கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி மற்றுமொரு முறை தமிழ் இனமான அரசியல் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இதுவென்று கூட்டமைப்பு கூறுகிறது. இது சரியா?
பெருமளவுக்கு உணர்ச்சிகரமான விவகாரங்களின் மீது தளமிடப்பட்டிருக்கும் ஜனநாயகப் பரப்புகளில் எளிமையான கவர்ச்சியான சுலோகங்களே பொதுசனங்களை விரைவாகச் சென்றடைகின்றன. சிக்கலான தேர்தல் விஞ்ஞாபனங்களைப் படிப்பாளிகளும், அரசியல் மயப் படுத்தப்பட்ட பொதுசனங்களும் வாசிப்பதுண்டு. மார்ச்சிய முலவர்கள் கூறியதுபோல கருத்து மக்களைப் பற்றிக் கொண்டு ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கிடையில் எப்பொழுதும் எரிபற்று நிலையில் இருக்கும் உணர்ச்சிகரமான விவகாரங்கள் விரைவாகச் சாதாரண ஜனங்களைப் பற்றிக் கொண்டு விடுகின்றன.
முதலாவது – ஆயத மோதல்கள் முடிவுக்கு வந்து நான்காண்டுகளுக்கும் மேலாகிவிட்டதொரு சூழலில் அச்சச் சூழல் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்பட்டமை.
இரண்டாவது – அப்படியொரு அச்சச் சூழலை உருவாக்குவதில் அரச தரப்புக்கு முன்னரைவிட வரையறைகள் அதிகரித்திருந்தமை. அதாவது, அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒரு தேர்தலாக இது இருக்கவேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. எனவே, அரசாங்கம் ஒப்பீட்டளவில் அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. அதோடு, மேலதிகமாக, அப்படியொரு அச்சுறுத்தலை உருவாக்கினால் அதனாலேயே இனமான அலை மேலும் தூண்டப்பட்டலாம் என்ற முன்னெச்சரிக்கையுணர்வும் ஒரு காரணம் எனலாம்.
மூன்றாவது – நவிப்பிள்ளையின் வருகையும், அதன் பின்னரான எதிர்பார்ப்புக் கலந்த ஓர் உணர்ச்சிச் சூழலும் கூட்டமைப்புக்குச் சாதகமாகக் காணப்பட்டன.
நாலாவது – ஒரு பிரசார உத்தியாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் வழங்கிய வாக்குறுதிகளும், உணர்ச்சிகரமான பேச்சுக்களும் ஏறக்குறைய 2008 மே க்கு முன்னரான ஒரு இறந்த காலத்தை ஏதோ ஒரு விகிதமளவுக்குத் தத்தெடுப்பது போலக் காணப்பட்டது. பொதுவாக அதிகபட்சம் மென்தேசியவாதிகளாகக் காட்சியளித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட இப்படியாக இறந்த காலத்தைத் தொட்டுப் பேசியபோது ஏற்கனவே, தீவிர தேசிய முகங்காட்டியவர்களும், புதிய வேட்பாளர்களும் மென்தேசியவாதிகளைக் கடந்து சென்று வன்தேசியம் கதைத்தார்கள். முன்பு வன்னியில் கேட்ட அதே குரலில் இம்முறை தேர்தல் களத்திலும் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
ஐந்தாவது – கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குச் சிங்களக் கடும் போக்காளர்கள் காட்டிய எதிர்வினைகளுக்கு எதிராகவும் இனமான அலை மேலும் தூண்டப்பட்டது.
எனவே, மேற்கண்ட எல்லாக் காரணங்களின் விளைவாகவும் உருவாகிய ஓர் இனமான அலையின் அறுவடையே தேர்தல் முடிவுகள் எனலாம். கூட்டமைப்பானது இந்த மக்கள் ஆணையை எப்படி வியாக்கியானப்படுத்துகிறது என்பதல்ல இங்கு பிரச்சினை. மாறாக இந்த மக்கள் ஆணை எனப்படுவது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் ஆகும். எந்தளவுக்கு இந்த வெற்றி பெரியதோ அந்தளவுக்கு இது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் ஆகும்.
இப் பொறுப்பையுணர்ந்து கூட்டமைப்பானது அது ஏற்கனவே வாக்களித்தபடி பிரதானமாக இரண்டு தளங்களில் செயற்பட வேண்டியிருக்கும். முதலாவது உடனடிப் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வு. இரண்டாவது அடிப்படைப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு. இவற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று மாகாண நிர்வாகத்தில் பட்டுத் தெளிந்த மூத்த நிர்வாகிகள் கூறுகின்றார்கள். அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்றால் மைய அரசுடன் ஏதோ ஒரு இணக்த்துக்கு வந்தேயாக வேண்டும் என்றும் இது அதன் இயல்பான வளர்ச்சிப் போக்கில் வீட்டுச் சின்னத்தின் கீழ் ஓர் புதிய இணக்க அரசியலுக்குப் போவதிலேயே முடியும் என்றும் கூட்டமைப்பை விமர்ச்சிக்கும் தீவிர தேசியவாதிகள் கூறுகிறார்கள்.
ஆனால், பேரழிவுக்கும், பெரும் வீழ்ச்சிக்கும் பின்னரான ஒரு சமூகத்திற்கு உடனடியாகத் தேவைப்படும் வலி நிவாரணிகள் வழங்கப்பட்டேயாக வேண்டும். வலி நிவாரணி ஒரு நிரந்தரப் பரிகாரம் அல்ல. ஆனால், வலியோடிருப்பவருக்கு அது தற்காலிகமாகவேனும் பரிகாரம்தான். ஓரளவுக்கு செற்றில்ட் ஆன ஒரு வாழ்க்கை முறையைக் கொண்ட நடுத்தர வர்க்கப்; படிப்பாளி அல்லது புத்திஜீவி அல்லது அரசியல்வாதியின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை உடனடிப் பிரச்சினையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறத் தோன்றலாம். ஆனால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து நான்காண்டுகளுக்கு மேலான பின்னரும் இப்பொழுதும் உளவியல் மறறும் பௌதீக ரீதியில் அண் செற்றில்டாக இருக்கின்ற, சாவினால் சப்பித்துப்பப்பட்ட ஒரு மீளக்குடியமர்ந்தவருக்கு வலி நிவாரணி தேவைப்படுகிறது. எனவே, உடனடிப் பிரச்சினைகளுக்குக் குறைந்தபட்சம் வலி நிவாரணமாக வேனும் அமையவல்ல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இறுதித் தீர்வு குறித்து தனக்கென்று ஒரு தரிசனத்தோடிருப்பதும், தனது தரிசனத்தில் விட்டுக் கொடுப்பற்றதுமாகிய ஒரு தலைமையானது உடனடிப் பிரச்சினைகள் பொறுத்து பயன்பொருத்தமான செயற் திட்டங்களை உருவாக்க முடியும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாயிருந்தபோது அதன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு அரசாங்கமே உணவும், மருந்தும் இதர வசதிகளையும் வழங்கியது. புலிகள் இயக்கம் அதைத் தடுக்க முற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும் நடந்து முடிந்த தேர்தலில் அபிவிருத்தியூடாக முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வியையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, தமிழர்களுக்கு அபிவிருத்தியை விட மேலதிகமாக வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால், மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பானது அதைச் செய்யுமிடத்து அதற்கு வேறொரு பரிமாணம் உண்டு. அங்கிகாரமும் உண்டு.
உதாரணமாக, தமிழ் மக்கள் இப்பொழுதும் இறந்து போனவர்களையும், காணாமற் போனவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, கொல்லப்பட்டவர்கள், காணாமற் போனவர்கள் மற்றும் சொத்திழப்புத் தொடர்பில் துல்லியமான விஞ்ஞானபூர்வமான புள்ளி விபரங்கள் வேண்டும். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் ஆகக்கூடிய பட்சம் திருத்தமான புள்ளி விபரங்களைத் திரட்ட முடியுமாயிருந்தாலே போதும் அது ஒரு முதல் வெற்றியாகக் கருதப்படும்.
மாகாணக் கட்டமைப்பை முடக்குவதென்றால் அரசாங்கமானது நிதியையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். தவிர, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்திற்கு மாகாண நிதி மட்டும் போதுமாயிராது. ஆனால், தமிழ் டயஸ்பொறாவில் போதியளவு நிதி உண்டு. கடந்த சுமார் நான்காண்டுகளிற்குள் ஈழத் தமிழர்களில் கணிசமான பகுதியினர் குறிப்பாக, மீளக்குடியமர்ந்தவர்கள் வேகமாக மீண்டெழ முடிந்தமைக்கு டயஸ்பொறாக் காசும் ஒரு பிரதான காரணம்தான். மற்றொரு காரணம் மரணத்துள் வாழ்ந்து பெற்ற அனுபவமும் வாழத்துடிக்கும் ஆவேசமும், விடாமுயற்சியுமாகும்.
மே 19 இற்குப் பின் டயஸ்பொறா நிதியானது சிதறிக்கிடக்கிறது அல்லது விரயம் செய்யப்படுகிறது அல்லது பொதுச் சொத்து தனிச் சொத்தாக மாறியிருக்கிறது. இந்நிலையில் டயஸ்பொறா நிதியானது நாட்டில் தேவைப்படும் மக்களை வந்தடைவதற்கு ஒரு (Humanitarian Corridor) மனிதாபிமான ஒடை திறக்கப்பட வேண்டும். ஜனநாயக நிதியாக தெரிந்தெடுக்ப்பட்ட ஓர் அமைப்பாயிருப்பதால் கூட்டமைப்பானது அனைத்துலகின் அங்கீகாரத்தோடும் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்தோடும் அதிகபட்ச வெளிப்படைத் தன்மைமிக்க ஒரு மனிதாபிமான ஒடையைத் திறக்க முயற்சிக்கலாம். இதை வேறு யார் செய்தாலும் அவர்களை ஒன்றில் அரசாங்கம் சந்தேகிக்கிறது அல்லது தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் சந்தேகிக்கிறார்கள். ஆனால், இப்போதுள்ள நிலைமைகளின்படி கூட்டமைப்பால் அதைச் செய்ய முடியும். மரபு ரீதியான ஒரு அரசுக்கும் மற்றொரு அரசுக்கு உட்பட்ட மாகாணக் கட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ நிதிக் கொடுக்கல் வாங்கல்களைப் போன்றது அல்ல இது. கூட்டமைப்பானது தனது தேர்தல் பரப்புரைக்காக டயஸ்பொறாவிடம் போய் பணம் கேட்கலாம் என்றால், தமது ஜனங்களின் மீள் எழுச்சிக்காக அதை ஓர் நிறுவனமயப்பட்ட அனைத்துலக பெறுமானங்களுக்குட்பட்ட, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு பொறிமுறைக்கூடாக ஏன் செய்ய முடியாது?
எனவே, உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய ஒரு கொள்கைத் திட்ட முன்வரைவை கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என்பதே விமர்சகர்களுடைய வேண்டுகோளாயிருக்கிறது. உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது என்பது அடிப்படைப் பிரச்சினைகளை ஒத்திவைப்பதா அல்லது அது விசயத்தில் சமரசத்துக்குப் போவதா இல்லையா என்பது, அத்தகைய இரு தள அரசியலை முன்னெடுப்புக்கும் கட்சியின் இலட்சியப் பிடிப்பிலும் தீர்க்கதரிசனத்திலுமே தங்கியிருக்கிறது.
இரண்டாவது, அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றியது. வடமாகாண சபைத் தேர்தல் நடந்த அதே காலப்பகுதியில் வடமேல் மாகாண சபையிலும், மத்திய மாகாண சபையிலும் தேர்தல்கள் நடந்தன. அங்கெல்லாம் அரசாங்கமே பெருவெற்றி பெற்றது. யுத்த வெற்றிகளின் தொடராகக் கிடைத்த ஒரு வெற்றி அது. அதேசமயம் வடக்கில் தமிழ் இனமான அரசியல் வெற்றிபெற்றது. அதாவது, ஒருபுறம் யுத்த வெற்றிகளுக்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது. இன்னொரு புறம் யுத்தத்திற் தோல்வியுற்ற தரப்பின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் பிரதிபலித்த கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கிறது. இதை இன்னும் செறிவாகக் கூறின்… இலங்கைத்தீவானது இன ரீதியாக இரண்டாகப் பிளவுண்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன எனலாம். இந்நிலையில் துருவ நிலைபபட்டிருக்கும் இரண்டு தரப்பையும் ஒரு பொது உடன்படிக்கைக்கு அதாவது, இறுதித் தீர்வுக்குக் கொண்டு வர முடியுமா?
நிச்சயமாக முடியாது. அதற்கு மூன்றாவது தரப்பு ஒன்று வேண்டும். அதுவும் மத்தியஸ்தம் என்பதற்குமப்பால் பயன்பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு தரப்பாக இருந்தால்தான் உண்டு. இலங்கைத்தீவின் இன தயார்த்தம் அதுதான். ஏற்கனவே, எட்டப்பட்ட இரண்டு உடன்படிக்கைகளான இந்திய – இலங்கை உடன்படிக்கையும், ரணில் – பிரபா உடன்படிக்கையும் அவ்வாறு வெளித் தலையீட்டுடன் தான் உருவாக்கப்பட்டவை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே, கிடைத்துள்ள மக்கள் ஆணையை வைத்து வெளியுலகத்தை தனது இலக்கை நோக்கி வளைத்தெடுப்பதற்குரிய ஒரு பிராந்திய மற்றும் அனைத்துலக வேலைத்திட்டம் கூட்டமைப்பிடம் உண்டா?
தீர்வற்ற தீர்வாக உள்ள மாகாண சபையிலிருந்து தொடங்கி அவர்கள் வாக்குறுதி அளித்த வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை நோக்கிச் செல்வதற்கான ராஜதந்திர வழிமுறைகளிற்குரிய வழிவரைபடம் எதும் அவர்களிடம் உண்டா?
கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் அந்தக் கட்சியின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை குறைவு என்று சுட்டிக்காட்டுவதுண்டு. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொறிமுறையில் ஜனநாயக பண்புகள் மதிக்கப்படுவது குறைவு என்றொரு குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில் மகத்தான ஒரு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் அக்கட்சியானது உடனடிப் பிரச்சினைகள் பொறுத்தும், நிரந்தரத் தீர்வு பொறுத்தும் ஒன்று மற்றதுடன் முரண்படாததும், ஒன்று மற்றதைப் பலப்படுத்துவதுமாகிய இரு வழி அரசியல் கொள்கைத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான சிந்தனைக் குழாம்களையும், ஏனைய சிவில் கட்டமைப்புக்களையும் உருவாக்க வேண்டும்.
இப்பொழுது கிடைத்திருப்பது ஒன்றும் புதிய வெற்றி அல்ல. அது தமிழ் வாக்காளர் பாரம்பரியத்தினடியாகக் கிடைத்த ஆகப்பிந்திய ஒரு வெற்றிதான். அதேசமயம், இலங்கைத்தீவின் இனமான அரசியல் வரலாற்றுக் கூடாகச் சிந்திக்குமிடத்து தமிழ் இனமான அரசியல்வாதிகள் தேர்தலில் பெற்ற வெற்றிகளைச் சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தோற்கடித்தே வந்துள்ளார்கள். தமிழ் வாக்காளர் பாரம்பரியம் ஒரு யதார்த்தம் என்றால் சிங்களத் தலைவர்கள், தமிழர்களின் தேர்தல் வெற்றிகளை பிறகொரு காலம் பிறிதொரு களத்தில் தோற்கடிப்பதும் ஒரு யதார்த்தம்தான்.
இந்த இரு யதார்த்தங்களையும் உள்வாங்கி உருவாக்கப்படும் ஒரு இரு தளப்போக்குடைய அரசியல் மற்றும் ராஜதந்திர செயல் திட்டமே கூட்டமைப்பின் இன்றைய வெற்றிகள் நாளைய தோல்விகளாகுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கப்போகின்றன.