ஜெனிவா: வெற்றியா? தோல்வியா?

‘‘பலம் வாய்ந்த நாடுகளும் கடன்களைப் பெற்றே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்கின்றன. ஹம்பாந்தோட்டை லுகமவேரவிலிருந்து ஊவாவுக்கு உப்பு ஏற்றிச் சென்ற உப்பு வண்டிச் சில்லுகளின் சுவடுகள் இருந்த வீதிகள் இன்று கார்ப்பற் செய்யப்பட்டுள்ளன. காட்டு யானைகளின் அட்டகாசம் மட்டுமின்றி குடிநீர் கூட இல்லாத பிரதேசமாகவே இந்தப் பிரதேசம் இருந்தது. இன்று அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொண்டால் எதனையும் தாங்கிக் கொள்ளலாம்.”
இப்படி சொல்லியிருப்பவர் இலங்கையின் அரசுத் தலைவர். அண்மையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மத்தளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

palaisdesnationsஜெனிவாவில் அனைத்துலக சமூகம் இலங்கைத் தீவை தனிமைப்படுத்துவதற்கான எத்தனங்களை மேற்கொண்டிருந்த ஒரு பின்னணியில் இலங்கைத்தீவின் இரண்டாவது அனைத்துலக கதவை அரசுத் தலைவர் மத்தளவில் திறந்து வைத்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் மத்தள விமான நிலையம் அமைந்திருக்கின்றது. இரண்டுமே சீனாவின் காசில் கட்டியெழுப்பப்பட்டவைதான். எந்தக் காரணத்தை முன்னிட்டு மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முனைகின்றனவோ அதே காரணத்தை மேலும் பலப்படுத்தும் ஆகப்பிந்திய ஒரு நடவடிக்கையே மத்தள விமான நிலையம் ஆயின் ஜெனிவாவில் தன்னை சுற்றிவளைக்க முற்பட்ட மேற்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தெரிவிக்க முயன்ற செய்திதான் என்ன?

இந்தப் பிரதேசத்தின் கால நிலையைத் தாங்கிக் கொண்டால் எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்று அரசுத் தலைவர் கூறுகிறார். இது இந்த அரசாங்கத்தின் இயல்பைக் காட்டுகிறது. இந்த அரசாங்கமானது இதற்கு முன்னிருந்த அரசாங்கங்களை காட்டிலும் அதிக பட்சம் தேசியத் தன்மை மிக்கது. மிகக் குறைந்தளவே சர்வதேசத் தன்மை பெற்றது. அல்லது ஆகக் கூடிய பட்சம் ஆசிய மையச் சிந்தனையுடையது என்று சொல்லலாம். ஜெனிவாவில் பெருமளவிற்கு ஆசிய நாடுகளே அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்தன. அதனுடைய ஆசிய மையச் சிந்தனையே ஜெனிவாத் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்கவும் உதவியது.
ஜெனிவாவில் இந்த அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்பது முன்கூட்டியே தெரிந்த ஒரு முடிவுதான். எனவே, அரசாங்கத்தின் முன் மூன்று தெரிவுகளே இருந்தன. ஒன்று எதிர்ப்பின் பருமனைக் குறைப்பது. இரண்டு தீர்மானத்தின் தொனியின் கடுமையைக் குறைப்பது. மூன்று தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது.

ஆடுகளத்தில் மூன்றாவது அம்பயராகத் காணப்பட்ட இந்தியா திரைமறைவில் ஆட்டக்காராக மாறியபோது தீர்மானத்தின் கடுந்தொனியைக் குறைக்க முடிந்தது. ஆனால், பார்வையாளர் தரப்பிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக தமிழ்நாடு கொந்தளித்தபோது இந்தியா கடைசி நேரத்தில் வேறுவிதமாகச் சிந்தித்தது என்று ஒரு தகவல் உண்டு. பெரிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் சில இரவுகளுக்குள் மாற்றப்படக் கூடியவையும் அல்ல. எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கும் கூட இந்தியாதான் ஜெனிவா.

இலங்கை அரசாங்கம் முதலில் இந்தியாவைதான் அணுகியது. இந்தியா ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளுக்கு முன் ஜெயவர்த்தன தனக்கு எதைச் செய்தாரோ அதையே செய்யுமாறு கொழும்பிற்கு ஆலோசனை கூறியது. 1987 இல் இந்தியா ஒப்பரேசன் பூமாலை என்ற பெயரில் இலங்கைத்தீவுக்குள் வானிலிருந்து உணவுப் பொதிகளைப் போட்டது. ஆனால், தத்திரசாலியான ஜெயவர்த்தன ஒப்பரேசன் பூமாலையை ஓர் உடன்படிக்கையாக மாற்றினார். அதன் பின் மத்தியஸ்தராக இருந்த இந்தியாவை ஆடுகளத்துள் இறக்கி விடுதலைப்புலிகளோடு மோதவிட்டார். அதே சமயம் உடன்படிக்கையின் உள்ளுடனை படிப்படியாக உருவியெடுத்து ஒரு கட்டத்தில் அதை கோறையாக்கிவிட்டார். ஜெயவர்த்தன சிங்கள மக்களுக்குத் தேடிக் கொடுத்த முதுசொம் அது.விடுதலைப்புலிகள் ரஜீவ் காந்தியை படுகொலை செய்தமை அதற்கு மேலதிக போனஸ் ஆகக் கிடைத்தது. இப்படியாக ஜெயவர்த்தன தேடிக் கொடுத்த முதுசொத்தின் பலனைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் அனுபவிக்கின்றார்கள்.

ஆனால், ஜெயவர்த்தனவைப் போல அச்சுறுத்தலை உடன்படிக்கையாக மாற்ற இப்போதுள்ள அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. எதிர்த்தீர்மானத்தை கூட்டுத் தீர்மானமாக மாற்றினால் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். கூட்டுப் பொறுப்பை ஏற்றால் காலப்போக்கில் அது ஒரு தர்மர் பொறியாக மாறலாம் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. எனவே, கூட்டுப் பொறுப்பை ஏற்பதைவிடவும் எதிர்ப்பது சிக்கல்கள் குறைந்தது. எதிர்த்தீர்மானத்தில் தொனியைக் குறைத்தாலே போதும் அதற்குமப்பால் இத்தீர்மானமானது ஒரு செயற்பாட்டுப் பொறிமுறையாக இப்போதைக்கு மாறாது என்ற நிலை உள்ளவரை கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நம்புகிறது. ஏதிர்த் தீர்மானங்களால் அனைத்துலக அரங்கில் அவமானம் அல்லது தலைகுனிவே ஏற்படும். அதற்குமப்பால் பிரயோக நிலையில் அச்சுறுத்தல் இருக்காது. தீர்மானங்கள் செயலுருப் பெறுவதற்கான செய்முறை ஒழுங்குடன் கூடிய ஒரு அனைத்துலகப் பொறிமுறை இல்லாத வரை தீர்மானங்கள் தூலவடிவத்தைப் பெறுவதில்லை. ஐ.நா.பாதுகாப்பு சபைத் தீர்மானத்தை இஸ்ரேல் எத்தனையோ தடவை உதாசீனம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிகபட்சம் தேசியத் தன்மை மிக்கதும், மிகக் குறைந்த அளவே சர்வதேசத் தன்மை உடையதுமான ஒரு அரசாங்கத்தை செயலுக்குப் போகாத் தீர்மானங்கள் அதிகம் அசைப்பதில்லை. எனவே, செயலுக்குப் போகாத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை விடவும் எதிர்ப்பதானது தனக்குரிய கால அவகாசத்தை வழங்கும் என்று அரசாங்கம் நம்புவது தெரிகிறது.

மேலும் அனைத்துலக அரங்கில் அழுத்தங்களை எதிர்ப்பதன் மூலம் யுத்தத்தின் வெற்றிகளை இந்த அரசாங்கம் பாதுகாக்கின்றது என்று உள்நாட்டில் சிங்கள வாக்காளர்கள் நம்புவார்கள். அதாவது இந்த அரசாங்கம் தனது வீரப்படிமத்தை மேலும் பலப்படுத்த முடியும். இது இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்ற நினைப்பவர்களைத் தோற்கடிக்கும்.

ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் வன்னிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி அங்கு உரையாற்றும்போது, வெளிச் சக்திகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தமுயற்சிக்கின்றன என்ற தொனிப்படக் கூறியிருந்தார். மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் ஒன்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன அல்லது ஆட்சியாளர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆட்சியாளர்களின் மனம் மாறுகிறதோ இல்லையோ தற்போதுள்ள நிலைமைகளின் படி வெளியாரை துணிந்து எதிர்கொள்ளும் இந்த அரசாங்கத்தைத் தேர்தல்களின் மூலம் இப்போதைக்கு அகற்ற முடியாது.

எனவே, பொழிவாகக் கூறின், ஜெனிவாத் தீர்மானமானது இந்த அரசாங்கத்திற்கு அனைத்துலக அரங்கில் ஒரு தலைகுனிவு ஏற்படுத்தியது என்ற அடிப்படையில் ஒரு தோல்விதான். இது முதலாவது. இரண்டாவது – தீர்மானத்தின் தொனியிலுள்ள கடுமையைக் குறைக்க உதவிய இந்தியா அரசாங்கத்தின் பக்கம் நிற்க முடியவில்லை என்பதும் ஒரு தோல்விதான். மூன்றாவது – தமிழ் நாட்டில் தன்னியல்பாக தோன்றிய மாணவர் எழுச்சி என்பது நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்தைப் பொறுத்த வரை ஒரு எதிர்மறை வளர்ச்சிதான். அதாவது, தோல்விதான். நாலாவது – அனைத்துலக விசாரணைக்கான ஒரு பொறிமுறையின் அவசியம் குறித்து மங்கலாலான வார்த்தைகளிலேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதென்பது பின்வரக்கூடிய ஒரு தோல்வியின் தொடக்கம்தான். அதாவது, மேற்சொன்னவைகளின் பிரகாரம் ஜெனிவாத் தீர்மானமானது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஓரளவுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு தோல்விதான்.

அதேசமயம் தோல்வியை ஒத்திவைத்தமை உடனடிக்கு ஒரு வெற்றிதான். இது மேலும் ஒரு கால அவகாசத்தைப் பெற்றுத் தரும். இது முதலாவது வெற்றி. இரண்டாவது – தீர்மானத்தின் கடுமையைக் குறைத்தமை ஒரு வெற்றி. மூன்றாவது – தீர்மானத்தின் மையமானது நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அப்பால் போகாதுள்ளதும் ஒரு வெற்றி. நாலாவது – போர்க்குற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படாததும் ஒரு வெற்றி. எனவே, கூட்டிக் கழித்தும் பார்த்தால் ஜெனிவாவில் அரசாங்கம் முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை.
அதேசமயம் தமிழர் தரப்பைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சனங்களோடு ஜெனிவாத் தீர்மானத்தை வரவேற்றிருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது எதிர்மறைக் கருத்துக்களோடு காணப்படுகிறது. ஜெனிவாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில சிறிய அழுத்தக் குழுக்களுமே தீர்மானத்தைக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக அறிய முடிகிறது. தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடே பெரும் போக்காக காணப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தை அனைத்துலக அரங்கில் தோற்கடிப்பதே ஒரு பொதுத் தமிழ் மனோநிலையாகக் காணப்படுகிறது. அந்த வெற்றியின் உட்சூத்திரத்தைக் குறித்தும் அதன் நடைமுறைச் சாத்தியம் குறித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில அழுத்தக் குழுக்களும் சில விமர்சகர்களுமே கேள்வியெழுப்பியிருந்தார்கள். தொகுத்துப் பார்த்தால் முதலாவதாக ஜெனிவாத் தீர்மானமானது தமிழர்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தை அனைத்துலக அரங்கில் தோற்கடித்தமை என்ற அர்த்தத்தில் ஒரு வெற்றிதான். இரண்டாவதாக இந்தியாவானது ஆதரித்து வாக்களித்தமையும் ஒரு வெற்றிதான். மூன்றாவதாக தமிழ் நாட்டில் தன்னியல்பான எழுச்சி என்பது ஒரு வெற்றிதான். நாலாவதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள அழுத்தக் குழுக்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரே அலைவரிசையில் செயற்பட்டமை என்பதும் ஒரு வெற்றிதான். ஐந்தாவதாக ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து கலங்கலாகவேனும் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பது ஒரு வெற்றிதான். நீதியின் சக்கரம் எப்பொழுதும் மெதுவாகத்தான் சுற்றும் என்பதை ஏற்றுக்கொண்டால் தமிழர்களைப் பொறுத்தவரை இதுஒத்திவைக்கப்பட்ட நீதி எனலாம்.

அதேசமயம், தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் வற்புறுத்தியது போல இனப்படுகொலை பற்றியோ போர்க் குற்றம் பற்றியோ பிரஸ்தாபிக்கப்படாதது ஒரு தோல்வியே. இது முதலாவது. இரண்டாவது -இந்தியாவின் இரட்டை வேடம் ஒருதோல்வியே. மூன்றாவது – தீர்மானத்தின் கடும் தொனி குறைக்கப்பட்டமை ஒரு தோல்வியே. நாலாவது – சர்வதேச விசாரணைக்கான ஒரு பொறிமுறைக்குரிய செயன்முறைத் திட்டம் எதுவும் இதில் இல்லையென்பது ஒரு தோல்வியே. ஐந்தாவது – கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்கள் ஒரு தரப்பாக உயர முடியவில்லை என்பதும் தோல்விதான். எனவே, ஜெனிவாவில் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியையும் தோல்வியையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ஒரு ஒத்திவைக்கப்பட்ட வெற்றி எனலாம்.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் ஜெனிவாவில் அரசாங்கமும் தமிழர் தரப்பும் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் கூறின் எந்த ஒரு தரப்பும் முழுமையாக திருப்திப்பட முடியாத நிலைமையே காணப்படுகிறது. இதில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட மாணவர்களின் எழுச்சியானது யாரும் எதிர்பார்க்காத ஒரு அரசியல் அதிசயம் எனலாம். கொலம் மக்றே இப்படியொரு விளைவை கற்பனை செய்திருப்பாரோ தெரியாது. கடந்த சில தசாப்தங்களில் தமிழ்ப் பரப்பில் நிகழ்ந்த மிக பிரம்மாண்டமான எழுச்சி இது. எந்தவொரு அரசியல் கட்சியினாலும் திட்டமிடப்பட்டாத, எதிர்பார்க்கப்படாத தன்னியல்பான ஓர் எழுச்சி இது. கருணாநிதியின் உள்நோக்கங்கள் எதுவாயிருந்தாலும் அவர் நடுவன் அரசிலிருந்து விலகியமை தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றிதான். அவரை அந்தளவுக்கு அசைத்தது மாணவர்கள்தான்.

ஆனால், தமிழ்நாட்டில் மொத்தம் மூவர் தீக்குளித்து இறக்க, பல இலட்சக்கணக்கான மாணவர்கள் தெருவிலிறங்கிய அதே காலப்பகுதியிற்றான் யாழ்ப்பாணத்தில் ஆறு பெரிய பாடசாலைகள் பங்குபற்றிய மூன்று வேறு பெருந்துடுப்பாட்டங்கள் நிகழ்ந்தன. யாழ். பல்கலைக்கழகத்தில் ராங்கிங் அமோகமாக நடந்தது. நடந்துகொண்டிருக்கின்றது. ‘‘பொன் அணிகளின் போர்” என்றும், ‘‘வடக்கின் போர்” என்றும், ‘‘இந்துக்களின் போர்” என்றும் வர்ணிக்கப்பட்ட முப்பெரும் துடுப்பாட்டப் போட்டிகளால் யாழ்ப்பாணத்தின் தெருக்கள் யாவும் வர்ணக் கொடிகளால் நிறைந்தன. தெருமையங்கள், நகர மையங்கள் மக்கள் கூடுமிடங்கள் தோறும் மேள வாத்தியக் கச்சேரிகளும், வெற்றி ஆரவாரக்கோஷங்களும் இரவையும் பகலையும் ஊடறுத்தும் கேட்டன.
தமிழ் நாட்டில் தமது வயதொத்த மாணவர்கள் தங்களுக்காகத் தெருக்களையும் கடற்கரைகளையும் நிறைத்த அதே நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதி மாணவர்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பகுதியினர் ராகிங் செய்து கொண்டிருந்தார்கள். மேற்படி துடுப்பாட்டங்களைப் பொறுத்தவரை அவை வெற்றி தோல்வியில் முடிவடைவதில்லை. ஒரு மரபாக அவை சமநிலையிலேயே முடிவடைவதுண்டு. ஜெனிவாவிலும் ஆட்டம் சமநிலையில்தான் முடிவடைந்ததா?

22-03-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *