வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்

ஒளிப்படங்கள்-மயூதரன்

கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான ஓர் இடம். யாழ்ப்பாணத்தில் பெருஞ்சாலைகளில் ஒன்றாகிய காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம். இந்த இடத்தில்தான் தைப்பொங்கல் தினத்தன்று தாக்குதல் நடந்தது.

இதற்கு முன் கடந்த புதுவருட தினத்தன்று கொக்குவில் காந்தி சனசமூக நிலையத்தில் வாளேந்திய இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளார்கள். தாங்கள் அங்கு வரப்போவதை முன்னறிவித்து விட்டு வந்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது. கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்து தாக்கியிருக்கிறார்கள்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்தது பண்டிகை நாட்களில் ஆகும். வழமையாக யாழ்ப்பாணத்தின் பெருஞ்சாலைகள் எல்லாவற்றிலும் பின் மாலைப்பொழுதிலிருந்து பொலிசார் ஆங்காங்கே நிற்பதுண்டு. வீதியில் வருவோர் போவோரை நிறுத்தி வாகன ஆவணங்களை சோதிப்பதுண்டு. உதாரணமாக பலாலி வீதியில் குறுகிய இடைவெளியில்
வெவ்வேறு இடங்களில் நின்று சோதிப்பார்கள். இவ்வாறு சோதிப்பது
வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிசார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பொலிசாரால் மறிக்கப்படும் ஒவ்வொரு முறையும் சாதாரண பயணிகள் தமது ஆவணங்களை எடுத்து காண்பிக்க வேண்டும். குறுகிய தூரத்திற்குள் சில சமயம் இரண்டு தடவைகள் நிறுத்தப்படக்கூடும். இச்சோதனைகளால் சலிப்படைந்த ஒர் ஊடகவியலாளர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெரிய சைசில் நிழற்பிரதி எடுத்து மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் ஒரு மட்டை போல கட்டி வைத்திருக்கும் ஒருவருடைய படத்தை எடுத்து முகநூலில் பகிர்ந்திருந்தார்.

இச்சோதனைக் கெடுபிடிகள் அண்மை மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் மறிக்கப்பட்டுள்ளார். அவர் போனது காரில். வாகனத்தை மறித்த பொலிசார் முதலில் ஆவணங்களைச் சோதித்துள்ளார்கள். ஆவணங்களில் பிழைகள் இருக்கவில்லை. வரி செலுத்திய ஆவணத்தை காரின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டியிருக்கவில்லையென்பதனை ஒரு குற்றமாகப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறார்கள். தவராசாவும் விடவில்லை. அப்படி வரி அட்டையை காரின் முன் கண்ணாடியில் ஒட்டுமாறு சட்டபூர்வமாக எங்கும் கூறப்படவில்லை என்று கூறி வாதாடியதோடு இது தொடர்பில் யாழ் மனித உரிமைகள் அலுவலகத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது. தவராசா ஓர் அரசியல்வாதி. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத ஓர் கட்சியிலிருந்து வந்தவர். வாயாடி. அவருக்கே இந்தக்கதி என்றால் சாதாரண தமிழ்ச் சனங்களின் நிலை எப்படியிருக்கும்?

ஒளிப்படங்கள்-மயூதரன்

இச்சோதனை நடவடிக்கைகள் எப்பொழுது முடுக்கிவிடப்பட்டன? ராஜபக்ஸ   ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் காவலரண்கள் பெருமளவு அகற்றப்பட்டன. வீதித்தடைகளும் பெருமளவிற்கு அகற்றப்பட்டன. வீதிச் சோதனைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்தன. எனினும் மட்டக்களப்பின் உட்கிராமங்களில் நல்லாட்சிக் காலத்திலும் சோதனைகள் இடம்பெற்றதாக ஓர் அவதானிப்பு உண்டு. இவ்வாறு வடக்கில் சோதனைகள் தளர்ந்து போய் இருந்த பின்னணிக்குள்தான் வாளேந்திய இளைஞர்கள் தோன்றினார்கள். அவர்களுடைய பின்னணிகள் குறித்து சந்தேகங்கள் அதிகரித்தன. அரச புலனாய்வுத்துறையே அவர்களைப் பின்னிருந்து இயக்குவதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டினர். விக்னேஸ்வரன் இக்குற்றச்சாட்டை கூர்மையாக முன்வைத்தார். படைத்தரப்பை இறக்கி நிலமையைக் கட்டுப்படுத்தலாமா? என்றும் உரையாடப்பட்டது. படைத்தரப்பும் அதற்குத் தயாராகக் காணப்பட்டது. இடையில் விஜயகலாவின் வீரப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.

இப்படியொரு பின்னணிக்குள்தான் பொலிசாரின் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் வாள்வெட்டுத் தாக்குதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொலிசார் ஒரு சந்தியில் சோதித்துக்கொண்டிருக்க இன்னொரு உட் சந்தியில் வாள்வெட்டுக் குழுக்கள் அட்டகாசம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றன. இதனால் பொலிசார் யாழ்ப்பாணத்தின் உட்கிராமங்களிலும் வீதிகளில் நின்று சோதிக்கத் தொடங்கினர். சில மாதங்களுக்கு முன் கொக்குவில் பகுதியில் மாலை வேளை இவ்வாறு சோதித்துக்கொண்டிருந்த போது நானும் எனது நண்பரொருவரும் வீதி வழியாகச் சென்றோம். பொலிசார் மோட்டார் சைக்கிள்களை மறித்து ஆவணங்களை சோதித்தபின் வாகனங்களை போக அனுமதித்தார்கள். எனது நண்பர் சொன்னார் ‘பாருங்கள் அவர்கள் ஆவணங்களைத்தான் சோதிக்கிறார்கள். ஆவணங்களைக் காட்டினால் விடுகிறார்கள். இவர்கள் போக்குவரத்து குற்றங்களைப் பிடிக்க வருகிறார்களா? அல்லது வாள்வெட்டுக் குழுக்களைப் பிடிக்க வருகிறார்களா? வாள்களோடு வருபவர்கள் வாள்களை மறைத்து வைத்துக்கொண்டு ஆவணங்களைக் காட்டினால் சரியா?’ என்று.

மேலும் குடாநாட்டின் பிரதான சாலைகளில் வழமையாக நிற்கும் இடங்களில் நின்று சோதிக்கும் போது குற்றவாளிகள் பொலிசார் வழமையாக நிற்காத உள்ளொழுங்கைகளுக்கூடாகத் தப்பிச்சென்று விடலாம். ஆனால் இச்சோதனைகளில் அதிகம் சிக்குவது மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும். முச்சக்கர வண்டிகளும் சிறிய ரக கார்களும்தான். முன்னைய காலங்களில் ஒன்று அல்லது இரண்டு பொலிசாரே வீதியை மறித்து சோதனை செய்வதுண்டு. ஆனால் வாள்வெட்டுக் குழுக்கள் தொடர்பான புகாரை அடுத்து கடந்த சில மாதங்களாக பொலிசார் ஓர் அணியாக வந்து நின்று சோதனை செய்கிறார்கள். இவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளில் அதிகம் சிக்குவது உரிய ஆவணங்களை வைத்திருக்காத சாதாரண சனங்களே. இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் தரப்பு வெளியிடும் செய்திகளிலும் இப்புள்ளி விபரங்களைக் காண முடியும்.

இப்படிப் பார்த்தால் இச் சோதனை நடவடிக்கைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது சாதாரண தமிழ்ச் சனங்கள்தான். குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கம்தான். சொகுசுக் கார்களில் வரும் உயர்குழாம் அல்ல. வேலை முடிந்து அவசரமாக வீடு திரும்புவோர் பிள்ளைகளை கல்வி நிறுவனங்களிலிருந்து அழைத்துக்கொண்டு வரும் பெற்றோர் போன்றவர்களே அதிகமாகச் சிக்குகிறார்கள். ஆனால் வாள்வெட்டுக் குழுக்களோ பொலிசார் வராத இடங்களிலும் பொலிசார் வராத நாட்களிலும் அட்டகாசம் செய்துவிட்டுப் போகிறார்கள்.

எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் வாள்வெட்டுக் குழுக்களுக்காக புகார் செய்யப்போய் சாதாரண தமிழ்ச்சனங்கள் மறுபடியும் வீதிச் சோதனைக்குள்ளாகும் ஒரு நிலமை வந்துவிட்டதா? அதாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் மறித்துச் சோதிக்கப்படும் ஒரு மக்களாக வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலா இது? தமிழ் மக்களை எப்பொழுதும் சோதனை செய்யப்படும் ஒரு மக்களாகப் பேணுவது என்பது கட்டமைப்பு சார் இனப்படுகொலையின் ஒரு வடிவம்தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

வாள் வெட்டுக் குழுக்களை பிடி என்று கேட்டால் போலீஸ் மோட்டார் சைக்கிளில் போகும் எல்லா யாழ்பாணத்தவரையும் குற்றவாளிகளாகப் பார்க்கிறதா? யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளரான பரமேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்…….”யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி சொன்னார் இப்ப இருக்கிற உங்கடை வயது ஆக்கள் சாக யாழ்ப்பாணத்தின் கதி அதோகதி தான். இப்ப இருக்கிற இளம் சமுதாயத்தில் 20விகிதம்தான் நல்லவர்கள் மிகுதி 80விகிதம் கெட்டவர்கள்……”

வாள்வெட்டுக் குழுக்களைப் பிடியுங்கள். கட்டுப்படுத்துங்கள் என்று புகார் செய்த அரசியல்வாதிகள் யாரும் இது விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை. வாள்வெட்டுக் குழுக்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமயம் ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் தளர்ந்திருந்த சோதனை நடவடிக்கைகள் மறுபடியும் அதிகரித்திருப்பதோடு அவை யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறைக்குள் ஒரு வழமையாகவும் மாறி வருகின்றன. இது ஒரு சிவில் சமூகத்திற்குரிய பண்பல்ல. இது தொடர்பில் சிவில் சமூகங்களோ அல்லது மத நிறுவனங்களோ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ ஏன் இன்னமும் கேள்வி எழுப்பவில்லை?

புத்தாண்டு தினத்திலன்றும், பொங்கல் தினத்திலன்றும் பிரதான சாலைகளில் பொலிசாரின் நடமாட்டம் பெருமளவிற்கு இருக்கவில்லை. அந்நாட்களிலேயே அண்மையில் பதினைந்து நாட்கள் இடைவெளிக்குள் இரண்டு தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அப்படியென்றால் பொலிசாரின் பிரசன்னம் குறைவாக இருக்கும் நாட்களாகப் பார்த்து தாக்குதல்கள் நடக்கின்றனவா? இதன் மூலம் பொலிசாரின் செறிவான பிரசன்னத்தை சாலைகள் தோறும் வைத்திருப்பதையும் பின்மாலைப் பொழுதுகளில் சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதையும் நியாயப்படுத்த இது உதவுமா?

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துமாறு பொலிசாரைக் கேட்டுவிட்டு அவர்கள் சோதிப்பதை எப்படி விமர்சிக்கலாம்? என்று.

ஆனால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதே தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. எனவே சோதனை நடவடிக்கைகளுக்குமப்பால் கிராம மட்டங்களில் வேறு புதிய முறியடிப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று பொருள். ஒரு சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக வீதிச் சோதனைகள் இருக்க முடியாது. அப்படியிருந்தால் அதை ஒரு சிவில் சமூகம் என்றும் அழைக்க முடியாது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சனத்தொகையின் விகிதபிரமாணத்திற்கு அதிகமான அளவில் படைப்பிரசன்னம் உண்டு. படைத்தரப்பிடம் மிகப் பலமான ஒரு புலனாய்வுக் கட்டமைப்பு உண்டு. எனது நண்பரான ஒரு புலமைச் செயற்பாட்டாளர் அடிக்கடி சொல்வார். தமிழ்ப் பகுதிகளில் கீழிருந்து மேல் நோக்கிய வலைக்கட்டமைப்பு எனப்படுவது எமது சிவில் சமூகங்களிடமோ அல்லது கட்சிகளிடமோ இல்லை. மாறாக படைப் புலனாய்வுத் தரப்பிடமே உண்டு என்று. இவ்வாறானதோர் இராணுவ மயப்பட்ட சமூக அரசியற் சூழலில் குற்றவாளிகள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள்? அல்லது யார் அவர்களை உற்பத்தி செய்கிறார்கள்?

விக்னேஸ்வரன் எங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தைத் தந்தால் அடக்கிக் காட்டுவோம் என்று சொன்னார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் போது கூட்டமைப்போடு நின்று மகிந்தவைத் தோற்கடித்த ஜே.வி.பி தமிழ் மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று கூறுகிறது. இப்படிப்பட்டதோர் படை மையப்பட்ட சமூக அரசியற் சூழலில் கடந்த பல தசாப்தங்களாக ஆவணங் காவிகளாக அல்லது அடையாள அட்டை காவிகளாக கைகளை உயரத் தூக்கியபடி தம்மை எப்பொழுதும் சோதிக்கக் குடுக்கும் ஒரு மக்களாக வாழ்ந்து பழகிய தமிழ் மக்களுக்கு இப்புதிய வீதிச் சோதனைகள் இடைஞ்சலாகவோ அல்லது அசௌகரியமாகவோ அல்லது அவமதிப்பாகவோ எப்பொழுது தோன்றும்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *