து கஞ்சி காய்ச்சியது.ஆனந்தபுரம் சண்டை வரையிலும் தேங்காய் கிடைத்தது. அதன்பின் தேங்காய் பாலுக்கு பதிலாக பால்மா பாவிக்கப்பட்டது.இரண்டு பால்மாப் பெட்டிகள் சேர்க்கப்பட்டு கஞ்சி சமைக்கப்பட்டது. அது பாலில்லாத, பயறில்லாத, சுவையில்லாத கஞ்சி. பசிக்குக் குடித்த கஞ்சி. பீரங்கிகளுக்குப் பசியெடுத்த காலத்தில் நிராயுதபாணிகளான மக்களுக்குப் பசியிருக்கவில்லை. மரண பயத்தின் முன் சுவை நரம்புகள் மரத்துப் போயிருந்தன. ருசி தெரியவில்லை. அந்தந்த வேளைக்கு எதையாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பினால் சரி என்ற நிலைதான் இருந்தது.திடீரென்று கூவிக்கொண்டு வரும் எறிகணையியிலிருந்து தப்பி பதுங்குகுழிக்குள் ஓடுவதற்கு அல்லது பாய்ந்து மறைப்புக்குள் நுழைவதற்கு உடலில் சக்தி வேண்டும். அந்த வலுவைத் தரும் எதையாவது சாப்பிட்டாலும் சரி என்ற நிலைதான் இருந்தது.
அக்காலகட்டத்தில் கஞ்சி மட்டும் பொது உணவாக இருக்கவில்லை.ரொட்டி இருந்தது.வாய்ப்பான் இருந்தது. உலக உணவு ஸ்தாபனம் வழங்கிய கோதுமை மா, சீனி எண்ணை என்பவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாய்ப்பன்கள்.
கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக அறிமுகப்படுத்தியது தமிழ் சிவில் சமூக அமையம்தான்(TCSF). 2018ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் அது அறிமுகப்படுத்தப்பட்டது.உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இனப்படுகொலைக் களமொன்றின் நினைவைப் பகிர,உணவையே பயன்படுத்தலாம் என்று தமிழ் சிவில் சமூக அமையம் சிந்தித்தது. அதன் விளைவாகவே கஞ்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது சுவையற்றது. அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், அது இனப்படுகொலையின் சுவை எனலாம். சுவையின்மைதான் அதன் நினைவு. சுவையின்மைதான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட வேண்டிய செய்தியும் ஆகும். அந்தக் கஞ்சி ஏன் சுவையற்றது? என்று புதிய தலைமுறை கேட்கும்பொழுது மூத்த தலைமுறை இனப்படுகொலையின் கதையை அவர்களுக்கு கூற வேண்டும். எனவே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு துயரக் கஞ்சி.ஒரு நினைவுக் கஞ்சி. இரத்தத்தின்.காயத்தின், கண்ணீரின்,அச்சத்தின் சுவை அது.
சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி நாளில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து இந்துக்கள் அருந்தும் சித்திரைத் கஞ்சி ஒருவிரதக் கஞ்சி. அதுபோல முஸ்லிம்களின் நோன்புக் கஞ்சியும் ஒரு தவக்காலக் க்கஞ்சிதான். அப்படித்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒரு நினைவுக் கஞ்சி. எனவே அது நினைவுகளை கடத்துவதாக அமைய வேண்டும். அதன் சுவையின்மைதான் அந்த நினைவு.இந்த அடிப்படையில் சிந்தித்தால்,முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கென்று என்று ஒரு பொதுவான சமையல் குறிப்பு வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை என்பதனை உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேற்கண்ட இரண்டு விடயங்களும் அதாவது கண்ணீரின் பின்னணியில் செல்பி எடுப்பது, கஞ்சிக்கு சுவை சேர்ப்பது ஆகிய இரண்டு விடயங்களும், தமிழ் மக்களுக்கு எதை உணர்த்துகின்றனவென்றால், நினைவுகூர்தல் ஒரு மையத்தில் இருந்து முழுமையாகத் திட்டமிடப்படவில்லை என்பதைத்தான். அவ்வாறு திட்டமிடப்பட்டிருந்திருந்தால் எப்படிக் கஞ்சி காய்ச்ச வேண்டும்? நினைவுகூரும் மைதானத்தில் கைபேசிகளைப் பயன்படுத்தலாமா? இல்லையா? எதைப் படமாக்க வேண்டும்? படமாக்கக் கூடாது? போன்ற விடயங்களை ஒரு மையத்திலிருந்து முடிவெடுத்திருக்கலாம்.
அது மட்டுமல்ல சித்திரைக் கஞ்சி என்பது விரதத்தின் போது குடிப்பது. நோன்பு கஞ்சியும் நோன்பிருந்து குடிப்பது.அதுபோலவே முள்ளிவாய்க்கால் கஞ்சியும் துயரங்களை நினைவுகூர்ந்து,துயரங்களைப் பகிர்ந்து குடிப்பது,என்ற அடிப்படையில் நினைவுகளைப் பகிர்வதற்கும் நினைவுகளைத் தலைமுறைகள் தோறும் கடத்துவதற்கும் உரிய புத்தாக்கத்திறன் மிக்க ஏற்பாடுகளைக் குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இறுதிக்கட்டப் போரில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை.பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.முள்ளிவாய்க்காலில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை.தமிழ்ப்பகுதிகள் எங்கும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறுதிக்கட்டப் போரில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்,ஒரு குறுகிய காலகட்டத்துக்குள்,அதிக தொகையினர் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் முள்ளிவாய்க்காலுக்குள்ள முக்கியத்துவம்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் பதம் அல்ல. அது ஒர் அரசியல் பதம். அது ஒரு கிராமத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது முழுத் தமிழ் சமூகத்துக்கும் சொந்தமானது. அது ஒரு குறியீடு. உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்ச்சிப்புள்ளி அது.அந்த அடிப்படையில் நினைவுகூரல் திட்டமிடப்பட வேண்டும். கூட்டுக் கோபத்தை கூட்டுத்துக்கத்தை எப்படி கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவது என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.அதற்கு வேண்டிய படைப்புத்திறன் மிக்க வழிமுறைகளையும் கட்டமைப்புகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.
நினைவு கூர்வதற்கான வெளியை தான் தடுக்கப் போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.அதேசமயம் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவுகூர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல்தான்.அதைவைத்து அரசியல்வாதிகள் தேர்தல்மைய அரசியல் செய்கிறார்கள் என்பது வேறு விடயம். ஆனால் அது அரசியல்தான்.அது ஒரு அரசியல் செயற்பாடுதான்.கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றும் ஓர் அரசியல் செயற்பாடு அது.
அதை, கட்சி கடந்து, மதம் கடந்து, கிராமம் கடந்து, மாவட்டம் கடந்து சிந்திக்க வேண்டும்.அதற்குரிய பொதுக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.உலகு முழுவதிலுமுள்ள தமிழ்மக்களின் நவீன வரலாற்றில் ஒரு குறுகிய காலகட்டத்தில்,ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள்,அதிக தொகை தமிழர்கள் கொல்லப்பட்டது முள்ளிவாய்க்காலில்தான். எனவே முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஓர் உணர்ச்சிப்புள்ளி ஆகும்.அவ்வாறு உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கு உண்டு.ஏனெனில் இனப்படுகொலையை நினைவு கூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக்கோரும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதிதான். அவ்வாறு நீதியைப் பெறுவது என்றால் அதற்கு உலகம் முழுவதும் லொபி செய்ய வேண்டும். ஏனெனில் அரசுகளின் நீதி எனப்படுவது தூய நீதி அல்ல. அது அரசியல் நீதிதான்.
தமிழ்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதனை பொதுவாக உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரேனில் ரஷ்யா புரிவது இனப்படுகொலை என்று கூறிய அமெரிக்கா தமிழ் மக்களுக்கு நடந்ததை இனப்படுகொலை என்று கூறவில்லை. கடந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய இனப்படுகொலையைப் புரிந்த ஆர்மீனியா இன்று வரையிலும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.அதை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டின் பின்னர்தான் அமெரிக்கா இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டது. ஆனால் கடந்த வாரம் கனேடிய நாடாளுமன்றம் இலங்கைத் தீவில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதிக்கான போராட்டத்தில் உலகப் பரப்பில் உள்ள தமிழ்மக்கள் அனைவரினதும் ஆதரவை திரட்ட வேண்டும்.அவ்வாறு உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் உணர்ச்சிப்புள்ளி முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல்தான்.எனவே அதை அதன் உலகளாவிய பரிமாணத்தில் சிந்தித்து நினைவு கூர்தலுக்கான பொது ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.நினைவுக்கஞ்சிக்குரிய ஒரு பொதுச் சமையல் குறிப்பு தயாரிக்கப்படவேண்டும். அடுத்தடுத்த தலைமுறைக்கு நினைவுகளைக் கடத்துவதற்குரிய புத்தாக்க திறன்மிக்க ஏற்பாடுகளும் அவ்வாறு ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட ஒன்றிணைந்த செயற்பாட்டை கடந்த 18ஆம் திகதி காணமுடியவில்லை.
ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவது என்றால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும். கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். எனவே இந்த விடயத்தில் நினைவு கூர்தலுக்கான பொது அமைப்பை பலப்படுத்தி, ஜனநாயக மயப்படுத்தி அனைத்து தரப்பினரும் பங்களிக்கும் உலகளாவிய ஒரு அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டும். அப்பொழுதுதான் மே 18 ஐ அதன் மெய்யான பொருளில் அனுஷ்டிக்கலாம். அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம்.
ஆதவன் இணையத் தளத்தில் முதலில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இது. பின்னர் விரித்து எழுதப்பட்டது.