தேரும் தேசியமும்

தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பபை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்சிப் பிரதேசத்தில்தான் இப்புதிய சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது. பல மாதங்களிற்கு முன்பு அச்சுவேலியிலும் இது போன்ற ஒரு பிரச்சினை எழுந்தது. அப்பொழுது படைத்தரப்பு தேரை இழுக்க முன்வந்தது. அதுவும் கடும் வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பியது.

கனரக வாகனத்தால் தேரை இழுத்த சம்பவமானது தற்செயலானது அல்ல. அதற்கென்று சமூகப் பொருனாதாரக் காணிகள் உண்டு. தமிழ்க் கிராமங்களில் தேர் இழுக்கவும் ஏனைய சுவாமியைக் காவும் வாகனங்களைக் தூக்கவும் ஆண்கள் இல்லாத ஒரு நிலமை இப்பொழுது உருவாகிவிட்டது. இது போரினதும் புலம் பெயர்வினதும் தொழிநுட்பப் பெருக்கத்தினதும் விளைவுதான்.

ஊர்களில் ஆண்கள் குறைவாக உள்ள ஒரு சமூகமாக ஈழத்தமிழர்கள் மாறிவருகிறார்களா? இப்பிரச்சினை காரணமாக ஊர்கள் தோறும் சகடை எனப்படும் உருட்டிச் செல்லக்கூடிய காவு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பல ஊர்களில் இச் சகடைதான் சுவாமி காவும் வாகனங்களைக் காவி வருகிறது. இப்பொழுது சகடையின் இடத்தை பக்கோ வாகனம் பிரதியீடு செய்திருக்கிறது.

ஆனால் இங்குள்ள விவகாரம் என்னவென்றால் வரணியில் குறிப்பிட்ட தேரை இழுப்பதற்கு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தயாராக இருந்தன என்பதுதான். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான் பக்கோ பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது பக்கோ, களத்திலிறக்கப்படக் காரணம் சாதி முரண்பாடுகள் தான்.

ஈழத்தமிழர்கள் தாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்பொழுதும் கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் ஒரு பின்னணியில் அச்சமூகத்திற்குள்ளேயே இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் இது தற்செயலானதோ அல்லது ஓர் உதிரிச் சம்பவமோ அல்ல. தமிழ்க் கிராமங்களில் இப்பொழுதும் சாதிப் பிரிவுகள் பேணப்படுகின்றன என்பதே உண்மை. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஈழப்போரும், இனப்படுகொலையும் சாதியை சமூகத்திலிருந்து முற்றாக அகற்றியிருக்கவில்லை என்பதும் உண்மைதான்.

தமிழ்க் கிராமங்களில் உள்ள பல சிறு தெய்வக் கோயில்கள் அதிகபட்சம் சாதிமையக் கோவில்கள் தான். சிறு தெய்வ வழிபாடு எனப்படுவதே அதிகபட்சம் சாதிமைய வழிபாடுதான். அது மட்டுமல்ல ஓரளவுக்கு பெரிய கோயில்களிலும் சாதியின் செல்வாக்கு உண்டு. வரணியில் தேரை பக்கோ இழுக்கப் போய் விவகாரம் சந்திக்கு வந்துவிட்டது. ஆனால் சந்திக்கு வராத சங்கதிகள் பல உண்டு. கிராமக் கோயில்களில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாதியின் ஆதிக்கம் உண்டு.

இது இந்து மதத்துக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கும் பொருந்தும். திருச்சபைக்குள் சாதி முழுமையாக நீக்கப்பட்டு விட்டது என்று கூறமுடியாது. சில பிரபல பாடசாலைகளில் முதல்வர் தெரிவின் போது குறித்த சாதி, குறித்த கிறிஸ்தவ மதப் பிரிவு என்பன மறைமுகமாக கவனத்திற் கொள்ளப்படுகின்றன. சில பெருந்திருச்சபைகளில் ஆயர்கள் தெரிவிலும் இது உணடு. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைகள் பல ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளுக்குள்தான் வேலை செய்கின்றன.

எனவே சாதியின் செல்வாக்கு எல்லா மதப்பிரிவுகளுக்குள்ளும் உண்டு. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டமோ அல்லது இனப் படுகொலையோ அல்லது கட்டமைப்புசார் இனப்படுகொலையோ சாதியின் வேர்களை முற்றாக அறுத்தெறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அதாவது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கம் இன்னமும் விரிவடைய வேண்டியிருக்கிறது.

இதை இப்படி எழுதும் போது ஒரு விமர்சனம் எழும். விடுதலைப் போராட்டத்தின் பிரதான முரண்பாட்டை மறைப்பதற்காக அக முரண்பாடுகளை அதாவது உப முரண்பாடுகளை உருப்பெருக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை இக்கட்டுரை ஆதரிக்கிறதா என்பதே அது.
நிச்சயமாக இல்லை. ஒரு தேசிய விடுதலைப் பேராட்டத்தின் உள் முரண்பாடுகளை பெரிதாக்கி எழுதுவதன் மூலம் அப்போராட்டத்தை தோற்கடிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை இக்கட்டுரை எதிர்க்கிறது. மாறாக தமிழ் சமூகத்துள் காணப்படும் உப முரண்பாடுகளை இங்கு சுட்டிக்காட்டுவது தமிழ் தேசிய நோக்கு நிலையில் இருந்து தான். அதாவது தமிழ் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு நோக்கு நிலையில் இருந்தே இங்கு சாதி பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது.

தேசிய விடுதலைப் போராட்டம் எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியது தான். ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு சமூகத்தின் கூட்டுப்பிரக்ஞை ஆகும். ஒரு மக்கள் கூட்டத்தை திரட்டிக் கட்டும் எல்லாமும் தேசியத் தன்மை மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில் ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்கள் மட்டும் கூட்டாக்கித் திரட்டுவதில்லை. பிற்போக்கான அம்சங்களும் ஒரு மக்கள் கூட்டத்தை திரட்ட முடியும்.

உதாரணமாக சாதி, சமயம், பிரதேசம், ஊர்வாதம் போன்றவற்றின் அடிப்படையிலும் ஒரு சமூகத்தைத் திரட்ட முடியும். அது முற்போக்கான ஒரு கூட்டுணர்வு அல்ல. பிற்போக்கானது. சாதிவெறி, சமய வெறி, பிரதேச வெறி, ஊர் வெறி போன்றவற்றின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்தை திரட்டும் போது அங்கே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற நிலை இருக்காது. ஆனால் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கூட்டாகத் திரட்டுவதே தேசியம் எனப்படுவது. அப்படி ஒருவர் மற்றவருக்குச் சமம் என்பது ஜனநாயக அடித்தளத்தின் மீதே சாத்தியம.; என்பதால்தான் தேசியத்தின் உள்ளடக்கமாக ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று மேற்கத்தேய அறிஞர்கள் கூறுவதுண்டு.

எனவே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற கண்டிப்பான ஒரு அடிப்படையில் மக்களைத் திரளாக்காத எதுவும் தேசியத்திற்கு எதிரானது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒரு மதவெறியர் தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு ஆணாதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு பிரதேசவாதி அல்லது ஊர்வாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது.

தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கிய ஒன்றுதான். சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலை எனப்படுவது முற்போக்கானது அல்ல. எனவே தமிழ் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை பலப்படுத்தும் ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான் இக்கட்டுரை எழுதப் படுகிறது. அந்த ஜனநாயக இதயம் நலிவுற்ற காரணத்தால்தான் பக்கோவை வைத்து தேர் இழுக்க வேண்டி வந்தது. படையினைர் தலையிட்டு தேரை இழுக்கும் ஒரு நிலை வந்தது. அதோடு சிவ சேனை எனப்படும் ஒரு அமைப்பு மதவாத தேசியத்தை முன்னெடுக்கும் ஒரு வெற்றிடமும் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல, வடமாகாண ஆளுநர் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதி முரண்பாடுகள் பற்றி பிரஸ்தாபிக்கும் ஒரு நிலைக்கும் இதுவே காரணம். நியமனங்களில் ஆளுநர் சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கையாள முற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதோடு வலிகாமத்தில் மயானத்தை அகற்றக் கோரிப் போராடும் மக்கள் மத்தியிலும் ஆளுநர் காணப்பட்டிருக்கிறார். அப்பிரச்சனையில் அவர் அதிகரித்த ஈடுபாடும் காட்டியிருக்கிறார். இது விடயத்தில் தமிழ் தேசியத் தரப்புக்கள் விட்ட வெற்றிடத்தைத்தான் ஆளுநர் கையாண்டிருக்கிறார்.

அப்படித்தான் புதிய யாப்புக்கான கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்கவும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதி அசமத்துவங்கள் பற்றி பிரஸ்தாபித்திருந்தார். தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு முன்மொழிவை அவரிடம் கையளிக்கச் சென்றவர்களிடம் அவர் அது பற்றிக் கூறியதாக ஒரு தகவல் உண்டு. உங்களுக்குள் சாதி ஏற்றத் தாழ்வுகள் உண்டு. முதலில் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு உரிய உரிமைகளை நீங்கள் வழங்க முன்வர வேண்டும் என்ற தொனிப்பட லால் விஜேநாயக்க கதைத்ததாக ஒரு தகவல் உண்டு.

இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். வட மாகாண ஆளுநர் குரேயும், லால் விஜயநாயக்கவும் இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றிக் கதைக்கவில்லை. ஆனால் அதை அவர்கள் எந்த நோக்கு நிலையில் இருந்து எந்தளவுக்கு அதை உருப்பெருக்கிக் கதைக்கிறார்கள் என்பதே இங்கு விவகாரமாகும்.

எனவே இல்லாத ஒன்றைப் பற்றி இங்கு யாரும் உரையாடவில்லை. மாறாக அதை எந்த நோக்கு நிலையில் இருந்து உரையாடுகிறார்கள் என்பதே இங்கு முக்கியமானது. பிரதான முரண்பாட்டை பின்தள்ளி உப முரண்பாட்டை தூக்கிப்பிடிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் இதயத்தை பலவீப்படுத்தும் ஒரு நோக்க நிலையில் இருந்தா? அல்லது தமிழ் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை மேலும் செழிப்பாக்கும் நோக்கு நிலையில் இருந்தா என்பதே இங்கு முக்கியமானது. வெளிச்சக்திகள் உப முரண்பாட்டை கையாளத்தக்க இடைவெளிகளை தமிழ்த் தேசிய சக்திகள் விடக் கூடாது என்பதே முக்கியமானதாகும். ஏனெனில் சமூக விடுதலையில்லாத தேசிய விடுதலை எனப்படுவது முழுமையற்றதும் பிற்போக்கானதுமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *