மியான்மருக்கு எதிரான ஐநா நீதிமன்றத்தின் தீர்ப்பு: தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

கடந்த நவம்பர் மாசம் 19ஆம் திகதி ஐநாவின் அலகுகளில் ஒன்று ஆகிய ஐநா உயர் நீதிமன்றமானது மியான்மர் அரசு ரோகியங்கா முஸ்லிம்களை இன அழிப்பு செய்தது என்று கூறித் தீர்ப்பளித்துள்ளது.

இதே நீதிமன்றம் ஏற்கனவே 2007ஆம் ஆண்டு சேர்பியாவுக்கு எதிரான இன அழிப்பு குற்றச்சாட்டுகளின் போது சேர்பியா இன அழிப்பைத் தடுக்கத் தவறியதாகத் தீர்ப்பளித்தது.எனினும் அந்த இன அழிப்பில் சேர்பியா நேரடியாகச் சம்பந்தப்படவில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

2015 ஆம் ஆண்டு மற்றொரு வழக்கில், இதே நீதிமன்றம் குரோஷியா முன்வைத்த சேர்பியாவுக்கு எதிரான இன அழிப்புக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.இந்த விடயத்தில் குரோசியா சேபியாவுக்கு எதிரான தனது இன அழிப்புக் குற்றச்சாட்டை கைவிட்டால், அதனை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைத்துக்கொள்ள முடியும் என்ற பேரம் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் இடம் பெற்றதாக ஒரு தகவல் உண்டு.

தற்பொழுது இதே நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறது. இஸ்ரேல் காசாவில் இன அழிப்புச் செய்கிறது என்று தென்னாபிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் பிரதான நீதிபரிபாலன அலகு ஆகும்.ஐநாவின் ஆறு அலகுகளில் அதுவும் ஒன்று.கடந்த 27ஆம் திகதி வெளிவந்த தீர்ப்பானது இன அழிப்புக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் எல்லா அரசற்ற மக்களுக்கும் அரசுடைய மக்களுக்கும் உற்சாகமூட்டும் ஒரு தீர்ப்பாகும்.இதில் கம்பியா என்ற மேற்கு ஆபிரிக்க நாடு ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக வழக்குத் தொடுத்தது.அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தனிப்பட்ட முறையில் அந்த வழக்குக்காக கடுமையாக உழைத்தார்.இன அழிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சமூகம் ஒன்றுக்கு ஆதரவாக மற்றொரு முஸ்லிம் நாடு நீதி கேட்டுப் போராடி முதல்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. மற்றொரு ஆபிரிக்க நாடாகிய தென்னாபிரிக்கா காசாவில் இன அழிப்புக்கு உள்ளாகும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஐநா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது.இந்த ஆபிரிக்க முன்னுதாரணங்களை ஈழத் தமிழர்கள் போற்ற வேண்டும்.

அதேசமயம் இந்தத் தீர்ப்பை ஈழத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதற்கு பதிலாக அறிவுபூர்வமாக அதற்குரிய புவிசார்,பூகோள அரசியல் பின்னணிக்குள் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பூமியிலே தூய நீதி என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியல் நீதிகள்தான். அவை நிலை மாறு கால நீதியாக இருந்தாலும் சரி, பரிகார ரீதியாக இருந்தாலும் சரி, ஐநா உயர்நீதிமன்றத்தின் நீதியாக இருந்தாலும் சரி, பூமியிலே சூரியனுக்குக் கீழே,உலகப் பொது நிறுவனங்களின் நிதியானது பெரும்பாலும் அரசியல் நீதிதான்.அவற்றை  அமுல்படுத்துவதும் அமல்படுத்தாமல் விடுவதும்கூட அரசியல் தீர்மானங்கள்தான். இதை இவ்வாறு கூறுவதன்மூலம் இக்கட்டுரையானது நிதிக்கான போராட்டத்தின் சட்டப் பரிமாணத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை.அதேசமயம் அரசுகளின் ராணுவப் பொருளாதார,ராஜதந்திர நலன்களுக்கு வெளியே தூய நீதி என்று எதுவும் கிடையாது.

எனவே ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு ஆதரவான அந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள புவிசார்,பூகோள அரசியல் நிலைமைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

மியான்மர் நாட்டை இப்பொழுது ஆட்சி செய்வது ஒரு ராணுவ ஆட்சி.அது சீனாவுக்கு நெருக்கமானது.மியான்மர் நாடு சீனாவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருக்கிறது.சீனாவின்  தென்மேற்கு மாநிலம் ஆகிய யுனான் (Yunnan)  மியான்மருடன் 2,129 கிலோமீட்டர்கள் நீளமுள்ள தரை எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.யுனான் கடல் எல்லையை கொண்டிராத ஒரு மாநிலம்.நிலத்தால் பூட்டப்பட்டது.”லாண்ட் லொக்ட்”. அதனால் யுனான் மாநிலத்துக்கு அதாவது சீனாவுக்கு மியான்மரில் உள்ள கியாவ்க்பியூ (Kyaukphyu) துறைமுகம் ஊடாக இந்து மகா சமுத்திரத்தில் ஒரு கடல் வாசலைத் திறக்க முடியும்.

சீனாவுக்கு இந்து மகா சமுத்திரத்தில்,வங்காள விரிகுடாவில் கடல் வாசல் கிடையாது.எனவே யுனானுக்கு அருகே உள்ள உள்ள கியாவ்க்பியூ துறைமுகம் சீனாவைப் பொறுத்தவரை கேந்திர முக்கியத்துவம் மிக்கது.அது சீனாவின் மசகெண்ணெய் போக்குவரத்தும் உள்ளிட்ட எனைய எல்லா பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு மாற்றுக் கடல் வழியை திறக்கின்றது.எனவே கியாவ்க்பியூ துறைமுகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் அல்லது செல்வாக்குக்குள் வைத்திருப்பதன்மூலம் சீனா, மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் வழித்தடங்கள் மீதான அதன் தங்குநிலையைக் குறைக்க முடியும்.இது சீனாவின் பட்டுப்பாதை முன்னெடுப்பு(BRI) மியான்மருடனான அதன் பொருளாதார,மூலோபாய உறவு ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதி ஆகும்.

இப்பொழுது சீனாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான புவிசார் ராணுவ பொருளாதார அரசியல் வரைபடம் ஒன்று நமக்குத் தெளிவாகக் கிடைக்கிறது அல்லவா?

எனவே இந்து மகா கடலில் வங்காள விரிகுடாவில் சீனாவின் வீச்செல்லையைத் தடுக்கவும்,மட்டுப்படுத்தவும் சீனாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான உறவை மட்டுப்படுத்தவும்,கட்டுப்படுத்தவும் வேண்டியுள்ளது.அதனால் மியான்மரின் கழுத்தை இறக்கிப் பிடிப்பதன்மூலம் அந்தப் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்தை எப்படிக் குறைக்கலாம் என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன; ஐநா சிந்திக்கின்றது.

எனவே மேற்கண்ட தீர்ப்பானது, மியான்மருக்கு மட்டும் எதிரானது அல்ல. அதன் அரசியல்,ராஜதந்திர,பொருளாதார இலக்குகளை முன்வைத்துக் கூறின் சீனாவுக்கும் எதிரானதுதான். சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதி என்ற பரிமாணமும் மேற்சொன்ன தீர்ப்புக்கு உண்டு.அந்தத் தீர்ப்பை நோக்கி அனைத்துலக நிலைமைகளைக் கனிய வைத்ததில் பிராந்திய,பூகோள அரசியல் உள்நோக்கங்கள் உண்டு.இந்த உள்நோக்கங்களும் தீர்ப்பின் மீது செல்வாக்குச் செலுத்தின.

எனவே இத்தீர்ப்பில் இருந்து நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,அனைத்துலக நீதி என்பது தூயது அல்ல.அது பெரும்பாகம் அரசியல் நீதிதான்.அதனால் அந்த அரசியல் நீதியை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளை நோக்கி அரசியல் செய்ய வேண்டும்.ராஜதந்திரம் செய்ய வேண்டும்.இதை இன்னும் அழுத்தமான வார்த்தைகளில் சொன்னால் ஓர் அரசைப் போல காய்களை நகர்த்த வேண்டும்.அப்படி அரசைப் போல காய்களை நகர்த்துவது என்று சொன்னால், முதலில் ஈழத் தமிழர்கள் ஒரு மையத்தில் இருந்து முடிவெடுக்க வேண்டும். தங்களை ஒரு சக்தி மையமாகக் கட்டியெழுப்ப வேண்டும்.அதைத்தான் இக்கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுகிறேன். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே திரட்டினால் தான் பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் நட்பு சக்திகளைத் திரட்டலாம்.அனைத்துலக அளவில் நண்பர்களையும் நலன்சார் பேர வாய்ப்புகளையும் கையாள்வது என்று சொன்னால்,முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும்.மாவீரர் நாளில் வெளிப்படும் கூட்டுக் கோபத்தையும் கூட்டுத் துக்கத்தையும் அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய இடமும் இதுதான்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *