யாழ்ப்பாணத்தில் “நீளிரா” திரைப்படத்தின் காட்சி ஒன்றுக்கு படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளரும் வந்திருந்தார்கள்.அன்றைக்கு திரையரங்கு நிறைந்திருந்தது.திரைக்காட்சி முடிந்ததும் தயாரிப்பாளரும் திரைக் கலைஞர்களும் மக்களோடு உரையாடினர்.அது ஒரு நல்ல உரையாடல். அந்த உரையாடலில் இரண்டு அம்சங்களைத் தொகுத்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
முதலாவது அம்சம்,அங்கு உரையாடிய பலரும் அந்தத் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழ் சரியாக உச்சரிக்கப்பட்டிருப்பதை சிலாகித்துப் பேசினார்கள்.அது உண்மை.திரை மாந்தர் யாழ்ப்பாணத்துத் தமிழை பிசகில்லாமல் அப்படியே பேசுகிறார்கள்.அதில் இந்தியத் தமிழ் உச்சரிப்புக் கலந்திருக்கவில்லை. அது அந்தத் திரைப்படத்தின் வெற்றிகளில் ஒன்றாக ஈழத் தமிழர்களால் சிலாகித்துப் போற்றப்படுகிறது.
இதற்குமுன் வெளிவந்த கோடம்பாக்கத்துத் தயாரிப்புகளில் குறிப்பாக ஈழத் தமிழ்க் கதைகளை மையமாகக்கொண்ட கோடம்பாக்கத்துத் தயாரிப்புகளில் இலங்கைத் தமிழ் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் அல்லது மட்டக்களப்புத் தமிழ் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாக உண்டு. நீளிரா அந்த விமர்சனத்திற்குப் பதிலாக வந்திருக்கிறது.
இங்கு ஒரு விடயத்தை இந்த இடத்தில் சுட்டிப்பாகக் கூறவேண்டும். கோடம்பாக்கத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் யாழ்ப்பாணத்துத் தமிழ் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பாகத்தான் இந்த விமர்சனம். ஆனால் இலங்கையிலேயே குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தமிழ் உச்சரிப்புத் தொடர்பாக அவ்வாறான விமர்சனங்கள் பொதுவாக இல்லை.குறிப்பாக ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் முழுநீளத் திரைப்படங்களில் உள்ளூர் மொழி அதன் உள்ளூர் தனித்துவத்தோடும் உள்ளூர்த் தனத்தோடும் கொச்சை வழக்குகளோடும் பயன்படுத்தப்பட்டது.எனவே முழு நீளத் திரைப்படங்களில் அல்லது குறும் படங்களில் யாழ்ப்பாணத்துத் தமிழ் சரியாக உச்சரிக்கப்படுவது என்ற விவகாரம் கோடம்பாக்கத்துத் தயாரிப்புகளுக்கே உரியது.
அதேசமயம் அன்றைக்கு கடந்த கலந்துரையாடலில் மேற்படி விடயத்தை பாராட்டிப் பேசிய பலரும் அதை எந்தப் பேச்சு வழக்கில் சொன்னார்கள் என்பது இங்கு கவனிப்புக்குரியது.தமது பிரதேச வழக்கு சரியாக உச்சரிக்கப்பட்டிருக்கிறது என்பதனை அங்கே பாராட்டிய பலரில் குறிப்பாக நடுத்தர வயதை கடந்தவர்கள் அதைத் தமது பிரதேச வழக்கிலேயே சொன்னார்கள்.ஆனால் அதைக் கதைத்த இளைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் அதனை இந்தியத் திரைப்படங்களிலும்,இந்தியத் தொலைத் தொடர்களிலும்,கோடம்பாக்கத்துத் திரைத் தொழில் துறையின் நீட்சியும் அகட்சியுமாகக் காணப்படுகின்ற தமிழக அரங்குகளிலும்,தமிழக நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகின்ற மோடிப் படுத்தப்பட்ட,செயற்கையான,நுனி நாக்குத் தமிழில்தான் சொன்னார்கள்.
கதைக்கும்போது சிலஇடங்களில் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் இல்லையென்றால் அங்கு ஓரளவுக்கு ஏற்கனவே பரிச்சயமான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதில் பெரிய விமர்சனம் இருக்கமுடியாது. ஆனால் தான் பேசும் தன் தாய் மொழியையே செயற்கையாக, நுனி நாக்கில் பேசுவது எதைக் காட்டுகிறது? நீளிரா திரைப்படத்தில் அவர்கள் பாராட்டும் விடயத்தை அவர்களில் பலரே பொது வெளியில் பின்பற்றுவதில்லையா?
சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தோடு தமிழுக்கு புதிய கொச்சை வழக்குச் சொற்கள் கிடைத்திருக்கின்றன.அதுமட்டுமல்ல,கோடம்பாக்கத்தில் திரைத் தொழிற் துறையின் நீட்சியும் அகட்சியுமாக காணப்படும் அரங்குகளில் உச்சரிக்கப்படுகின்ற நுனி நாக்குத் தமிழ் அல்லது ஆங்கிலத்தொனி கலந்த சோடிக்கப்பட்ட தமிழ் ஒரு கவர்ச்சியான போக்காக ஈழத்தமிழர்கள் மத்தியிலும் படர்ந்து வருகிறதா?
இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம் என்னவென்றால், ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்புகளில் ஈழத் தமிழர்கள் தமது தனித்துவத்தைப் பேணுவது தொடர்பானது.அதாவது தமிழகத்தின் பிரம்மாண்டமான திரைப்படச் சந்தைக்குள் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தனித்துவங்களைப் பேணிக்கொண்டு தம்மை வெற்றிகரமாக ஸ்தாபிப்பது எப்படி என்பது.
அது அவசியமானது. குறிப்பாக, ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்புகளில் அதிலும் குறிப்பாக ஈழத்தின் போர்க் கதைகளைப் பேசும் கூட்டுத் தயாரிப்புகளில் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தனித்துவங்களைப் பேணும் அதேசமயம் கோடம்பாக்கத்தின் மிகப்பெரிய சினிமாச் சந்தைக்குள் தங்களை வெற்றிகரமாக ஸ்தாபித்துக் கொள்ளவும் வேண்டும். தயாரிப்பாளரின் நோக்கு நிலையில் அது வணிகரீதியாகவும் வெற்றிபெற வேண்டும்.
கனதியான கலைப் பெறுமதி மிக்க படங்கள் வணிகச் சினிமாவுக்குரிய பெரும் சந்தைக்குள் வெற்றி பெறுவதில் இருக்கும் சவால்களை நன்கு விளங்கியவராக தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் காணப்பட்டார்.அந்தச் சவால்களோடு சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை என்ற பொருள்படவும் அவர் பேசினார்.கலைப் படங்கள் அவற்றுக்கேயான பார்வையாளர்களை நோக்கி வரும். அதில் உண்மையுண்டு.
அதேசமயம் போர் எந்தளவுக்கு “சீரியஸானதோ ”-கனதியானதோ அந்தளவுக்கு மக்கள் மயப்பட்டதும்கூட.போர் இலக்கியத்திலும் போர் தொடர்பான திரைப்படங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அம்சம் இது. போர் கனதியானதாகவும் இருக்கும் அதேசமயம் மக்கள் மயப்பட்டதாகவும் இருக்கும். அதனால் போர் தொடர்பான படைப்புக்களுக்கு எப்பொழுதும் மக்கள் மயப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை கலை இலக்கிய விமர்சன வார்த்தைகளில் சொன்னால் அது கனதியானதாகவும் இருக்கும் அதேசமயம் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜனரஞ்சகமானதாகவும் இருக்கும். நீளிரா அப்படி ஒரு நடுவழிப் படந்தான்.
இந்தச் சவால்களை எதிர்கொண்டு ஈழத்துத் திரைத் துறை தன்னை வணிக ரீதியாகவும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதனை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம் இக்கட்டுரை மற்றொரு விடயத்தின் மீதும் ஈழத் தமிழர்கள் கவனத்தைக் குவிக்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அது என்னவென்றால், ஈழத் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு சினிமாத் தொழில் துறை மையத்தை தங்களுக்கே உரிய அடையாளங்களோடு வலிமையாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் செல்வச் செழிப்போடும் பொருத்தமான வளங்களோடும் காணப்படுகிறது.அங்கு ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கான திரைத் துறையொன்று நம்பிக்கையூட்டும் விதத்தில் தலையெடுத்து வருகிறது.இந்நிலையில் தாயகமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கேயான ஒரு திரைத்துறை மையத்தை இப்பொழுது இருப்பதைவிடவும் பலமாகக் கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.
அரசற்ற ஈழத் தமிழர்கள் மத்தியில் அதனை யார் ஒருங்கிணைப்பது என்ற கேள்வி உண்டு. ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருநிலை அரசு கிளிநொச்சியில் பலமாக இருந்த காலகட்டத்தில், அங்கே திருநகர் பகுதியில் ஒரு திரைப்பட வெளியீட்டுப் பிரிவு இயங்கியது.கோடம்பாக்கத்து திரைத் துறை வளங்களோடும் இந்தியாவின் பிரம்மாண்டமான சினிமாச் சந்தையோடும் ஒப்பிடுகையில் அது மிகவும் சிறியது. ஆனால் அதிகம் இலட்சியப்பாங்கானது. அதுமட்டுமல்ல,அது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டுமானங்களில் ஒன்றாகவும் கட்டியெழுப்பப்பட்டது.
எனவே நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து ஈழத் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு திரைத் தொழிற்துறை மையத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
கோடம்பாக்கத்திலும் முதலீடு செய்யவேண்டும்.அது மிகப்பெரிய சந்தை. வணிக நோக்குநிலையில் மட்டுமல்ல,அது ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்புகளையும் பலப்படுத்தும். ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய முதலாளிகள் சிலர் கோடம்பாக்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உதவியவர் ஓர் ஈழத்து சினிமா முதலீட்டாளர்தான்.அந்த அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் கோடம்பாக்கத்தில் செல்வாக்குடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.எனினும் அந்த முதலீடுகள் அதிகம் வணிக நோக்கிலானவை.ஈழத் தமிழ் அரசியலை அதிகம் பேசாதவை..
எனவே ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்புகளும் தேவை.அதேசமயம் ஈழத் தமிழர்கள் பலம் பொருந்திய புலம்பெயர்ந்த சமூகத்தோடு இணைந்து தங்களுக்கேயான ஒரு திரைத் தொழில் துறையை மேலும் பலப்படுத்தலாம். அது ஈழத்தமிழ் நோக்குநிலையில் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் அமையும்.
இலங்கைத் தீவில, அரசியலில், இன ரீதியாக இரண்டு வேறு நோக்கு நிலைகள் உண்டு.ஊடகப் பரப்பிலும் இரண்டு வேறு ஊடக மையங்கள் உண்டு. திரைத் துறையிலும் ஏற்கனவே சிங்கள மக்களிடம் ஓர் அரசுடைய தரப்பாக ஸ்தாபிக்கப்பட்ட மையம் ஒன்று உண்டு. தமிழ் மக்களும் தங்களுக்கு என்று ஒரு திரைத் தொழில்துறை மையத்தைக் கட்டி எழுப்பலாம்.அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் அமையும்.





