இக்கட்டுரை வாசிக்கப்படும்போது தேர்தல் முடிவுகள் அநேகமாகக் கிடைத்திருக்கும். கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என்ற எடுகோளின் மீதே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. அப்படியொரு வெற்றி கிடைத்தால் தாங்கள் இரண்டு தளங்களில் போராடப் போவதாக அவர்கள் வாக்குறுதியளித்திருக்கின்றார்கள்.
முதல் தளம் உள்நாட்டில், ஆளுநரின் அதிகாரங்களிற்கு எதிரானது என்றும், மற்றைய தளம் அனைத்துலக அரங்கில் ஒரு ராஜதந்திரப் போர் என்றும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறார்கள். ராஜதந்திரப் போர் என்பதை கூட்டமைப்பு ஒரு பிரசார உத்தியாகப் பாவிக்கின்றதா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, இப்பொழுது தமிழ் அரசியலைப் பொறுத்த வரை ராஜதந்திர வழிமுறைக்குள்ள முக்கியத்துவம் பற்றி உரையாடுவதே இன்று இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அப்படித்தான் கூறுகிறது. டயஸ்பொறாவில் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசும் உட்பட ஏனைய எல்லா அழுத்தக் குழுக்களும் லொபிக் குழுக்களும், நொதியக் குழுக்களும், தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய சக்திகளும் அவ்வாறு தான் கூறி வருகின்றன.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் முழு ஈழத்தமிழ்ச் சமூகமும் ஒரே திசையில் சிந்திக்கும் மிக அரிதான விவகாரங்களில் இதுவும் ஒன்றெனலாம். இது விசயத்தில் களமும், புலமும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கின்றன. இதை இன்னும் சரியாகச் சொன்னால் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் அதிகம் அழுத்தம் பெற்றுவரும் ஒரு செய்முறை இதுவெனலாம்.
ஆனால், அதன் அர்த்தம் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் அதற்கான தேவை திடீரென்று தோன்றியது என்பது அல்ல. அது புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே இருந்தது. குறிப்பாக, எப்பொழுது ரணில் – பிரபா உடன்படிக்கை உருவாகியதோ அப்பொழுதே அதற்கான முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த தேவைகளும் உருவாகிவிட்டன. அனைத்துலக அரங்கில் காய்களை நகர்;த்தாமல் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுபோக முடியாது என்றதொரு நிலை தோன்றியது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் ராஜீய சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதற்குப் பதிலாக யுத்த களத்தில் படையணிகளை நகர்த்துவதற்கே முன்னுரிமை கொடுத்தது.
இத்தகைய பொருள்படக் கூறின் ராஜதந்திரப் பொறிமுறைகளில் புலிகள் இயக்கம் போதிய வெற்றி பெறத் தவறியதும், அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்குரிய பிரதான காரணம் எனலாம். இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம்.
ரணில் – பிரபா உடன்படிக்கை எனப்படுவது ஒரு துருவ உலக ஒழுங்கின் குழந்தை. தமது படைத்துறைச் சாதனைகள் மூலம் தமக்குச் சாதகமான ஒரு வலுச் சமநிலையை ஸ்தாபித்த விடுதலைப்புலிகள் உள்நாட்டில் பலமானதொரு நிலையில் இருந்தபோது அந்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அதேசமயம், யுத்தத்தில் பின்னடைவுக்குள்ளாகி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற திருமதி சந்திரிகாவின் அரசாங்கமானது ஒப்பீட்டளவில் பலவீனமடைந்திருந்தது. ஜனாதிபதியாக திருமதி சந்திரிகா இருக்கத்தக்கதாக பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதால் அந்நாட்களில் விமர்சகர்கள் வர்ணித்ததுபோல அது ஓர் இரட்டை ஆட்சியாக இருந்தது. இந்த இரட்டை ஆட்சி முறைக்குள் சுழித்துக் கொண்டு உருவாக்கப்பட்டதே ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.
அதாவது, உள்நாட்டில் இரட்டை ஆட்சி காரணமாக, பலவீனமாகக் காணப்பட்ட அதேசமயம், அனைத்துலக அரங்கில் தனது மேற்கத்தேய விசுவாசம் காரணமாக ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்பட்ட யு.என்.பி.அரசாங்கத்திற்கும், உள்நாட்டில் யுத்த கள வெற்றிகள் மூலம் பலமாகக் காணப்பட்ட அதேசமயம், பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் ஒப்பீட்டளவில் பலவீனமாகக்காணப்பட்ட புலிகள் இயக்கத்திற்கும் இடையில் செய்யப்பட்டதே அந்த உடன்படிக்கை.
அந்த உடன்படிக்கை மூலம் அனைத்துலக அரங்கில் தமக்குரிய அங்கீகாரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்று தொடக்கத்தில் புலிகள் இயக்கம் நம்பியது. தம்மை அரசு அல்லாத ஒரு சமதரப்பாகவும் அது கருதியது.
ஆனால், ஒஸ்லோப் பிரகடனத்தின் மூலம் அந்த உடன்படிக்கை ஒரு தர்மர் பொறியோ என்ற சந்தேகம் அந்த இயக்கத்துக்குத் தோன்றியது. அதோடு, கிழக்கில் ஏற்பட்ட உடைவும், சமாதானத்தின் மீதான அவநம்பிக்கைகளை கூட்டியது. உடன்படிக்கை உருவாகிய பின்னரும் அந்த இயக்கத்தின் மீதான தடையை எல்லா நாடுகளும் தொடர்ந்தும் பேணிவந்த ஓர் சூழ்நிலையில் வொஷிங்டன் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அந்தத் தடை காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் அனைத்துலக ராஜதந்திர நகர்வுகளில் பெருமளவிற்கு நம்பிக்கையிழக்கத் தொடங்கியது.
இவற்றுடன் சுனாமிக் கட்டமைப்பைப் போன்ற ஒரு கட்டமைப்பைக்கூட உருவாக்க முடியாத ஒரு சமாதானப் பொறிமுறையைத் தொடர்வதைவிடவும், யுத்த அரங்கைத் திறந்து தமது பேரம்பேசும் சக்தியை மேலும் அதிகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றதொரு முடிவை அவ்வியக்கம் எடுத்தது.
ரணிலைத் தோற்கடித்ததின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான அரங்கை மூடி யுத்த அரங்கை திறந்தது எனலாம். அல்லது இன்னொரு விதமாகச் சொன்னால் ராஜதந்திர அரங்கை மூடி யுத்த அரங்கைத் திறந்தது எனலாம். யுத்த அரங்கைத் திறக்கக்கூடாது என்று அன்ரன் பாலசிங்கம் வாதிட்டதாக ஒரு தகவல் உண்டு. பொங்கு தமிழ் போன்ற சிவில் எழுச்சிகள் மற்றும் ராஜதந்திர நகர்வுகளிற்கூடாக நிலைமைகளைக் கையாளலாம் என்றும் அவர் நம்பியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், படைத்துறை நகர்வுகளை ஆதரிப்பவர்களின் கையே மேலோங்கியபோது அதன் தர்க்கபூர்வ விளைவாக ராஜதந்திர வழிமுறைகள் தேக்கமடைந்தன. தன்முயற்சிகளில் வெற்றிபெறாதவராக அன்ரன் பாலசிங்கம் நிராசையோடு இறந்துபோனார்.
அனைத்துலக அரங்கில் ராஜதந்திரக் காய்களை நகர்த்துவதற்குப் பதிலாக உள்நாட்டில் படையணிகளை நகர்த்துவது என்று விடுதலைப்புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. பாலசிங்கம் முன்னுணர்த்ததைப் போலவும், அப்போதிருந்த அமெரிக்கத் தூதுவரான ஜெவ்ரி லுன்ஸ்ரெற் (துநககசநல டுரளெவநயன) எச்சரித்திருந்தது போலவும் ஏறக்குறை முழு உலகமும் புலிகள் இயக்கத்தைச் சுற்றிவளைத்துத் தோற்கடித்தது.
ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது அனைத்துலக அரங்கிலேயே அதிகம் கையாளப்பட வேண்டிய ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.
வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் இலங்கை அரசாங்கமானது உள்நாட்டில் மிகப்பலமானதாகக் காணப்படுகின்றது. அதேசமயம் பிராந்திய அளவில் ஓரளவுக்கு பேரம்பேசும் சக்தியுடன் காணப்படுகிறது. ஆனாலது, ஒரு ஆபத்தான கயிறிழுத்தல் போட்டியால் உருவாகிய ஒரு பேரம் பேசும் சக்தியாகும் அதாவது, சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான ஒரு பனிப்போர் களத்தை இச்சிறு தீவில் திறந்து வைத்திருப்பதாற் கிடைத்த பேரசும்பேசும் சக்தியே அது. அதேசமயம் அனைத்துலக அரங்கில் இந்த அரசாங்கம் ஒப்பீட்டளவில் பலவீனமானதாகக் காணப்படுகிறது.
மறுவளமாகத் தமிழர்களைப் பொறுத்தவரை தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பு என்பதால் உள்நாட்டில் தமிழர்களின் நிலை ஒப்பீட்டளவில் பலவீனமானதாகக் காணப்படுகிறது. ஆனால், அதேசமயம் பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவிற் பலமாகக் காணப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் அனைத்துலக சமூகத்திடம் நிதி கோரி நிற்கும் ஒரு சமுகமாக தமிழர்கள் மாறியிருக்கின்றார்கள். மேலும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் கடந்த நான்காண்டுகளாகத் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது என்பதும் அத்தகைய எல்லாக் குற்றச்சாட்டுக்களும் அரசாங்கத்தின் மீதே வைக்கப்படுகின்றன என்பதும் தமிழர்களுக்கு ஒரு பிளஸ்தான். எனவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட விதம் காரணமாகவும், இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவும் பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் தமிழர்களின் பேரசும் பேசும் சக்தி அதிகரித்துள்ளது.
இது ரணில் – பிரபா உடன்படிக்கை காலத்தில் காணப்பட்ட நிலைமைகளோடு ஒப்பிடுகையில் ஒருவித தலைகீழ் சமன்பாடாகும். அதாவது உள்நாட்டில் மிகப் பலமாயிருக்கும் அதேசமயம் அனைத்துலக அரங்கில் பலவீனமாகக் காணப்படும் அரசாங்கமும், மறுபக்கத்தில், உள்நாட்டில் பலவீனமாகக் காணப்படும் அதேசமயம், அனைத்துலக அரங்கில் பலமாகக் காணப்படும் தமிழ்த் தரப்பும்.
இப்படிப் பார்த்தால் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நிலைமை ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகி;றது எனலாம். எனவே, தான் பலமாகக் காணப்படுகின்ற அதேசமயம், அரசாங்கம் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரங்கில்தான் தமிழ்த் தரப்பு வெற்றிகரமாகக் காய்களை நகர்த்த வேண்டியிருக்கின்றது.
அனைத்துலக அரங்கில் இப்பொழுது காணப்படுவது அதிகபட்சம் ஓர் அனுதாப அலைதான். அது அறநெறி, நீதியுணர்ச்சி என்பவற்றின் பாற்பட்டது. ஆனால், அரசியல் எனப்படுவது நலன்கள் சார்ந்தது. அதில் நலன்களே பிரதானம். அறநெறியோ, நீதியோ அல்ல. எனவே, இப்போதுள்ள அனுதாப அலையானது அந்தந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுடைய கொள்கைத் தீர்மானங்களாக பண்பு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்விதம் அனுதாப அலையை அல்லது பொதுசன அபிப்பிராயத்தை கொள்கைத் தீர்மானமாக மாற்றும் பொறிமுறையே ஈழ்தமிழர்களைப் பொறுத்தவரை ராஜதந்திரப் போராக இருக்க முடியும்.
தமிழர்கள் தொடர்பில் அத்தகைய கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படாதவிடத்து அனுதாப அலையானது வழமையான எல்லா அலைகளையும்போல ஒரு கட்டத்தில் வடிந்துபோய்விடும். சிலசமயம் வரும் மார்ச்சுக்குப் பின்னரும் இது நிகழக்கூடும். அவ்விதம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கொள்கைத்தீர்மானங்களை எடுப்பதற்குரிய ஒரு Poltical Will – அரசியல் திடசித்தம் சக்திமிக்க நாடுகளிடம் இல்லை என்று ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இக்கட்டுரையாசிரியரிடம் ஒருமுறை சொன்னார்.
கடந்த நான்காண்டுகளாக மேற்படி அனுதாப அலையை கொள்கைத் தீர்மானங்களாக மாற்ற முடியாது போனதற்கு தமிழர் தரப்பில் உள்ள அனைத்து சக்திகளும் பொறுப்பேற்க வேண்டும். இனியும் அதைச் செய்வதாக இருந்தால் இரண்டு விடயப் பரப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தி நிதானமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். அவையாவன….
முதலாவது, கூட்டமைப்புக்கும், டயஸ்பொறாவுக்கும் இடையிலான உறவும், கூட்டமைப்புக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவும். அதாவது, அனைத்துலக அரங்கு என்று வரும்போது தமிழர்களின் இரு பிரதான பின்தளங்களாகக் காணப்படும் தமிழ் நாட்டில் உள்ள தரப்புகளாலும், டயஸ்பொறாவில் உள்ள தரப்புக்களாலும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
இப்போதுள்ள நிலைமைகளின்படி டயஸ்பொறாவில் உள்ள தீவிர தேசிய சக்திகள் கூட்டமைப்பை விடவும் தமிழ்த் தேசியக் முன்னணிக்கே நெருக்கமாகக் காணப்படுகின்றன. ஒரு ராஜதந்திர அரங்கை வெற்றிகரமாகக் கையாள்வதென்றால் கூட்டமைப்பானது தமிழ்நாட்டிலும் டயஸ்பொறாவிலும் உள்ள லொபிக் குழுக்களையும் அழுத்தக் குழுக்களையும் நொதியக் குழுக்களையும் நெருங்கிச் செல்ல வேண்டியிருக்கும். தமிழ்நாடும் தமிழ் டயஸ்பொறாவும்தான் தமிழ் ராஜதந்திரக் களத்தில் இருபெரும் கவசங்களும், நெம்புகோல்களுமாகும். எனவே, ஒரு தமிழ் ராஜிய அரங்கெனப்படுவது அதன் மெய்யான பொருளில் தாய் நிலத்தையும் தமிழ்நாட்டையும் டயஸ்பொறாவையும் ஒரு பொதுக்கோட்டில் சந்திக்கச் செய்வதிற்தான் அதன் முதல் வெற்றியைப் பெறமுடியும். இது முதலாவது.
இரண்டாவது, அனைத்துலக அனுதாப அலையை ஏன் இதுவரையிலும் ஒரு கொள்கைத் தீர்மானமாக மாற்ற முடியவில்லை என்ற கேள்வியாகும். சில மாதங்களிற்கு முன்பு கனடாவில் பிரான்ஸிஸ் ஹரிசன் தமது நூலை வெளியிட்டு வைத்தபோது ஆற்றிய உரையில் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கிறார்…. ”இவ்வளவு ஆதாரமான காணொளிக் காட்சிகள், செய்திகள் இன்ன பல ஆதாரங்கள் தமிழர்களிடம் இருந்தபோதும், இந்த உலகத்தின மனச்சாட்சி அசையவில்லையென்றால், தமிழர்கள் வேறு விடயங்களை முயற்சித்துப் பார்க்க வேணடும்…’ என்று
எனவே, ஈழத்தமிழ்ர்கள் ஒரு வாய்ப்பாட்டைப் போல ராஜதந்திரப் போர், ராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிராமல் இதுரையிலுமான ராஜிய முன்னெடுப்புக்கள் ஏன் பிழைத்தன அல்லது எங்கே பிழைத்தன அல்லது அவை மெய்யான பொருளில் ராஜீய வழிமுறைகள் தானா என்பதைக் கண்டுபிடிக்க முற்படவேண்டும். மே 18 இற்குப் பின்னரான உணர்ச்சிப் பெருக்கான அணுகுமுறைகளில் இருந்து விடுபட்டு அதிகமதிகம் அறிவுபூர்வமாக நிலைமைகளை விளங்கிக்கொள்ள முற்படவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. ”உங்களுடைய கனவிற்கும் யதார்த்தததிற்கும் இடையிலுள்ள தூரமே செயற்பாடு’ என்று. யதார்த்தத்தை நோக்கி கனவை வளைப்பது ராஜதந்திரம் அல்ல. அதற்குப் பெயர் சரணாகதி. மாறாக கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதே ராஜதந்திரமாகும். அப்படி கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கத் தவறின் இன்றைய தேர்தல் வெற்றிகள் நாளைய ராஜதந்திரத் தோல்விகளாக மாறவும் கூடும்.