புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பண்ணையாளர் சில மாதங்களுக்கு முன் கேட்டார் “பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. கடைகளில் வேலை செய்வதற்கும் ஆட்கள் இல்லை.இந்த விடயங்கள் தொடர்பாக எழுதுங்களேன்” என்று.பண்ணைகளில்,கடைகளில் மட்டுமல்ல,வாகனம் திருத்துமிடகளில்,வயல்களில்,வீடுகளில்,கட்டுமானத் தளங்களில்,மேசன் வேலை,வயரிங்,பெயிண்டிங் வேலைகளுக்கு என்று…பல துறைகளுக்கும் வேலை ஆட்கள் இல்லை.
கட்டட ஒப்பந்தகாரர் ஒருவர் சொன்னார்,”வேலையாட்களை நம்பி ஓர் ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.ஏனென்றால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது” என்று.பல கட்டட ஒப்பந்தக்காரர்கள் வேலைகளைக் குறைத்து வருகிறார்கள்.முன்பு தெற்கிலிருந்து சிங்கள வேலையாட்கள் வந்தார்கள்.இப்பொழுது அது அனேகமாகக் குறைந்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன் கிழக்கில் ஒரு கால்நடைப் பண்ணையில் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளிவந்தது.அந்த வேலைக்கு 60,000ரூபாய்கள் சம்பளம் என்றும் அதில் காணப்பட்டது.தொடர்பு கொள்வதற்கு கைபேசி இலக்கம் ஒன்றும் அங்கே கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் மற்றொரு விளம்பரம் ஊடகங்களில் பிரசித்தமாகியது. கொழும்பில் உள்ள ஒரு சாப்பாட்டுக் கடைக்கு கொத்துரொட்டி மாஸ்டர் தேவை என்றும் அவருக்கு சம்பளமாக ஒரு லட்சத்து 30ஆயிரம் வழங்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் காணப்பட்டது.அந்த விளம்பரத்தை முன்வைத்து சமூக ஊடக வலைத்தளங்களில் உரையாடல்கள் நிகழ்ந்தன.அந்த உரையாடல்களில் இருந்து சில சுவாரசியமான தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.
கொத்துரொட்டி மாஸ்டருக்கு மட்டுமல்ல,சாதாரண கூலி வேலைக்கும் மேசன், பெயிண்டர்,வயரிங் வேலைகளுக்கு உதவியாளர்களாக நிற்பவர்களுக்கும் எவ்வளவு சம்பளங்கள் வழங்கப்படுகின்றன என்று அவரவர் தத்தமது அனுபவத்தில் இருந்து பகிர்ந்திருந்தார்கள்.அந்த வேலை ஆட்களுக்கு கொடுக்கப்படும் நாட் சம்பளம் 2500 ரூபாய்களில் இருந்து தொடங்குகிறது.
கொத்துரொட்டி போடுவது ஒரு தொழில் மட்டுமல்ல,அது ஒரு கலை.சமையல் ஓர் அற்புதமான கலை.அதற்கு இருக்கும் கலைப் பெறுமதியை கருதினால் அதற்கு அதிக சம்பளம் கொடுக்கத்தான் வேண்டும்.உயர்தர விருந்தினர் விடுதிகளில் சமையல் செய்பவர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகிறது. கப்பல்களில் அதைவிட அதிகம்.
சமையல் போல கலையாகச் செய்ய வேண்டிய தொழில்கள் உண்டு. அதைவிட முக்கியமாக கடமையாக,தொண்டாக,சேவையாகவும் செய்யவேண்டிய தொழில்களும் உண்டு.அவற்றுள் முக்கியமானவை, முதியோரைப் பராமரிப்பது,சிறுவரைப் பராமரிப்பது,கர்ப்பிணிகளைப் பராமரிப்பது… போன்றவை.
புலம்பெயர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த ஒரு பெண்,கணவனோடு இணைவதற்கு விசாவிற்காகக் காத்திருப்பவர்,சொன்னார்,அவருடைய கணவனின் தாயாரைப் பராமரிப்பதற்கு இங்கே யாரும் இல்லை.எல்லா உறவினர்களும் வெளியே.காலையில் ஒரு பெண் வருகிறார்.இரவு ஒரு பெண் வருகிறார்.காலையில் வருபவருக்கு 40,000 ரூபாய்.இரவு வருபவருக்கு பத்தாயிரம் ரூபாய்.இருவருக்கும் சாப்பாடு கொடுக்கவேண்டும்.இருவரும் பராமரிக்கப்படும் பெண்ணின் துணிகளைத் துவைக்க மாட்டார்கள்.வீட்டைத் துப்புரவாக்க மாட்டார்கள்.அந்த முதிய பெண்ணைப் பராமரிப்பது மட்டும்தான்.
இவ்வாறு தனித்து விடப்பட்ட முதியவர்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்தபோது,அண்மையில் ஒரு சந்திப்பில் ஒரு பெண் மருத்துவர் சொன்னார்,முதியோர் பராமரிப்புத் துறை எனப்படுவது ஒரு பெரிய மாஃபியாவாக வளர்ந்து வருகிறது என்று.பெருமளவு முதியோர் தனித்து விடப்படக் காரணம் புலப்பெயர்ச்சி.சிறு தொகையினர் உள்ளூரில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்.புலப்பெயர்ச்சியின் நேரடி விளைவுகளில் ஒன்றாக,பிள்ளைகள் இருந்தும் பெற்றோர் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது முதிய உறவினர்களைப் பராமரிப்பதற்காகக் காசை அள்ளிக் கொடுக்கிறார்கள்.இந்தக் காசை வைத்துக்கொண்டு முதியோரைப் பராமரிக்கும் தொழில்துறையானது ஒரு மாஃபியாவாக வளர்ந்து வருவதாக மருத்துவச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
முதியோர் பராமரிப்புத் துறையானது அதிகம் வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.அதனால்தான் முதியோர் இல்லங்களில் அனர்த்தங்கள் நிகழ்கின்றன.அண்மையில்கூட ஒரு முதியோர் இல்லம் தீப்பிடித்து 12பேர் எரிந்து உயிரிழந்தார்கள்.யாழ்ப்பாணத்திலும் சரியாகப் பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் உண்டு.
வடக்கு மாகாணத்தில் மட்டும் மொத்த சனத்தொகையில் 20 விகிதம் 60 வயதிற்கும் அதிகமான முதியோர்.அதனால் முதியோரைப் பராமரிப்பதற்குரிய சேவையானது ஒரு தொழில்துறையாக வளர்ந்து வருகிறது.ஒரு முதியோரைப் பராமரிப்பதற்கு ஒரு மாதத்துக்கு ஆகக் குறைந்தது 60,000 ரூபாயும் ஆகக் கூடியது ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும் கேட்கப்படுகிறது.குறிப்பாக படுக்கையில் விழுந்த முதியோரைப் பராமரிப்பதற்கு அதிக தொகை. புலம்பெயர்ந்து வாழும் பிள்ளைகளில் ஒரு பகுதி அதற்காகக் காசை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறது.
அதாவது வட மாகாணத்தின் மொத்த ஜனத்தொகையில் 20 விகிதமாக உள்ள முதியோரைப் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.அவற்றுக்குக் காசை அள்ளிக் கொடுக்க புலம்பெயர்ந்த உறவுகள் தயாராகக் காணப்படுகிறார்கள்.எனவே சேவை நாடிகளையும் சேவை வழங்கிகளையும் இணைப்பதற்கான வணிகச்சூழல் ஒன்று பலமாகக் காணப்படுகிறது.அதனை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு தொழில் முனைவோர் தேவை.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் நான் ஒரு கட்டுரை எழுதிய போது “டாண் ரிவி” நிறுவனத்தின் பணிப்பாளர் குகநாதன் எனக்கு ஒரு தொடுப்பை அனுப்பினார்.அது லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழரான ஒரு மருத்துவ நிபுணரைப் பற்றிய காணொளி.
பென் மருதப்பு என்று அழைக்கப்படும் மஹிபென் மருதப்பு, 1988ல் லண்டனில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தார்.இங்கிலாந்தின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கற்று மருத்துவ நிபுணர் ஆனார்.அவருடைய தாயார் ஒருமுறை தவறி விழுந்ததில் முதுகெலும்பு உடைந்துவிட்டது.அவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பதற்கு பென் மருதப்புவும் அவருடைய சகோதரியும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.அப்பொழுதுதான் இதுபோன்ற சேவைகளுக்குப் போதிய அளவு சேவை வழங்கும் நிறுவனங்கள் இல்லை என்பதைப் பென் கண்டுபிடித்தார்.அதன் விளைவாக அவர் 2016 ஆம் ஆண்டு உருவாக்கியது தான் Cera(Cera Care)-”செரா” என்று அழைக்கப்படுகின்ற அந்த சேவை வழங்கும் நிறுவனம் ஆகும்.சேவை நாடிகளையும் சேவை வழங்கிகளையும் இணைக்கும் இலத்திரனியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தளம் இது.வீடுகளில் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கும் முதியோருக்கும் சேவை வழங்கும் நிறுவனம் என்ற அடிப்படையில் “செரா” இங்கிலாந்திலும் ஐரோப்பா முழுவதிலும் மிகப்பெரிய சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமாக மேலெழுந்துள்ளது.
இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 500மில்லியன் பவுன்ஸ் என்று கணிப்பிடப்படுகிறது.இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் வீட்டுப் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.மேலும்,அதன் தொழில்நுட்பம்சார் செயற்பாடுகளின்மூலம் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையானது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுன்சை சேமிக்கின்றது.
தனது தாயைப் பராமரிப்பதில் ஒரு மருத்துவர் எதிர்கொண்ட சாவால்களின் விளைவாக உருவாகியது “செரா” நிறுவனம்.இதுபோன்ற நிறுவனங்களை,செயலிகளை ஏன் தாயகத்தில் உள்ள தொழில்நுட்பச் செயற்பாட்டாளர்களும் தொழில் முனைவோரும் உருவாக்கக் கூடாது?
ஏற்கனவே JRide- “ஜேறைட்” என்ற பெயரில் ஒரு போக்குவரத்துச் சேவை வழங்கும் செயலி இயங்குகிறது.யாழ்ப்பாணம்,திருநெல்வேலியை மையமாகக் கொண்டியங்கும் “ஸ்பீட் ஐடி நெட்” என்ற நிறுவனத்தின் பணிப்பாளரான தவரூபன் இந்த நிறுவனத்தை 2023ஆம் ஆண்டு தொடங்கினார்.ஏற்கனவே இந்த தொழில்துறையில் நன்கு ஸ்தாபிதமாக உள்ள செயலிகளோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதில் நிறையச் சவால்கள் உண்டு.என்ற போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட ஒரு சேவை வழங்கி நிறுவனமாக அதற்கு உரிய முக்கியத்துவம் உண்டு.

அப்படித்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட தொழில்துறைகளுக்கான வேலையாட்களையும் சேவை நாடிகளையும் இணைப்பதற்கான TOPQER “டொப்கர்” ( https://Topqer.com ) என்ற நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனம் விரைவில் அதற்குரிய கைபேசிச் செயலியைத் தயாரித்து வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை போன்ற முயற்சிகளைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும். ஈழத் தமிழ்ச் சந்தை என்பது மிகவும் சிறியது.இச்சிறிய சந்தைக்குள் தொழில் முனைவோர் உடனடியாக அதிகரித்த லாபத்தை எதிர்பார்க்க முடியாது.கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு வகைப்பட்ட நிறுவன உருவாக்கிகள் தோன்றியிருக்கிறார்கள்.மதம் சார்ந்தும்,மதம் சாராமலும் நிறுவன உருவாக்கிகள் கட்டியெழுப்பிய சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் திரட்டப்பட்ட விளைவுதான் இப்பொழுதுள்ள நவீன தமிழ்ச் சமூகம் ஆகும்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு முன் தோன்றிய நிறுவன உருவாக்கிகளைப் போல இப்பொழுது தகவல் தொழில்நுட்பத் தளத்தில் புதிய நிறுவன உருவாக்கிகள் தோன்றுகிறார்கள்.பென் மருதப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு நமது தொழில் முனைவோர் முன்னேற வேண்டும்.





