ஜெனீவா: இந்த ஆண்டுப் பலன் என்ன ?

 

ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் கிடையாது.அதை நடைமுறைப்படுத்தும் உபகரணம் எதுவும் அந்தப்பேரவையிடம் கிடையாது. ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதற்கோ,பயன்பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பேரவையால் முடியாது.மாறாக குறிப்பிட்ட ஒரு நாடு பேரவையோடு இணங்கிச் சென்றால் அந்த நாட்டுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அந்த நாட்டின் இணையனுசரணையோடு ஐநா அலுவலர்கள் தொழிற்பட முடியும்.அதன்மூலம் ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.அதுதான் 2015 ஆட்சி மாற்றத்தின் பின் நடந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தவரை,ஐநா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டன.அவை ஒருவிதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மேற்கத்திய வியூகங்களின் பகுதியாகக் காணப்பட்டன.அவை தமிழ்மக்களுக்கு ஆதரவானவை என்ற வெளித்தோற்றத்தை கொண்டிருந்தாலும்,அவற்றுக்குப் பின்னால் இருந்த ராஜதந்திர இலக்கு என்னவென்றால், சீனாவை நோக்கிச் சாயும் இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதுதான். இந்த அடிப்படையில் ராஜபக்சக்களின் காலத்தில் ஐநா தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை.ஆனால் ரணிலுடைய காலத்தில் 2015ல்  ஐநாவுடன் அவர் இணக்கத்துக்கு வந்தார்.அவ்வாறு இணை அனுசரணை வழங்கி உருவாக்கப்பட்டதுதான் நிலைமாறு கால நீதிக்கான 30/1 தீர்மானம்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க இணை அனுசரணை வழங்கி உருவாக்கிய தீர்மானத்தின் பிரகாரம் கட்டமைப்புசார் மாற்றங்களை செய்யவில்லை. நிலைமாறு கால நீதி இலங்கைததீவில் ஓரழகிய பொய்யாக மாறியது. நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோற்று விட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.ஏனெனில் கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியின் பங்காளியாகக் காணப்பட்டது.

இது 2015 ஆட்சிமாற்றத்தின் பின் நிகழ்ந்தது.அதன்பின் ராஜபக்சக்கள் மறுபடியும் வந்தார்கள்.அவர்களுடைய காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த ஆண்டு 46/1 தீர்மானத்தின் மூலம் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு- அலுவலகம்- பரிந்துரைக்கப்பட்டது.

இப்பொழுது ரணில் வந்து விட்டார்.தர்க்கத்தின்படி பார்த்தால் இந்தமுறை வரக்கூடிய தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் இணையனுசரணையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உண்டா?

ஏனெனில் 2015இல் ரணில் ராஜபக்சக்களிற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் கருவி  ஆனால்,இப்பொழுது அவர்  ராஜபக்சக்களின் முன்தடுப்பு.அவருடைய வெளிவிவகார அமைச்சர் யார் என்றால்,ராஜபக்சக்களின் தனிப்பட்ட வழக்கறிஞரான அலி சப்ரி.கடந்த திங்கட்கிழமை அலி சப்ரி பின்வருமாறு தொனிப்பட தெரிவித்தார்…இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களின் உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்  என்றும்,ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் பேச்சுவார்த்தைமூலம் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால்,2015ஆம் ஆண்டைப்போல இம்முறை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவாகத் தெரிகின்றன.அதற்காக,கடந்தவாரம் வெளிவந்த ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசாங்கத்தை விமர்சித்திருப்பதை வைத்து புதிய ஜெனிவாத் தீர்மானத்தைக் குறித்து தமிழ்மக்கள் அதிகம்  எதிர்பார்க்கலாமா?

இந்த இடத்தில் தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டிய ஜெனிவா யதார்த்தம் ஒன்று உண்டு. என்னவெனில், கடந்த 13 ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கும் ஜெனிவா தீர்மானத்திற்கும் இடையே காணப்படும் இடைவெளிதான்.அது தமிழ்மக்களுக்கு விரக்தியூட்டக்கூடிய ஏமாற்றகரமான ஒரு இடைவெளி.அதுதான் தமிழ்மக்கள் அதிகம் உழைக்க வேண்டிய ஒரு இடைவெளியும்.கடந்த பல ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகள் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன.ஆனால் தீர்மானங்கள் அவ்வாறு இல்லை.அதை இன்னும் சரியாகச் சொன்னால்,தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெரும்பாலான நாடுகளை திருப்திப்படுத்தும் விதத்தில் தீர்மானம் நீர்த்துப்போகச் செய்யப்படும் என்பதே ஜெனீவா யதார்த்தம் ஆகும்.அதாவது ஐநா மனிதஉரிமைகள் ஆணையரின் அறிக்கையில் காணப்படும் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலான விமர்சனப் போக்கு ஐநா தீர்மானங்களில் இருப்பதில்லை.இம்முறை தீர்மானத்திலும் அப்படித்தான் அமையும்.

அதேசமயம்,முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான அலுவலகத்தை ஒரு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பதிலீடு செய்ய முடியாது.ஏனென்றால் அந்த அலுவலகம் ஏற்கனவே இயங்கத் தொடங்கிவிட்டது.அது ஒரு பலமான அலுவலகம் அல்ல.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று தமிழ்த்தேசிய கட்சிகளும் ஜெனிவாவுக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் கேட்டிருந்த பொறிமுறைக்கு நிகரான ஒரு கட்டமைப்பு அல்ல.அது மனிதஉரிமைகள் பேரவைக்கு கீழ்தான் இயங்கும். கடந்த 13 ஆண்டுகளாக மனிதஉரிமைகள் பேரவை தமிழ்மக்களுக்கு எப்படிப்பட்ட நீதியை பெற்றுத் தந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அப்பலவீனமான அலுவலகத்தைக்கூட சீனா போன்ற நாடுகள் மேலும் பலமிழக்கச் செய்ததாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.அவ்வலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சீனா தலையிட்டு குறைத்து விட்டதாக மேற்படி அமைப்புக்கள்  தெரிவிக்கின்றன. அவ்வலுவகத்துக்கு முதலில் பிரித்தானியாவும் நோர்வேயும் நிதியுதவி வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு விசேஷ நிதியை ஒதுக்காமல், ஐநாவின் பொது நிதி ஒதுக்கீட்டுக்கூடாக அந்த அலுவலகத்தை இயக்க வேண்டும் என்று சீனா போன்ற நாடுகள் வலியுறுத்தியதாக தெரியவருகிறது. இது கடந்த ஆண்டு நடந்தது. ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை உண்டு.அப்பற்றாக்குறை அவ்வலுவகத்திலும் பிரதிபலித்தது.கடந்த ஆண்டு ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் இந்நிதிப்பற்றாக்குறை தொடர்பாக சுட்டிப்பாகக் கூறியுள்ளார்.நிதி போதாமையால்தான் அவ்வலுவலகம் முழு வேகத்தோடும் முழுப் பலத்தோடும் இயங்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. நிதி போதாமையால் அதன் ஆளணி 13இல் இருந்து 8ஆகக் குறைக்கப்பட்டது. எனினும் அவ்வலுவலகம் இப்பொழுது இயங்குகின்றது.அது சாட்சியங்களையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது.அவ்வலுவகத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு அல்லது அவ்வலுவகத்துக்குரிய காரணங்களை வழுவிழக்கச்  செய்யும் நோக்கத்தோடு அலி சப்ரி உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து பேசுகிறார்.

ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை, உள்நாட்டுச் சட்டங்கள், உள்நாட்டின் யாப்பு என்பவை தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியாதவை என்ற கருதுகோளின் அடிப்படையில்தான் நிலைமாறுகால நீதி என்பது 2015ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.உள்நாட்டு நீதி போதுமானதாக இருந்தால் ஏன் நிலை மாறுகால நீதி என்ற ஐநா ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?மேலும், ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்கு நீதி கேட்டு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏன் ஐநாவிடம் முறையிட வேண்டும்?உள்நாட்டு நீதிக் கட்டமைப்பை அவர் நம்பவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது? எனவே உள்நாட்டின் நீதியின் போதாமை காரணமாகத்தான் ஐநாவின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் அடுத்த கட்டமாக 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் எல்லாவற்றுக்குப் பிறகும் இலங்கை அரசாங்கம் இப்பொழுதும் உள்நாட்டுப் பொறிமுறை குறித்து கனவு காண்கிறது என்றால் அந்த கனவுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் கைவிடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா ?அந்த நம்பிக்கை காலப்பொருத்தமுடையது அல்ல என்பதனை மேற்கு நாடுகள் நிரூபித்தால்தான் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கலாம்.

ஜெனிவாவில் இலங்கையை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக சீனா ஒருவித நிழற்போர் நிலைமையை தோற்றுவித்திருக்கிறது.அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவரும் நாடுகள் ஒருபுறம், சீனாவும் உட்பட அரசாங்கத்துக்கு ஆதரவான நாடுகள் இன்னொருபுறம்.இதில் சீனா கடந்த ஆண்டு தெளிவாக வெளிப்படையாக தான் அரசாங்கத்தின் பக்கம் என்பதை அறிவித்து விட்டது.இந்த முறையும் கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ருவிற் பண்ணிய செய்தியின்படி சீனா அரசாங்கத்தோடுதான் நிற்கும்.

ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கான அவ்வலுவகத்துக்குரிய நிதியை தந்திரமாக குறைத்தது சீனா போன்ற நாடுகள்தான் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு.இப்பொழுது சீனா வெளிப்படையாகவே இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நிற்கின்றது. இப்படிப்பட்ட ஒரு ஜெனிவாக் களத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

கடந்த ஆண்டு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானம் வரும்பொழுது வாக்கெடுப்பைத் தவிர்ப்பது என்பது நடுநிலையானது போலத் தோன்றலாம்.ஆனால் ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு ஆதரவான நாடுகள் குறைவாக இருக்கும் ஒரு பின்னணியில் வாக்களிக்காமல் விடுவது என்பது அரசாங்கத்தை பாதுகாக்காமல் விடுவதுதான்.

ஆனால் தமிழ்மக்கள் அதைவிட வெளிப்படையாக இந்தியா தங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.கடந்த 9 மாதங்களாக இலங்கைக்கு அதிகம் உதவிய நாடு இந்தியா. அந்த உதவியை ரணில் விக்கிரமசிங்க உயிர் மூச்சு என்று வர்ணித்தார்.சிங்களபௌத்த அரசுக்கட்டமைப்புக்கு உயிர் மூச்சை வழங்கிய இந்தியா தமிழ் மக்களின் விடயத்தில் தெளிவான,வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும். கிழக்கில் சீனா ஆழமாக தன் கால்களை பதித்து வருகிறது.வடக்கிலும் சீனா அவ்வாறான முன்னேற்பாடுகளில் இறங்கியிருக்கிறது.இவ்வாறான ஒரு பின்னணியில் ஜெனீவாவில் சீனா அரசாங்கத்தின் பக்கம் நிற்கும்பொழுது, இந்தியா யாருடைய பக்கம் நிற்கிறது என்பது தமிழ்மக்களைப் பொறுத்தவரை முக்கியமானது.ஏனெனில் கடந்த 13 ஆண்டுகளாக எந்த நாடு தங்கள் பக்கம் நிற்கிறது அல்லது நிற்கவில்லை என்பதனை தமிழ்மக்கள் நிறுத்துப்பார்க்கும் ஒரே அனைத்துலக அரங்காக ஜெனிவாதான் காணப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *