கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட உரையில் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் ஆகிய நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளையும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் அவிசாவளை மாவட்டப் பொது மருத்துவ மனைகளையும் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தமிழ் பகுதிகளில் இடம்பெற்று வரும் வாதப்பிரதி வாதங்களின் ஒரு பகுதியாக முகநூலில் பகிரப்பட்ட ஒரு குறிப்பை இங்கு பார்க்கலாம். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தொடர்பான அக்குறிப்பு வருமாறு…
1.இலங்கையில் Intern Medical Officers (பயிற்சி மருத்துவர்கள்) இல்லாத ஒரே மாவட்ட வைத்தியசாலை எது ?
2.இலங்கையில் நிரந்தர மருத்துவ நிபுணர்கள் (Permanent Medical Consultants) இல்லாத ஒரே மாவட்ட வைத்தியசாலை எது ?
3.மாதத்தில் அனேக வைத்தியர்கள் 10 நாட்கள் சேவையாற்றி,20 நாட்கள் லீவு பெறும் மாவட்ட வைத்தியசாலை எது ?
4.வெளிநாட்டு மேற்படிப்புக்கு செல்லும் மருத்துவர்கள் தற்காலிக இணைப்பு பெறும் இலகு மாவட்ட வைத்தியசாலை எது ?
5.குறித்த மருத்துவமனையில் வேலைபுரியும் உத்தியோகத்தர்களே தமது உறவினர்களை சத்திரசிகிச்சை மற்றும் மகப்பேற்றிகு தமது வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என ஆலோசனை வழங்கும் மாவட்ட வைத்தியசாலை எது ?
6.இலங்கையில் அதிக நோயாளர்களை வேறு மாவட்ட வைத்தியசாலைக்கு Transfer (மாற்றல்) செய்யும் மாவட்ட வைத்தியசாலை எது ?
7.மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கிழமையில் 2/3 நாட்கள் சேவையாற்றி,மிகுதி 2/3 நாட்கள் லீவு பெறும் மாவட்ட வைத்தியசாலை எது ?
8.வருடாந்தம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியை, திட்டமிடலுக்கு TO இல்லை என்று காரணம் சொல்லி மீள அனுப்பும் மாவட்ட வைத்தியசாலை எது ?
9.மாவட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்காணிக்காது, ஏனோ தானோ என செயற்படும் மாவட்ட சுகாதார சேவை திணைக்களத்தை உடைய மாவட்டம் எது ?
10.இங்கே உள்ளவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ஒரு மாவட்ட வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையின் தரத்தில் பேணும் அதிகாரிகள் உள்ள மாவட்ட வைத்தியசாலை எது ?
சரியான பதில் வழங்குவோர்க்கு,“மாவட்டப் பற்றாளர்” என்ற பட்டம் வழங்கப்படும்.”
இக்குறிப்பை எழுதியவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி தனஞ்சயன்.அவர் இங்கு முன்வைக்கும் காரணங்களைப் போன்று மன்னார் மறைமாவட்ட ஆயரிடமும் காரணங்கள் இருக்கக்கூடும்.ஏனெனில் பல மாதங்களுக்கு முன்பு அவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு விடயம்.நாட்டிலுள்ள 20 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகள் ஏற்கனவே அவ்வாறு மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன.மேல் மாகாணத்தில் உள்ள ஹொரண (DGH Horana) மாவட்ட மருத்துவமனை கடந்த ஓகஸ்ட் மாதத்தோடு மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.இப்பொழுது மிச்சமுள்ள ஆறு மருத்துவமனைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. அதாவது முன்னைய அரசாங்கங்கள் தொடக்கி வைத்ததை இந்த அரசாங்கம் முடித்து வைக்கின்றது.
இப்பொழுது மத்தியின் கீழ் கொண்டுவரப்பட இருக்கும் மருத்துவமனைகளில் நான்கு வடக்கு மாவட்டங்களில் காணப்படுகின்றன.மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளை மத்தியின் கீழ் எடுத்துக்கொள்வது என்பது மாகாணங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கொஞ்சநஞ்ச தன்னாட்சி அதிகாரங்களையும் பறிப்பதுதான்.ஏற்கனவே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மாகாண அதிகாரங்கள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்திருக்கின்றன.அந்தப் போக்கின் ஆகப்பிந்திய நகர்வாக இதைப் பார்க்கலாம்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒரே குரலில் இந்த நகர்வை எதிர்த்திருக்கின்றன.ஆனால் இங்கு ஒரு கேள்வி உண்டு.கிழக்கில் இதுபோல மாவட்ட மருத்துவமனைகள் மத்தியின் கீழ் கொண்டுவரப்பட்டபோது தமிழ்க் கட்சிகள் அப்பொழுது வலிமையான எதிர்ப்பைக் காட்டினவா?
கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல,மாவட்ட மருத்துவமனைகள் குறைபாடுகளோடு உள்ளன என்பது உண்மை.ஆனால் அதற்காக அவற்றை மத்தியிடம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.மாறாக மாகாணத்தின் நிதி அதிகாரங்களை எப்படி பலப்படுத்தலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும்.
தமிழ்மக்கள் தன்னாட்சி அதிகாரத்துக்காகத்தான் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள்.தன்னாட்சி அதிகாரங்கள் எனப்படுபவை தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளாகும்.அவற்றை அரசியல் உரிமைகள் என்றும் அழைக்கலாம்.ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளுக்குள் நிதி உரிமைகளும் அடங்கும்.நிதி அதிகாரம் இருந்தால் ஒரு மாவட்டம் தனக்கு வேண்டிய நிதியைத் திரட்டிக் கொள்ளலாம்.
இப்பொழுது மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட இருக்கும் ஆறு மருத்துவமனைகளில் நான்கு வட மாகாண மருத்துவமனைகளைத் தவிர்த்து ஏனைய இரண்டும் மேல் மாகாணத்தில் இருப்பவை.மேல் மாகாணம் நிதிப்பலம் மிக்க ஒரு மாகாணம்.தனது மருத்துவமனைகளைப் பராமரிப்பதற்கு வேண்டிய நிதிக் கொள்ளளவை,வருமானத்தை அது கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.அங்குள்ள இரண்டு மருத்துவமனைகளையும் மத்தியிடம் கொடுப்பதற்கு அந்த மாகாணத்தின் ஆளுநர் விரும்புவாரோ இல்லையோ, அந்த மாகாண மருத்துவ நிர்வாகம் விரும்பவில்லை என்ற ஓர் அவதானிப்பும் உண்டு.தவிர,தன்னாட்சி அதிகார நோக்குநிலையில் இருந்து இந்த விவகாரத்தை அணுகவேண்டிய தேவை,பயம்,முன்னெச்சரிக்கையுணர்வு மேல் மாகாணத்துக்கு இல்லை.
ஆனால் வட-கிழக்கு மாகாணங்களுக்கு உண்டு.தமிழ்மக்கள்தான் தன்னாட்சி அதிகாரத்துக்காகப் போராடியவர்கள்.ரத்தம் சிந்தியவர்கள்.அவர்களுக்குத் தீர்வைக் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு எல்லா மாகாணங்களுக்கும் தீர்வு கொடுக்கப்பட்டது.எனவே மேல் மாகாணத்தைப்போல ஏனைய மாகாணங்களுக்கும் நிதிப் பலம் இருக்குமாக இருந்தால்,அவற்றாலும் மாவட்ட மருத்துவமனைகளைத் திறம்பட நிர்வகிக்க முடியும்.இப்போது இருப்பதை விடவும் திறமாகத் தரமுயர்த்த முடியும்.
எனவே இங்கு பிரச்சனை நிதி அதிகாரம்தான். நிதிக் கொள்ளளவுதான்.நிதிப் பலந்தான்.தமிழ் மாகாணங்களுக்கு அவ்வாறான நிதி அதிகாரம் வேண்டும் என்று கேட்டுத்தான் தமிழ்மக்கள் போராடி வருகிறார்கள்.எனவே இந்த விடயத்தை தமிழ்மக்களின் தன்னாட்சி அதிகார நோக்குநிலையில் இருந்து தான் அணுகலாம்.தூய அபிவிருத்தி என்ற நோக்கு நிலையில் அணுக முடியாது.
தூய அபிவிருத்தி என்ற ஒன்று அரசியலில் இல்லை.ஒரு மக்கள் கூட்டம் தனது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது எதைச் செய்வது? எப்படிச் செய்வது?யாரை வைத்துச் செய்வது? எவ்வளவு காலத்துக்குள் செய்வது? போன்ற விடயங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் அந்த மக்கள் கூட்டத்துக்கு இருக்கவேண்டும்.இல்லையென்றால் அது முழுமையான பொருளில் அபிவிருத்தி அல்ல.அப்படிப்பட்ட அதிகாரங்களைக் கேட்டுத்தான் தமிழ்மக்கள் போராடி வருகிறார்கள்.
மேலும்,இதுவரை அவ்வாறு மத்தியின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மருத்துவமனைகளில் எத்தனை எதிர்பார்த்த அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன?குறிப்பாக 13ஆவது திருத்தத்தின் கீழ் மத்தியின் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உள்ள யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எல்லா வளங்களும் கிடைத்துவிட்டனவா?
“யாழ் போதனா வைத்தியசாலையில் 2013இலிருந்து மகப்பேற்று விடுதிகளுக்கான கட்டடம் இல்லை.மருத்துவ விடுதிகளுக்கான கட்டடத்தில்தான் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.அண்மையில் 2500க்கும் அதிகமான தாதியருக்கு நியமனம் வழங்கியபோது யாழ் போதனா வைத்தியசாலைக்கு 43 தாதிய உத்தியோகததர்கள்தான் நியமிக்கப்பட்டார்கள்.ஆனால் அங்கு 105 வெற்றிடங்கள் உள்ளன.ஏனைய போதனா வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வளங்கள் மிகக் குறைவு” இவ்வாறு முக நூலில் எழுதியிருப்பவர் ஒரு மருத்துவ நிர்வாகி.
அவர் கூறியதன் அடிப்படையில் கேட்டால்,மத்தியின் கீழ் கொண்டு வருவதனால் வேகமாகவும் பரந்தளவிலும் ஒரு மருத்துவமனையைத் தரம் உயர்த்தலாம் என்பதற்கு தமிழ்ப் பகுதிகளில் எத்தனை பிரகாசமான முன்னுதாரணங்கள் உண்டு?
எனவே இந்த விடயத்தை ஒரு மருத்துவமனையைத் தரம் உயர்த்துவது என்ற அடிப்படையில் யோசிப்பதை விடவும்,ஆழமான பொருளில் தமிழ் மக்களுக்கு உரிய தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது என்ற நோக்குநிலையில் இருந்துதான் தமிழ் மக்கள் சிந்திக்கலாம்.
மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணிக்குள்,ஏற்கனவே மாகாண சபைகளின் அதிகாரங்கள் படிப்படியாகப் பறிக்கப்பட்டிருக்கும் கெட்ட முன்னுதாரணங்கள் நிறைந்த வரலாற்று அனுபவத்தின் பின்னணியில்,ஒரு வரவு-செலவுத் திட்ட அறிவிப்பின்மூலம் இருக்கின்ற கொஞ்சநஞ்ச மருத்துவ சுகாதார அதிகாரங்களையும் பறிக்கும் இம்முயற்சியானது,ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் தமிழ்மக்களுக்கு தன்னாட்சி அதிகாரங்கள் கிடைக்காது என்பதை உணர்த்தும் ஆகப்பிந்திய நகர்வாக எடுத்துக் கொள்ளலாமா? தேசிய மக்கள் சக்தியின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் வரையறைகளை முன்னறிவிக்கும் குறிகாட்டியா இது?





