இலங்கைத்தீவின் இறுதிக் கட்டப் போரில் ஐ.நா. மன்றம் தனது நடவடிக்கைகளில் தோல்வி கண்டுவிட்டதாக ஐ.நா.வின் இறுதி அறிக்கை கூறுவதாக இன்ரசிற்றி பிரஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
இலங்கைத்தீவிலும், ருவண்டாவிலும் மட்டுமல்ல, உலகு பூராகவும் குறிப்பாக, ஆபிரிக்க லத்தின் அமெரிக்க மற்றும் கிழக்கைரோப்பிய யுத்த களங்களில் தப்பிச்செல்ல வழியற்றிருந்த ஜனங்களைப் பாதுகாப்பதில் ஐ.நா.வானது போதியளவு வினைத்திறனுடன் செயற்படவில்லை அல்லது செயலற்ற பார்வையாளராக இருந்தது அல்லது அது அதன் செயற்பாடுகளில் தோல்வியடைந்துவிட்டது என்பது பரவலான ஒரு குற்றச்சாட்டாக உள்ளது.
ஓர் உலகப் பொதுமன்றமானது சிறிய, சுற்றிவளைக்கப்பட்ட, தப்பிச் செல்ல வழியற்றிருந்த மக்களைப் பாதுகாக்கத் தவறியது தொடர்பில் இந்த இடத்தில் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கின்றது.
01) மெய்யாகவே ஐ.நா. மேற்படி யுத்த களங்களில் தோல்வியுற்றதா?
02) அல்லது சில யுத்த களங்களில் ஏதாவது அரசியற் தீர்மானங்களுக்கு அமைவாக உள்நோக்கத்துடன் தலையிடாதுவிட்டதா? அதாவது, ஒரு தரப்பைக் கைகழுவிவிட்டதா?
இக்கேள்விகளுக்கான பதிலாகவே இன்று இக்கட்டுரை அமைகிறது.
ஓர் உலகப் பொதுமன்றம் எனப்படுவது அது கவர்ச்சியாகப் பிரகடனம் செய்வதுபோல தர்மத்தின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படுவதில்லை. மாறாக, அந்தந்த கால கட்டத்தின் வலுச்சமநிலை எதுவோ அதன் மீதே கட்டியெழுப்பப்படுகின்றது. அதாவது, ஓர் உலகப் பொதுமன்றம் எனப்படுவது அந்தந்தக் கால கட்டத்தின் வலுச் சமநிலையைப் பிரதிபலிக்கின்றது.
முதலாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் லீக் ஒவ் நேஷன்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஓர் உலக மகா யுத்தத்தில் பெற்ற பாடங்களின் விளைவாக உருவாக்கப்பட்டதால் அது உன்னதமான கொள்கைப் பிரகடனங்களை முன்வைத்தது. ஆனால் யதார்த்தத்தில் அது ஒரு ஸ்திரமற்ற வலுச் சமநிலையின் மீதே கட்டியெழுப்பப்பட்டது. முதலாம் உலகப் போரை ஊக்குவித்த காரணிகள் அவற்றின் வேகம் தீர்வதற்கு முன்னரே சில நாடுகளைத் தோற்கடித்ததின் மூலம் முதலாம் உலகப் போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதாவது, போருக்குக் காரணமாயிருந்த சக்திகளின் வேகந்தீர முன்பே போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, அது ஒரு ஸ்திரமற்ற தற்காலிக வலுச்சமநிலையாகக் காணப்பட்டது. அதோடு அதில் அமெரிக்கா இணைக்கப்பட்டிருக்கவில்லை. ரஷ்யா பிந்தியே இணைக்கப்பட்டது. அதாவது, அப்போதிருந்த வலுச்சமநிலையை முழுமையாகப் பிரதிபலிக்கும் விதத்தில் உரிய தரப்புகள் யாவும் அதில் பங்காளிகள் ஆக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, லீக் ஓவ் நேஷன்ஸ் பலவீனமானதாகவே காணப்பட்டது. ஸ்திரமற்ற வலுச் சமநிலை குலைந்தபோது இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது. லீக் ஒவ் நேஷன்ஸ் தோல்வியுற்றுச் செயலிழந்தது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் இரு துருவ உலகம் தோன்றியது. முதலாளித்துவத்திற்கும் கொம்மியூனிஸத்திற்கும் இடையில் பூமி ஏறக்குறைய இரண்டாகப் பங்கிடப்பட்டது. அணுக்குண்டைப் பற்றிய அச்சமே உலக சமாதானம் என்றாகியது. இரு துருவ இழுவிசைகளுக்கிடையிலான புதிய வலுச்சமநிலையின் மீது ஐ. நா. மன்றம் கட்டியெழுப்பப்பட்டது. ஐ.நா. மன்றம் பிறக்கும் போதே கெடுபிடிப் போருடன் ஓட்டிப் பிறந்தது. பனிப் போர் எனப்படுவது ஒரு மேற்கத்தைய நோக்கு நிலையின் பாற்பட்ட சொற் பிரயோகம்தான். அது அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வேண்டுமானால் பனிப்போராக இருக்கலாம். ஆனால், ஆசிய, அபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்த வரை அது ஒரு நிஜப் போர்தான். ஈழத் தமிழர்களுக்கும் அது நிஜப் போர்தான். ஈழப் போர் எனப்படுவதே ஒரு விதத்தில் இரு துருவ உலக ஒழுங்கின் குழந்தைதான்.
இரு துருவ உலகம் எனப்படுவது ஆயுதப் போட்டிக் களம் மட்டும் அல்ல. அது ஒரு கோட்பாட்டு போட்டிக் களமும்கூட. லிபரல் ஜனநாயகமா, கொம்யூனிசமா எது சிறந்தது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அப்பொழுது இருந்தது. இப்போட்டி காரணமாக லிபரல் ஜனநாயகமானது ஒப்பீட்டளவில் தன்னை செழிப்பானதாகக் காட்ட முற்பட்ட ஒரு கால கட்டம் அது என்பதை அண்மையில் ஒரு பேட்டியில் தாரிக் அலி சுட்டிக் காட்டியிருந்தார். கெடுபிடிப் போர்க் காலத்தில் BBC, CNN போன்ற ஊடகங்களில் நிகழ்ந்த செழிப்பான விவாதங்கள் இப்பொழுது இல்லை என்பதையும் தாரிக் அலி சுட்டிக்காட்டியிருந்தார்.
கெடுபிடிப் போர் காலகட்டத்தில் போராடும் இனங்களுக்கும் பலவீனமான சிறிய மக்கள் கூட்டங்களிற்கும் துருவ இழுவிசைகளுக்கிடையில் சுழித்துக்கொண்டோடக்கூடிய ஏதோ ஒரு இடைவெளி இருந்தது. ஆனாலது, இப்பொழுது இல்லை. லிபரல் ஜனநாயகத்திற்கும் தன்னை யாருக்கும் எண்பித்துக் காட்டவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏதும் இப்பொழுது இல்லை. இரு துருவ உலக ஒழுங்கின் கீழ் ஐ.நா. மன்றம் ஓரளவுக்காயினும் எல்லாத் தரப்புகளையும் பிரதிபலிக்குமொரு பொது மேடையாகக் காணப்பட்டது. ஆனால், ஒரு துருவ உலக ஒழுங்கின் எழுச்சியோடு அது அப்புதிய உலக ஒழுங்கிற்கு எதிரான தரப்புகளைப் போதியளவுக்குப் பிரதிபலிக்காத ஒரு மன்றமாக மாறியிருக்கிறது. ஐ.நா.வின் தோல்விகள் பற்றிய ஒரு பகுதி விமர்சனங்கள் இங்கிருந்தே தோன்றுகின்றன.
உண்மையில் கெடுபிடிப் போரின் முடிவோடு ஐ.நா.வும் காலாவதியாகியிருக்க வேண்டும். ஆனால் சோவித் யூனியனின் வீழ்ச்சியையடுத்து அமெரிக்காவானது உலகின் ஏகப் பெருவல்லரசாக எழுச்சி பெற்றபோது அதாவது ஒரு துருவ உலக ஒழுங்கு மேலெழுந்தபோது ஐ.நா.வானது ஏகப் பெருவல்லரசின் சேவகனாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது புதிய வலுச்சமநிலைக்கு ஏற்ப ஐ.நா. தன்னை தகவமைத்துக் கொண்டது. அதனால்தான் கெடுபிடிப் போர் முடிந்து கிட்டத்தட்டஇரண்டு தசாப்தங்கள் ஆன பின்னரும் அதன் தோல்விகளோடும் சறுக்கல்களோடும் ஐ.நா. தொடர்ந்தும் நிலைத்திருக்கிறது. வலுச்சமநிலைக்கூடாகச் சிந்தித்தால் எந்த வலுச்சமநிலையின் மீது ஐ.நா.கட்டியெழுப்பப்ட்டதோ அந்த வலுச்சமநிலையானது 1980களின் பிற்கூறில் குலைந்துவிட்டது. எனவே, புதிய வலுச்சமநிலைக்குரிய ஒரு புதிய ஏற்பாட்டைப் பற்றி அதாவது ஒரு புதிய உலகப் பொதுமன்றத்தைப் பற்றிச் சிந்திக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ருவண்டாவிலோ அல்லது சிறிலங்காவிலோ அல்லது டார்பூஃரிலோ அல்லது உலகின் வேறெந்த முலையிலுமோ உதிரியாக தெட்டந்; தெட்டமாக நிகழக்கூடிய பேரழிவுகளை வைத்து அப்படியொரு முடிவுக்கு உலக சமூகம் எளிதில் வந்துவிடாது. மேற்படி யுத்த களங்களில் ஐ.நா. தோல்வியுற்றுவிட்டது என்று கூறப்படும். அதற்கான சீர்திருத்தங்கள் பற்றியும் பரிந்துரைக்கப்படும். அதற்குமப்பால் முழுமாற்றம் தேவை என்று இந்த உலகம் உணர்வதென்றால் இரண்டு உலகப் போர்களைப் போன்ற உலகளாவிய பேரழிவுகள் ஏற்பட வேண்டும்.
இலங்கை விவகாரத்திலும் அப்படித்தான் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பரிந்துரைகளை எடுத்துப் பார்த்தால் அவற்றில் அதுவும் புதியதல்ல என்பது தெரியவரும். அவை அனைத்தும் ஏற்கனவே, ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டவைதான் என்பதும் வன்னி கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் அவை அமுல்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவரும்.எனவே ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. உரிய விதத்தில், உரிய நேரத்தில் உரிய வேகத்தில் தலையிட முடியவில்லையா அல்லது தலையிட விரும்பவில்லையா? என்ற கேள்வியே இங்கு முக்கியமானது.
வாகரை அனுபவத்திலிருந்து வன்னி கிழக்கில் என்ன நடக்கக்கூடும் என்பதை முன் அனுமானிக்கத் தேவையான பட்டறிவும், நிபுணத்துவ அறிவும் ஐ.நா.விடம் போதியளவு இருந்தன. மட்டக்களப்புப் போர் அரங்கின் இறுதிக் கட்டத்தில் வாகரையில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு மனிதப் பேரவலம் வன்னி கிழக்கிலும் ஏற்படக்கூடும் என்ற முன் அனுமானமும் அச்சமும் கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த சில ஐ.நா. உத்தியோகத்தர்கள் மத்தியில் காணப்பட்டது. மட்டக்களப்பு வாகரையைப் போலன்றி வன்னி வாகரையானது கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பயங்கரமானதாக இருக்கும் என்பதும் ஏற்கனவே, ஊகிக்கப்பட்டதொன்றுதான்.
வன்னி; கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் எதுவுமே எதிர்பாராமல் நடக்கவில்லை. லியன் யூரிஸ் தன்னுடைய எக்ஸோடஸ் நாவலில் கூறுவதுபோல ‘அதிசயங்கள் அற்புதங்கள் நிகழக்கூடிய காலமெல்லாம் தீர்ந்துபோய் விட்டிருந்த” ஒரு மரணப் பொறி அது. மாத்தளன் துறைமுகத்துக்கூடாக வன்னி கிழக்கிற்கு விஜயம் செய்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தென்னாசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான அதிகாரி, தான் கண்டவை கேட்டவற்றின் அடிப்படையில் அது தன் பதவிக் காலத்திலேயே முன்னெப்பொழுதும் பார்;;த்திராத மிகமோசமானதொரு நரகம் என்று வர்ணித்திருந்தார். ஐ.நா.வின் உள்ளுர் உத்தியோகத்தர் ஒருவர் வன்னி கிழக்கிலிருந்த பாதுகாப்பு வலையத்தை ஆசியாவின் மிகப் பெரிய மரணச்சேரி அல்லது தறப்பாள் சேரி என்று வர்ணித்ததோடு சாலைத் துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலுமான கடற்கரையை உலகின் மிக நீண்ட கழிப்பறை என்றும் வர்ணித்திருந்தார். அந்நாட்களில் வன்னி கிழக்கில் மிகச் சிறிய அளவு கழிப்பறைகளே இருந்தன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
போரின் இறுதி மாதங்களில் செய்மதிப் படங்களிற்கூடாகவும் மேலதிக சிகிச்சைக்காக வரும் காயக்கார்களிற்கூடாகவும் வன்னிக்குச் சென்று வந்த ஐ.சி.ஆர்.சி. மற்றும் ஐ.நா.அதிகாரிகள் வழங்கியிருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையிலும் வரப்போவதை முக்கூட்டியே அனுமானிக்கத் தேவையான போதிய பட்டறிவும் நிபுணத்துவ அறிவும் ஐ.நா. மன்றத்திற்கிருந்தன. எனவே, ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. தலையிடாதிருந்தமை அல்லது பார்வையாளராக இருந்தமை என்பது முழுக்க முழுக்க ஓர் அரசியற் தீர்மானம்தான்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒத்துழைத்திருந்தால் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தை வேறுவிதமாகத் திட்டமிட்டிருந்திருக்க முடியும் என்ற தொனிப்பட சொல்ஹெய்ம் ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார். அதேசமயம் ருவண்டாவைப் போலவே சிறிலங்காவிலும் ஐ.நா. தோல்வியுற்றுவிட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஓர் அரசற்ற தரப்பாகிய புலிகள் இயக்கத்தைக் கையாள்வதை விடவும் அரசத் தரப்பைக் கையாள்வது ஐ. நா. போன்ற உலகப் பொதுமன்றத்திற்கு இலகுவானது என்ற விளக்கத்தின் அடிப்படையில் வைத்தே போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. ஏன் அப்படி நடந்து கொண்டது என்ற கேள்வியைக் கேட்கவேண்டும். ஓர் உலகப் பொதுமன்றம் தனது சாசனத்திற் கூறப்பட்டவற்றையே அமுல்படுத்த முடியாமற் போனமை என்பது வெறுமனே செயலின்மையின் பாற்பட்ட ஒன்றாக இருக்க முடியாது. அதைவிட கூடுதலாக அந்தச் சாசனங்களை மேவிச் செல்லக்கூடிய ஏதோ ஒரு அரசியற் தீர்மானம் அங்கே இருந்திருக்க வேண்டும். இத்தகைய பொருள்படக் கூறின், அது ஏறக்குறைய பெயரிடப்படாத உத்தியோகப்பற்றற்ற ஒரு கூட்டு நடவடிக்கைதான். இப்படியாக அநேகமாக எல்லா நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் பங்களித்துவிட்டு இப்பொழுது அதை அந்த நாடுகளின் அரசியலைப் பிரதிபலிக்குமொரு உலகப் பொதுமன்றத்தின் தோல்வியாக காட்ட முற்படுவதைத் தமிழர்கள் எப்படி விளங்கிக்கொள்வது?
ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் இணைத் தலைமை நாடுகளின் மேற்பார்வையிலான சமாதான வியூகத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடித்தபோது அந்த இயக்கத்தைத் தோற்கடிப்பது என்று இணைத் தலைமை நாடுகள் முடிவெடுத்தன. அதாவது சமாதானத்தின் மூலம் அந்த அமைப்பை வழிக்குக் கொண்டுவர முடியாத ஒரு நிலையில் யுத்தத்தின் மூலம் அதைச் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. இதில் சில நாடுகள் நேரடியாகப் பங்களித்தன. சில நாடுகள் மறைமுகமாகப் பங்களித்தன. சில நாடுகள் உரிய நேரத்தில் தலையிடாது விலகி நின்றதன் மூலம் பங்களித்தன.
மே 18 இற்கு முன்பு வரை வன்னி கிழக்கில் நடந்தவையெல்லாம் தவிர்க்கப்படவியலாத கொலாற்றரல் டமேச் (Collateral Damage) – பக்கச் சேதங்களாகத்தான் பார்க்கப்பட்டன. மோதல்கள் முடிவுக்கு வந்த பின் இலங்கை அரசாங்கம் ஒரு துருவ உலக ஒழுங்கிற்கு உவப்பானதொரு வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் கொலாற்றரல் டமேச் ஆனது மனித உரிமை மீறலாக அல்லது போர்க் குற்றமாக மாறியிருக்காது.
ஆனால், இலங்கை அரசாங்கமானது ஒரு துருவ உலக ஒழுங்கிற்குச் சவாலாக எழுந்துவரும் ஒரு பிராந்திய துருவ இழுவிசையின் பக்கம் சாய முற்பட்டபோதே கொலாற்றரல் டமேச் ஆனது மனிதாபிமானப் பிரச்சினையாகவும் போர்க் குற்றச்சாட்டாகவும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான கோரிக்கையாகவும் மாறியது.
எனவே, இந்த இடத்தில் தமிழர்கள் ஒன்றை விளங்கி வைத்திருப்பது நல்லது. அதாவது, பக்கச்சேதம் போர்க்குற்றம் ஆவதும் போர்க் குற்றம் பக்கச் சேதம் ஆவதும் நீதியின் பாற்பட்ட விவகாரங்கள் அல்ல. அவை நிச்சயமாக வெளியுறவுக் கொள்கையின் பாற்பட்ட தீர்மானங்கள்தான். அதாவது அரசியற் தீரமானங்கள்தான்.
18-10-2013