நல்லிணக்கத்தின் காட்சியறை?

மலையகத்தில் தொழில் புரியும் ஒரு நண்பர் சொன்னார்…….அவர் அங்கு ஒரு சிங்கள முதாட்டியின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். கடந்த கிழமை வடமாகாண சபையின் முதலமைச்சர் இலங்கையின் அரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோது மேற்படி நண்பர் அந்த சிங்கள் முதாட்டியுடன் இருந்து அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். முதலமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அம்முதிய பெண் சொன்னாராம் ‘கொட்டியநாயக்க” – இவரும் ஒரு புலிப் பிரதானி – தான் என்று…

அந்தச் சிங்கள மூதாட்டியைப் போலவே பெரும்பாலான சாதாரண சிங்கள வாக்காளர்களும் கருதுவதாகக் கூறப்படுகின்றது.

யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கிவரும் ஒரு அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக வெற்றிகளைக் கொடுத்துவரும் சாதாரண சிங்கள வாக்காளர்களின் கண்களுக்கு, அந்த அரசாங்கத்தைத் தோற்கடித்த ஓரே மாகாண சiபின் முதலமைச்சர் அப்படித்தான் தோன்ற முடியும்.

சிங்கள முற்போக்கு சக்திகளும் லிபரல் ஜனநாயகவாதிகளும் வேறுவிதமாகச் சிந்திக்கக் கூடும். ஆனால், தென்னிலங்கையில் உள்ள கடுங்கோட்பாளர்கள் மத்தியிலும் சாதாரண ஜனங்கள் மத்தியிலும் அது எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.

அதேசமயம், மேற்படி வைபவம் சாதாரண தமிழ் வாக்காளர்களால் எப்படி விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது?

Sam and Wiki Tiara 3அதில் ஒரு ராஜதந்திர பரிபாஷை இருப்பதாகக் கூட்டமைப்பினர் கருதுவது தெரிகிறது. ஆனால், சாதாரண தமிழ் மக்களுக்குச் சிக்கலான தேர்தல் விஞ்ஞாபனங்கள் எப்படி விளங்குவதில்லையோ அப்படித்தான் இது போன்ற ராஜதந்திர பரிபாஷைகளும் விளங்குவதில்லை. யுத்த வெற்றிகளுக்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தைத் தேர்தலில் தோற்கடித்த திருப்தியோடிருக்கும் சாதாரண தமிழ் வாக்காளரைப் பொறுத்த வரை இது மிகவும் உணர்ச்சிகரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கப்பட்ட வீரவசனங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையில் உள்ள ஏமாற்றகரமான கசப்பான இடைவெளியை உணர்ந்திய ஒரு வைபவம் அது.

இனமான அலையில் அள்ளுண்டு போய் வாக்களித்துவிட்டு வந்த சாதாரண தமிழ் வாக்காளர்கள் இதை ராஜதந்திரப் போராகக் கருதவில்லை. மாறாக, இது வீட்டுச் சின்னத்தின் கீழான ஒரு புதிய அரை இணக்க அரசியலின் தொடக்கமாகவே பார்க்கின்றார்கள்.

எனவே, அந்த வைபவமானது இரு தரப்பிலும் உள்ள சாதாரண பொது ஜனங்களின் மத்தியில் பொசிற்றிவ் ஆன அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறிவிட்டது. அதேசமயம் லிபரல் ஜனநாயகவாதிகளின் மத்தியில் அது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைவிட முக்கியமாக அது பிராந்திய மற்றும் அனைத்துலக ராஜதந்திர வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

செப்ரெம்பர் 11 இற்குப் பின்னரான உலகில் ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது அதன் உள்ளரங்கை விடவும் கூடுதலாக வெளியரங்கிலேயே கையாளப்பட வேண்டிய ஒரு விவகாரமாக மாறியது. அதிலும் குறிப்பாக, மே 19 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பின் பேரம்பேசும் சக்தியானது ஒப்பிடடளவில் பலவீனமுற்றிருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் அரசியலின் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பரிமாணமே அதிக முக்கியத்துவமுடையதாக மாறியிருக்கிறது.

இப்பிராந்திய மற்றும் அனைத்துலக யதார்த்தங்களைப் பிரதிபலித்தே கூட்டமைப்பு அப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக ஒருவாதம் முன்வைக்கப்படுகிறது. சில சக்திமிக்க நாடுகள் அவர்களை இப்படியொரு முடிவை எடுக்கத் துண்டியதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆயின், வடமாகாண சபையின் எதிர்காலம் எனப்படுவது மேற்படி பிராந்திய மற்றும் அனைத்துலகப் பின்பலத்திற்தான் பெரிதும் தங்கயிருக்கப்போகிறதா?

அப்படித்தான் தோன்றுகிறது. பெருமளவுக்கு அனைத்துலக அழுத்தங்களின் காரணமாக உருவாக்கப்பட்டதே இம்மாகாண சபை. எனவே, இதற்கு ஒரு பிராந்திய பரிமாணமும், அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளைப் பொறுத்தவரை, நல்லிணக்கத்துக்கான ஒரு ஷோகேஸாக – காட்சியறையாக – இதை அரசாங்கம் காட்ட முற்படும். கூட்டமைப்பு அதற்கான முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. பதவியேற்பு முடிந்த பின் அரசுத் தலைவரின் முகநூல் பக்கத்திற்குரிய கவர்ப் படமாக பதவியேற்பு வைபவப் படம் போடப்பட்டிருக்கிறது. அது ஒரு அரசியல் படமாகவும், அதேசமயம் ஒரு குடும்பப் படமாகவும் காட்சியளிக்கிறது. எனவே, அரசாங்கம் சற்றுத் தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து முடிவு எடுக்குமாயிருந்தால் தன்னை நோக்கி வரும் அனைத்துலக அழுத்தங்களை திசை திருப்பும் விதத்தில் வடமாகாண சபையை நல்லிணக்கத்தின் ஷோகேஸ் ஆக மாற்ற முடியும். இதன் மூலம் வெளி அழுத்தங்களையும் வேகங்கெடச் செய்யலாம். அதோடு, தமிழ் அரசியலை மாகாண சபைக்குள் தேங்கி நிற்கவும் செய்யலாம்.

ஆனால், வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் இது. வெற்றிவாதம் எனப்படுவது வென்ற தரப்புக்குத் தலைமை தாங்குவதுதான். எனவே, தோற்ற தரப்புடன் நல்லிணக்கம் எனப்படுவது வெற்றியைப் பகிர்வது என்ற அர்த்தத்தில் இருக்க முடியாது. மாறாக, தோற்ற தரப்பின் சரணாகதியே அங்கு இணக்க அரசியலாக ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தரப்பை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியாகவும் தோற்கடிப்பதற்கான ஒரு ஏற்பாடே இது என்று சிங்களக் கடும்போக்காளர்களை நம்பச் செய்ய வேண்டும். இது முகநூல் பக்கத்தில் முகப்புப் படத்தை மாற்றுவது போல அவ்வளவு இலகுவானதல்ல.

எனினும், கொமன் வெல்த் மாநாடு வரையிலும் அதற்குப் பின் அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடர் வரையிலுமாவது அரசாங்கம் வடமாகாண சபை என்ற காட்சியறையை கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. கொமென் வெல்த் மாநாட்டுக்கான முன் நிபந்தனை அது. அதேபோல அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடருக்கிடையில் செய்து முடிக்க வேண்டிய ஒப்புக் கொள்ளப்பட்ட பிரதான வீட்டு வேலையும் அது. இது விசயத்தில் அரசாங்கத்தை ஓரளவுக்காயினும் தற்காலிகமாகவேனும் சுற்றிவளைக்கலாம் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் நம்புகின்றன.

ஒரு தீர்வற்ற தீர்வுதான் என்றபோதிலும் ஒரு கோறையான அமைப்புத்தான் என்றபோதிலும் அரசாங்கம் ஒரு கட்டம் வரையிலும் அதை ஷோகேஸ் ஆக காட்ட முற்படும். அதேசமயம் அரசாங்கத்திற்குள்ள இத்தேவையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மாகாண சபையைப் முன்னோக்கிச் செலுத்தவே மேற்கு நாடுகளும், இந்தியாவும் முயற்சிக்கும். இதை இன்னும் கறாரான வார்த்தைகளிற் கூறின் இந்தியா வடமாகாண சபையை உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தத்தெடுக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. ஆனாலது, எதிர்ப்பு அரசியல் பொறிமுறைக் கூடாகச் செய்யப்படுவதைவிடவும் குறிப்பிட்டத்தக்களவு இணக்க அரசியற் பொறிமுறைக்கூடாகச் செய்யப்படுவதற்கே மேற்படி நாடுகள் முன்னுரிமை கொடுக்கின்றன.

அதாவது, இலங்கை அரசாங்கத்தை நோகாமல் சுற்றிவளைக்க முற்படுகின்றன என்று அர்த்தம். ஆனால், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் எதுவரை நெகிழ்ந்து கொடுக்கும்?

வெற்றிவாதம் எப்பொழுதும் வீரப்படிமங்களைக் கட்டியெழுப்பும். வீரப்படிமங்கள் உள்ளுரில் வாக்குவேட்டை அரசியலோடு மட்டும் நிற்கும் வரை பிரச்சினையில்லை. மாறாக அது அதன் உள்ளுர் எல்லைகளைத் தாண்டி வெளியுறவுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும்போதே அனைத்துலக சமூகம் சுற்றிவளைக்க முற்படுகின்றது.

உள்ளுரில் வாக்காளர்களுக்கும், எதிர்த்தரப்புக்களிற்கும் வீரங்காட்டுவது வேறு ரோஷம் பாராட்டுவது வேறு அதையே வெளியரங்கில் ராஜிய நடைமுறைகளில் பின்பற்றுவது வேறு. கடந்த மாதம் பிரசாரக் கூட்டங்களின்போது கூட்டமைப்பு பேசியவற்றுக்கும் அரசுத் தலைவர் முன் பதவியேற்றதிற்கும் இடையில் உள்ள வேறுபாடும் இத்தகையதா?.

எனவே, உள்ளுர் யதார்த்தத்திற்கும் அனைத்துலக யதார்த்தத்திற்கும் இடையில் ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டிய தேவை எல்லா மரபு ரீதியான அரசுகளிற்கும் உண்டு. ஆனால், யுத்த வெற்றிகளையே தனது அரசியல் எதிர்காலத்திற்குரிய ஓரே முதலீடாகக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு அது தலைமை தாங்கும் வெற்றிவாதம் காரணமாக இயல்பான வரையறைகள் உண்டு.

ராஜிய அரங்கில் சிறிய நாடுகளிற்கு வீரம், மானம், ரோஷம் என்பவையெல்லாம் கிடையாது. பிராந்திய அல்லது அனைத்துலக யதார்த்தங்களிற்குப் பணிந்துபோவதைத் தவிர வேறு தெரிவு இல்லை. அப்படிப் பணிந்துபோகும் போது உள்ளுரில் ஊதிப் பெருப்பிக்கப்பட்டிருக்கும் வீரப் படிமத்திற்கு சேதம் ஏற்படN;வ செய்யும். ஒரே சமயத்தில் உள்நாட்டில் வெற்றி வீரராகவும், வெளியரங்கில் கூனிக்குறுகியும் நிற்பதைத் தவிர சிறிய நாடுகளிற்கு வேறு தெரிவெதையும் இப்போதுள்ள ஒருதுருவ உலக ஒழுங்கு விட்டுவைக்கவில்லை.

ஆனால், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தைப் பொறுத்த வரை அதிலும் குறிப்பாக, உலகிலேயே வெல்லக் கடினமானது என்று கருதப்பட்ட ஒரு ஆயுத அமைப்பை வெற்றிகொண்ட ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அந்த வெற்றியின் மீதே தனது எதிர்காலத்தை முதலீடு செய்து வைத்திருக்கும். ஒரு அரசாங்கத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டில் அது கட்டியெழுப்பி வைத்திருக்கும் வீரப்படிமத்தை முற்றாக இழக்க முடியாது என்பதே இலங்கைத்தீவின் இப்போதுள்ள யதார்த்தம் ஆகும்.

அரசாங்கமானது, உள்நாட்டில் அது கட்டியெழுப்பி வைத்திருக்கும் வீரப்படிமத்தை இழந்தால் தனது தேர்தல் வெற்றிக்கான முதலீட்டையும் இழக்க வேண்டிவரும். இன்னும் சில பத்தாண்டுகளுக்கு இலங்கைத்தீவை தொடர்ச்சியாக ஆழ ஆசைப்படும் அதன் கனவையும் கைவிட வேண்டிவரும். எனவே, வீரப்படிமத்தை இழப்பது என்பது இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தோற்றுப்போவதற்குச் சமம். அதாவது, இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றியின் கைதியாகவுள்ளது என்று அர்த்தம்.

இப்படியாகத் தனது வீரப்படிமத்தை ஒரு கட்டத்திற்கும் மேல் இழந்து அனைத்துலக தரப்போடும், தமிழ்த் தரப்போடும் நெகிழ்ந்து கொடுக்க முடியாத இவ்வரசாங்கத்தை அதன் நெகிழக்கூடிய எல்லை வரையிலும்தான் அனைத்துலகத் தரப்பினால் சுற்றிவளைக்க முடியும்.

இது ஏறக்குறைய 2002 இலிருந்து தொடங்கி 2005 வரையிலுக்குமான காலப்பகுதியில் இணைத் தலைமை நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கையாண்ட அனுபவத்துக்கு ஏறக்குறைய சமாந்திரமானதாகும்.

ஓர் அரசற்ற தரப்பாகிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சமாதான வழிமுறைகளின் மூலம் பழக்கி எடுத்து (tame) வழிக்குக் கொண்டு வர முடியுமா என்று இணைத் தலைமை நாடுகள் முயற்சி செய்தன. புலிகள் இயக்கம் தன்னை ஒரு சம தரப்பாக கருதுமளவுக்கு மேற்கத்தையத் தலைநகரங்களில் அவர்களுக்கு ஓரளவுக்கு அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்கி அதன் மூலம் அவர்களை அனைத்துலக ராஜியப் பொறிமுறையை மதித்து நடக்கும் ஒரு வளர்ச்சிக்குக் கொண்டுபோக முடியுமா என்று இணைத் தலைமை நாடுகள் முயற்சித்தன. ஆனால், வொஷிங்டன் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் தான் ஒரு சமதரப்பு அல்ல என்பதை உணரத் தலைப்பட்டது. அதோடு ஒஸ்லோப் பிரகடனமானது தன்னைச் சுற்றிவளைக்க முற்படுவதாகவும் அந்த இயக்கம் சந்தேகப்பட்டது. இவற்றுடன் கிழக்கில் ஏற்பட்ட உடைவானது சமாதானத்தின் மீதான அவர்களுடைய இயல்பான அச்சத்தை மேலும் கூட்டியது. இணைத் தலைமை நாடுகள் முன்னெடுத்த சமாதானம் ஒரு தர்மர் பொறியைப் போன்றது என்றும் அது காலகதியில் தமது அமைப்பையும், போராட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும் நம்பத் தொடங்கியபோது அந்த இயக்கம் சமாதானத்துக்கு எதிராகச் செங்குத்தாகத் திரும்பியது.

ஓர் அரசற்ற தரப்பாகிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜிய நியமங்களிற்குப் பழக்கி எடுக்கும் முயற்சியில் இணைத் தலைமை நாடுகள் தோல்வியுற்றன.

இப்பொழுது அரசாங்கத்தையும் அப்படி பழக்கி எடுக்க (tame) மேற்கு நாடுகளும் இந்தியாவும் முயன்று வருகின்றன. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கியபடி பிராந்திய இழுவிசைகளுக்கிடையில் ஒரு நுட்பமான மோதுகளத்தை இச்சிறுதீவில் திறந்துவிட்டிருப்பதன் மூலம் தனது பேரம் பேசும் சக்தியைப் பேண முற்படும் அரசாங்கத்தைச் சுற்றிவளைப்பதற்குரிய புதிய தெரிவுகளை உருவாக்க முயற்சிக்கின்றன.

ஓர் அரசற்ற தரப்பாகிய விடுதலைப்புலிகளை ராஜியப் பொறிமுறைகளுக்கூடாகக் கையாள்வதில் மேற்கிற்கும், இந்தியாவுக்கும் அடிப்படையான வரையறைகள் இருந்தன. ஆனால், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரை நிலைமை அப்படியல்ல. அரசுக்கும் – அரசுக்கும் இடையிலான ராஜிய உறவுகளையும், கடப்பாடுகளையும் ஒரு அரச தரப்பு செங்குத்தாக முறித்துக்கொண்டு முடிவுகளை எடுப்பது ஒப்பீட்டளவிற் கடினமானது. அவ்வாறு ராஜியக் கடப்பாடுகளையும், அனைத்துலக ராஜிய நிமயங்களையும் மீறமுடியாதிருப்பதாற்தான் இலங்கை அரசாங்கமானது ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னோக்கி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது. அது மட்டுமல்ல, கடந்த கிழமை வடமாகாண சபை முதலமைச்சர் பதவிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே சம்பூர் அனல் மின் ஆலை தொடர்பில் இந்தியாவுடன் ஓர் இணக்கத்துக்கும் வந்திருக்கிறது.

அதாவது, மேற்கு நாடுகளும், இந்தியாவும் அரசாங்கத்தை நெகிழச் செய்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய தெரிவுகளைப் பெற்றிருக்கின்றன என்றே பொருள். எனவே, அரசாங்கம் நெகிழ்ந்து கொடுக்கும் வரை மாகாண சபையும் உருளும். அனைத்துலகத் தரப்பினால் குறிப்பாக, இந்தியாவால் எந்தளவுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்த முடியுமோ, எந்தளவுக்கு கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மாகாண சபையும் உருளும்.

அது வீட்டுச் சின்னத்தின் கீழான ஓர் அரை இணக்க அரசியலாகவுமிருக்கலாம். அல்லது முழு இணக்க அரசியலாகவுமிருக்கலாம்.
11-10-2013
(படம் தமிழ் மிரர்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *