கொரோனா வைரசும் ஒரு போதகரும்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள்.

கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது.
முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அதுவும் தடுக்கப்பட்டது.

இவ்வளவும் சரியாக ஓராண்டுக்கு முன் நடந்தவை. ஆனால் இப்பொழுது அதே படைத்தரப்பு சொல்கிறது பொது இடங்களில் முகமூடி அணிந்து கொண்டு வராவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று.

எவ்வளவு தலைகீழ் காட்சி மாற்றம்?

கொரோனா வைரஸ் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. சில படித்த தமிழர்களே இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பில் இருப்பது நல்லது என்று கருதுவது தெரிகிறது. இதே இடத்தில் மைத்திரிபால சிறிசேன இருந்தால் அது பெரிய அழிவாக முடிந்திருக்கும் என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. ஒரு வைரஸ் வந்து தமிழ் மக்களால் இனப்படுகொலையாளி என்று கூறப்பட்ட ஒருவரை புனிதப்படுத்தி விட்டதா?

இலங்கைத்தீவின் சுகாதார சேவைகள் எப்பொழுதும் உயர் தரமானவை என்று கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட சுகாதார சேவை இப்பொழுது படைத்தரப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. படைத்தரப்பு எல்லாருக்கும் உத்தரவிடுகிறது. கொரோனா வைரசை முறியடிப்பதற்கான கட்டமைப்பின் உயர் தலைவராக ராணுவ தளபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரையும் ஒரு போர்க் குற்றவாளி என்று தமிழ் தமிழ் தரப்பு கூறுகிறது. அமெரிக்கா அவருக்கு எதிராக பயணத் தடை விதித்திருக்கிறது. ஆனால் அவரும் அவருக்கு கீழே வேலை செய்பவர்களும் தான் கொரோனா வைரசுக்கு எதிராக போரையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே பலமாகக் காணப்படும் ஒரு சிவில் கட்டமைப்பை ஏன் இப்படி ஒரு படை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ராஜபக்சக்கள் ஏற்கனவே நாட்டை பல்வேறு முனைகளிலும் இராணுவ மயப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.இப்பொழுது கொரோனா வைரஸை முன்வைத்து அந்த இராணுவ மயமாக்கலை மேலும் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.கடந்த வாரம் ஒரு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவரும் ஒரு ஓய்வுபெற்ற வான்படைத் தளபதி தான். இது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதன் பின் எழுந்த ஒரு சர்ச்சையும் சிவில் கட்டமைப்பின் மீது போலீசாரின் தலையீடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரான மருத்துவர் கேதீஸ்வரனை பொலீஸ் பிரதானி ஒருவர் அச்சுறுத்தும் விதத்தில் அணுகி இருப்பதாக மருத்துவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக தகவல்களை முதலில் வெளியிட்டவர் கேதீஸ்வரன் தான்.

குறிப்பிட்ட போதகர் அரியாலை கண்டி வீதியில் ஒரு சர்வதேசப் பாடசாலையைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு வந்திருக்கிறார். தனது ஜந்து நாள் விஜயத்தின் போது அவர் அரியாலையில் ஒரு கூட்டுப் பிரார்தனையை நடத்தியிருக்கிறார். பதினொராம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடசாலையைக் கட்டும் கட்டட ஒப்பந்தகாரரையும் சந்தித்திருக்கிறார். நாடு திரும்ப முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அரியாலையில் உள்ள ஒரு மருத்தவமனையில் மருந்து எடுத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பிறபொருள் எதிரிக் குறைபாட்டு நோய் உண்டு.

அவர் நாடு திரும்பிய பின் அங்கே அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்திக்குமாறு அவருடைய சபையின் யாழ்ப்பாணத்திற்கான துணைப் போதகர் வாட்ஸ் அப் குழுவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேசமயம் அவர் சிகிற்சை பெற்ற யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மரத்தவமனையைச் சேர்ந்தவர்கள் போதகருக்கிருந்த நோய்குறிகளை வைத்துச் சந்தேகப்பட்டு மாகாண சுகாதார சேவை அதிகாரிகளுககு அறிவித்திருக்கிறார்கள். செய்தி சமூக வலைத்தளங்களில் வைரஸை விட வேகமாகப் பரவியிருக்கிறது. மாகாண சுகாதார சேவை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேதீஸ்வரன் மேற்படி போதகருக்கு நோய் தொற்று இருப்பதாக அறிவித்தார்.

அப்படி ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கேதீஸ்வரனை அச்சுறுத்தும் விதத்தில் எச்சரித்திருக்கிறார் அந்த உண்மையை ஊடகங்களுக்கு உடனடியாக வெளிப்படுத்தியதன் மூலம் வடபகுதியில் பீதியை உருவாக்கிவிட்டார் என்று பொலிஸ் தரப்பு அவரை எச்சரித்திருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியபோது அமைச்சர் தேவானந்தா அதை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருக்கிறார்.

எனினும் மருத்துவர் சங்கம் இது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக பொலிஸ் தரப்பு கேதீஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநரும் பொலிசாரை குற்றம்சாட்டி இருக்கிறார்.

போதகருக்கு நோய் தொற்று இருப்பதை மருத்துவர் கேதீஸ்ஸ்வரன் ஊடகங்களுக்கு உடனடியாக வெளிப்படுத்தியதன் மூலம் வடபகுதியில் பீதியை உருவாக்கிவிட்டார் என்று பொலிஸ் தரப்பு கூறியிருப்பது சரியா? ஒரு சுகாதார சேவைகள் அதிகாரி இது விடயத்தில் உண்மையைக் கூறி மக்களை உசார் நிலைக்கு கொண்டு வர வேண்டுமா? அல்லது உண்மைகளை மறைக்க வேண்டுமா?

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வரையிலும் இத்தாலியிலும் கூட வைரஸ் தொற்று தொடர்பாக முழுமையான தகவல்கள் உடனுக்குடன் வெளிப்படுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. சீனா நோய் நன்கு பரவத் தொடங்கிய பின்னரே அது பற்றிய தகவல்களை உலகத்திற்கு அறிவித்தது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபோன்ற உலகப் பொது நோய்களை கையாளும்போது பொதுச் சுகாதார சேவையும் அரசியல் தலைமையும் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானி லாரி பிரில்லியன்ட் கூறுகிறார் (Larry Brilliant).

மனிதகுலம் சின்னம்மை நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகம் உதவியவர் என்று கொண்டாடப்படும் ஒரு விஞ்ஞானி இவர். 2006 ஆம் ஆண்டிலேயே ஓர் உலகப் பெரும் தொற்று நோய் குறித்து மனித குலத்தை எச்சரித்தவர். கொரோனா வைரஸ் ஒரு உலகப் பொது நோயாக வந்தபின் அண்மையில் இவரை பேட்டி கண்ட பொழுது அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

“அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு நாள் நீங்கள் நியமிக்கப்பட்டால் ஊடகங்களுக்கு என்ன கூறுவீர்கள்? ”என்று கேட்கப்பட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.ஜனாதிபதி ஒபாமாவின் காலத்தில் எபோலாவை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு அதிகாரியின் (Ron Klain) பெயரை குறிப்பிட்டு அவருடைய பெயருக்கு பின் ஜார் என்ற அடைமொழியை இணைத்து அவரை நான் மக்களுக்கு அறிமுகப் படுத்துவேன். அவரை நாங்கள் எபோலா ஜார் என்று அழைத்தோம். இப்பொழுது அவரை கோவிட் ஜார் என்று அழைப்போம் என்றும் அவர் கூறினார். இங்கு ஜார் என்ற அடைமொழி ரஷ்யாவின் சர்வாதிகாரியைக் குறிக்கும்.அதாவது கோவிட் 19 என்றழைக்கப்படும் வைரஸை எதிர்கொள்வதற்கு பொதுச் சுகாதார சேவை மற்றும் முடிவெடுக்கும் அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைக்கும் ஒரு சர்வாதிகாரி தேவை என்ற பொருள்படக் கூறுகிறார்.

இப்போது ராஜபக்ஷக்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். சுகாதார சேவையை படைத்தரப்பின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். அதோடு இணைந்த எல்லா சேவைகளையும் படை மயப்படுத்தி விட்டார்கள். இலங்கையிலுள்ள எல்லா தனிமைப்படுத்தல் நிலையங்களையும் படைத்தரப்பே நிர்வகிக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் அந்த நிலையங்கள் காணப்படுகின்றன. அதோடு நோயைக் கட்டுப்படுத்தும் தொற்று நீக்க நடவடிக்கைகளையும் படைத்தரப்பு மேற்கொள்கிறது. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதையும் படைத்தரப்பு அறிவுறுத்துகின்றது.

அதாவது எல்லாம் படைமயம். கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு படைநடவடிக்கை. இப்படிப்பட்டதொரு சூழலுக்குள் முதலாவது நோயாளியை பற்றிய விபரங்களை ஒரு சிவில் அதிகாரி அவருடைய சிவில் ஒழுக்கத்திற்கூடாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பொழுது அதை போலீஸ் ஒரு விவகாரமாக பார்த்திருக்கிறது. ஆனால் அதே போலீஸ் தான் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த போதகருக்கு பாதுகாப்பு கொடுத்ததாக ஆளுநரே குற்றம் சாட்டுகிறார்.

ஒரு போதகர் அல்லது ஒரு கூட்டு வழிபாடு இவ்வாறு நோய்த் தொற்றை அதிகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகிப்பது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கவில்லை. அல்லது தென்கொரியாவில் மட்டும் நடக்கவில்லை. ஐரோப்பாவிலும் நடந்திருக்கிறது. கிழக்குப் பிரான்சில் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகிய Mulhouse -முல்ஹவுஸில் அது நடந்திருக்கிறது. இந்த நிலத் துண்டுக்காக ஜெர்மனியும் பிரான்சும் பல ஆண்டுகளாக போர் புரிந்திருக்கின்றன. இப்பொழுது அந்த பகுதியில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதால் ஜெர்மனியும் சுவிட்சலாந்தும் நோயாளிகளுக்கு தமது ஆஸ்பத்திரிகளைத் திறந்து விட்டுள்ளன.

இந்தப் பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதியில் நடந்த ஓர் ஆவிக்குரிய சபையின் (‘Porte Ouverte’)வழிபாட்டில் பங்குபற்றிய மக்கள் மத்தியிலிருந்துதான்  கொரோனா வைரஸின்  பரவல் அதிகமாகியது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3000 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையின் மூன்று சிஸ்டர்கள்  கொரோனாவால் இறந்து விட்டார்கள்.தலைமைப் போதகரும் பல சபை உறுப்பினர்களும் தோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

Mulhouse

ஆனால் ஜெர்மனியிலும் பிரான்சிலும் சுவிற்சலாந்திலும் அதை ஒரு மதப் பிரிவினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமாக யாரும் மாற்றவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு மாற்றியிருக்கிறார்கள். அதிலும் முகநூலில் வெவ்வேறு தமிழ் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் காணப்படும் நபர்கள் அவ்வாறான வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தேர்தலில் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் சுமந்திரனோடு ஏற்பட்ட மோதலின் விளைவாக அவருடைய கட்சிக்காரர்களே சுமந்திரனை ஏற்கனவே அல்லேலுயா கூட்டம் என்று விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸ் விவகாரத்தோடு அல்லேலூயா கூட்டம் என்று கூறி எல்லா ஆவிக்குரிய சபைகளையும் குற்றவாளிகளாக காட்டத் தொடங்கி விட்டார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் எல்லாருமே தமது பகுதிகளில் கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரங்கமாக பொதுவிடங்களில் தோன்றுபவர்கள். இவர்கள் இவ்வாறு ஒரு மதப் பிரிவினருக்கு எதிராக வன்மம் கலந்த எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒரு திரளாக்க முயற்சிக்கிறார்களா ? அல்லது தமிழ் மக்களை சிதறடிக்க போகிறார்களா?

ஒரு போதகர் நோய்க்காவியாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் எல்லா ஆவிக்குரிய சபைகளையும் சந்தேகத்தோடு பார்ப்பது என்பது ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் அப்பாவி முஸ்லிம்கள் எல்லாரையும் சஹிரானோடு சேர்த்து பார்த்ததற்கு சமமானது. அந்தப் போதகர் சாவுக்கு ஏதுவான ஒரு நோய் தனக்குத் தொற்றி இருக்கிறது என்று தெரிந்து கொண்டே யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பாரா? அப்படி யாழ்ப்பாணத்துக்கு வந்து நோயைப் பரப்பி தன்னையும் தனது சபையையும் அழித்துக் கொள்ள வேண்டிய தேவை என்ன? கிடைக்கும் தகவல்களின்படி அவர் குணமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே ஒரு போதகரிடமிருந்து நோய் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஒரு மத விவகாரமாக அணுகாமல் நிதானமாக அணுக வேண்டும். இது விடயத்தில் ஏன் எந்த ஒரு தமிழ் கட்சியும் கருத்து தெரிவிக்கவில்லை என்று நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு முன்னாள் தமிழ் ஊடகவியலாளர் கேட்டிருந்தார். அண்மைக் காலங்களில் சாதி, மத, பிரதேசப் பிரிவினைகளை பெரிதாக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருமோர் அரசியற் சூழலில் தமிழ்க் கட்சித் தலைவர்கள் துணிந்து கருத்துக் கூறி மதப் பல்வகைமையை உறுதிப்படுத்துவார்களா?

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Ambi Sinnathurai , 28/03/2020 @ 2:22 PM

    Dear Mr.Nilanthan
    உங்களுக்கு மிக்க நன்றி
    நல்ல கட்டுரை

  • Sam Hensman , 28/03/2020 @ 8:19 PM

    An eye opener, indeed.
    What strikes me most is, the silence of the opinion leaders.
    The Tamil Christians will be massacred by their own brothers, if Tamil Eelam is given, I’m of this view lately.
    Anyway, I enjoyed reading this write up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *