அரசியற் கைதிகளும் தமிழ் மக்களும்

 

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15 ஆண்டுகளின் பின் குற்றமற்றவர் என்று  நீதிமன்றினால் ஏற்கனவே  விடுதலை செய்யப்பட்டு விட்டார்.ரகுபதி சர்மா இப்பொழுது இரத்மலானையில் உள்ள உள்ள இந்துமா மன்றத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கியிருக்கிறார்.அவர் கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து அவர் விடுதலையாகும் வரையிலும் அதற்கு பின்னரும் இந்து மாமன்றம் அவருக்கு பல விதங்களிலும் உதவி வருகிறது.

கைது செய்யப்படுகையில் அந்த ஐயரும் அவருடைய மனைவியும் இளம் தம்பதிகளாக இருந்தார்கள். அப்போதிருந்த அரசியல் சூழலில் அவர்களோடு சேர்ந்து தங்களை அடையாளப்படுத்த உறவினர்களும் விரும்பவில்லை. விடுவிக்கப்பட்ட வசந்தி சர்மா தனது பிள்ளைகளோடு வெளிநாட்டில் வசித்துவருகிறார்.இப்பொழுதும் தனித்து விடப்பட்டிருக்கும் ஐயரை இந்து மாமன்றம் பராமரிக்கின்றது.

அவரைப் போல பல அரசியல் கைதிகள் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுடைய குடும்பங்கள் தனித்து விடப்பட்டன. உறவினர்களின் மனநலம் பாதிக்கப்பட்டது.குடும்பத்துக்குள் அமைதி குலைந்தது. சில குடும்பங்கள் பிரிந்தன.சில உறவினர்கள் மருந்தில் தங்கியிருக்கும் அளவுக்கு அவர்களுடைய மனநலம் கெட்டது.விடுவிக்கப்பட்ட எல்லா அரசியல் கைதிகளுக்கும் பொருத்தமான உதவிகள் பொருத்தமான நேரத்தில் கிடைத்தன என்று கூற முடியாது. இதுவிடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான கட்டமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

அண்மை ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் அதிக தொகை கைதிகளுக்கு(16) பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது கோட்டாபய ராஜபக்ஷதான் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண்.மேலும் தம்மை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும்,சந்திரிகா குமாரரரணதுங்கவும் கைதிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.மொத்தம் 33 கைதிகள் இப்பொழுதும் சிறையில் உள்ளார்கள். அவர்களில் இருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

அரசியல் கைதிகளுக்காக தொடக்கத்தில் இருந்தே போராடியது அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான அரசியல் கைதிகளுக்கான தேசிய அமைப்பாகும்.அண்மை ஆண்டுகளாக மற்றொரு அமைப்பு “குரலற்றவர்களின் குரல்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட கோமகனின் தலைமையில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.

இப்பொழுது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் ஒரு காலச் சூழலில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் அடுத்தகட்ட வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக் கொள்ளத்தக்க உதவிகள் அவர்களுக்கு தேவை.தமிழ்ச் சமூகம் இதுதொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பானது அண்மை காலங்களில் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.கைதிகளை எதுவிதத்திலாவது விடுவிப்பதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். விடுவிக்கப்பட்ட கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கு அந்த அமைப்பிடமும் போதிய வளங்கள் இல்லை.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் தனி நபர்களும் அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு உதவி வருகிறார்கள்.குறிப்பாக “தோழமைக் கரங்கள்” என்ற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பு கைதிகளுக்கு உதவி வருகிறது. அண்மையில் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் பொது மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய்கள் வழங்கியிருந்தார். விடுவிக்கப்பட்ட கைதிகள் அல்லது புனர்வாழ்வின்பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்களுக்கு இதுவரை உலக நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை எல்லாவற்றிலும் இது மிகப் பெரியது.

இது ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம். புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இருக்கும் பெரு முதலாளிகளும் நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் தனி நபர்களும் இதுபோன்ற விடயங்களில் எவ்வாறு பொருத்தமான விதங்களில் உதவி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு எதையாவது செய்ய வேண்டும் என்ற தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தம்மிடம் உள்ள வளங்களை கொண்டு எப்படி ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பலாம் என்று சிந்திக்க வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்புவது அல்லது தேச நிர்மாணம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்தி நீடித்திருக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதுதான்.இந்த அடிப்படையில் பார்த்தால் அரசியல் கைதிகள்,நில ஆக்கிரமிப்பு,காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி,முன்னாள் இயக்கத்தவர்களுக்கு வாழ்வாதாரம் போன்ற எல்லாவற்றிற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தாயகத்தில் தேவை உண்டு.புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் போதிய அளவு வளமும்,நிபுணத்துவ அறிவும்,உதவி செய்ய வேண்டும் என்ற தவிப்பும் உண்டு. இரண்டையும் இணைப்பது தேச நிர்மாணிகளின் வேலை.

தாயகத்தில் நடக்கும் அரசியல் செயற்பாடுகள் முதற்கொண்டு ஆன்மிகச் செயல்பாடுகள்வரை அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கை இருக்கிறது. இதற்கு ஆகப்பிந்திய சில உதாரணங்களை இங்கு காட்டலாம்.

யாழ்ப்பாணத்தில் விழிப்புலன் மற்றும் செவிப்புலனை இழந்தவர்களுக்கான ஒரு நிறுவனம் “கருவி” என்ற பெயரில் இயங்குகின்றது. யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தால் விரும்பி நுகரப்படும் “சைன்” என்று அழைக்கப்படுகின்ற திரவ சவர்க்காரத்தை அந்த நிறுவனமே தயாரிக்கின்றது.அந்த நிறுவனம் தனக்கென்று ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு நீர்வேலியில் ஒரு காணியை வாங்கியுள்ளது.அதற்குரிய நிதி உதவிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளே பெருமளவிற்கு வழங்கின.

அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மாற்றம் அறக்கட்டளை நிதியத்துக்கும் உதவிகள் கிடைக்கின்றன.போதைப் பொருள் பாவனையால் நோயாளிகளாக மாறியவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அந்நிலையம் கத்தோலிக்கத் திருச்சபையால் பராமரிக்கப்படுகிறது.அங்கே பொருத்தமான வளங்களோ ஆளனியோ கிடையாது. ஒரு மத குருவும் ஒரு துறைசார் உழவள ஆலோசகரும் அவர்களுக்கு சில உதவியாளர்களும் மட்டுமே உண்டு. அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு மருதங்கேணியில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்பு உதவியிருக்கிறது.

இவ்வாறு தாயகத்தில் தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ்து தரப்பு உதவமுடியும். அதை ஒரு கொடையாக அல்ல.  தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகச் செய்ய வேண்டும். முதலீடு செய்வது அல்லது முதலீட்டை தேச நிர்மானத்தின் ஒரு பகுதியாகச் செய்வது. எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்க வேண்டும். அரூபமாகக்  கற்பனைசெய்து கோஷங்களோடு வாழமுடியாது. யதார்த்தமான கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றை பலப்படுத்தினால்தான் தூலமாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கலாம்.

எல்லா வெற்றிபெற்ற சமூகங்களிலும் பிரமிக்கத்தக்க நிறுவன உருவாக்கிகளைக் காணலாம்.லாப நோக்கமற்ற நிறுவன உருவாக்கிகளால் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட கூர்ப்புக்கு எடுத்துச் செல்லமுடியும். தமிழ்ச் சமூகத்திலும் ஒரு காலகட்டத்தில் அவ்வாறு நிறுவன உருவாக்கிகள் தோன்றினார்கள்.இந்து மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் உருவாக்கிய நிறுவனங்களின் விளைவாகத்தான் நவீன தமிழ்ச் சமூகம் உருத்திரண்டது. எனவே ஆயுதமோதலுக்கு பின்னரான ஒரு காலகட்டத்தில் சமூகத்தைக்  கட்டியெழுப்புவதற்கும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் எப்படிப்பட்ட நிறுவனங்கள் கட்டமைப்புகள் தேவை என்று கண்டு அவற்றை உருவாக்க வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கான கட்டமைப்பு முதற்கொண்டு போதைப்பொருள் நோயாளிகளை பராமரிப்பதற்கான புனர்வாழ்வு அமைப்புகள்,தனித்து விடப்பட்ட முதியோரைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புக்கள் என்று எல்லாவற்றுக்கும்  துறைசார் அறிவும் நவீன வளங்களும் தேவைப்படுகின்றன. அவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தாராளமாக உண்டு.எனவே தேவையையும் வளங்களையும் இணைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டும்.

20.11.2022ஆம் திகதி ஆதவன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *