அருகே நின்ற வில்வரத்தினம் அவரிடம் சொன்னார்…”ஆளப் பார்த்தால் உங்களை விளங்கிக் கொள்வார் போலத் தெரியுது…எங்கட செற் என்றுதான் எனக்குத் தோன்றுது.நீங்கள் சொல்லுங்கோ அண்ண.அவர் விளங்கிக் கொள்வார்” என்று.
மு.பொ தயங்கினார். நான் அவரை ஊக்கப்படுத்தினேன். “சொல்லுங்கோ மாஸ்டர். அது என்னவாக இருந்தாலும் பரவாயில்ல. நான் எதுவும் சொல்ல மாட்டன்.
மு.பொ.சொன்னார் “அது ஒரு கனவு தம்பி”
“கனவா? சொல்லுங்கோ”
“சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கனவு கண்டனான். அதில மகாகாளி ருத்ர கோலத்தில் விஸ்வரூபியாக என் முன் தோன்றினாள்.அவளுடைய எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள் பளிச்சிட்டன.அவள் கலையாடியபடி என்னிடம் சொன்னாள் ‘வங்கத்தில் பிறந்த சிங்கங்கள் எல்லாம் ஈழத்தில் வந்து பிறந்திருக்கின்றன…அவை ஈழத்துக்காகப் போராடப் போகின்றன’ என்று”. முபொ சொல்லி விட்டு என்னைப் பார்த்தார்.
நான் திரும்பிக் கேட்டேன் “வங்கத்துச் சிங்கம் எண்டது நேதாஜிதானே?”
“சரியாப் பிடிச்சிட்டீங்கள்” என்று மு.பொ உற்சாகமாகச் சிரித்தார்.
இது நடந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பிரதான சாலையில் அமைந்துள்ள “திசை” பத்திரிகையின் அலுவலகத்தில் மு.பொ திசை ஆசிரியராக இருந்தபோது நானும் ஆசிரியர் பீடத்தில் வேலைசெய்தேன். அப்பொழுது ஒரு நாள் அவரிடம் கேட்டேன் “மாஸ்டர் உங்களிட்ட ஒரு ஒரு விசயம் கேட்க வேணும்.”
“கேளுங்கோ ”
“நீங்கள் ஏழு வருஷத்துக்கு முந்தி எனக்கு ஒரு கனவப்பற்றிச் சொன்னீங்கள். அதில வந்த காளி, ஈழத்தில் வந்து பிறந்த வங்கத்துச் சிங்கங்கள் போராடும் என்று மட்டுந்தான் சொன்னதா? போராடி வெற்றி பெறும் எண்டு சொன்னதா? ”
ஏன் அப்பிடிக் கேக்கிறாய் என்பது போல முபொ என்னை உற்றுப் பார்த்தார். “இல்லை. வங்கத்து சிங்கங்கள் போராடும் என்று மட்டும் தான் காளி சொன்னது. வெற்றி தோல்வி பற்றிச் செல்லவில்லை” என்று சொன்னார்.
இதே காலப்பகுதியில் மு.பொ தனது புதிய நூல் ஒன்றுக்கான அட்டைப் படத்தை வரைந்து தருமாறு என்னிடம் கேட்டார்.அந்த நூலின் தலைப்பு “விலங்கை விட்டெழும் மனிதர்கள்” அவசரமாக அந்த நூலை வெளியிட வேண்டியிருந்தபடியால் அந்த நூலின் அச்சுப் பிரதியை அவர் எனக்குத் தர முடியவில்லை. எனவே அந்த நூலின் சாராம்சத்தை எனக்கு அவர் விளங்கப்படுத்தினார். அவர் சொன்னதன் சாராம்சம் வருமாறு.
“மனிதக் கூர்ப்பின் படிநிலை வளர்ச்சிகளின் போது மனிதர்கள் குரங்கிலிருந்து கூர்படைந்தார்கள் என்று வைத்துக் கொண்டால், மரத்திலிருந்து தரைக்கு இறங்கிய மனிதர்கள் தம்மைச் சுற்றிலும் தன்னை தாக்கக்கூடிய மிருகங்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. எனவே தரைக்கு இறங்கிய மனிதர்கள் கையில் அகப்பட்ட கல்லையோ தடியையோ எடுத்துக் கொண்டார்கள். தரையில் அவர்கள் வேட்டையாடிகளாக, உணவு தேடிகளாக, உணவு சேகரிப்பவர்களாக, விவசாயிகளாக.. படிப்படியாக நாகரிகம் அடைந்த பொழுது, அவர்கள் கையில் வைத்திருந்த அந்த கருவியும் அவர்களோடு சேர்ந்து கூர்படைந்தது.கல்லாயுதம்,உலோக ஆயுதம்,மர ஆயுதம்,நவீன ஆயுதம் என்று கூர்படைந்து முடிவில் அணுகுண்டு வரை வந்துவிட்டது. மனிதக் கூர்ப்புக்கு சமாந்தரமாக தற்காப்புக் கருவிகளும் கூர்படைந்தன.”
“மனித குலம் நாகரீகமடைந்து விட்டதாக கூறுகின்றோம். ஆனால் மனிதர்கள் முழுமையாக விலங்கு மனோநிலை இருந்து அதாவது விலங்குக்குரிய வன்முறை உளவியலிலிருந்து விடுபடவில்லை.மனிதகுலம் நாகரீகமடைய தொடங்கிய முதல் படியில் அவர்களுடைய கையில் இருந்த ஆயுதமும் அவர்களோடு சேர்ந்து கூர்படைந்தது. ஆயுதங்கள் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை மனித நாகரீகத்துக்கு இன்றுவரை இல்லை.எப்பொழுது மனித குலம் ஆயுதங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை பெறுகின்றதோ அதுதான் உச்சமான கூர்ப்பு. அதாவது விலங்கு நிலையில் இருந்து மனிதர்கள் எழுவது என்பது ஆயுதங்கள் அற்ற ஒரு பாதுகாப்பான வாழ்க்கைதான்.இந்த அடிப்படையில் பார்த்தால் காந்தியின் அகிம்சை போராட்டம் ஒப்பீட்டளவில் மகிமையானது.காந்தி மீது விமர்சனங்கள் பல உண்டு.ஆனாலும் வன்முறை இல்லாத அறவழிப் போராட்டத்தில்தான் மனிதர்கள் ஒப்பீட்டளவில் விலங்கு நிலையில் இருந்து விடுபட்டு எழ முடியும்.”
இதுதான் மு.பொ சொன்னதிலிருந்து நான் விளங்கிக் கொண்டதன் சாராம்சம். இந்த விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்தால் அவர்கள் எப்படி ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முடியும்? என்ற கேள்வி எழும். ஆனால் ஆயுதப் போராட்டம் ஒரு காலகட்டத்தின் தேவை என்றும் தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அவர்கள் நம்பினார்கள்.எனினும் அறவழிப் போராட்டமே ஒப்பீட்டளவில் உன்னதமானது என்றும் அவர்கள் நம்பினார்கள். குறிப்பாக காந்தி தொடர்பான யோகி அரவிந்தரின் விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த உரையாடல் நடந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளின் பின் 2015இல் மு.பொ வெளியிட்ட “சங்கிலியன் தரை” என்ற நாவலானது ஆயுதப் போராட்டத்தைக் குறித்த பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றது. முபொ தன்னுடைய முன்னைய அரசியல் நம்பிக்கைகளிலிருந்து பெருமளவுக்கு பெயர்ந்து வந்துவிட்டதை அந்த நாவல் காட்டுகிறது.


முபொவும் உள்ளிட்ட தளையசிங்கம் அணியானது தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை முழுஅளவு ஆதரித்தது.அதற்காக இடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தது.அவர்கள் நேரடியாக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.ஆனால் ஆயுதம் ஏந்திய போராளிகளை அவர்கள் எப்பொழுதும் அரவணைத்தார்கள். அதே சமயம் ஆயுதப் போராட்டம் தொடர்பில் அவர்களுக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன.அந்த விமர்சனங்களை அவர்கள் போராளிகளுக்கு நெத்திக்கு நேரே சொல்வார்கள்.தமிழ்த் தேசியப் பரப்பில் காணப்பட்ட இலக்கிய ஆளுமைகளில் போராட்டத்தை ஆதரித்த அதேசமயம் போராட்டத்தின் மீதான விமர்சனங்களைக் கூர்மையாக வெளிப்படுத்திய ஒர் இலக்கிய அணியது.
”விடுதலைக்கான வழிவகைகளும் விடுதலை பயப்பனவாக அமைய வேண்டும்” என்று வில்வரத்தினம் அடிக்கடி தளையசிங்கத்தை மேற்கோள் காட்டுவார். 1984 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.மு.பொ எழுதிய “சடங்குகள் நீத்த தகனங்கள்” என்ற கவிதையின் இறுதி வரியில் விடுதலைப் போராட்டமும் ஒரு சடங்காகி விடுமா என்ற கேள்வியுண்டு. பின்னர் அவர் எழுதிய “காலி லீலை” என்ற நூலிலும் அவ்வாறு விடுதலைப் போராட்டம் குறித்த விமர்சனப் பார்வை உண்டு. இந்த விமர்சனங்களின் உச்சமாக “சங்கிலியன் தரை”யைப் பார்க்கலாம்.
2009க்குப்பின் அதாவது ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப்பின் ஆயுதப் போராட்டத்தை அதிகம் விமர்சித்த நாவல்களில் அதுவும் ஒன்று. தோல்விக்குப் பின் மு.பொவின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுவதற்கு அந்த நாவல் ஒரு காரணம். ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் தமிழ்மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற தாகம் மு.பொவிடம் கடைசிவரை இருந்தது.அதற்குக் காரணம் அவருடைய யுக நம்பிக்கைதான்.அதாவது ஆன்மீக நம்பிக்கைதான்.
மு.பொ முதலாவதாக ஓர் ஆன்மீகவாதி.அதற்குப் பின்னர்தான் அவர் இலக்கியவாதியும் சமூக அரசியல் செயற்பாட்டாளரும். இது அந்த அணியைச் சேர்ந்த தளையசிங்கம், வில்வரத்தினம் ஆகியோருக்கும் பொருந்தும்.
“சர்வமத சங்கம்” என்று அவர்கள் அழைத்த ஆன்மீக நிறுவனம் ஒன்றின் சீடர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த ஆசிரமத்தைச் சுற்றியே அவர்களுடய வாழ்க்கை கட்டப்பட்டிருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவியாக அவர்களுடைய ஆன்மீகக் குருவின் இணையாகிய “மதர் ” என்று அழைக்கப்படட சாமியம்மா இருந்தார்.
யாழ்ப்பாண பேரிடப்பெயர்வின் பின் அவர்களுடான இடையூடாட்டம் குறைந்து போனது.நாங்கள் யுத்த வலையங்களாகப் பிரிக்கப்பட்டோம்.யாழ்ப்பாணத்து இடப்பெயர்வுகளில் அவர்களுடைய ஆச்சிரமம் இடம்பெறவில்லை.அவர்கள் ஆச்சிரமத்தோடு இருந்தார்கள்.போர்க்கால இடப்பெயர்வுகளில் பெரும்பாலான மதத் தலங்கள்,ஆன்மீக நிறுவனங்கள் இடம்பெயர்ந்தன.ஆனால் தளையசிங்கம் அணியின் ஆச்சிரமம் இடம் பெயரவில்லை.அவர்கள் தங்கள் நம்பிக்கைகளோடு வாழ்ந்தார்கள்; நம்பிக்கைகளுக்காக வாழ்ந்தார்கள்.எல்லாவிதமான ஆபத்துக்களுக்குள்ளும் பற்றாக்குறைகளுக்குள்ளும் அவர்கள் குடும்பமாக பூங்குடுதீவில் வாழ்ந்தார்கள்.


ஆனால் அவர்களுடைய ஆசிரம மைய வாழ்க்கையானது அவர்களுடைய சமூக அரசியல் செயற்பாடுகளுக்கு என்றைக்குமே தடையாக இருந்ததில்லை. அது தொடர்பாக அவர்களிடம் தெளிவான ஒரு விளக்கம் இருந்தது.தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அவர்கள் தங்களுடைய ஆன்மீக நம்பிக்கைக்கூடாகவே வியாக்கியானம் செய்தார்கள்.அந்த நம்பிக்கையின் பாற்பட்டதுதான் இக்கட்டுரையில் தொடக்கத்தில் கூறப்பட்ட மு.பொவின் கனவும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அவர்கள் பார்த்தார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டம் ஞானிகளால் முன்நின்று நடாத்தப்பட்ட ஒரு போராட்டம் என்று தளையசிங்கம் அணி நம்பியது.ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கிய உளவியல் அடித்தளம்தான் ஆங்கிலம் பேசும் இந்திய நடுத்தர வர்க்கத்தை அதன் தாழ்வுச் சிக்கலில் இருந்து விடுவித்த காரணிகளில் ஒன்று என்று அவர்கள் கூறுவார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், மேலெழுந்த ஆங்கிலம் பேசும் இந்திய நடுத்தர வர்க்கமானது மேற்கத்திய மாயையில் மூழ்கி மேற்கத்திய பண்பாட்டையும் மேற்கத்திய தத்துவஞான மரபையும் பிரமிப்போடு பார்த்தது. தனது சொந்த மெய்ஞான விரிவைக் குறித்து அந்த நடுத்தர வர்க்கத்திடம் ஒருவித தாழ்வுச் சிக்கல் இருந்தது என்றும் தளையசிங்கம் கருதினார். விவேகானந்தரின் சிகாகோ உரைகள் அந்த தாழ்வுச் சிக்கலை நீக்கியதாகவும் அவர்கள் நம்பினார்கள். விவேகானந்தரின் சிகாகோ உரைகளைக் கேட்ட படித்த இந்திய நடுத்தரவர்க்கமானது தனது பண்பாட்டுச் செழிப்பையும் மெய்ஞான மரபின் ஆழத்தையும் மேன்மையையும் மீளக் கண்டுபிடித்த பொழுது, அதுவரையிலும் அவர்களிடமிருந்த தாழ்வுச் சிக்கல் நீங்கியது என்றும் அவர்கள் நம்பினார்கள். அவ்வாறு ஆங்கிலம் தெரிந்த படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனதில் இருந்த கூன் நீங்கிய பொழுது இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான அடிப்படைகள் வேகமாகக் கனிந்தன் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
ஈழப் போராட்டத்திற்கும் அவர்களிடம் ஒரு ஆன்மீக விளக்கம் இருந்தது. அவர்களிடமிருந்த ஒரு புதிய யுகத்துக்கான நம்பிக்கையும் ஈழத் தமிழர்களின் விடுதலையும் ஒன்று மற்றதுடன் தொடர்புடையது என்றும் ஒரு வியாக்கியானம் அவர்களிடம் இருந்தது.
அது விஞ்ஞானபூர்வமானதா இல்லையா என்பதை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமன்று. ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து சொந்தச் சாம்பலில் இருந்து புதிதாய்ப் பிறக்கும் நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தார்கள். அது முழுக்க முழுக்க அவர்களுடைய ஆன்மீக நம்பிக்கையின் விளைவு.
கவிஞர் முருகையன் தளையசிங்கத்துக்கு எழுதிய கடிதங்களுக்கு தளையசிங்கம் கொடுத்த விளக்கங்களும் இந்த நம்பிக்கைகளின் பாற்பாட்டவைதான். அக்கடிதங்களை தளையசிங்கத்தின் மெய்யுள் நூலில் காணலாம். தளையசிங்கத்தின்”ஒரு தனி வீடு”நாவலும்(1960) அத்தகையதுதான். அதில் ஒரு தீர்க்கதரிசனமும் இருப்பதாகத் தான் நம்புவதாக அவர் வில்வரத்தினத்திடம் ஒருமுறை கூறியிருக்கிறார். ஈழத்துப் போர் இலக்கியப் பரப்பில் முன்னோடிப் படைப்புகளில் அதுவும் ஒன்று. அங்கு ஒரு தனி வீடு என்று மறைமுகமாகச் சுட்டப்படுவது ஒரு தனி நாடுதான்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில்,மிதவாத அரசியலில் தளையசிங்கம் அணியின் அரசியல் நிலைப்பாடுகள், சேர்க்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் உண்டு. எனினும் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அவர்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகளை அவர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள்.அதற்கு அவர்களுடைய மெய்முதல்வாத சிந்தனைகள் மட்டும் காரணமல்ல, அவர்களுடைய தமிழ்த் தேசியவாத நிலைப்பாடும் ஒரு காரணம்.
தனது பட்டப்படிப்பை இடையிலேயே கைவிட்டார்; நிச்சயமற்ற தொழில்; நீண்ட காலத்துக்கு வாடகை வீடு ; நிச்சயமற்ற உடலாரோக்கியம்…போன்றவற்றின் மத்தியிலும் 85 வயதுவரை முபொ வாழ்ந்தார்.
மெலிந்த வாடிய ஆனால் நிமிர்ந்த தோற்றம்.எப்பொழுதும் இனிக்கும் கண்கள்.தடித்த கறாறான மீசை.நடந்து நடந்து கதைப்பார்.நடக்கிறார் என்பதை விடவும் ஓடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஓட்டமும் நடையுமாக கதைத்துக் கொண்டே போவார். முற்கோபி.ஆனால் அவருடைய பௌதீக பிரசன்னம் எப்பொழுதும் பொலிவாயிருக்கும்;நிறைவாய் இருக்கும்; தித்திப்பாய் இருக்கும்.
ஒரு நிரந்தரமான ஆஸ்துமா நோயாளி. அதைவிட காலத்துக்கு காலம் பல்வேறு நோய்கள்.அவருடைய நோய்களே அவருக்குத் தவம்.அதைத்தான் அவர் “நோயிலிருத்தல்” என்று கூறுவார். எல்லாவிதமான உடல் உபாதைகளின் மத்தியிலும் கசங்காமல் இருப்பது.தனது நோய்களை,தனது உடலை, தன்னிலிருந்து வேறாக்கிக் காண்பது.தானே தன் உடலுக்குச் சாட்சியாக இருப்பது.
திசை அலுவலகத்தில் வைத்து எனக்கு அடிக்கடி சொல்லுவார் “சாட்சியாக இரு” “உன்னுடைய அரசியல் கருத்துக்களால் உனக்கு ஆபத்து வருமாக இருந்தால் உன்னுடைய நொண் கொமிற்மன்ட்தான் கொமிற்மன்ட்.”அதாவது “பங்களி யாமைதான் உன்னுடைய பங்களிப்பு” என்று. அதை நான் “போரிலிருத்தல்” என்று கூறினேன். சிரித்துக் கொண்டு ரசித்தார்.
ஒரு கவிஞனாக, கதை சொல்லியாக, திறணாய்வாளராக மு.பொவைத் தனியாக ஆராய வேண்டும். ஆனால் இந்த இடத்தில் விற்கின்ஸ்டைனை மேற்கோள் காட்டுவது அவருடைய கவிதைகளுக்குப் பொருந்தும். ”என்டைய மொழியின் எல்லைகளின் அர்த்தம் என்னுடைய உலகத்தின் எல்லைகளே” என்று விற்கின்ஸ்டைன் கூறுவார். மு.பொவின் கவிதைகளும் அவருடைய ஆன்மீக வாழ்க்கையின், அவருடைய தியானத்தின் பொழிவுகள்தான்.
ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழமான தத்துவ தரிசனத்தைக் கொண்ட, ஆங்கில வாசிப்புள்ள, தனக்குச் சரியெனப்பட்டதை துணிந்து கூறத்தக்க விமர்சகர்கள் வரிசையில் முபொ முக்கியமானவர்.தத்துவ தரிசனம் இல்லையென்றால் விமர்சனம் முழுமையாகாது.அவர்களுடைய தத்துவ தரிசனமானது அவர்களுடைய ஆன்மீக நம்பிக்கையின் விளைவு. தளையசிங்கம் கண்டுபிடித்த மெய்யுள் எனப்படும் பரிசோதனை வடிவமும் அப்படித்தான்.இனி வரப்போகும் தமிழ் இலக்கியம் புனைவாக மட்டும் இருக்காது.அது மெய்யை-உண்மையை-அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்று தளையசிங்கம் கூறினார். அமெரிக்க கொம்யூனிஸ்ட் ஆகிய ஜோன் ரீடின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்களை” அவர் உதாரணமாகக் காட்டுவார்.
அவர் கூறியது ஒரு விதத்தில் பின்னர் மெய்யாகியது. ஈழத்துப் போரிலக்கிய பரப்பில் வெற்றி பெற்ற பெருந்தொகுதி படைப்புக்கள் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு புனைவு அல்லது கற்பனை என்பது உண்மையை அலங்கரிக்கும் சரிகையாகவே காணப்பட்டது.முபொ, தளையசிங்கத்தைப் பின்பற்றி மெய்யுள் வடிவங்களைப் பரிசோதனை செய்தார்.அவற்றுள் எத்தனை அவர்கள் எதிர்பார்த்ததுபோல தன் வடிவத்தை தானே விழுங்கும் மெய்யுளாக வெற்றி பெற்றன என்ற கேள்வியுண்டு.
அவருடைய சர்ச்சைக்குரிய நாவலான சங்கிலியன் தரையும் மெய் விவரங்களுக்கும் புனைவுக்கும் இடையே கலங்குகிறது. அதில் வரும் மையப் பாத்திரமாகிய தமிழினி ஆன்மீக உள்ளடக்கத்தை கொண்டவளாகக் காட்டப்படுகிறாள்.அவள் காளி உபாசகியாகவும், சுதந்திரப் போராளியாகவும், போராட்டத்துக்குள் இருந்து கொண்டே போராட்டத்தை விமர்சனபூர்வமாகப் பார்த்தவளாகவும் காட்டப்படுகிறாள்.எதிர்காலம் அவளுக்குக் கனவாகத் தெரிகிறது. அல்லது முபொ கூறுவதுபோல அறிதுயில் நிலையில் அவள் எதிர்காலத்தைக் காண்கின்றாள்.சில ஆண்டுகளிலேயே அவள் போராளியும் தளபதியுமாகிய தனது துணைவனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். போராட்டத்தில் இருந்தும் விலகி விடுகிறாள்.முடிவில், ஈழப்போரில் உயிர் நீத்த அனைவருக்குமாக வன்னியில் ஆத்மசாந்தி யாகம் ஒன்றை ஒழுங்குபடுத்துகிறாள். தன் குழந்தை சுதந்திராவை (சுதந்திரப் போராட்டத்தை) தன் சகோதரனிடம் கொடுத்து விட்டு அந்த யாகத்தீயில் பாய்ந்து தன்னை ஆகுதியாக்குகிறாள்.
தமிழினி ஒரு குறியீட்டுப் பாத்திரம்.அந்தக் குறியீட்டுப் பாத்திரத்துக்கூடாக மு.பொ தனது நம்பிக்கை முறிவை வெளிப்படுத்துகிறார். அதைசமயம் புதிய நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகிறார்.சங்கிலியன் தரையின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்….”பொன்னம்பலம் ராமநாதனில் இருந்து ஆரம்பமாகும் பிழையான அரசியல் பார்வை, நாவலரின் மோசமான சமய சாதிப் பார்வையோடு சங்கமித்து,இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் மிக மோசமான சந்தர்ப்பவாதமாகி, காந்தியத்தையே துஷ்பிரயோகம் செய்து,மார்க்சியப் ‘பேராசிரியர்களால்` இன்னொரு நலமெடுப்புக்கு இரையாகி,எல்லாம் இழந்த நிலையில் நமது விடுதலைப் போராட்டம் நிற்கிறது. மற்றும் எல்லாக் கூறுகளும் ஓய்ந்துபோக இப்போ ஒரு பெருவெளியை கண்டடைந்துள்ளது.இந்த வெளி செயல் திறனும் சிந்தனைத் திறனும் உடைய நேர்மையானவர்களால் பயன்படுத்தப்படுமாயின் அது எவரும் சுதந்திரமாக வாழக்கூடிய கூட்டுரிமையைத் தரும். அதுவே இந் நாவலின் நோக்கமாகும்”.
1983இல் நான் அவரை முதன்முதலாகக் கண்டபொழுது தனது கனவைச்சொன்ன மு.பொவின் கண்களில் மிளிர்ந்த அதே நம்பிக்கை சுடரும் எதிர்பார்ப்போடுதான் 32ஆண்டுகளின் பின் 2015இல் சங்கிலியன் தரைக்குரிய முன்னுரையை அவர் எழுதி முடித்திருப்பார்.
ஏனென்றால் காத்திருப்புத்தான் அவர்களுடைய வாழ்க்கை.ஒரு புதிய யுகத்தைப் பற்றிய நம்பிக்கையோடு அவர்கள் காத்திருந்தார்கள்.அந்த நம்பிக்கையோடு நோயிலிருந்தார்கள்; போரிலிருந்தார்கள். அந்த நம்பிக்கையை அடைகாத்தார்கள். ஒரு தலைமுறைக்குள் முடிவுறாத காத்திருப்பு அது. இரண்டு தலைமுறைகளின் காத்திருப்பு.மனிதர்களின் சராசரி வாழ்க்கைக் காலத்துக்குள் நிறைவேறாத விடயங்களுக்காகக் காத்திருப்பதற்கு எல்லாராலும் முடிவதில்லை
கலியுகம் முடிந்து சத்திய யுகம் ஒன்று தோன்றும் என்ற அவர்களுடைய ஆன்மீக நம்பிக்கையை விஞ்ஞான பூர்வமாக ஆராய்வது எனது நோக்கமன்று. ஆனால் அந்த நம்பிக்கைக்காக அவர்கள் ஓர்மத்தோடு,வைராக்கியத்தோடு வாழ்ந்தார்கள். ”இனிவரும் காலம் எங்களின் தோழன்.எதற்குமே நாமினி அஞ்சோம்.புது யுகத்தினைப் படைத்திட வந்தோம்”.என்று மு.பொ பாடினார். உலகப் படத்தில், இந்து மகா சமுத்திரத்தில், ஒரு சிறு புள்ளியாகக் தெரியும் சிறிய தீவிலிருந்து கண்ட கனவு அது. மனிதர்களின் சராசரி ஆயுட் காலத்துக்குள் அடங்காத ஒரு கனவு. ஒரு யுகக் கனவு.
புத்தாண்டு,ஜனவரி 2025,
யாழ்ப்பாணம்.