ஐ.எம்.எஃப்பைக் கையாள முடியாத தமிழர்கள் ?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது.இக்கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிய தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து விடுகின்றது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு ஐநா விவகாரங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது.அதேசமயம் இம்முறை நாட்டிலிருந்து மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு அரசியல்வாதிகள் யாரும் சென்றிருக்கவில்லை. அண்மை ஆண்டுகளாகமனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது.இந்த விடயத்தில் தமிழ்த்தரப்பிடம் ஒருவித சோர்வு அல்லது ஊக்கமின்மை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் என்ன?

இத்தனைக்கும் கடந்த ஆண்டிலிருந்து ஐநா இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் ஒரு பொறிமுறையை உருவாக்கிச் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரித்து வருகின்றது. இந்தப் பொறிமுறை சிரியா போன்ற இடங்களுக்கு உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறையைப் போன்ற பலமான ஒன்று இல்லைத்தான். அது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஒன்றுதான். என்றாலும் தமிழர்களுக்கு சாதகமான ஒரு நகர்வு அது. அதில் ஒன்றுமே இல்லை என்று நிராகரிக்க முடியாது. சரியோ பிழையோ, போதுமோ போதாதோ அது ஈழத் தமிழர்களுக்குச் சாதகமானது. அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சிகளும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் பெறுமதியானவை.எனவே அப்பொறிமுறையை தமிழர்கள் நீண்ட கால நோக்கில் கையாள வேண்டும். ஆனால் அவ்வாறு கையாள்வதற்குரிய அரசியல் தரிசனமோ கட்டமைப்புகளோ வழி வரைபடங்களோ ஈழத்தமிழர்களிடம் உண்டா?

ஐநாவைக் கையாள்வது என்பது அதன் எல்லாப் பரிமாணங்களிலும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த ஒரு விடயந்தான். நிச்சயமாக மனிதாபிமான அல்லது நீதிநெறி சார்ந்த அல்லது அறநெறி சார்ந்த ஒரு விடயம் அல்ல.

எனவே ஐநாவும் உட்பட மேற்கு நாடுகளையும் பிராந்தியத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுத் தரிசனம் அல்லது கொள்கை தமிழ்த்தரப்பிடம் உண்டா? அப்படி ஒரு வெளியுறவுக் கொள்கை இருந்தால்தான் அதற்குத் தேவையான வெளியுறவுக் கட்டமைப்பும் இருக்கும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழர்கள் ஐநாவை கட்டமைப்புச் சார்ந்து ஒரு மையத்தில் இருந்து அணுகவில்லை என்பதே உண்மை நிலையாகும்

சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுமந்திரன் சொன்னார்,வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்று.ஆனால் அவர் அப்படி சொன்னதன் பொருள் அவரிடம் ரகசியமான ஒரு வெளியுறவுக் கொள்கை உண்டு என்பதல்ல. அவரிடம் வெளியுறவுக் கொள்கையே இல்லை என்றுதான் பொருள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை.ஏனெனில் அப்படி ஒரு கொள்கை இருந்திருந்தால் அதைக் கையாள்வதற்கு தமிழரசுக் கட்சியிடம் ஒரு கட்டமைப்பு இருந்திருக்கும், ஆனால் அக்கட்சியிடம் கட்டமைப்புசார் அணுகுமுறை இல்லை. அதனால் தனி நபர் ஓட்டங்களே அதிகமாக உள்ளன.

தமிழரசுக் கட்சியிடம் மட்டுமல்ல பூகோள அரசியல் குறித்து அதிகமாகக் கதைக்கும் கஜேந்திரகுமாரிடமும் ஒரு வெளியுறவுக் கொள்கை உண்டா?கொள்கையிருந்தால் அதை நடைமுறைப்படுத்த ஒரு கட்டமைப்பு இருந்திருக்கும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் வெளியுறவு அணுகுமுறை அல்லது வெளிநாடுகளை நோக்கிய அணுகுமுறை என்று தொகுத்துப் பார்த்தால் கடந்த 14 ஆண்டுகளாக பின்வரும் போக்குகளை அவதானிக்க முடியும்.

சுமந்திரன் மற்றும் சம்பந்தரிடம் துலக்கமான ஒரு வெளியுறவுக் கொள்கை இல்லை.சுமந்திரன் அதிகம் மேற்கை நோக்கிச் சாயும் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.ஆனால் இந்தியாவைப் பகைப்பதில்லை.அதேசமயம் தமிழரசுக் கட்சிக்குள் தனிப்பட்ட உறுப்பினர்களிடம் இந்தியாவை நோக்கிய சாய்வு உண்டு.அது வெளியுறவுக் கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்பதைவிடவும் கட்சிக்குள் தமது ஸ்தானத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.கடந்த 14 ஆண்டு கால தமிழரசுக் கட்சியின் வெளியுறவு நிலைப்பாடுகளை தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது,அதிகம் மேற்கை நோக்கியே சாய்கின்றது,அதேசமயம், பலமான நாடுகளின் இழுவிசைகளுக்கிடையே பேர அரசியலை முன்னெடுக்கத் தவறியிருக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை அதுவும் ஒரு மேற்கை நோக்கிய கட்சிதான்.அது திட்டவட்டமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை எதிர்க்கப் போவதில்லை என்று அக்கட்சி அறிக்கைகளில் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் தனது எதிரிகளை இந்தியாவின் அடிவருடிகள் அல்லது கைக்கூலிகள் என்று கூறுவதன்மூலம் அது இந்தியாவை ஒரு எதிர்த் தரப்பாகவே உருவகப்படுத்துகின்றது.இந்தியாவை ஒரு எதிர்த் தரப்பாகக் கருதினால் அதன் தர்க்கபூர்வ விளைவாக மேற்கைத்தான் கையாள வேண்டியிருக்கும்.கடந்த 14 ஆண்டுகால அக்கட்சியின் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால்,அது மேற்கை நோக்கிய ஒரு கட்சிதான்.ஆனால் அக்கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால், முன்னணியியானது வெளிப்படையாக பலமான நாடுகளை நோக்கிச் சாய்வதில்லை என்பதுதான்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால் விக்னேஸ்வரனின் கட்சி ஒப்பீட்டளவில் இந்தியாவை நோக்கிச் சாய்வதாகத் தெரிகிறது.13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்குரிய ஒரு நடைமுறை வழிவரைபடத்தை விக்னேஸ்வரன் இப்பொழுது முன்வைக்கின்றார்.அது இந்தியாவை நோக்கிய ஒரு சாய்வுதான்.

இவைதவிர ஏனைய கட்சிகள் அதாவது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் காணப்படும் கட்சிகளைத் தொகுத்து பார்த்தால், அவை இந்தியச் சாய்வு நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள்தான். அதில் உள்ள பெரும்பாலான கட்சிகள் முன்பு இந்தியாவோடு சேர்ந்து உழைத்தவை.இப்பொழுதும் இந்தியாவுக்கு விசுவாசமானவை.மேலும் அக்கூட்டுக்குள் காணப்படும் ஜனநாயக போராளிகள் கட்சியும் அண்மை காலங்களில் இந்தியாவை அதிகம் நெருங்கிச் செல்லும் ஒரு கட்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.அக்கூட்டமைப்புக்குள் இருப்பவை அநேகமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள்.அதில் டெலோவையும் புளட்டையும் தவிர ஏனைய கட்சிகளுக்கு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் ஆணை கிடையாது.எனவே தொகுத்துப் பார்த்தால் ஜனநாயக கூட்டமைப்புத்தான் ஒப்பீட்டளவில் வெளிப்படையாக இந்தியச் சாய்வுடைய ஒரு வெளியுறவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

எனவே தமிழ்த் தேசிய பரப்பில் காணப்படும் கட்சிகளை அல்லது கட்சிக்கூட்டுக்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இதில் ஒப்பீட்டளவில் இந்தியாவை விடவும் மேற்கே நோக்கி அதிகம் சாய்கின்ற கட்சிகள்தான் பலமாக இருக்கின்றன என்பது தெரிகிறது.அவ்வாறு மேற்கை நோக்கிய வெளியுறவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்றால் மேற்படி கட்சிகள் ஐநாவையும் கட்டாயம் கையாள வேண்டும்.ஏனென்றால் மேற்கத்திய ராஜதந்திர பரப்புக்குள்தான் ஐநாவும் வருகின்றது.ஆனால் மேற்படி கட்சிகளிடம் ஐநாவைக் கையாள்வதற்குரிய சரியான வழிவரைபடம் ஏதும் இருக்கின்றதா ?

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மூன்றையும் இணைத்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் கேட்கப்பட்டது. பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பதே அது.எனவே பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே எடுத்து ஐநா பொதுச்சபையானது அதனை சர்வதேச நீதிமன்றங்களை நோக்கிக் கொண்டுபோக வேண்டும் என்ற தொனிப்பட மேற்படி கடிதம் எழுதப்பட்டது.இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது மாதங்கள் ஆகின்றன. ஆனால் அக்கோரிக்கையை நோக்கி மேற்படி கட்சிகள் எந்தளவுக்கு உழைத்திருக்கின்றன ?

எந்த ஒரு கட்சியும் அவ்வாறு உழைக்கவில்லை என்றே தெரிகிறது.அவ்வாறு உழைத்து இருந்திருந்தால் ஒரு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசாங்கத்தைப் பிணையெடுக்க முற்பட்ட மேற்கத்திய நாடுகள் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான நிர்பந்தங்கள் எவையும் பிரயோகிக்கப்படவில்லை என்பதைத்தான் நாட்டில் நடக்கும் சிங்கள பௌத்த மயமாக்கல் நமக்கு உணர்த்துகின்றது. ஐ.எம்.எஃப்,உலக வங்கி போன்றன பெருமளவுக்கு மேற்கத்திய ராஜதந்திர பரப்புக்குள் காணப்படும் உலகப் பொதுக்கட்டமைப்புகள்.எனவே மேற்கைக் கையாள்வது என்ற நடைமுறையை கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் ஐ.எம்.எஃப்பை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றனவா?அல்லது பலமிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை செய்திருக்கின்றதா?

அவ்வாறு செய்திருந்திருந்தால் நிதி உதவியும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதபடி பிணைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு பிணைக்கப்படவில்லை.அதுமட்டுமல்ல,ஐ.எம்.எஃப். பிரதிநிதிகள், தென்னிலங் கையிலுள்ள சிவில் சமூகங்களைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது.ஆனால் அவ்வாறு தமிழ்ச் சிவில் சமூகங்களை என் இதுவரை சந்திக்கவில்லை? எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதான மேற்கு நாடுகளின் நிலைப்பாடு எனப்படுவது,தமிழ்க் கட்சிகளின் மேற்கை நோக்கிய அணுகுமுறையின் இயலாமையைக் காட்டுகிறது.

ஐ.எம்.எஃப்பின் உதவிகள் கிடைக்கும் ஒரு காலகட்டத்திலேயே சிங்கள பௌத்தமயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றமை என்பது அந்த இயலாமைக்குச் சான்று. அரசாங்கம் ஒருபுறம் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்புகளில் ஒன்றாகிய உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக் குழுவை உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.ஆனால் அதற்குச் சமாந்தரமாக சிங்களபௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.ஆயின், அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு அதாவது நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இல்லை என்று பொருள்.

எனினும் ஐ.எம்.எஃப்பும் மேற்குநாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து உதவுகின்றன என்றால்,புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் உட்பட தமிழ்த்தரப்பு மேற்கு நாடுகளை பொருத்தமான விதங்களில் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டது என்று தானே பொருள்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *