ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவாக எழுதப்பட்ட இரண்டு உடன்படிக்கைகள் ஒப்பிட்டுளவில் நீண்ட காலம் நிலைத்திருந்தன. முதலாவது இந்திய இலங்கை உடன்படிக்கை. அடுத்தது ரணில் பிரபாகரன் உடன்படிக்கை. இது தவிர ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரும் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் எவையும் நீடித்திருக்கவில்லை.அவை சிங்களத் தரப்புகளாலேயே கிழித்து எறியப்பட்டன.
ஆயுதப் போராட்டமானது இலங்கைத்தீவின் அரசியல் ராணுவ வலுச்சமநிலையை மாற்றக்கூடிய பலத்தோடு காணப்பட்டது.அவ்வாறு வலுச்சமநிலை மாறும்போதெல்லாம் சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அல்லது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2009 க்கு பின் அவ்வாறு இலங்கை தீவின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றத்தக்க பேரபலம் தமிழ்த் தரப்பிடம் இல்லை.
முதலாவதாக தமிழ்த்தரப்பு ஒரு திரண்ட சக்தியாக இல்லை. இரண்டாவதாக, தமிழ்த்தரப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் தொடர்ச்சியான நிர்ணயகரமான போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை.தமிழ்த்தரப்பில் இப்பொழுது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மொத்தம் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. தலைக் கணக்கின்படி பார்த்தால் அது மிகச் சிறிய தொகை.தமிழ் மக்களின் அரசியல் இப்பொழுது தேர்தல் மைய அரசியலாகத்தான் காணப்படுகிறது. மக்கள் இயக்கம் கிடையாது. இந்நிலையில் பூகோள அரசியலைக் கையாளப் போகின்றோம் புவிசார் அரசியலை கையாள போகின்றோம், என்று தமிழ்க் கட்சிகள் கூறிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு புவிசார் அரசியலையோ அல்லது பூகோள அரசியலையோ கையாளத் தேவையான கட்டமைப்புகள் எவையும் தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. அதாவது தொகுத்துக் கூறின் 2009க்கு பின் தமிழ் அரசியல் எனப்படுவது “ரியாக்ட்டிவாகத்தான்”-பதில் வினையாற்றும் ஆரசியலாகத்தான் இருக்கிறதே தவிர “புரோஆக்டிவாக”-தனது செயல்களுக்கு ஏனைய தரப்புக்களை பதில் வினையாற்ற நிர்பந்திக்கும் அரசியலாக இல்லை.
இப்பொழுதும்கூட பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் ரணில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.அதுகூட வெளி நிர்ப்பந்தமே காரணம். பொருளாதார நெருக்கடிக்கான நிதி உதவிகளும் இனப்பிரசினைக்கான தீர்வும் ஒரே பக்கேஜ்ஜுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியாவும் அதை வலியுறுத்தியது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதுபோல ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு வெளித்தரப்புகளிடமிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக அவர் பேச வந்திருக்கிறார். இந்த நிர்பந்தங்கள் காரணமாக தமிழ்த் தரப்பின் பேரம் ஒப்பீட்டளவில் அதிகரித்து இருக்கிறதுதான். ஆனாலும் தனது கோரிக்கைகளை முன் நிபந்தனைகளாக வைத்து பேச்சுவார்த்தைகளை தொடங்குமளவுக்கு தமிழ்த்தரப்பு பலமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம்.
ஆயுதப் போராட்டத்தின் பேரபலம் காரணமாகத்தான் வெளித்தலையீடுகள் ஏற்பட்டன. மூன்றாவது தரப்புகளின் மேற்பார்வையின் கீழ் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதலாவது வெளிநாட்டு பேச்சுவார்த்தை திம்புவில் இடம்பெற்றது. அங்கிருந்து தொடங்கி ஒஸ்லோ வரையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.வெளிநாடுகளில் நிகழ்ந்த எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் காரணம் ஆயுத போராட்டந்தான்.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலில் வெளியரங்கில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் என்று பார்த்தால் 2015 ஆட்சி மாற்றத்திற்காக நிகழ்ந்த சில ரகசிய சந்திப்புகளைத்தான் குறிப்பிடலாம். மற்றும்படி ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின் பேச்சுவார்த்தைகளை கொழும்புக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தரை கிட்டத்தட்ட 17தடவைகள் ஏமாற்றினார் என்று சம்பந்தரே கூறுகிறார். அதன்பின் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யாப்புருவாக்கக் குழு 82 தடவைகள் சந்தித்தது.எல்லாவற்றையும் முடிவில் மைத்திரி குழப்பினார்.நிலைமாறுகால நீதியின் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயன்ற ரணிலின் முயற்சிகளை மைத்திரி முறியடித்தார். அம்முயற்சிகளுக்கு ஐநா பின்பலமாக இருந்தது.ஐநாவின் 30/1 தீர்மானம் அதற்குரிய அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தது.
ஆனாலும் ஐநா இலங்கைத்தீவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய நிலைமை இருக்கவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆணையும் இருக்கவில்லை.அதனால்தான் 2018ல் ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூறலுக்கான உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக முறித்தார்.அதன்பின் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் மேற்படி பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு முன்னைய இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகியது.அதாவது ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஒப்புக்கொண்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது. அனைத்துலக அரங்கில் தானும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய உதாரணம் ஆகும்.
ஏற்கனவே இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தத்தை எந்த ஒரு ஜனாதிபதியும் முழுமையாக அமல்படுத்தவில்லை. மாறாக 13வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை படிப்படியாக உருவி எடுத்து விட்டார்கள். இப்பொழுது அது ஒரு கோறை. தான் பெற்ற பிள்ளையாகிய 13 வது திருத்தத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட பொழுது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. 2009க்கு பின்னரும் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே கொழும்புடனான பேச்சுவார்த்தைகள் என்ற நூற்றாண்டு கால தோல்விகரமான அனுபவத்தின் பின்னணியில், குறிப்பாக 87 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால்,தமிழ் மக்களுக்கு மிக கசப்பான பாடங்கள் கிடைக்கின்றன.பிராந்திய மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் எழுதப்பட்ட உடன்படிக்கைகளில் இருந்து இலங்கை அரசாங்கங்கள் பின்வாங்கியிருக்கின்றன.ஒரு பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவும் இந்தவிடயத்தில் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.உலகப் பொது மன்றமாகிய ஐநாவும் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.அவ்வாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களின்மீது நிர்ணயகரமான அழுத்தங்களை பிரயோகிக்கும் ஆணை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. அப்படியென்றால் ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் எனப்படுவது வெறும் பிரசன்னமாக மட்டும் இருந்தால் போதாது. அதைவிட ஆழமான பொருளில் அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு பிரசன்னம் தேவைப்படுகிறது என்று பொருள்.
சமூக செயற்பாட்டாளராகிய செல்வின் சொன்னார்…நோர்வையின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகள் தோல்வியுற்றபின் ஒஸ்லோவில் நடந்த ஒரு சந்திப்பில் சிறப்புத் தூதுவரான சூல் ஹெய்ம் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்திருக்கிறார்… “நோர்வே ஓர் அனுசரணையாளர் மட்டுமே. அனுசரணை என்பது,சந்திக்கும் இடங்களையும் சந்திப்பு நேரங்களையும் ஒழுங்குபடுத்துவது. சந்திப்புக்கான பயண ஏற்பாடுகளையும் தங்குமிட ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்துவது என்பவைதான்” என்று.அவர் இவ்வாறு கூறிய பின் நிகழ்ந்த மற்றொரு தனிப்பட்ட சந்திப்பில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியான மார்ட்டி அஹ்ரிசாரி-அவர்தான் பலஸ்தீனத்தில் பேச்சுவார்த்தைகளை ஒழுங்குபடுத்தியவர்-இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளை குறித்து பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார். “இரண்டு தரப்பும் சமாதானத்துக்கு தயாரில்லை என்றால், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இரண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருப்பேன். பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்திருக்க மாட்டேன்” என்று.ஏனெனில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தேவையான வளங்களை ஒழுங்குபடுத்துவது மட்டும் ஒரு மூன்றாந்தரப்பின் வகிபாகம் அல்ல என்ற பொருளில்.
சூல் ஹெய்ம் மற்றும் மார்ட்டி அஹ்ரிசாரி ஆகியோரின் கூற்றுக்களின் அடிப்படையிலும்,ஆயுதப்போராட்ட காலத்தில் நடந்த பேச்சுக்களில் தலையிட்ட மூன்றாந் தரப்புக்களான இந்தியா,நோர்வே(அமெரிக்கா)ஆகிய இரு தரப்புக்களுடனும் தமிழ்த் தரப்பு முரண்படும் ஒரு நிலை ஏன் ஏற்பட்டது என்ற அனுபவத்தின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள் தொகுக்கப்பட்ட ஓரு முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு மூன்றாந்தரப்பின் தலையீடு இன்றி இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை,அதேசமயம் ஒரு மூன்றாவது தரப்பின் தலையீடு எனப்படுவது வெறுமனே பிரசன்னமாகவோ அல்லது நடுநிலை வகிக்கும் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ இருந்தால் மட்டும் போதாது.நீதியான சமாதானத்தை நோக்கி அழுத்தங்களைப் பிரயோகிக்குமளவுக்கு ஒரு மூன்றாவது தரப்பின் வகிபாகம் இருக்க வேண்டும்.
ஆனால் அப்படிப்பட்ட மூன்றாவது தரப்பை உள்ளே கொண்டு வருமளவுக்கு தமிழ்த் தரப்பு பேரபலத்துடன் இல்லை என்பதால்தான் ரணில் மூன்றாவது தரப்பைக் குறித்து சீரியஸாக இல்லையா?அல்லது அவர் பேச்சவார்த்தையிலேயே சீரியஸாக இல்லையா?