இந்துத் தமிழர்கள் ?

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்து அமைப்புகள் கடந்த ஐந்தாம் திகதி,இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தன.இலங்கையில் இந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவதும்  ஒரு கலாசார  இனப்படுகொலை என்றும் மேற்படி இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இனப்பிரச்சினையை இந்து தமிழர்களின் பிரச்சினையாக குவிமையப்படுத்தி இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் தாயகத்தில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினரும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வசிக்கும் காசியானந்தன் உட்பட ஈழத் தமிழர்கள் சிலர் அவ்வாறான அணுகுமுறையை முன்வைத்து ஓர் அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்.அதன் தொடர்ச்சியாக இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் ஒருங்கிணைப்பில் நாட்டில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்கள் புதுடில்லியில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடும் புதுடில்லியில் நடத்தப்பட்டது.இம்மாநாடுகளில் டெல்லியில் உள்ள சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினார்கள்.

இந்திய ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவை அணுகுவதற்கு இந்துத்துவாவை ஒரு வாகனமாக கையாள வேண்டும் என்ற முனைப்பு ஈழத் தமிழர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம் தமிழகத்தைச் சேர்ந்த திராவிட கட்சிகளில் தங்கி இருப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டது. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் கலைஞர் கருணாநிதி நடந்து கொண்ட விதம் தொடர்பில் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் மீதும் அவருடைய கட்சி மீதும் தொடர்ந்து வெறுப்போடு காணப்படுகிறார்கள். இந்த வெறுப்பும் பாரதிய ஜனதாவை நோக்கிப் போக ஒரு காரணம்.

இரண்டாவது காரணம், காங்கிரஸ் கட்சி மீதான எதிர்ப்பும் பாரதிய ஜனதாவின் மீதான விருப்பமும்.கொங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில்,பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலங்களில் ஒப்பீட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான முடிவுகள் எடுக்கப்பட்டதான ஒரு நம்பிக்கை ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு.எனவே பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மூன்றாவது காரணம்,ஈழத்தில் சிவசேனை, உருத்திர சேனை போன்ற அமைப்புக்கள் துடிப்பாகச் செயற்பட்டு வருகின்றன.மலையகத்திலும் ஆர். எஸ்.எஸ் பரவலாக கால் பதித்து வருகின்றது. இந்த அமைப்புகளின் ஊடாக ஈழத்தமிழ் அரசியலை இந்துத்துவா தடத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு உலகில் உள்ள எந்த பிசாசோடும் கூட்டிச் சேர்வதற்கு தயாராக காணப்பட்டன, காணப்படுகின்றன. அவ்வாறு ஒரு பெரிய இனம் எந்த பிசாசோடும் கூட்டுச் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கலாம் என்றால், ஒரு சிறிய இனம் மத ரீதியாக இந்திய ஆளும் கட்சியை கையாள்வதில் என்ன தவறு உண்டு ?என்று அவர்கள் கேட்கிறார்கள்.

மேற்கண்ட காரணங்களை முன்னிறுத்தி ஈழத் தமிழ் அரசியலை இந்து அரசியலாக சுருக்குவதோடு இந்திய மத்திய அரசாங்கத்தை அணுகும் முயற்சிகளில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பிலும் உள்ள பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் சக்திகளும் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றன.

இதில் தொகுத்துக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழிவந்த அமைப்புகளும் உட்பட விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இப்பொழுது மொழி உண்டு, தேவையான பணம் உண்டு, உலகம் முழுவதும் தொடர்புகள் உண்டு.எனவே அவர்கள் தமிழகத்திலும் டெல்லியிலும் உள்ள பாரதிய ஜனதாக்கட்சிப் பிரமுகர்களை எளிதாக அணுகுகிறார்கள், நெருங்கி வருகிறார்கள். அதன்மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு எதையாவது செய்யலாமா என்று சிந்திக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறு சிந்திக்கும் அமைப்புகளும் தனி நபர்களும் தாயகத்தில் மக்களாணையைப் பெற்றவர்கள் அல்ல என்பதே இந்த ராஜதந்திரத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம் ஆகும். ராஜதந்திரம் எனப்படுவது அதிகாரத்தின் கலை. ஒரு அதிகார மையம் தனது நலன்சார் நோக்கு நிலையில் இருந்து ஏனைய அதிகார மையங்களோடு இடையூடாடுவதுதான் ராஜதந்திரம். அப்படிப்பார்த்தால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகார மையமாக இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் தான்.ஆனால் தாயகத்தில் பலமாக உள்ள கட்சிகள் மேற்கண்டவாறு இந்துத்துவா ராஜதந்திரத்தை பின்பற்றுவதாக தெரியவில்லை.குறிப்பாக தாயகத்தில் உள்ள பலமான கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் மேலிடத்தில் காணப்படும் சம்பந்தரும் சுமந்திரனும் இந்த விடயத்தில் இந்தியாவில் முழுமையாகத் தங்கியிருக்கத் தயாரில்லை. 2021இல் இந்தியா கூட்டமைப்பை டில்லிக்கு வருமாறு அழைத்தபோது சம்பந்தர் அந்த அழைப்பை எதோ காரணங்களைக் கூறி ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டி காரணமாக சிறீதரனும் சுமந்திரனும் யார் இந்தியாவை அதிகம் நெருங்கிச் செல்வது என்ற ஒரு போட்டியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. அண்மை மாதங்களில் இருவருமே தமிழகத்துக்கு சென்றார்கள். இருவருமே அங்குள்ள பாரதிய ஜனதாக் கட்சிப் பிரமுகராகிய அண்ணாமலையோடு தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக்  கைப்பற்றுவது என்றால் இந்தியாவின் ஆசீர்வாதங்கள் தேவை என்று அவர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை.

ஆனால் இது கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ போட்டி மற்றும் தனியாள் முனைப்பு போன்றவற்றின் விளைவுதான். மாறாக, தமிழர்களை ஒரு தேசமாகக் கருதி இந்திய தேசத்தோடு ராஜதந்திர உறவுகளை எவ்வாறு பேண வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் மிக்க விஞ்ஞானபூர்வமான ஒரு வெளியுறவுத் தரிசனத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளாகத் தெரியவில்லை. அவ்வாறான வெளியுறவுத் தரிசனங்கள் தேவை என்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எந்தக் கட்சியும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குத் தான் எதிரில்லை என்று அடிக்கடி கூறி வருகிறது. அதே சமயம் 13 வது திருத்தத்தை இந்தியா தமிழ் மக்கள் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெளிவாகப் பிரித்து கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அக்கட்சியின் செயற்பாடுகள் இந்தியாவை எதிரியாகப் பார்பதாகவே தெரிகிறது.தனது அரசியல் எதிரிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறும் போது மறைமுகமாக இந்தியா எதிரியாகிறது. அக்கட்சியின் லண்டன் ஆதரவாளர்கள் முகநூலில் எழுதும் குறிப்புகள் இந்தியாவை புத்திசாலித்தனமாக அணுக வேண்டும் என்ற வெளியுறவுத் தரிசனத்தைக் கொண்டவைககளாகத் தெரியவில்லை.அவ்வாறு இந்தியாவை நீக்கிவிட்டு மேற்கு நாடுகளைக் கையாண்டு தமது அரசியல் இலக்குகளை எப்படி அடையலாம் என்பது தொடர்பாக  அவர்கள் இதுவரையிலும் விஞ்ஞானபூர்வமான வெளியுறவுக் கொள்கை எதனையும்  முன்வைத்ததாகவும் தெரியவில்லை. பூகோள,புவிசார் அரசியலைப் பற்றி அதிகம் பேசும் ஒரு கட்சி அதன் வெளியுறவுக்  கொள்கையின் ஒரு பகுதி தான் உள்நாட்டுக் கொள்கையும் என்பதனை  இதுவரை தெளிவாக நிரூபித்திருக்கவில்லை.

அக்கட்சி மட்டுமல்ல,உள்ளதில் பெரிய தமிழரசுக் கட்சியிடமும் வெளியுறவுக் கொள்கை  என்று ஏதும் உண்டா?. இந்தியாவுக்கு கடிதம் எழுதிய ஏழு கட்சிகளிடமும் அப்படி எதுவும்  உண்டா? இவ்வாறு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற,தமிழ் மக்கள் மத்தியில் செயல்படுகின்ற கட்சிகள் தமது வெளியுறவுக் கொள்கையை,வெளியுறவு நடைமுறையை வெளிப்படையாக முன்வைக்காத ஒரு வெற்றிடத்தில்,மேற்படி கட்சிகளிடம் வெளியுறவுக் கடடமைப்பு எதுவும் இல்லாத வெற்றிடத்தில்,தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும்,தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பகுதியினர்  பாரதிய ஜனதாவை இந்துத்துவா ராஜதந்திரத்தின் மூலம் நெருங்கி செல்லலாம் என்று நம்புவதாக தெரிகிறது.

ஆனால் இந்தியாவில் கடந்த 8 ஆண்டு கால பாரதிய ஜனதாவின் ஆட்சியைத் தொகுத்து பார்த்தால் அக்கட்சியும் 13ஆவது திருத்தத்தை தாண்டிச் செல்லத் தயாரில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளிடமிருந்து ஈழ விவகாரத்தை தன்வசப்படுத்த வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தீவிரமாக உழைத்து வருகின்றது.இதுவிடயத்தில் திமுகவின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு உள்ள கோபத்தை அக்கட்சி பயன்படுத்த விளைகிறது. ஆனால் கடந்த எட்டு ஆண்டு கால அனுபவத்தின்படி இந்தியா ஈழத் தமிழர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வு 13-ஐத் தாண்டவில்லை.

எனவே இதுவிடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகள் முதலில் தமது வெளியுறவுக் கொள்கையை பகிரங்க விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும்.இதை இப்படி எழுதி எழுதியே எனக்குச் சலித்து விட்டது.முதலில் வெளியுறவுக் கொள்கை வேண்டும்.பாரதிய ஜனதாவை அணுகத்தான் வேண்டும். ஏனென்றால் அது இந்திய மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி. இந்திய மத்திய அரசாங்கத்தில் யார் இருந்தாலும் அவர்களை அணுக வேண்டும். ஆனால் அதற்காக தமிழ்த் தேசியத்தை சைவத் தேசியமாகவோ இந்து தேசியமாகவோ குறுக்கத் தேவையில்லை. மாறாக தெளிவான வெளியுறவு இலக்குகளை முன்வைத்து இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு வியூகத்தில் ஈழத் தமிழர்கள் எப்படிப் பங்காளிகளாக மாறலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது அதுதான். 

 

09.04.2023 அன்று ஆதவன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *