வடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா?

வடமாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வட மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும் குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடமாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே.

கண்டி வீதியில் பழமை வாய்ந்த கைதடி முதியோர் இல்லம் மற்றும் விழிப்புலன் இழந்தவர்களுக்கான பாடசாலை என்பவற்றிற்கு அருகே முன்பு வன்னி அகதிகள் தங்கவைக்கப்படடிருந்த நலன்புரி நிலையத்திற்கு எதிரே வடமாகாண சபை அமைந்திருக்கிறது. அதற்கான தேர்தலில் போட்டியிட்ட போது கூட்டமைப்பு முழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியல் கோஷங்களையே முன்வைத்தது. ஆனால் அதன் உயர் மட்டத்தில் இருப்பவர்களிடம் வேறொரு திட்டம் இருந்தது. மாகாணக் கட்டமைப்பை இனப்பிரச்சினை தொடர்பான இறுதித் தீர்வுக்குரிய ஒரு அரங்காக பயன்படுத்துவது அத்திட்டம் அல்ல. மாறாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தின் தேவைகளை, சாத்தியமான அளவு நிறைவேற்றுவதற்குரிய ஒரு அரங்காக மாகாணசபையை கையாளுவதே அவர்களுடைய திட்டமாக இருந்தது. அது ஒரு விதத்தில் இணக்க அரசியல் தான். நிச்சயமாக எதிர்ப்பு அரசியல் அல்ல.

வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலே அது. அந்த உள்நோக்கத்தோடு தான் கொழும்பு மைய உயர் குழாத்தைச் சேர்ந்தவரும் இலங்கைத் தீவின் நீதி நிர்வாக கட்டமைப்புக்குள் உயர் பதவியை வகித்தவருமாகிய ஒருவர் முதலமைச்சருக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அப்படியொரு திட்டத்தோடு தான் முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

அத்தகைய ஓர் அரை இணக்க அரசியலை ஊக்குவித்து பலப்படுத்துவதன் மூலம் தமிழ் மென் சக்திகள் என்று தாம் கருதிய ஒரு தரப்பை ஈழத் தமிழ் அரசியலில் பலப்படுத்த முடியுமென்று மேற்கு நாடுகள் நம்பின. இந்தியாவும் நம்பியது. வடமாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுமாறும் மாகாண கட்டமைப்பை படிப்படியாக பலப்படுத்தலாம் என்றும் கூட்டமைப்புக்கு மேற்படி நாடுகள் அறிவுரை கூறின. அதற்கு வேண்டிய நேரடியான அல்லது மறைமுகமான உதவிகளையும் செய்தன. கடந்த ஓராண்டு காலமாக வடமாகாண சபையை இலங்கைத் தீவில் மற்றொரு அதிகார மையத்தைப் போல கட்டியெழுப்ப முயன்று வருகின்றன. சீனாவைப் போன்ற இலங்கை அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தவிர ஏனைய அநேகமாக மேற்கு நாடுகள் மற்றும்; இந்தியாவின் இராஜதந்திரிகளும் பிரதிநிதிகளும் கொழும்புக்கு வரும் போது வடக்கிற்கும் வந்து வடமாகாண சபை முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டுச் செல்கிறார்கள்.

இவ்விதமாக கடந்த ஓராண்டு காலமாக வடமாகாண சபையை ஒரு பதில் அதிகார மையம் போல கட்டியெழுப்புவது தொடர்பில் இரண்டு கேள்விகள் முக்கியமானவை.

1. ஏன் அவ்விதம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்பது
2. கடந்த ஓராண்டு காலமாக அம்முயற்சிகள் வெற்றி பெற்றனவா இல்லையா என்பது.

முதலாவது கேள்வி வடமாகாண சபையை ஒரு பதில் மையம் போல கட்டியெழுப்ப வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஏன் ஏற்பட்டது என்பது.

இலங்கையில் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை மாற்றுவதே – regime change – மேற்கு நாடுகளின் முதன்மைத் தெரிவுகளில் ஒன்றாக உள்ளது. முதலில் அவர்கள் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை கையாள முயற்சித்தார்கள். பின்னர் குமார் குணரட்னத்தை வைத்து எதையாவது செய்யலாமா என்று யோசித்தார்கள். இப்பொழுதும் தென்னிலங்கையில் உள்ள படித்த நடுத்தரவர்க்கத்தின் அதிருப்தியையும் விரக்தியையும் பயன்படுத்தலாமா என்று சிந்திக்கிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், புத்தி ஜீவிகள் போன்ற கையாளப்படத்தக்க எல்லாத் தரப்புக்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளுவதன் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியுமா? என்று சிந்திக்கிறார்கள்.

ஆனால் வெளிச்சக்திகள் எவ்வளவுக் கெவ்வளவு இந்த அரசாங்கத்தை மாற்ற முற்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சிங்கள பொதுசனம் அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் என்பதே வெற்றி வாதத்தின் அடிப்படை இயல்பாகும். இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் கிடைத்தற்கரிய அரிதான ஒரு வெற்றியை இந்த அரசாங்கம் சிங்கள பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. வெளிச்சக்திகள் அந்த வெற்றியை போர்க்குற்றமாக மாற்றி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றன என்ற மிக எளிமையான பிரச்சாரம் சிங்கள வெகு சனங்களை இலகுவாய் பற்றிக்கொண்டு விடும். எனவே இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் வெளிச்சக்திகளுக்கு எதிராக சிங்கள வெகுசனங்கள் அதை பாதுகாக்கவே முற்படுவார்கள்.

நடந்து முடிந்த ஊவா தேர்தல் முடிவுகளின் படி வெற்றி வாதமானது அதன் பொலிவை இழக்கத் தொடங்கியது போல ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆனால் மாகாண சபைத் தேர்தல் களம் வேறு, ஜனாதிபதித் தேர்தல் களம் வேறு. ஊவா மாகாணத்தில் குறிப்பிடத்தக்களவு தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் உண்டு. இந்த அடிப்படையில் கூறின் அத்தேர்தல் களம் மூன்று முனைகளை உடையது. ஆனால் நாடளாவிய ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முனை மட்டுமே உண்டு. அது இனவாத முனை. ஊவா தேர்தலில் இனவாதத்தை கக்குவதில் சில வரையறைகள் இருந்தன. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அப்படியல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு இனவாதம் கக்கப்படுகிறதோ. அவ்வளவுக்கு அவ்வளவு அரசாங்கம் வெற்றி பெறும். தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த சரத்பொன்சேகாவின் காரும் இனவாதத்தைத் தூண்டவே உதவும்.

ஏனெனில் வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்குவது என்பது. வெற்றி பெற்ற தரப்புக்கு தலைமை தாங்குவது தான். வெற்றி பெற்ற தரப்புக்கு தலைமை தாங்குவது என்பது சிங்கள மக்களுக்கு தலைமை தாங்குவது தான். திட்டவட்டமாக இனவாதத்தை கக்குவதே அதாவது மிகத் துலக்கமான இனவாத முனையை திறப்பதே அரசாங்கத்தைப் பொறுத்த வரை வெற்றிக்கான இலகுவான வழியாகும். எனவே ஊவா மாகாண தேர்தல் முடிவுகளுக்கூடாக மட்டும் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஊகிக்க முடியாது.

இத்தகைய ஒரு பின்னணியில் அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக வெற்றி வாதத்தை வெற்றி கொள்வதில் இருக்கும் வரையறைகளின் பின்னணியிலேயே; மேற்கும் இந்தியாவும் வடமாகாணசபையைப் பலப்படுத்துவது என்ற ஓர் உத்தியை கையிலெடுத்தன. வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற போது அது வெற்றி வாதத்தின் மீது பெற்ற வெற்றியாக வர்ணிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கி வடமாகாண சபைக்கு ஒரு பிராந்திய அங்கீகாரத்தையும் அனைத்துலக அங்கீகாரத்தையும் வழங்கி அதையொரு அதிகார மையம் போல கட்டியெழுப்ப முயற்சிகள் தொடங்கின. அதாவது சுருங்கக் கூறின் வெற்றி வாதத்தை வெற்றி கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக தோற்கடிக்கப்பட்ட தரப்பை வரையறைக்குட்பட்ட ஒரு கட்டம் வரை பலப்படுத்துவது என்று மேற்கும் இந்தியாவும் சிந்தித்தன. இது முதலாவது கேள்விக்கான பதில்

இனி இரண்டாவது கேள்வி. மேற்கண்ட முயற்சிகள் கடந்த ஓராண்டு காலமாக வெற்றி பெற்றுள்ளனவா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன?

கடந்த ஓராண்டு கால அனுபவத்தை வைத்து மேற்படி முயற்சிகளின் வெற்றி தோல்விகளை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியாது. ஆனால் மேற்படி முயற்சிகள் அவற்றின் கருவிலேயே பலவீனமானவை.

மாகாண கட்டமைப்பு கோறையானது என்பது ஒரு அடிப்படைப் பலவீனம். ஒரு நொண்டிக் குதிரையான மாகாண சபைக்கு பொய்க்கால்களைப் பூட்டி ஓட வைக்கலாமா? என்று சிந்தித்ததே ஒரு அடிப்படைப் பலவீனமாகும். ஒரு நொண்டிக் குதிரைக்கு பொய்க்காலை பூட்டி ஜெயிக்க முடியாத ஒரு ஓட்ட பந்தயம் இது. கோறையான ஒரு மாகாண சபையை கருவியாக கையாண்டு தமிழ் அரசியலை பலப்படுத்தும் முயற்சிகள் கடந்த ஓராண்டு காலத்தில் போதிய வெற்றியை பெறத் தவறி விட்டன. இது முதலாவது பலவீனம்.

இரண்டாவது பலவீனம், கூட்டமைப்பின் அரசியல் ஒழுக்கம் எதுவென்பது? ஒரு எதிர்ப்பு அரசியலுக்குரிய அரசியல் ஒழுக்கம் அவர்களிடமில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் அதை போதியளவு நிரூபித்திருக்கவுமில்லை. அதேசமயம் முழு அளவு இணக்க அரசியலுக்கு போகவும் அவர்களால் முடியாது. மாகாண சபை தேர்தலின் போது அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளே அவர்களை துரத்தும். எனவே செய்ய முடியாத எதிர்ப்பு அரசியலுக்கும் செய்யக் கூடிய இணக்க அரசியலுக்குமிடையே கிழிபடுகிறது மாகாண சபை. வெற்றி வாதத்திற்கு எதிராக உயர்த்திப் பிடிக்க முடியாத மொட்டைக் கத்தி அரசியல் அது.

எனவே குதிரையும் நொண்டி கத்தியும் மொட்டை. இந்த இலட்சணத்தில் நாட்டுக்கு வெளியிலிருந்து வழங்கப்படும் பிராண வாயுவை நம்பி உருள வேண்டியிருக்கிறது மாகாண சபை.

கடந்த ஓராண்டு கால அனுபவம் இது தான். வெற்றி வாதத்தை வெற்றி கொள்ளும் உத்திகளில் ஒன்றாக தமிழ் அரசியலை வரையறைக்குட்பட்ட ஒரு கட்டம் வரை மேற்கு நாடுகளும் இந்தியாவும் பலப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் கடந்த ஜெனிவா தீர்மானம் வரையிலும் இதை ஓரளவுக்கு சகித்துக் கொண்ட அரசாங்கம் அதன் பின் படிப்படியாக தன் பிடியை இறுக்கத் தொடங்கியது. வெற்றி வாதத்தின் அகராதியில் இணக்க அரசியல் கிடையாது. சரணாகதி அரசியல் மட்டுமே உண்டு.

இந்நிலையில் நாட்டிற்குள் மற்றொரு அதிகார மையம் கட்டியெழுப்பப்படுவதை வெற்றி வாதம் சகித்துக் கொள்ளாது. அந்த மையத்துக்கு எதிரான ஒரு அரசியலுக்கூடாக தனது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதாவது வெற்றி வாதத்தை வெற்றி கொள்ளும் எல்லா வெளித்தரப்பு முயற்சிகளும் உள்நாட்டில் வெற்றி வாதத்தை பலப்படுத்துவதிலேயே முடிந்து விடுகின்றன என்பதே இலங்கைத் தீவின் கடந்த ஐந்தாண்டு கால துயரமாகும்.

இந்நிலையில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஆட்சி மாற்றம் தவிர வேறு தெரிவுகளை குறித்தும் சிந்திக்க முடியும். ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ஆட்சிக்குள் மாற்றம் என்ற விதமாகவும் சிந்திக்கக் கூடும். இப்போதிருக்கும் ஆளும் தரப்பிலுள்ள மென் சக்திகளை அல்லது இராஜிய பரிமாணம் அதிகம் உடைய சக்திகளை ஊக்குவிப்பதன் மூலம் அல்லது அத்தகைய சக்திகளோடு ஒத்துழைக்குமாறு தமிழ் தரப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஆட்சிக்குள் மாற்றம் எதையும் ஏற்படுத்தலாமா என்ற ஒரு தெரிவைக் குறித்தும் சிந்திக்கப்படலாம். கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை சந்திக்கும் சக்தி மிக்க அயல் நாட்டின் இராஜதந்திரிகள் சிலர் அத்தொனிப்பட உரையாடியதாக சில உத்தியோகபற்றற்ற தகவல்கள் உண்டு.

இது ஏறக்குறைய பர்மிய அனுபவத்திற்கு கிட்டவருகிறது. கெடுபிடி போர் காலத்தில் பர்மாவில் மேற்கு நாடுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆங்சாங் சூகியை தடுப்புக் காவலில் இருந்தும் விடுவிக்க முடியவில்லை. ஆனால் கெடுபிடி போரின் முடிவையடுத்து முன்னைய இராணுவ ஆட்சியின் கீழ் பிரதானியாக இருந்த ஒருவரே பர்மாவை சூழ்ந்திருந்த இரும்புத் திரையை குறிப்பிடத்தக்களவு அகற்றினார். ஆங்சாங் சூகி மீதிருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தினார். அங்கு ஆட்சி மாற்றம் நிகழவில்லை. ஆட்சிக்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்தது. அதற்கு நீண்ட காலம் எடுத்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாக உலக ஒழுங்கு மாறி வந்த ஓரு பின்னணியிலேயே மாற்றங்கள் நிகழ்ந்தன.

பர்மாவைப் போலவே இலங்கைத் தீவிலும் ஆட்சிக்குள் மாற்றங்களை செய்வது குறித்து வெளிச்சக்திகள் சிந்திக்கக்கூடும். ஆனால் பர்மாவுக்கும் இலங்கைத் தீவுக்குமான பிரதான வேறுபாடுகளில் ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது தென்னிலங்கை அரசியலில் பிரதான இயங்கு விசை எனப்படுவது. ஆழப்புரையோடிய இனமுரண்பாடே. அதன் ஆகப்பிந்திய வளர்ச்சியே வெற்றி வாதம். பர்மிய யதார்த்தம் அதுவல்ல.

எனவே, ஆட்சி மாற்றமோ அல்லது ஆட்சிக்குள் மாற்றமோ எதுவாயினும் தமிழர்களும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சிகளும் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அல்லது ஏதும் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்ந்தாக வேண்டும். அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் ஏதும் நிகழ்ந்தால் மட்டுமே அண்மையில் வடமாகாண முதலமைச்சர் கூறியது போல கைதடியில் பதுங்கும் புலி மாத்தறை வரை பாயக்கூடும்.

26.09.2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *