விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது.
01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும்.
02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும்
03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம்.
04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என்பதால் ஏற்படும் குற்றவுணர்ச்சியாலுண்டாகிய தீவிர மனோநிலை.
05. தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாரற்றிருப்பது.
06. அடுத்த கட்டம் எது என்பது குறித்த தெளிவின்மையும் நிச்சயமின்மையும்
போன்ற இன்னோரன்ன உளவியல் மூலக் கூறுகளின் மிகச் சிக்கலான ஒரு கலவையாக ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியல் காணப்படுகின்றது.
இக்கட்டுரையானது பெரும்போக்கான ஒரு உளவியலைப் பற்றியே பேசுகிறது. இதில் இருக்கக்கூடிய உப கூறுகளைப் பற்றியும் நுண் கூறுகளைப் பற்றியும் இக்கட்டுரை பேச முற்படவில்லை. பெரும்போக்கிற்குள்ளும் உபபோக்குகள் உண்டு. உதாராணமாக நாலாம் கட்ட ஈழப் போரின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு வந்தவர்களின் உளவியலுக்கும், ஏற்கனவே, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசித்தவர்களின் உளவியலுக்கும் இடையில் துலக்கமான வேறுபாடுகள் உண்டு. அதுபோலவே இன்று வரை மீளக்குடியமராத உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த மக்களுடைய உளவியல் முன்சொல்லப்பட்டவர்களின் உளவியலிருந்து வேறானது. அது ஒரு குடியமராத அல்லது வேர் கொள்ளாத (ருளெநவவடநன) தரப்பினரின் உளவியலாகும். அதிலும் குறிப்பாக, 1980 களிலும் அதற்குப் பின்னரும் உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் உளவியலுக்கும் நாலாங்கட்ட ஈழப்போரில் இடம்பெயர்ந்த சம்பூர் மக்களின் உளவியலுக்கும் இடையில் துலக்கமான வேறுபாடுகள் உண்டு.
இதுதவிர, புலம்பெயர்ந்த தமிழர்களிற்கும், நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இடையிலும் துலக்கமான உளவியல் வேறுபாடுகள் உண்டு.
உயிரச்சம், உணவு, உடை, உறைவிடம் பொறுத்து ஓரளவுக்கேனும் பாதுகாப்பான அல்லது உத்தரவாதமான அல்லது நிச்சயத்தன்மைகள் அதிகமுடைய அல்லது நிலையாக வேர் கொண்ட ஒரு வாழ்க்கை முறையை (settled) கொண்டவர்களிற்கும் வேர் கொள்ளாத (Unsettled) ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்களிற்கும் இடையில் காணப்படும் உளவியல் வேறுபாடுகள் இவையெனலாம்.
இத்தகைய உப போக்குகள் மற்றும் நுண்கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் மே 19இற்குப் பின்னரான கூட்டுத் தமிழ் உளவியல் எனப்படுவது அதன் பெரும்போக்கைக் கருதிக் கூறுமிடத்து அதிகமதிகம் கொந்தளிப்பானதுதான். இத்தகைய கொந்தளிப்பான மிகச் சிக்கலான உளவியலின் விளைவாக தமிழர்கள் எதையும் அதீத உணர்வெழுச்சியோடு அணுகும் ஒரு போக்கு அதிகரித்து வருகின்றது.
உடல் முழுவதும் புண்ணாயிருக்கும் ஒருவரை எங்கு தொட்டாலும் அவர் கத்துவார். அப்படித்தான் இப்பொழுது ஈழத்தமிழர்களும் எதற்கெடுத்தாலும் எல்லாரையும் சந்தேகித்து இனத்துக்குள்ளும், இனத்துக்கு வெளியிலும் எதிரிகளையும், துரோகிகளையும் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மே 18 இற்குப் பின்னரான ஈழத்தமிழர்களில் பெரும்பகுதியினர் கூடுதலாக உணர்ச்சி வசப்படுகின்றார்கள். குறைந்தளவே சிந்திக்கின்றார்கள்.
இத்தகைய உணர்ச்சிப் பெருக்கான ஓர் உளவியல் சூழலில் வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலானது முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் அரங்கின் முன்னணிக்கு வந்துவிட்டது.
ஈழத்தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியோடு தோன்றியதொரு போக்கு அல்ல. அது ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஒரு வேர்நிலைக் குணாம்சமாகவே காணப்படுகின்றது. பெரிய தமிழ் நாட்டைத் தமது பின்தளமாகவும் பேரம் பேசும் சக்தியாகவும் கருதுவதிலிருந்து இது தொடங்குகிறது. பின்னாளில் புலப்பெயர்ச்சியோடு தமிழ் டயஸ்பொறாவானது, மற்றொரு பின்தளமாகவும், பேரம்பேசும் சக்தியாகவும் எழுச்சிபெற்றதோடு வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது மேற்குக்காகவும் காத்திருப்பது என்ற வளர்ச்சியைப் பெற்றது.
குறிப்பாக, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியோடு இது முழுக்க முழுக்க வெளியாரிடம் தமது நம்பிக்கைகளை முதலீடு செய்துவிட்டு அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு சொல்லையும் எதிர்பார்ப்போடு உற்றுக் கவனித்துக் காத்திருக்கும் ஒரு போக்காக பெருவளர்ச்சி பெற்றுவிட்டது.
கடந்த நான்காண்டுகளாக கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட மேற்படி காத்திருப்பை வளர்த்தெடுக்கும் ஓர் அரசியலைத்தான் செய்து வருகின்றன. இப்பொழுதும் மாகாண சபைத் தேர்தலில் தாம் ஏன் பங்குபற்றுகிறோம் என்பதற்கு கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கூறும் முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்றுதான். அதாவது, இந்தியா எங்களைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டு வருமாறு கூறியது என்பதே அது.
இவ்விதமாக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் சூழலில்தான் நவிப்பிள்ளை அம்மையாரின் வருகையும் நிகழ்ந்தது.
சிங்களவர்களைப் பொறுத்த வரை தமது போர் நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முற்படும் மேற்கின் பிரதிநிதி அவர், அதேசமயம் தமிழர்களைப் பொறுத்த வரை அவர் ஒரு குறைகேள் அதிகாரி. எனவே இரு வேறு உணர்ச்சிக்கொதிப்பான உளவியல்களால் இரண்டாகப் பிளவுண்டிருந்த ஒரு சிறு தீவிற்கே அம்மையார் வந்துபோயிருக்கிறார்.
பிறப்பால் அவர் ஒரு தமிழர் என்பதால் அவர் மீதான தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகிச் சென்றன. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அசைவும் உற்றுக் கவனிக்கப்பட்டன. அவர் அரசாங்கத்திற்கு எதிராகச் சொன்ன வசனங்கள் தலைப்புச் செய்திகளாயின. அதேசமயம் அவர் விடுதலைப்புலிகளிற்கு எதிராகச் சொன்ன வசனங்கள் ஒருபகுதித் தமிழர்களை விசனத்திற்குள்ளாக்கின. அவருடைய உத்தியோகபூர்வ அறிக்கையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராகக் கூறிய கருத்துக்களை விடவும் அரசாங்கத்திற்கு எதிராகக் கூறிய கருத்துக்களே அதிகமானவை. எனினும் ஒரு பகுதித் தமிழர்களால் அவர் கூறிய சில வசனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தனது தமிழ் அடையாளம் காரணமாக சிங்களக் கடுந்தேசியவாதிகள் தன்னை ஒரு பக்கச் சார்பான தூதுவராக கருதிவிடக்கூடாது என்பதற்காகவே அவர் அவ்விதம் கூறியதாகவும் ஒரு வியாக்கியானம் உண்டு.
இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் மேலாண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றத் தவறியபோதே கொலாற்றரல் டமேச் ஆனது போர்க் குற்றமாக மாறலாம் எனும் ஒரு நிலை தோன்றியது. இங்கு தமிழர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. பக்கச் சேதங்கள் போர்க்குற்றங்களாக மாற்றப்பட்டலாம் என்று ஒரு தோற்றம் தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இன்று வரையிலும் போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற சொற்கள் ஐ.நா., மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் முதன்மை ஸ்தானங்களில் காணப்படுவதில்லை. ஏன் நவிப்பிள்ளையி;ன் சொல்லாடல்களிற்குள்ளும் இல்லைத்தான்.
அதாவது, அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓரு கருவியாகவே போர்க்குற்றம் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. அதுகூட மேற்கத்தைய ஊடகப் பரப்பில்தான் அதிகம் பிரயோகிக்கப்படுகிறது. வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்களிலும் இல்லை. அரசுகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் இல்லை. எனவே, அரசாங்கம் மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் மகிழ்விக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுமாயிருந்தால் கடைசிக் கட்டத்தில் நடந்தவற்றை பக்கச் சேதமாகக் கருதி பொருட்படுத்தாதுவிடும் ஆபத்தும் உண்டு.
மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பின்னரும் அநேகமான மேற்கத்தைய நாடுகளிலும், இந்தியாவிலும் அந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்படவில்லை என்பதை தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டும்.
இது தவிர மற்றொரு குரூரமான அனைத்துலக யதார்த்தமும் உண்டு. ஐ.நா.வின் உள்ளக விசாரணைக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘‘ஐ.நா.வின் மிக மூத்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட உத்தியோகஸ்தர்களுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகளிலோ அல்லது ஐ.நா.வின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதிலோ, மேற்பார்வை செய்வதிலோ அல்லது கவனியாது விடுவதிலோ நேரடியான வகிபாகம் எதுவும் இல்லை”
இத்தகையதொரு நடைமுறை யதார்த்தத்தின் பின்புலத்தில் வைத்தே நவிப்பிள்ளையின் வருகையை மதிப்பிட வேண்டும். தமிழர்களில் அநேகர் அவர் ஓர் தமிழர் என்பதால் அவரைத் தமக்கு மிக நெருக்கமானவராக உணர்கிறார்கள். அவர் வேரில் தமிழர்தான். ஆனால், வளர்ப்பால் தென்னாபிரிக்கக் கறுப்பர். அதேசமயம் படிப்பால் ஒரு மேற்கத்தேயர்.
நிறவெறி அரசுக்கு எதிராக ஒரு செயற்பாட்டாளராக அவர் வீரமாகப் போராடிய போது அவருடைய மேற்கத்தைய படிப்பும், அதனால் பெற்ற ஆளுமை உருவாக்கமும் அங்கீகாரமும்தான். அவருக்குக் கேடயங்களாகத் திகழ்ந்தன. எனவே, அவரை ஒரு மேற்கு மயப்பட்ட தென்னாபிரிக்கக் தமிழ்ப் பெண் என்பதே சரி. இப்படிப் பார்த்தால் அவர் ஒரு ஆபூர்வமான கலவை. ஆசியாவும், ஆபிரிக்காவும் மேற்கு நாடுகளும் சேர்ந்துருவாக்கிய மூன்று கண்டங்களின் நூதனமான ஒரு கலவை அவர். இலங்கையில் அவர் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது அச்சந்திப்பில் பங்குபற்றிய ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி கூறினார்… அவருடைய தோற்றம், நடையுடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு செயற்பாட்டாளுமைக்குரிய வீச்சையும், ஓர்மத்தையும் காண முடிந்ததாகவும் அவருக்குள் ஒரு நெருப்பு எரிவதை உணர முடிந்தாகவும்….
நவிப்பிள்ளையின் இந்த அம்சம்தான் தமிழர்களிற்கு அதிகம் சாதகமானது. அவர் தன்னை ஒரு தமிழராகப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது. அவர் ஒரு அனைத்துலக மன்றத்தின் பிரதிநிதி. அனைத்துலக இராஜியச் சூதாட்டத்தின் ஒரு கருவியாகவே இங்கு வந்துபோனவர். ஆனால், அவருக்குள் கனன்றெரியும் நெருப்புக் காரணமாக அவர் அனைத்துலகின் அபிப்பிராயங்களை உருவாக்க முடியும். அது அதிகமதிகம் நீதியின் பாற்பட்ட ஓர் அபிப்பிராய உருவாக்கமாகவே இருக்கும். மாறாக ஓர் இனத்துக்குச் சாய்வான அபிப்பிராயமாக அல்ல. தமிழர்கள் தமது தரப்பில் நீதி உண்டு என்று நம்புமிடத்து நவிப்பிள்ளையை கொந்தளிப்பான ஓர் உளவியலுக்கூடாக அணுகத் தேவையில்லை.
பூகோள மயப்பப்பட்ட இவ்வுலகில் எல்லாமே அரசியலாகிவிட்டன. மனித உரிமைகளும் அரசியல்தான். போர்க் குற்றங்களும் அரசியல்தான். சூழலியலும் அரசியல்தான். இக்குரூரமான அரசியலை தமிழர்கள் உள்வாங்க வேண்டும். அரசுக்கும் – அரசுக்கும் இடையிலான நலன் சார் சூதாட்டத்தில் முதலில் பலியிடப்படுபவை மனித உரிமைகள் தான். எனவே, தூய நீதிக்கும், குரூரமான இராஜிய நடைமுறைக்கும் இடையில் தமக்கு அதிகபட்சம் சாதகமான ஓரு சமநிலைப் புள்ளியைக் கண்டுபிடிக்க வேண்டியது தமிழர்கள் தான்.
வெளியாருக்காகக் காத்திருப்பது அல்லது வெளியாரிடம் முறையிடுவது அல்லது வெளியாரிடம் அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பது என்பதெல்லாம் ஒரு எல்லைக்கும் அப்பால் சொந்தப் பலத்தில் நம்பிக்கையிழந்த அரசியல் தான். வீழ்ச்சிக்குப் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலைக் கையாளவல்ல தீர்க்க தரிசனமும், ஜனவசியமும் மிக்க பேராளுமைகள் இல்லாத வெற்றிடத்திலிருந்தே இது ஒரு பெரும்போக்காக மேலெழுகின்றது. ஒரு கட்டத்தில் இது வெளியாரைக் கையாள்வதற்குப் பதிலாக வெளியாரால் கையாளப்படும் ஒரு விபரீத வளர்ச்சியைப் பெறுகிறது.
எனவே, பேராளுமைகளை உருவாக்குவது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேணடும். அல்லது இப்போதிருப்பவர்கள் யாராவது பேராளுமைகளாக உருவாகுவது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் அத்தகைய பேராளுமைகள் ஏன் உருவாகவில்லை என்ற கேள்விக்காவது விடை காண விளையவேண்டும்.
06-09-2013