எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்


1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் வேலை செய்தார்கள். ஆயிரக் கணக்கான பொது மக்களுக்கு புலிகள் இயக்கம் வேலை வழங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த படியாக மிகப்பெரிய வேலை வழங்குனராக அந்த அரை அரசு காணப்பட்டது.

ஆனால் 2009 மே மாதம் புலிகள் இயக்கம் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் அந்த இயக்கத்தின் கட்டமைப்புகளில் வேலை பார்த்தவர்களுக்கு தொழில் இல்லாமல் போய்விட்டது. ஒரு புறம் முன்பு புலிகளின் கட்டமைப்புக்களில் வேலை பார்த்த காரணத்தால் வரக்கூடிய ஆபத்துக்கள். இன்னொரு புறம் போரில் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த நிலையில் மீள் குடியமர்ந்த போது வருமானத்திற்கு வழியற்ற நிலை. எனவே வன்னிப் பொதுச்சனங்களில் ஒரு பகுதியினருக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால் வன்னியில் அதற்குரிய கொள்ளளவோடு நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இருக்கவில்லை. பெருமளவிற்கு விவசாய மையப் பொருளாதாரத்தையும் கடல்சார் உற்பத்தி பொருளாதாரத்தையும் கொண்டிருந்த பெருநிலமானது போரில் தனது மனித வளங்களையும் இயற்கை வளங்களையும இழந்து விட்டது. அது மட்டுமல்ல பல தலைமுறைகளாகத் தேடிய தேட்டமனைத்தையும் இழந்து விட்டது. இந்நிலையில் மீளக் குடியமர்ந்த மக்கள் மத்தியில் வருமானத்திற்கு வழியற்ற நிலையில் படைத்தரப்பு புதிய வேலை வழங்குனராக எழுச்சி பெற்றது. அரசாங்கத்தின் ஊக்குவிப்புடன் தென்னிலங்கை மைய முதலீட்டாளர்கள் சில தொழிற்சாலைகளை குறிப்பாக ஆடைத்தொழிற்சாலைகளை உருவாக்கிய போதிலும் படைத்தரப்பே ஒப்பீட்டளவில் பரவலாகத் தொழில் வழங்குனராக மாறியது.

புலிகள் இயக்கத்தின் சொத்துக்களாக காணப்பட்ட பல வளங்களையும், நிலங்களையும் படைத்தரப்புக் கைப்பற்றி தன்வசப்படுத்தியது. அதே சமயம் முன்பு புலிகளின் கட்டமைப்புக்களில் வேலை செய்தவர்களும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் படைத்தரப்புடன் வேலை செய்வதன் மூலம் தங்களுக்குரிய பாதுகாப்பையும் பெற்றுக் கொண்டார்கள். அதாவது படைத்தரப்புடன் வேலை செய்யும் போது அவர்களுடைய இறந்த காலம் தொடர்பாக வரக்கூடிய ஆபத்துக்களை ஓரளவுக்கு தவிர்க்க முடியும் என்று நம்பியவர்கள் படைத்தரப்புடன் நெருங்கி வேலை செய்தார்கள்.

படைத்தரப்பிற்கும் அப்படியொரு தேவை இருந்தது. புலிகள் இயக்கத்தின் சொத்துக்களை பராமரிக்கவும் அங்கு வேலைகளைச் செய்வதற்கும் சிவிலியன்கள் தேவைப்பட்டார்கள். எனவே சிவிலியன்களை அவர்கள் வேலைக்கு அமர்த்தினார்கள். இதன் மூலம் சிவிலியன்களுடனான உறவை பலப்படுத்தி அதற்கூடாகத் தமக்குரிய புலனாய்வுக் கட்டமைப்பையும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு புறம் தமிழ்ச் சிவிலியன்களை நிதி ரீதியாகத் தம்மில் தங்கியிருக்கச் செய்யலாம். இன்னொரு புறம் தமது புலனாய்வுக் கட்டமைப்பையும் பலமாகப் பேணலாம். இப்படியொரு இராணுவ அரசியற், புலனாய்வு நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டமைப்புக்களாகும்.

வன்னிப்பெருநிலத்தில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கேணல் ரத்ணபிரிய கட்டளைத்தளபதியாக இருந்தார். முகநூலில் சில முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி கேணல் ரத்ணபிரியவின் கீழ் சுமாராக 3500 பேர் வரை வேலை செய்கிறார்கள்.வழமையாக ஒரு படை அதிகாரிக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றம் வரும். எனினும் கேணல் ரட்ணபிரியவிற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இம்முறையும் அவருடைய இடமாற்றத்தை நிறுத்தக் கோரி வன்னியிலிருந்து பொது மக்களும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளும் கொழும்பிற்குச் சென்றதாக ஒரு தகவல் உண்டு.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உயர் அதிகாரியான சாகர என்பவர் கடந்த மாதம் மாற்றலாகிச் சென்றார். அந்த இட மாற்றத்தை எதிர்த்து திணைக்களத்தில் வேலை செய்யும் பொதுசனங்களும் முன்னாள் இயக்கத்தவர்களும் ஆர்பாட்டம் செய்தார்கள். அதில் ஒரு முன்னாள் இயக்கத்தவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.

மேற்படி சம்பவத்திற்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேணல் ரத்ணபிரியவிற்கு வழங்கப்பட்ட பிரியாவிடை ஒரு விடயத்தைத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. அதாவது படைத்தரப்பிற்கும் சிவிலியன்களுக்கும் இடையிலான உறவை விருத்திசெய்யும் ஒரு நிகழ்சசி நிரல் எந்தளவுக்கு வெற்றிபெற்று வருகிறது என்பதே அது.

இது நடந்த அடுத்த நாள் வடமராட்சி கிழக்கில் போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்கச் சென்ற மாவை சேனாதிராசாவை மக்கள் அவமதித்து வெளியே அனுப்பியிருக்கிறார்கள். ஒரு புறம் மக்கள் பிரதிநிதியை போராடிக் கொண்டிருக்கும் மக்கள் அவமதித்திருக்கிறார்கள். இன்னொரு புறம் ஒரு படை அதிகாரியை தமது தோள்களில் வைத்து சுமந்ததோடு அவருடைய காலில் விழுந்தும் கட்டித் தழுவியும் கண்ணீர் மல்கி பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு படை அதிகாரி ஒரு கொடை வள்ளலாகவும் ஒரு பெரிய கனவானாகவும் மதிக்கப்படக் காரணம் என்ன? அவர் தன்னுடைய சொந்தக் காசிலா தமிழ் மக்களுக்கு நல்லவற்றைச் செய்தார்? அவருடைய தனிப்பட்ட நற்குணத்தாலா தமிழ் மக்களுடைய இதயங்களை வென்றெடுத்தார்?

நிச்சயமாக இல்லை. ரத்ணபிரிய ஒரு அரச ஊழியர். அவர் தன்னுடைய சொந்தக் காசில் தானம் செய்யவில்லை.அது பாதுகாப்பு அமைசிற்குரிய நிதி ஒதுக்கீட்டின்படி ராணுவத்திற்கு ஒதுக்கபட்ட நிதி. அது பாதுகாப்பு அமைச்சின் தேவைகளுக்கமைய செலவளிக்கப்பட்டுள்ளது. ஆதாவது ரட்னபிரிய பாதுகாப்பு அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தையே முன்னெடுக்கிறார். அது ஒரு ராணுவ அரசியல் வேலைத்திட்டம். அது ஒரு இராணுவ அரசியல் உத்தி.

மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மீளக் குடியமர்தல் எனப்படுவது சொந்தக் கிராமத்திற்கு திரும்பிச் செல்வது மட்டுமல்ல. அங்கே வருமான வழிகளை உருவாக்கிக் கொடுப்பதும்தான். மீளக் குடியமர்ந்த மக்களை நிவாரணத்தில் தங்கி இருக்கச் செய்ததல்ல. மாறாக உழைப்பதற்கு உரிய வாய்ப்புக்களையும் வழங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது தான். அதிலும் குறிப்பாக தொடர்ச்சியான இடப் பொயர்வுகளால் தமது தேடிய தேட்டமனைத்தையும் இழந்து வெறுங்கையோடு நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த மக்கள் அவர்கள். தமது சொந்தக் கிராமத்திற்கு திரும்பி வந்த போது அங்கே பயன்தரு மரங்களும் உட்பட கால் நடைகள், வளர்ப்புப் பிராணிகள் எவையும் இருக்கவில்லை.

உதாரணமாக ஒரு வீட்டிலும் கோழி இருக்கவில்லை. கால்நடைகள் கட்டாக் காலிகள் ஆகிவிட்டன. அல்லது படைகளின் பண்ணைகளில் இருந்தன் .இராணுவ நோக்க நிலையில் இருந்து போரிடும் இரு தரப்பாலும் போர் அரங்காக மாற்றப்பட்ட கிராமங்களை திரும்பவும் சிவில் கிராமங்களாக மாற்றி அமைப்பதற்கே பல ஆயிரம் ரூபாய்களை ஒவ்வொரு குடும்பமும் செலவழிக்க வேண்டியிருந்தது. பற்றை மண்டி காடு வளர்ந்து கிடந்த கிராமங்களை துப்பரவாக்கும் கூலியே பல்லாயிரமாக இருந்தது.

அதே சமயம் புலிகள் இயக்கத்தின் அரை அரசுக்குரிய எல்லாச் சொத்துக்களையும் படையினர் கைப்பற்றியிருந்தார்கள். இதில் பொது சனங்களுக்குரிய வளங்களும் அடங்கும். எனவே மீளக்குடியமர்ந்தவுடன் வளங்களின்றியும் சேமிப்பின்றியும் வருமான வழிகளின்றியும் தத்தளித்த மக்கள் முழுக்க முழுக்க நிவாரணத்தில் தங்கியிருந்தார்கள். சிறு தொகையினர் புலம் பெயர்ந்த தரப்பிலிருந்து வந்த காசில் தங்களை நிமிர்த்திக் கொண்டார்கள்.

இவ்வாறானதோர் அரசியல், இராணுவ, பொருளாதாரப் பின்னணிக்குள் பெருமளவு நிவாரணத்தில் தங்கியிருந்த மக்களில் ஒரு பகுதியினரையும் இலங்கைத் தீவில் அதிகம் பாதிக்கப்படத்தக்க ஒரு தரப்பாகக் காணப்படும் தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரையும் படைத்தரப்பு தன்னில் தங்கியிருப்பவர்களை மாற்றியிருக்கிறது.
குறிப்பாக மீளக் குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சு உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டிய வேலைவாய்ப்புக்களை படைத்தரப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஒரு சிவில் அமைச்சின் பொறுப்பு படைத்தரப்பிடம் வழங்கப்பட்டு அதற்குரிய நிதியும் பாதுகாப்பு பட்ஜெற்றுக்கூடாக வழங்கப்படுகிறது.

உலகிலேயே முன்பள்ளிகளை படைத்தரப்பு நிர்வகிக்கும் ஒரு கொடுமை வன்னியில் நடக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையால் அதைத் தடுக்க முடியவில்லை.படைத்தரப்பால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முப்பதினாயிரத்துகும் மேல் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதோடு தவணைக் கொடுப்பனவில் பிளசர் மோட்டார் சைக்கிளும் வழங்கப்படுகிறது. இந்தக் கொடுப்பனவு ஒரு சாதாரண முன்பள்ளி ஆசிரியர் கற்பனை செய்து பார்க்கவே முடியாத ஒரு தொகை. சாதாரண முன்பள்ளிகளில் மாதம் 6000 முதல் 10000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. அது அந்த ஆசிரியைகள் சேலை வாங்கவே போதாது. ஆனால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் வழங்கப்படுவது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

இத் திணைக்களத்தின் கீழ் உள்ள பண்ணைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முப்பதினாயிரம் ரூபாய் சம்பளத்துடன் ஒரு நூதனமான சலுகையும் வழங்கப்படுகிறது அதன் படி ஒரு ஊழியர் பண்ணைக்கு வெளியில் வேலை செய்வதாக அறிவித்து விட்டு வேறு வேலை செய்யலாம். ஆனால் தனது முப்பதினாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒன்பதினாயிரம் ரூபாயை திணைக்களத்திற்கு வழங்கினால் சரி. அவர் இரண்டு சம்பளங்களை அனுபவிக்கலாம்.இப்படியொரு சலுகையை அனுபவிப்பவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார்?

இவ்வளவு பெரிய சம்பளங்களையும் சலுகைகளையும் வழங்கத்தக்க நிதி ஒதுக்கீடு சிவில் பாதுகாப்புக் கட்டமைப்புக்குக் கிடைக்கிறது. இதில் மிகத் தெளிவாக ஒரு இராணுவ அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல் உண்டு. இந்த நிதியை வேறு அமைச்சுக்களுக்கு வழங்கி அதன் மூலம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்காமல் அதை படைத்தரப்புக் கூடாக செய்வதன் மூலம் படைத்தளபதிகளை கருணை வள்ளல்களாக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?
போர் குற்றம் புரிந்தமைக்காக விசாரிக்கப்பட வேண்டிய ஒரு படைத்தரப்பு என்று குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பை அக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சமூகத்தின் ஒரு பிரிவினராலேயே பல்லக்கில் வைத்து தூக்க வைத்தமையென்பது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டதுதான்.

இது மட்டுமல்ல அண்மையில் யாழ் கட்டளைப் பணியகம் பத்திரிகைகளில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி வடக்கிலுள்ள கட்புரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதேபோல புதிய வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்தோடு வடக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை படையினர் அமைக்கவிருப்பதாக ஒரு செய்தி இந்தக் கிழமை வந்திருக்கிறது.இது ராணுவத்தின் மனிதாபிமான வேலைத் திட்டம் என்றும் கூறபடுகிறது.

இவ்வாறாக தான தர்மங்கள் இலவச மருத்துவ முகாம்கள் போன்ற இன்னோரன்ன தொண்டு நடவடிக்கைகள் மூலம் படைத்தரப்பு தமிழ் மக்களின் இதயத்தை வென்றெடுக்கப் பார்க்கிறது. இதன் மூலம் போர்க் குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தலாம். அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கான கோரிக்கைகளையும் வலுவிழக்கச் செய்யலாம். தமிழ்ப் பகுதிகளில் படையினரின் பிரசன்னத்தைத் தமிழ் மக்களை வைத்தே நியாயப்படுத்தலாம்.


இது தொடர்பில் பொது மக்களையும் தடுப்பிலிருந்து வந்தவர்களையும் குறை கூறிப் பயனில்லை. அவர்களுடைய வறுமையும் பாதுகாப்பற்ற நிலமையும் அரசியல் மயப்படுத்தப்படாத வெற்றிடமும்தான் இதற்குக் காரணம்.

ஒரு விதத்தில் அரசியல்வாதிகளும் செயற்பாட்டியக்கங்களும் இதற்குப் பொறுப்புத்தான். இது தொடர்பில் பொருத்தமான வழிவரைபடம் தமிழ் தலைவர்களிடம் இல்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நீண்ட கால நோக்கிலானது. ஆனால் இனப்பிரச்சனையின் விளைவாக உருவாகியிருக்கம் பிரச்சனைகள் உடனடியானவை. இந்த உடனடிப் பிரச்சனைகளுக்குரிய தீர்வைக் கண்டுபிடிக்கத் தேவையான வழிவரைபடம் எதுவும் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை. அதற்குரிய நிதியை அரசாங்கம் தருவதில்லை என்ற கூற்றிலும் உண்மை உண்டு. எனினும் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய ஒரு தெளிவான வழிவரைபடத்தை தமிழ் தலைவர்கள் உருவாக்கத் தவறிவிட்டார்கள்.

தமிழ்த் தலைவர்களால் பாதுகாக்கப்படும் “நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சானது மீளக் குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்காமல் படையினரை “மீளக்குடியேற்றுவதற்கு” பெருமளவு காசை வழங்கிவருகிறது. அதாவது படைத்தரப்பு பிடித்து வைத்திருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அக்காணிகளில் படைத்தரப்பு கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டுமானங்களை அகற்றுவதற்காக பெருந்தொகை பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கி வருகிறது. அதே சமயம் தாம் பிடித்து வைத்திருக்கும் நிலத்திலும், கடலிலும், காட்டிலும் உள்ள வளங்களைச் சுரண்டி வரும் படையினர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வறுமையை பாதுகாப்பின்மையைப் பயன்படுத்தி வள்ளல்களாக மாறி வருகிறார்கள். அவர்களில் சிலர் ஏற்கெனவே எம்.ஜி.ஆர்களாக மாறி விட்டார்கள்.

தனக்குக் கீழ் வேலை செய்பவர்களோடும் ஊடகவியலாளர்களோடும் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகும் ரத்ணப்பிரிய ஒருமுறை ஊடகவியலாளர்களிற்குப் பின்வரும் தொனிப்படக் கூறியுள்ளார்….. “என்னிடம் தனிப்பட்ட பாதுகாப்பிற்கென்று ஒரு கைத்துப்பாக்கி கூட இல்லை.என்னுடைய அலுவலகத்திலும் ஒரு துப்பாக்கி இல்லை.ஆனால் என்னுடன் இருபத்தி நாலு மணி நேரமும் இருப்பவர்கள் முன்னாள் புலிகள்தான். யுத்தத்தில் நடந்த சரி பிழைகளை நான் ஆராய விரும்பவில்லை. ஆனால் யுத்தம் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். அதைத்தான் செய்து வருகிறேன்”. என்று. உண்மை தான். ஆயுதங்களால் செய்யப்பட்ட ஒரு யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் ஆயுதங்களின்றி ஒரு யுத்தம் வேறுவழிகளில் தொடர்கிறது. சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அதைத்தான் செய்கிறது. அது படை அதிகாரிகளை எம்ஜியார்களாக மாற்றியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *