கூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும்

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் ஸ்கண்டிநேவிய நாடொன்றிலிருந்து வந்த ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார் ‘‘இப்போதிருக்கும் நிலைமைகளே தொடர்ந்தும் இருக்குமாயிருந்தால் அல்லது இவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கின்படி மாற்றங்கள் நிகழுமாயிருந்தால் டயஸ்பொறாவில் உள்ள தமிழர்கள் பொதுப் பணிகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிற்குள் அதிகம் மூழ்கத் தொடங்கிவிடுவார்கள் . அடுத்த வசந்த கால விடுமுறைக்கு எங்கே போகலாம். பிள்ளைகளை வேறெந்த உயர்தரமான பள்ளிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கலாம் அல்லது இப்போதிருப்பதை விட வேறெப்படி வசதியாக வாழலாம். என்பவற்றைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்” என்று. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ் அரசியலில் காணப்பட்ட தேக்கத்தையும், டயஸ்பொறாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மையையும் கருதித்தான் அவர் அவ்வாறு கூறினார். அவர் அப்படிக் கூறி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளின் பின் அண்மையில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் கதைத்தார்.

‘‘இங்கே இப்போது பொதுக்காரியங்களிற்கு அல்லது பொதுச்சேவைக்கு காசு திரட்டுவது கடினமாயுள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சோலிகளையே பார்க்க விரும்புகின்றார்கள். தங்களுடைய தனிப்பட்ட கொண்டாட்டங்களை எந்தளவுக்கு ஆடம்பரமாகக் கொண்டாடலாம் என்று சிந்திக்கும் போக்கே அதிகரித்து வருகின்றது. ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு செலவழிக்கின்றார்கள். ஆடம்பரத்தின் அளவே அந்தஸ்தின் அளவும் என்று கருதும் ஒரு நிலைமை வேகமாக வளர்ந்து வருகின்றது”… என்று. லண்டனில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்கள் செறிவாக, ஒரு கூட்டு அடையாளத்துடன் வாழ்ந்துவரும் அநேகமாக எல்லா நாடுகளிலும் இந்தப் போக்கு அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்ப் புலப் பெயர்ச்சியின் இரண்டாவது அலையெனப்படுவது ஈழப்போரின் நேரடியான ஒரு விளைவுதான். எனவே, போர்தான் புலப்பெயர்ச்சியைத் தூண்டியது. போர்தான் டயஸ்பொறாவையும் தாய் நாட்டையும் பிரித்தும் வைத்திருந்தது. ஆனால், அதேசமயம் அந்தப் போர்த்தான் டயஸ்பொறாவிற்கும் தாய்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பாகவுமிருந்து வந்தது.

திரும்பிச் செல்லவியலாத தமது ஊரைக் குறித்த ஏக்கமும் தவிப்பும் போர் உக்கிரமடைய உக்கிரமடைய மேலும் அதிகரித்துச் சென்றன. தமது ஊர் சிதைக்கப்படும்போதோ அல்லது தமது ஊரவர்கள் இடம்பெயரும்போதோ அல்லது தமக்கு வேண்டியவர்கள் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ அல்லது காணாமற்போகவோ நேரிடும்போது டயஸ்பொறாவில் உள்ளவர்கள் துடித்துக்கொண்டு உதவ முன்வருகின்றார்கள். எந்த யுத்தம் அவர்களைப் பிரித்துவைத்ததோ அந்த யுத்தம் தான் அவர்களை தாய் நாட்டோடும் பிணைத்தும் வைத்திருந்தது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. புலம்பெயர்ந்த நாடுகளில் தீவிரமாக அரசியலில் செயற்பட்டவர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் தவிர மற்றெல்லாரும் தாய் நாட்டிற்கு வந்துபோகக் கூடியதாக உள்ளது. இதனால், தாய் நாட்டிற்கும் டயஸ்பொறாவுக்கும் இடையிலான உளவியற் தூரம் குறையத் தொடங்கியிருக்கின்றது.

எது ஒன்று சென்றடைய முடியாத தூரத்தில் இருக்கிறதோ அது அதன் தொலைவு காரணமாகவே தவிப்பையும், ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மாறாக, அந்தத் தொலைவு குறையத் தொடங்க முன்பிருந்த ஏக்கமும் தவிப்பும் முற்கற்பிதங்களும் குறையத் தொடங்குகின்றன. அரசியல் விழிப்புடைய, இலட்சியப் பற்றுடைய தீவிர செயற்பாட்டாளர்கள் மட்டுமே இதில் வேறுவிதமாகச் சிந்திக்க முடியும். மற்றும்படி ஈழப்போரிற்கு வரியிறுப்போராகவோ அல்லது ஊர்வலங்களில் பங்குபற்றுவோர்களாகவோ மட்டுமிருந்து வந்த சாதாரண சனங்களைப் பொறுத்தவரை அவர்களைத் தாய் நாட்டுடன் கட்டி வைத்திருந்த யுத்தம் இப்பொழுது இல்லை. எனவே, தாய் நாட்டை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒரு போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமுண்டு.

ஆனால், தமிழ் டயஸ்பொறாவானது தாய் நிலத்தை நோக்கித் திரும்பியிருப்பதுதான் தமிழ் அரசியலின் பிரதான பலங்களில் ஒன்று. தமிழ் அரசியலின் பிரதான பேரம் பேசும் சக்திகளில் அதுவும் ஒன்று. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் அரசியலானது தமிழ் டயஸ்பொறாவிடமிருந்து ஒருவித விலகலையே காட்டுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக டயஸ்பொறாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கருதிக் கூறுமிடத்து அங்குள்ள தீவிர தேசிய சக்திகளின் மத்தியில் கூட்டமைப்பு மதிப்பிழந்து வருகிறது. பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே ஓப்பீட்டளவில் நண்பர்கள் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.

இது ஒரு முரண். நாட்டில் ஏகபோக சக்தியாக மேலெழுந்துவரும் ஒரு கட்சிக்கு டயஸ்பொறாவில் ஒப்பீட்டவில் செல்வாக்குக் குறைவாகக் காணப்படும் அதேசயம், நாட்டில் பலவீனமாகக் காணப்படும் ஒரு கட்சிக்கு டயஸ்பொறாவில் ஒப்பீட்டளவில் நண்பர்கள் அதிகமிருப்பது என்பது.

வடமாகாண சபைத் தேர்தலிற்கு முன் கூட்டமைப்பினர் டயஸ்பொறாவுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தோடு போனபோதும் இது அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலிற்கு முன்னும் பின்னும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் டயஸ்பொறாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ள தீவிர தேசிய சக்திகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.

மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியானது தமிழ்நாட்டில் உள்ள சில தீவிர தேசிய சக்திகள் மத்தியில் வேறுவிதமான உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் நாட்டை விலகியிருக்குமாறு கூறிய கூட்டமைப்புக்கு மக்கள் இந்தளவு பெரிய வெற்றியைக் கொடுத்தது என்பது தமிழ் நாட்டில் உள்ள தீவிர தேசியவாதக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பு ஒரு ஏக போக சக்தியாக மேலெழுந்து வரும் ஒரு பின்னணியில், கூட்டமைப்பை மீறி ஈழத்தமிழ் அரசியலில் தங்களால் எதைச் செய்ய முடியும் என்ற ஒரு கேள்வி மேற்படி அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்புக்குக் கிடைத்த பெருவெற்றியை அதன் தலைவர்கள் பின்பற்றிவரும் புலி நீக்கம் செய்யப்பட்ட மென்தேசிய நிலைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மக்கள் ஆணையாக பிழையாக விளங்கிக் கொள்ளுமிடத்து மேற்படி குழப்பங்கள் ஏற்பட இடமுண்டுதான். அதேசமயம், கூட்டமைப்பின் தலைவர்களுடைய மென்தேசிய நிலைப்பாட்டிற்கும் மக்கள் அவர்களிற்கு வழங்கிய ஆணைக்குமிடையில் இடைவெளி இருக்கின்றதோ இல்லையோ இப்போதுள்ள நிலைமைகளின் படி தமிழ் அரசியலைப் பெறுத்த வரை கூட்டமைப்புத்தான் ஒரே பிரதான மையம்.

குறிப்பாக, வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகளோடு கூட்டமைப்பே தமிழ் அரசியலின் ஏகபோக சக்தியாக மேலெழுந்துவி;ட்டது. இப்போதைக்கு யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் கூட்டமைப்பு மைய அரசியல் தான். (TNA Centric) இனி யார் எதைச் செய்தாலும் ஒன்றில் கூட்டமைப்பை ஆதரித்துச் செய்ய வேண்டும் அல்லது எதிர்த்து செய்ய வேண்டும என்ற நிலையே உருவாகி வருகிறது.

இத்தகையதொரு பின்புலத்தில் டயஸ்பொறாவையும் தமிழ் நாட்டையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சி நிரலை கூட்டமைப்புக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியே இங்கு முக்கியமானது.

கூட்டமைப்பின் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலான செயற்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது குறிப்பாக, வடமாகாண சபைத் தேர்தலிற்கு முன்னும் பின்னுமான அதன் செயற்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது அப்படியொரு ராஜதந்திர தரிசனம் அதாவது களத்தையும் புலத்தையும் தமிழ்நாட்டையும் ஒரு கோட்டில் கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பிடம் இருப்பதாகக் கருத முடியவில்லை. மேலும் அதன் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கும் கருத்துகளிற்கிடையில் காணப்படும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வைத்துப் பார்க்கும்போது அப்படியொரு முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது. அதாவது, தேர்தல் பிரசாரத்தில் கூட்டமைப்பு பிரகடனம் செய்த ராஜதந்திரப் போர் எனப்படுவது ஒரு பிரசார உத்தியாகப் பயன்படுத்தப்பட்ட வெற்றுச் சுலோகமா என்று கேட்கத் தோன்றுகின்றது.

ஈழத் தமிழர்களின் ராஜிய அரங்கைப் பொறுத்தவரை தமிழ் டயஸ்பொறாவும் தமிழ்நாடும் இரு பிரதான நெம்புகோல்களாகும். இவ்விரு நெம்புகோல்களையும் வெற்றிகரமாகக் கையாள முடியாத எந்தவொரு வியூகமும் சக்திமிக்க நாடுகளின் நிழ்ச்சி நிரலுக்கு சேவகஞ்செய்வதிலேயே சென்று முடியும்.

மே 18 இற்குப் பின்னர் மட்டுமல்ல, மே 18 இற்கு முன்னரும் கூட ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது இலங்கைத்தீவின் எல்லைகளுக்குள் தீர்க்கப்பட முடியாத ஒரு வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. அல்லது இலங்கைத் தீவின் எல்லைகளுக்கு வெளியில்தான் கையாளப்பட வேண்டிய ஒரு விவகாரமாக உருவாகிவிட்டது என்றும் கூறலாம். ரணில் – பிரபா உடன்படிக்கை எனப்படுவது அதன் வெளிப்பாடுதான். எனவே, இச்சிறு தீவின் எல்லைகளுக்கு வெளியே கையாளப்பட வேண்டிய ஒரு விவகாரம் என்று வரும்போது தமிழ் நாடும் தமிழ் டயஸ்பொறாவும் தான் அதன் இரு பிரதான ஆடுகளங்கள் ஆகும். இந்த இரண்டு களங்களையும் விலகச் செய்துவிட்டு கூட்டமைப்பானது அது தேர்தலின்போது பிரகடனம் செய்த ராஜதந்திரப் போரை நடர்த முடியாது. ஒரு பறவை தனது சிறகிரண்டையும் தூண்டித்துவிட்டு பறக்க முற்படுவதைப் போன்றது இது.

TNA_in_Delhiஎனவே, மெய்யான பொருளில் ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்துச் சிந்திப்பதாக இருந்தால் கூட்டமைப்பானது களம், புலம், தமிழகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். முதலில் டயஸ்பொறாவை நோக்கியும், தமிழ் நாட்டை நோக்கியும் நம்பிக்கையூட்டும் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டும். குறிப்பாக, தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளை நோக்கி நல்லெண்ணச் சமிக்ஞைகளை அனுப்பினால் மட்டும் போதாது பதிலாக, கட்சிசார் நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்படும் தரப்புகளை நோக்கி நம்பிக்கையூட்டும் சமிக்ஞைகள் அனுப்பப்பட வேண்டும். கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாகத் தனது உயர் மட்டத்தைப் புலி நீக்கம் செய்துவரும் கூட்டமைப்பின் தலைமையானது டயஸ்பொறாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ள தீவிரதேசிய சக்திகளின் இதயத்தில் இடம்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் புரிந்துகொள்ளப்படத்தக்கவையே. எனினும்;, குறிப்பாக, வடமாகாண சபைத் தேர்தலையொட்டியும் அதற்குப் பின்னரும் கொழும்பில் உள்ள கடுங்கோட்பாளர்களுக்கும் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகளுக்கும் நல்லெண்ணச் சமிக்ஞைகளை அனுப்புவதில் காட்டப்பட்ட அளவு ஆர்வம் டயஸ்பொறாவை நோக்கியும் தமிழ் நாட்டை நோக்கியும் காட்டப்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

எவையெவை ஈழத்தமிழர்களின் மெய்யான பலங்களோ எவையெவை ஈழத்தமிழர்களுடைய பிரதான பேரம் பேசும் சக்திகளோ அவற்றையெல்லாம் விலக்கி வைக்குமொரு ராஜதந்திர வியூகம் எனப்படுவது அரசுத் தலைவர்களையும், ராஜதந்திரிகளையும் கட்சித் தலைவர்களையும் சந்தோசப்படுத்த உதவக்கூடும். ஆனால், அது ஈழத்தமிழர்களை தீர்வற்ற தீர்வு ஒன்றிற்குள் பெட்டி கட்டிவிடும். அதோடு அத்தீர்வை எதிர்த்து அதைக் கடந்து முன்செல்ல முற்படும் மாற்றுச் சக்திகளின் வழியில் கூட்டமைப்பே ஒரு நந்திபோல நிலையான நலன்களைக் கட்டிப்பிடித்தபடி குந்தியிருக்கும் ஒரு ஆபத்தான வளர்ச்சிக்கும் கொண்டுபோய்விடக்கூடும்.

25-10-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *