மாவீரர் நாள் 2026 

போராட்டத்தை மறந்து விடுங்கள் என்று கம்ப வாருதி கூறிய அதே கம்பன் விழாவில், சுமந்திரனும் ஓர் அதிதியாகக் கலந்து கொண்டார். எனினும் அவர் கடந்த மாவீரர் வாரத்தின் போது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும்  மாவீரர் நினைவு வளாகங்களில் காணப்பட்டார்.போராட்டத்தின் நினைவுகளுக்கு வணக்கம் செலுத்தினார்.அவரும் அவரைப் போன்ற அரசியல்வாதிகளும் போராட்டத்தை மறந்தால் அரசியல் செய்ய முடியாது.அதுதான் தமிழ்த் தேசியக் கள யதார்த்தம்.

கடந்த 17 ஆண்டுகால மிதவாத அரசியல் எனப்படுவது அதற்கு முந்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவும் தொடர்ச்சியுந்தான். தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை ஆகக்கூடிய பட்சம் திரளாகக் கூட்டிக் கட்டுவது. ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் விடயங்களில் கூட்டு நினைவுகள் முக்கியமானவை.எனவே தேசியவாத அரசியலில் இறந்த காலத்தின் உணர்வுபூர்வமான கூட்டு நினைவுகளைக் கையாளாமல் நிகழ்காலம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில்,உள்ளதில் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் தனது மக்களின் கூட்டு உணர்வுகளுக்கும் கூட்டு நினைவுகளுக்கும் மாறாகச் செல்லமுடியாது.

கடந்த 17 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கட்சி மைய அரசியல்தான்;தேர்தல் மைய அரசியல்தான்.கட்சி மைய அரசியலில் தமிழரசுக் கட்சிதான் இப்பொழுது பிரதான கட்சி.பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளன.அக்கட்சிக்குள் சுமந்திரன் இப்பொழுது பதில் செயலாளர்.அவருக்கு விசுவாசமான உள்ளூராட்சி சபைகள் நினைவு வாளாகங்களை உருவாக்கும் போதும் நினைவுகூரும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் போதும் அவரைத்தான் முக்கியத்துவப்படுத்தும்.

இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று முக்கியஸ்தர்கள் கிழக்கில் காணப்பட்டார்கள்.

புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்ட பின் நினைவு கூர்தலை ஊர்கள் தோறும் ஒழுங்குபடுத்துவது பெருமளவுக்கு உள்ளூராட்சி மன்றங்கள்தான். சுயாதீன ஏற்பாட்டுக் குழுக்கள்,முன்னாள் இயக்கத்தவர்களால் நிர்வகிக்கப்படும் ஏற்பாட்டுக் குழுக்கள் போன்றன உண்டு.எனினும் தாயகத்தில், குறிப்பாக மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துவதில் கட்சி வேறுபாடு கடந்து உள்ளூராட்சி சபைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

நினைவு கூர்தலில் முதலில் ரிஸ்க் எடுத்தது கட்சிகளும்,பல்கலைக்கழக மாணவர்களும், மதகுருக்களும், குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகளும்,செயற்பாட்டாளர்களும்தான்.கட்சிகளாக, மாணவர்களாகத் துணிந்து முன்வந்து நினைவு நாட்களை அனுஷ்டித்தபடியால்தான் இப்போது கிடைத்திருக்கும் நினைவு கூர்தலுக்கான வெளி ஸ்தாபிக்கப்பட்டது.ஐநாவின் நிலை மாறுகால நீதியின் கீழ் அல்ல.

நிலைமாறு கால நீதியின் தூண்களில் ஒன்று ஆகிய இழப்பீட்டு நீதியின் கீழ் தமிழ் மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. ஆனால் இலங்கைத் தீவின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் சின்னங்களை அல்லது குறிப்பிட்ட சில விடயங்களை நினைவு கூர முடியாது என்று உள்நாட்டு பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் அரசாங்கம் தடுக்கின்றது.இந்த விடயத்தில் அனைத்துலக நிலை மாறுகால நீதியின் ஒரு பகுதியான இழப்பீட்டு நீதி ஏற்பாடுகளுக்கும் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கும் இடையே முரண்பாடு உண்டு.இந்த முரண்பாடு காரணமாகத்தான் ஒவ்வொரு நினைவு கூர்தலின் போதும் ஏதாவது ஒரு பிரச்சினை எழுகிறது.”அந்தச் சின்னத்தை அகற்று;இந்த இலச்சினையை அகற்று” என்று கூறிக்கொண்டு போலீஸ் வந்து நிற்கிறது.திலீபனின் சிலை விவகாரத்தில் அந்தப் பிரச்சினை இன்றுவரை தீரவில்லை.

கடந்த 17 ஆண்டுகளிலும் தாயகத்தில் மாவீரர் நாளில் அதிக தொகை மக்கள் திரள்வது கிளிநொச்சியில்தான்.தாயகத்துக்கு வெளியே கனடாவில் திரள்வதுண்டு. கிளிநொச்சியில் சிறீதரனின் பிரதான அடைவுகளில் ஒன்றாக மாவீரர் நாளில் திரளும் சனத்தொகை பார்க்கப்படுகிறது.அதனால் சிறீதரனுக்கு எதிராக அரசியல் செய்ய விரும்பும் எவரும் மாவீரர் நாளை, மாவீரர்களின் நினைவுகளை கையாள வேண்டிய தேவை உண்டு. இந்த விடயத்தில் கட்சிகளுக்கு இடையிலான போட்டிகள் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் என்பன பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை.

இது பெருமளவுக்கு தேர்தல் நோக்கு நிலையில் இருந்துதான். ஆனால் அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் இருப்பவற்றிலிருந்துதான் அரசியலை முன் நகர்த்தலாம்.தாயகத்தில் இப்பொழுது கட்சிகள்தான் உண்டு.மக்கள் இயக்கங்கள் இல்லை.சிறிய அளவில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுக்கள் உண்டு.ஆனால் அங்கேயும் கட்சிகளின் செல்வாக்கும் கட்சி ஆட்களும் உண்டு.

அதனால் மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துவது,மாவீரர் குடும்பங்களைக் கௌரவிப்பது போன்ற எல்லாவற்றிலும் கட்சிகளின் ஈடுபாடு,செல்வாக்கு இருக்கும்.2009க்கு முன்புவரை மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் காணப்பட்ட கருநிலை அரசின் அரச நிகழ்வு.ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு அல்லது பொதுவான ஏற்பாட்டுக் குழுவோ இல்லை.

அவ்வாறான பொதுவான ஏற்பாட்டுக் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இன்றுவரை வெற்றி அளிக்கவில்லை.அந்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பெருமளவுக்கு களைத்தும் சலித்தும் ஒதுங்கி விட்டார்கள். அதனால் நினைவு கூர்தலுக்கான பொதுக் கட்டமைப்பு எதுவும் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.நடைமுறையில் ஒவ்வொரு துயிலும் இல்லத்தையும் ஏதோ ஒரு ஏற்பாட்டுக் குழு நிர்வகிக்கின்றது.அந்தந்தப் பகுதி மாவீரர் குடும்பங்களையும் அப்படித்தான்.உள்ளூர் செயற்பாட்டாளர்கள்,கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சேராதவர்கள்,முன்னாள் இயக்கத்தவர்கள்,மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்,உள்ளூர் வணிகர்கள்…போன்றவர்கள் அந்த ஏற்பாட்டுக் குழுக்களை நிர்வகிக்கின்றார்கள்.உள்ளூர் வணிகர்கள் நிதி கொடுக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களும் நிதி கொடுக்கிறார்கள்.அதனால் ஒரு மைய ஏற்பாட்டுக் குழு இல்லை என்ற போதிலும் மாவீரர் நாள் உரிய ஒழுங்குகளுக்கு அமைய அனுஷ்டிக்கப்படுகிறது.மாவீரர் குடும்பங்களும் குறைந்தது அந்த மாதத்திலாவது கொரவிக்கப்படுகின்றன.

துயிலும் இல்லங்களைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படும் கட்டமைப்புகளாக மாற்றி,வெளிப் பார்வையாளர்கள் வருகை தரக்கூடிய இடங்களாகப் பேணுவதற்கு இப்போது உள்ள ஏற்பாட்டுக் குழுக்களால் முடியவில்லை. அதில் சட்டப் பிரச்சினைகளும் இருக்கும்.அதனால் துயிலும் இல்லங்கள் பெருமளவுக்கு மாவீரர் நாளையொட்டித் துப்புரவாக்கப்படுகின்றன; சோடிக்கப்படுகின்றன.

அப்படித்தான் மாவீரர் குடும்பங்களும் மாவீரர் மாதத்தில் கௌரவிக்கப்படுகின்றன;அல்லது பராமரிக்கப்படுகின்றன. அக்குடும்பங்களைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கும் மையக் கட்டமைப்பு எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,அவரவர் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துகிறார்கள். எனினும் 2009க்கு முன்பு பின்பற்றப்பட்டு வந்த அதே நடைமுறைகளைப் பின்பற்றி அதை ஒரு மரபாக, பண்பாடாக பல்கலைக் கழக மாணவர்களும்,இந்த ஏற்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றன.இது அந்த நாளுக்குள்ள முக்கியத்துவத்தையும் அந்த நாள் எந்த அளவுக்கு மக்கள் மயப்பட்டிருக்கிறது என்பதையும் காட்டுகின்றது.

தாயகத்தில் மாவீரர் நினைவுகளை பெருமளவுக்குக் கட்சிகளே கையாளுகின்றன.பல்கலைக்கழக மாணவர்களும் நினைவு கூர்கிறார்கள்.எனினும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, ஏனைய எல்லா முரண்பாடுகளையும் கடந்து, அது ஒரு மக்கள் மயப்பட்ட நிகழ்வாக தொடர்ந்து அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 17 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒன்று திரட்டுகின்ற அதனாலேயே கூட்டுக் கோபத்தையும் கூட்டுத் துக்கத்தையும் ஒன்று திரட்டுகின்ற உணர்ச்சிகரமான ஒரு நாளாகவும் அது காணப்படுகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக அக்கூட்டுக் கோபமும் கூட்டுத் துக்கமும் கட்சி அரசியல் தேவைகளுக்காகக் கையாளப்பட்டு வரும் வாய்ப்புக்களைக் குறைப்பது  எப்படி? கூட்டுக் கோபத்தையும் கூட்டுத் துக்கத்தையும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கான உந்து விசையாக,அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது எப்படி ? சாவீட்டிலும்,அதாவது சிவாஜியின் சாவீட்டிலும் பூத உடலுக்கு மாலை போடும்போது  ஒரே கட்சி ஆட்களே இரண்டு அணிகளாக நின்று மாலை போடும் ஓர் அரசியற் சூழலில்,ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் நீதிக்கான போராட்டத்தின் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது யார்?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *