பொலித்தீன் பை; ஒரு நாள் போத்தல் ; சுத்தமான கழிப்பறை

அரசாங்கம் ஒரு நாள் பாவித்து விட்டு பின் கழித்து விடும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களைத் தடை செய்திருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் தண்ணீர் போத்தல்கள் பாவிக்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் 20 லட்சம் “லன்ச் சீற்கள்# பயன்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் 40 லட்சம் பொலித்தீன் பைகள் கழிக்கப்படுகின்றன; புதைக்கப்படுகின்றன. நாடு,ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 940 மெட்ரிக்தொன் பிளாஸ்டிக்கை கழித்து விடுகிறது.

எனவே ஒருநாள் பிளாஸ்டிக் போத்தலைத் தடை செய்ய வேண்டும்.ஒரு நாள் தண்ணீர் போத்தல் என்பது முதலாவதாக சூழலுக்கு மாசு.இரண்டாவதாக நீர் விரையம்.பொது வைபவங்களில் கொடுக்கப்படும் தண்ணீர் போத்தலை முழுமையாக குடித்து முடிப்பவர்கள் எதனை பேர்? பெரும்பாலானவர்கள் கொஞ்சம் மிச்சம் வைப்பார்கள்.அந்தப் போத்தலில் இருக்கும் மிச்சத்தை மற்றவர்கள் குடிக்க மாட்டார்கள். ஒரு பொது வைபவத்தில் இவ்வாறு எத்தனை லீட்டர் நீர் விரயமாகிறது?

இதில் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பின்மை உண்டு.தான் குடித்த நீரை மற்றவர்கள் குடிக்க மாட்டார்கள் என்று நன்கு தெரிந்து கொண்ட பின்னரும் அதை மிச்சம் விடும் கூட்டுப் பொறுப்பின்மை.ஒன்றில் அதைக் குடித்து முடிக்க வேண்டும்.அல்லது அதை மிச்சத் தண்ணீரோடு வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.குடித்த குறையை அப்படியே விட்டுச் செல்வது எல்லா விதத்திலும் கூட்டுப் பொறுப்பின்மைதான்.அந்த நீருக்கு விலை உண்டு.அதை விநியோகிக்கும் அந்த பொது மண்டபம் அல்லது அந்தப் பொது நிகழ்வை ஒழுங்குபடுத்தும் அமைப்பு அந்த நீரை விலை கொடுத்துத்தான் வாங்குகிறது. விலை கொடுத்து வாங்கிய நீரை வீணாகச் சிந்தும் ஒரு பண்பாடு.எனவே ஒரு நாள் தண்ணீர் போத்தலை நிறுத்த வேண்டும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால்,அதற்கு மாற்றீடு என்ன என்பதுதான். சிறிய கண்ணாடிக் குவளைகளை பயன்படுத்தலாம்.அல்லது பேப்பர் குவளைகளைப் பயன்படுத்தலாம். நீரை ஏந்துவதற்கு பொதுவான ஓர் ஏற்பாடு இருந்தால், குவளைகள் பிளாஸ்டிக் போத்தலை பிரதியீடு செய்யும்.

இங்கு தடை செய்வதை விடவும் முக்கியமானது,மாற்று ஏற்பாடு என்ன என்பதனை ஒரு பண்பாடாகக் கட்டி எழுப்புவதுதான்.பிளாஸ்டிக் பாவனை,பொலித்தீன் பாவனை போன்றன ஒரு பண்பாடு.அது மிகவும் லாபகரமான,நன்கு ஸ்தாபிக்கப்பட்ட உலகளாவிய ஒரு கோப்பரேட் பண்பாடு. அப்படித்தான் பொலித்தீனுக்கு எதிரான பாவனையும் ஒரு பண்பாடாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதைச் சட்டத்தால் மட்டும் கட்டியெழுப்ப முடியாது.

அரசாங்கம் ஏற்கனவே ஆட்சிக்கு வந்த கையோடு பொலித்தீன் பாவனையைத் தடை செய்தது.மக்கள் பொலித்தீன் பைகளுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அறிவித்தது.ஆனால் நடைமுறையில் என்ன நடந்தது?

அரசாங்கம் பொலித்தீன் பாவனையை நிறுத்துமாறு அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன.ஆனால் பொலித்தீன் பாவனை நிறுத்தப்படவில்லை.பதிலாக  பெரு முதலாளிகளும் பேரங்காடிகளும் பொலித்தீன் பைகளை காசுக்கு விக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியிருக்கிறது.

சாதாரணமாக,மீன் வாங்கப்போனால் வெறுங்கையில் மீனை வாங்கிக் கொண்டு வர முடியாது.கடலுணவுகள்,மாமிசம்,மரக்கறி, ,பழங்கள்…அனைத்திற்கும் இது பொருந்தும்.முன்னைய காலங்களில் உள்ளூர்க் கடைகளில்  பாண் வாங்கினால் ஒரு பேப்பரால் சுற்றித்தான் தருவார்கள். மாமிசத்தை மாட்டுத்தாள் பேப்பரால் சுற்றிப் பின்னர் பையில் போடுவார்கள். அரசாங்கம் பொலிதீனுக்குத் தடை விதித்த பின்னரும் மாமிசக் கடைகளிலும் கடலுணவுக் கடைகளிலும் மரக்கறிச் சந்தைகளிலும் உள்ளூர்க் கடைகளிலும் வழமைபோல பொலித்தீன் பிரயோகத்தில் உண்டு.ஆனால் அந்தப் பைகளுக்கு அங்கே காசு கேட்பதில்லை.

அதேசமயம்,பேரங்காடிகளிலும் பெரு வணிக வளாகங்களிலும் பொருட்களுக்கு ரசீது போட்ட பின் “ஷொப்பிங் பாக்குக்கும்” ரசீது போடவா என்று கேட்கிறார்கள்.அரசாங்கம் பொலித்தின் பாவனையை நிறுத்தப் போவதாக அறிவித்தவுடன் சில நவீன பேக்கரிகளில் பாண் வாங்கினால் ஷொப்பிங் பாக்கிற்கும் பில் போடட்டுமா என்று கேட்டார்கள்.ஷொப்பிங் பாக் இல்லை என்றால் எப்படித் தருவீர்கள்;என்று கேட்டேன்.அதை வெறுங்கையில் தந்தார்கள்.அப்படித் தர முடியாது.முன்பு உள்ளூர்க் கடைகளில் வாங்கும்போது பாணை ஒரு பேப்பரால் சுற்றித் தருவார்கள் என்று சொன்னேன்.

திருநெல்வேலியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பழம் வாங்கினேன். பழத்தை வெறுங்கையில் தந்தார்கள்.அப்படித் தர முடியாது ஒரு காகிதத்தால் சுற்றித்தர வேண்டும் என்று சொன்னேன்.பொலித்தீன் பைக்குக்கு காசு போடட்டுமா?என்று கேட்டார்கள்.ஆனால் உள்ளூர்க் கடையில் வாழைப்பழம் வாங்கினேன்.விலையும் குறைவு.கேட்காமலேயே பொலித்தீன் பையில் போட்டுத் தந்தார்கள்.

அப்படியென்றால் அரசாங்கத்தின் பொலித்தீன் தடை என்பது பெரு முதலாளிகளுக்கு மேலதிக லாபத்தை கொடுத்திருக்கிறதா? வாடிக்கையாளருக்கு பொலித்தீன் பைக்காக மேலதிக செலவைக் கூட்டியிருக்கிறதா? பொலித்தீன் பாவனையைத் தடுப்பதாகக் கருதிக் கொண்டு காசு இல்லாமல் கொடுக்கப்பட்ட பொலித்தீன் பைக்கு இப்பொழுது காசு வாங்குகிறார்கள்.மாறாக பொலித்தீனுக்குப் பதிலாக வேறு சூழல்நேய பை ஒன்றுக்கு காசை வாங்கலாமே? பொருட்களை சூழலுக்கு நேசமான பைகளில் பொதி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பேரங்காடிகளுக்கு இல்லையா? பொலித்தீன் பைக்கு காசைக் கொடுக்கும் மக்கள் அந்தப் புதிய பைக்கும் காசு கொடுப்பார்கள்.அந்த ஏற்பாட்டைக் குறித்து ஏன் இதுவரை சிந்திக்க முடியவில்லை?

பொலித்தீன் இல்லாத நாடு அழகானது.ஆரோக்கியமானது.ஆனால் பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக சூழலுக்கு மாசில்லாத வேறு ஏதாவது ஒரு பை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.இங்கே பொலித்தீன் தடை ஒரு குறியீடு. அரசாங்கத்தின் கவர்ச்சிகரமான மாற்றத்திற்கான வாக்குறுதிகளின் நடைமுறையை,நடைமுறை விளைவை அது காட்டுகிறது.

இது கிட்டத்தட்ட கோத்தபாய அரசாங்கத்தின் காலத்தில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்றதுதான்.உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக,ஒரே திறந்த சந்தைப பொருளாதார அலகாக மாறியிருக்கும் ஓர் அரசியல்,பொருளாதாரச் சூழலில், பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் பாவனை எனப்படுவது ஒரு கெட்ட பண்பாடாக வளர்ந்துவிட்டது.ஒரு கெட்ட பண்பாட்டை எதிர்கொள்வதற்கு நல்ல பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும்.எனவே இந்த விடயத்தில் ஒரு புதிய பண்பாட்டை வளர்த்தெடுப்பதுதான் நடைமுறையில் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அரசாங்கத்திடம் அப்படிப்பட்ட திட்டங்கள் ஏதாவது உண்டா?

அனுர ஜனாதிபதியாக வந்த புதிதில் ஆவேசமாகவும் அதே நேரம் கவர்ச்சியாகவும் ஓர் உரை நிகழ்த்தினார்.கிளீன் ஸ்ரீலங்காவுக்கான பிரகடனங்களில் அந்த உரையும் அடங்கும்.அதில் அவர் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.நீண்ட தூரப் பயணங்களில்,பேருந்துகளில் பயணம் செய்யும்போது பெண்கள் முன்கூட்டியே நீர் அருந்துவதில்லை. ஏனென்றால் பயண வழிகளில் சிறுநீர் கழிப்பதற்கு சுத்தமான கழிப்பறைகள் இல்லை என்று அவர் கூறியது உண்மை.நீண்ட தூரப் பயணங்களில் பயணிகள் சிறுநீர் கழிப்பதற்கு சுத்தமான கழிப்பறைகள் இல்லை.இந்தக் கழிப்பறைகள் பெரும்பாலும் பயண வழிகளில் உள்ள பெரிய உணவகங்களோடு இணைந்து காணப்படும்.இந்த உணவகங்களுக்கும் பேருந்து  உரிமையாளர்களுக்கும் அல்லது சாரதிகள் அல்லது வழி நடத்துனர்களுக்கும் இடையே எழுதப்படாத வணிக உடன்படிக்கை உண்டு.எங்கே பேருந்து நிறுத்த வேண்டும்,எப்பொழுது நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் அந்த வணிக உடன்படிக்கையின் அடிப்படையில்தான் அமையும்.அவ்வாறு பேருந்து குறிப்பிட்ட உணவகத்தில் நிறுத்தப்படும்போது அதனால் லாபமீட்டும் அந்த உணவகம்,தன்னிடம் உணவருந்தவரும் பயணிகளுக்கு பாதுகாப்பான சுத்தமான கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம்.

ஆனால் அதனை அந்தந்தப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதரர்களும் கவனிப்பதாகத் தெரியவில்லை. என்.பி.பி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 18மாதங்கள் ஆகின்றன.இப்பொழுதும் போக்குவரத்துப் பாதைகளில் காணப்படும் கழிப்பறைகள் நாறிக் கொண்டிருக்கின்றன.ஜனாதிபதியின் கவர்ச்சியான வாக்குறுதிகளைப்போல.ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம்,ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்று ஜேவிபி கொடுத்த வாக்குறுதிகள் நாறத்தொடக்கி விட்டன.பொலித்தீன் தடையும்,ஒரு நாள் தண்ணீர் போத்தல் தடையும் அப்படி நாறப்போகும் வாக்குறுதிகள்தானா?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *