கோட்டாகோகமவின் 50ஆவது நாளும் தமிழ் அம்மாக்களின் 1924ஆவது நாளும் 

“தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கம், ஸ்டாலின் தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம்,மற்றும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான தெற்கில் 1980களில் காணாமல் போன குடும்ப அங்கத்தவர் சங்கம்,நிமல்கா பெர்னாண்டோ தலைமையிலான  தெற்கின் அன்னையர் சங்கம் மற்றும் விக்கிரமபாகு, சிறிதுங்க போன்றோர் எப்போதுமே சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழரின்  தேசிய சிக்கல்கள் மற்றும் காணாமல் போனோர் , போர் குற்றங்கள் போன்றவை தொடர்பில் எப்போதுமே முற்போக்கு கருத்துகளை கொண்டவர்கள்தான். இவர்கள் எல்லோரும் எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அந்த வெள்ளை வான் கடத்தல் கொலை காலத்திலிருந்து தெரியும். புதிய சிங்கள சமூகத்தை எப்படி உள்ளே கொண்டு வருவது என பார்க்க வேண்டும்.காலிமுக போராட்டத்தில் கணிசமாக செல்வாக்கு செலுத்தும் குமார் குணரத்தினம் தலைமையிலான முன்னிலை சோஷலிச கட்சி, அனுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை இன்னமும் இந்த மட்டத்துக்கும் வரவில்லை. முன்னிலை சோஷலிச கட்சியுடன் சமீபத்தில் நான் பேசிய போது, தமிழ் தேசிய நிலைபாடுகளை பற்றி, சமீப காலமாக நான் அதிகமாக பேசும் மதசார்பின்மை  பற்றி குறிப்பாக பெளத்த தேரர்கள் பற்றி பேசிய போது, பதில் கூறாமல் புன்னகையுடன் என்னை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எதிர் கருத்து கூறாமல் புன்னகை புரிய வைத்ததே எனது சாதனை என நினைத்துக்கொண்டேன்”

இது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எனது கடந்த வார கட்டுரைக்குப் அனுப்பிய பதில். அவருடைய சம்மதத்தோடு அவருடைய மின்னஞ்சலில் ஒரு பகுதி இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் போராடும் இளையோரின் பின்னணியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செயற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜேவிபியின் மறைமுக மாணவர்,அமைப்பு ஒன்றும் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆவது பிரிகேட் என்று அழைக்கப்படும் அமைப்பும் அங்கே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் உண்டு.இவைதவிர மத குருக்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள்,புத்திஜீவிகள்,கருத்துருவாக்கிகள்,ஊடகவியலாளர்கள் போன்றோரும் அங்கே காணப்படுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட அமைப்பின் முழுமையான செல்வாக்கு அங்கே இல்லை என்று தெரிகிறது.அங்கு காணப்படும் வெவ்வேறு கருத்து நிலைகளைக் கொண்ட அமைப்புகளும் தனிநபர்களும் தங்களுக்கு இடையே ஏதோ ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. அங்கு மைய அதிகாரம் என்று எதுவும் கிடையாது. ஆனால் அங்கே காணப்படும் செயற்பாட்டு அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு இடையே ஏதோ ஒரு செயல்பூர்வ இணைப்பு உண்டு.இது கிட்டதட்ட இன்டர்நெற் வலைப்பின்னலோடு ஒப்பிடத்தக்கது. இன்டர் நெற்றிற்கு மைய அதிகாரம் இல்லை என்றும் கூறுவார்கள்.சமூக வலைத்தளங்களின் எழுச்சிக்குப் பின் உலகம் முழுதும் இடம்பெறும் தன்னெழுச்சிப் போராட்டங்களில் போராடும் அமைப்புக்களுக்கிடையேயான பிணைப்பு ஏறக்குறைய இன்டர்நெற் பண்பு பொருந்தியதாக காணப்படுவது பொதுவாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. கோட்டா கோகமவிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. அதில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பங்கு எந்தளவுக்கு உண்டு என்பது குறித்து சிங்கள மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் அதிகளவு தகவல்களை ஏற்கனவே வெளியே கொண்டு வந்து விட்டன. ஆனால் தமிழ் ஊடகப் பரப்பில் மிகக் குறைந்த அளவே அது தொடர்பான விவரங்கள் வெளியே வந்திருக்கின்றன.

அண்மையில் வீரகேசரியின் செய்தியாளர் ராம் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினத்தை நேர் கண்டார். அது ஒரு முக்கியமான பேட்டி.வீரகேசரியின் சமகளம் நிகழ்ச்சிக்காக அந்த பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.கோட்டா கோகம போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை தமிழில் பேட்டி கண்ட ஒரே ஒரு காணொளி அது. ஆனால் அக்காணொளியை 160 க்கும் குறைவான தொகையினர்தான் இதுவரையிலும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இலங்கைத் தீவில் உல்லாசப்பயணிகள் சாப்பிடும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு செல்கிறார்கள் என்ற அர்த்தத்தில் ஒரு இந்திய யூடியூபர் வெளியிட்ட காணொளி கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.இப்படித்தான் சவுக்கு சங்கர் ஒரு தமிழக ஊடகவியலாளரை நேர்கண்ட காணொளியும் இலட்சக்கணக்கில் பார்க்கப்பட்டிருக்கிறது.அக்காணொளி விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பானது.

இதுபோன்ற காணொளிகளில் ஓர் உண்மை பல பொய்களால் சோடிக்கப்படுகிறது.பார்வையாளர்களைக் கவர்வதற்காக,பரபரப்பிற்காக தகவல்கள் இட்டுக்கட்டப்படுகின்றன.ஆனால் அதிக தொகை பார்வையாளர்கள் அப்படிப்பட்ட காணொளிகளைத்தான் விரும்பி பார்க்கிறார்கள்.சீரியசானதும் தேவையானதும் ஆகிய காணொளிகள் குறைந்த அளவுக்கே பார்க்கப்படுகின்றன.தமிழில் புத்திசாலித்தனத்திற்கும் ஜனரஞ்சகத்திற்கும் இடையிலுள்ள பாரதூரமான தோல்விதரமான இடைவெளியை அது காட்டுகிறது.

சில வாரங்களுக்கு முன் பிபிசி தமிழோசையின் சென்னை நிருபர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். அவர் என்னை நேர்கண்டபொழுது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார் “நாங்கள் தமிழகத்திலிருந்து பெருந்தொகை பணத்தை செலவழித்து இங்கே வருகிறோம். ஆனால் இந்தக் காணொளியை ஐம்பதினாயிரத்துக்கும் குறைவானவர்களே பார்க்கப்போகிறார்கள். ஆனால்  தன் வீட்டின் அறையொன்றில் ஒரு கமராவின் முன் அமர்ந்திருந்து கற்பனை செய்பவரின் காணொளி பல லட்சம் பேர்களால் பார்க்கப்படுகிறது” என்று.

இப்படிப்பட்டதொரு தமிழ் யூடியூப் சூழலில், மீண்டும் குமார் குணரத்தினத்தின் காணொளிக்கு மீண்டும் வருவோம்.அக்காணொளியில் அவர் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி ஒரு தீர்வு என்று கூறுவதைத் தவிர்க்கிறார். மாறாக தமிழ்,சிங்கள,முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் இணைந்து ஒரு தீர்வுக்காக உழைக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார்.ஒற்றையாட்சிக்கு எதிராக கருத்துக் கூறுவதைத் தவிர்க்கிறார்.அவர் தலைமை தாங்கும் ஒரு கட்சிதான் காலிமுகத்திடலில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது என்று எடுத்துக்கொண்டால் கோட்டாகோகம கிராமம் தொடர்பாக தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பது? இக்கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் கட்டப்பட்ட மனோ கணேசனின் கருத்துக்களையும் இங்கே கவனிக்க  வேண்டும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையிலிருந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது.யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பலரும் கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் ஏன் தமிழ் மக்கள் விலகி நின்று பார்க்கிறார்கள் என்பதற்கு அங்கே விளக்கங்கள் கூறப்பட்டன.தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.அதில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்களும் காணப்பட்டன.எனினும் தமிழ்மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் ஒருமித்த கருத்தை அடைவதற்கு மேலும் பயணிக்க வேண்டும் என்பதனை அச்சந்திப்பு உணர்த்தியது.

இது காலிமுகத்திடலுக்கும் பொருந்தும். ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டதும் அங்கே நடந்த ஊடகச் சந்திப்பில் எட்டு அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த எட்டு அம்சங்களில் எதிலும் சிறிய தேசிய இனங்கள் தொடர்பான எந்த ஒரு கோரிக்கையும் காணப்படவில்லை.பொத்தாம் பொதுவாக அடிப்படை உரிமைகள் என்ற ஒரு கோரிக்கை காணப்பட்டது. வீரகேசரி யூடியூப்பிற்கு வழங்கிய நேர்காணலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்தினமும் அப்படித்தான் அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகிறார்.

தமிழ் மக்கள் அடிப்படை உரிமைகளை மட்டும் கேட்கவில்லை.தனி நபர் உரிமைகளை மட்டும் கேட்கவில்லை.கூட்டு உரிமைகளையும் கேட்கிறார்கள். ஒரு தேசிய இனமாக தங்களுடைய கூட்டு உரிமைகளை அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்கிறார்கள்.தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டு ஒரு தேசிய இனத்துக்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.கோட்டா கோகமவில் இருப்பவர்களில் ஒரு சிறு தொகையினர்தான் அவ்வாறான ஒரு தீர்வுக்கு தயாராக காணப்படுகிறார்கள். தமிழ்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்வதற்கும் அந்த சிறியபகுதியினர் தயார்.பெரும்பான்மை தயாராக இல்லை.

கோட்டா கோகம கிராமம் எனப்படுவது சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் அரசுக்கு எதிரான உணர்வுகளின் வெளிப்பாட்டு மையமாக காணப்படுகிறது. அந்த அடிப்படையில் அது முற்போக்கானது. அதேசமயம் அக்கிராமத்தின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளோடு தமிழ்மக்கள் முழு அளவிற்கு உடன்பட முடியாது.கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்த தொழிற்சங்கங்கள் மத்தியிலும் அவ்வாறான கருத்து காணப்பட்டது. காலிமுகத்திடல் போராட்டத்தை தோற்கவிடக்கூடாது என்ற ஒரு பொது உணர்வு அவர்கள் எல்லோர் மத்தியிலும் காணப்பட்டது.ஆனால் அதற்காக அக்கிராமத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

கடந்த 28ஆம் திகதி கோட்டாகோகம உருவாக்கப்பட்டு 50ஆவது நாள் வந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்குப்பின் அக்கிராமத்தில் கூடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு அவதானிப்பு உண்டு. கிராமத்தில் முன்பு காணப்பட்ட எழுச்சி இப்பொழுது இல்லை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு.கிராமத்தில் காணப்படும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றியிருப்பதாகவும் அறியமுடிகிறது.இவ்வாறான ஒரு பின்னணியில்  கோட்டாகோகம கிராமத்தின் 50வது நாளை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் அக்கிராமத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தின. ஏனென்றால் அக்கிராமம் தோற்கவோ சோரவோகூடாது என்ற ஒரு கூட்டுணர்வு தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் அநேகர் மத்தியிலும் காணப்படுகிறது.

காலிமுகத்திடலில் ஊடகக் கவர்ச்சிமிக்க ஓரிடத்தில்,வெளிநாட்டு ராஜதந்திரிகளின் வதிவிடங்கள்,மற்றும் உல்லாசப்பயண விடுதிகளின் மத்தியில்,காணப்படும் ஒரு போராட்டக் கிராமம் 50வது நாளைக் கடந்த பொழுது அது ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு பேசுபொருளாக காணப்பட்டது.ஆனால் தமிழ்ப் பகுதிகளில் வீதியோரங்களில் அமர்ந்திருக்கும் முதிய தமிழ் அன்னையர்களின் போராட்டம் அன்றைய தினம் 1924ஆவது நாளைக் கடந்தது.கோட்டா கோகமவிற்கு கிடைக்குமளவுக்கு ஊடகக்கவனிப்பு இந்த அன்னையர்களுக்கு இல்லை.அவர்களில் நூறிற்குக்கும் மேற்பட்டவர்கள் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையோடு இறந்துவிட்டார்கள்.கடந்த வாரமும் ஒருவர் இறந்துவிட்டார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்த அன்னையர்கள் சிலரை சந்தித்தார்.அந்த சந்திப்பை ருவிற்றரில் படத்துடன் பதிவிட்டார்.சில மேற்கு நாடுகளின் தூதரகங்கள் எப்போதாவது இந்த அன்னையர்களை சந்திக்கின்றன.ஆனால் அவர்களுடைய போராட்டம் பெருமளவுக்கு உலகத்தின் கவனக்குவிப்புக்கு வெளியேதான் காணப்படுகிறது.அந்த அன்னையர்கள் மத்தியில் என்றைக்குமே காணப்படாத தமிழ் செயற்பாட்டாளர்கள் சிலர் கோட்டாகோகமவில் காணப்பட்டார்கள். தங்களை சமூகப் போராளிகளாக, முற்போக்கானவர்களாக,லிபரல்களாக காட்டிக்கொள்ள விரும்பும் தரப்புக்கள் யாவும் தங்களுடைய பிரசன்னத்தை பதிவு செய்யும் ஓரிடமாக அது மாறியிருக்கிறது. ஆனால் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் முழுமையாக நம்பிக்கை வைக்கத்  தயாரற்ற ஓரிடமாக அது தொடர்ந்தும் காணப்படுகிறது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *