கொரோனா- தீண்டத்தகாதது

இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை.

நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும் நீங்கள் அவருக்கு அருகே இருக்க முடியாது. அவருடைய கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டோ அல்லது அவருடைய தலையை அரவணைப்பாக வருடிக் கொடுத்தோ உங்களுடைய அன்பை காட்ட முடியாது. அப்படி செய்தால் உங்களுக்கும் வைரஸ் தொற்று வரும்.

சில சமயம் அவர் இறந்தால் நீங்கள் தூர இருந்து அவர் மூச்சுத்தி திணறி இறப்பதை இயலாத்தனத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியாது. அவரை தொட்டு அழவும் முடியாது. தூர இருந்தே அழவேண்டும். இறந்த பின் அந்த உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அது அரசாங்கத்திற்கு உரியது. அதை நீங்கள் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியாது. தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டவரின் உடலைப் போல.அரசாங்கம் தான் அதைச் செய்யும். சில சமயங்களில் நீங்கள் அந்த இறுதிக் கணங்களை கிட்ட இருந்து பார்ப்பதற்கும் அனுமதி. இல்லை தூர நின்று பார்ப்பதற்கும் அனுமதி இல்லை. இறுதி வணக்கம் செலுத்தவும் அனுமதி இல்லை.

“என்னுடைய தகப்பனை ஒரு நாயைப் போல ஒரு பன்றியைப் போல இறக்க விட்டேன்” என்று ஓர் இத்தாலியப் பெண் அழுகிறார். அதாவது அவருடைய தந்தையை ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதைகள் எவையும் இன்றி சடங்குகள் எவையும் இன்றி மிருகங்களை போல அடக்கம் செய்ய வேண்டி வந்தது என்று அவர் கூறுகிறார். “சடங்குகளில்லாத தகனங்கள்?”

மனித நாகரீகம் எனப்படுவது மிருகங்களிடம் இருந்து வேறுபட்ட பிரதானமான இடங்களில் அது ஒன்று. இறந்த உடலை மதிப்பது அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து அடக்கம் செய்வது. ஆனால் மனித நாகரிகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாகிய அந்த விடயமே இப்பொழுது ஆபத்தானது ஆகிவிட்டது.

மனிதர்கள் ஒருவர் மற்றவரை தொட்டுக் கொள்ளாமல் அன்பு காட்டுவது எப்படி? தாய்மையை, தந்தைமையை, காதலை, பாசத்தை, சகோதரத்துவத்தை தொடாமல் எப்படி வெளிக் காட்டுவது? மிருகங்கள் கூட பூச்சிகள் கூட அதை தொடுகை மூலம் தான் வெளிப்படுத்துகின்றன. மனிதக் கூர்ப்பில் தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியறாமல் காணப்படும் ஓர் அம்சம் அது. அன்பை காதலை ஸ்பரிசம் மூலம் வெளிப்படுத்துவது. ஆனால் இப்பொழுது அது ஆபத்துக்குள்ள்ளாகியிருக்கிறது. மனிதர்கள் மனிதர்களை தொடுவது மட்டுமல்ல நோயாளிகள் தொட்ட எதையுமே குறிப்பாகக் காசையும் கூட தொட முடியாத ஒரு நிலை. இதனால் பெருமளவிற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். ஆட்களற்ற தெருக்களை பாடல்களால் நிரப்புகிறார்கள்.

ஆசிய ஐரோப்பிய நகரங்களில் ஊரடங்கு அல்லது ஊரடங்கு போல வீடுகளுக்குள் முடங்குவது. இது ஏறக்குறைய ஒரு யுத்த காலத்தை ஒத்தது. “நமது பெற்றோரை போருக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் நாங்கள் உங்களை வீடுகளுக்குள் இருங்கள் என்று அழைக்கிறோம்” என்று இத்தாலிய பிரதமர் கூறினார்.
இது தொடுதிரை உலகைப் பொருத்தவரை அதிர்ச்சியூட்டும் ஒரு மாற்றம். எனினும் வெள்ளைக்காரர்கள் அதை சந்தோஷமாக எதிர்கொள்வதாகவே தெரிகிறது. நோர்வேயில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழர் சொன்னார் வேர்ச்சுவல் அலுவலகங்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயலிகளை பயன்படுத்தி இளைஞர்கள் குடித்து மகிழ்வதாக.

திடீரென்று வீட்டுக்குள் முடக்கப்பட்ட மனிதர்கள் இணையத்தின் மூலம் செயலிகள் மூலம் இணைக்கப்படுகிறார்கள்.அதுமட்டுமல்ல இணைய வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள் இப்பொழுது ஓய்வாக இருக்கிறார்கள்.வாசிக்கிறார்கள் யோசிக்கிறார்கள் மனைவி பிள்ளைகளோடு ரிலாக்ஸாக இருக்கிறார்கள். இலங்கையில் சிலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். எதுவாயினும் வழமைக்கு மாறாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் கிடைத்திருக்கும் இந்த ஒன்று கூடலை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தகாலத்தில் ஊரடங்கு நாட்களில் அவர்கள் வீடுகளுக்குள் சிறிய அளவில் ஒன்றுகூடுவார்கள். தாயம் விளையாடுவார்கள் , கரம் விளையாடுவார்கள் , கார்ட்ஸ் விளையாடுவார்கள். இப்போது இணையம் வந்து மேற்சொன்ன விளையாட்டுக்களை மாற்றீடு செய்துவிட்டது. எனினும் பூனை தன் குட்டிகளை காவுவது போல குறிப்பாக பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்த பெற்றோர் இப்பொழுது பிள்ளைகளோடு ரிலாக்சாக இருக்கிறார்கள். மனம்விட்டு கதைக்கிறார்கள்.அப்படி கதைப்பதற்கு நேரம் இருக்கிறது.

அதுமட்டுமல்ல பூகோள மயப்பட்ட உலகில் எல்லாவற்றுக்கும் மற்றவர்களோடு நிபந்தனையின்றி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கைச் சுழலுக்குள் பல்பொருள் அங்காடிகள் மைய வாழ்வுக்கு பழக்கப்பட்ட சமூகங்கள் இப்பொழுது உணவுக்கு தமது வீட்டு வளவுக்குள்லேயே எதையாவது தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு நிலை. தனது வீட்டுக்குள்ளேயே தனக்கு வேண்டிய காய்கறிகளை வளர்க்கலாமே என்று சிந்திக்கும் ஒரு காலகட்டம். அதாவது அதிகபட்சம் தற்சார்பான தன்னிறைவான உணவு முறை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை.

ஒரு காலம் எங்களிடம் உயிர்வேலி இருந்தது. அந்த உயிர் வேலியில் அரிய மூலிகைகள் விளைந்தன. ஒவ்வொரு நாளும் சுண்டிச் சாப்பிட அல்லது மசித்துச் சாப்பிட ஏதோ ஒரு காய்கறி அந்த வேலியில் விளைந்தது. ஆனால் பல்பொருள் அங்காடி பமய வாழ்க்கை வந்தபின் எல்லாமும் பக்கேஜ் ஆகிவிட்டது.

கொரோனா வைரஸ் வந்து அந்த வாழ்க்கைச் சுழலுக்குள் இடையீடு செய்திருக்கிறது. இது தீமைக்குள் விளைந்த ஒரு நன்மை. இதுபோன்ற பல நன்மைகளை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்பொழுது தெருக்களில் வாகனங்கள் குறைவு. எனவே காற்றில் புகை குறைவு. கடலில் கப்பல்கள் குறைவு. விமான நிலையங்களில் விமானங்கள் தூங்குகின்றன. மிகக்குறுகிய காலகட்டத்துக்குள் சுற்றுச்சூழல் மாசாக்கம் சடுதியாக குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். சீனா முகமூடி அணியத் தொடங்கியது கடந்த சில மாதங்களாக மட்டும் அல்ல. கொரோனா வைரசுக்கு முன்னரே சீனர்கள் மாநகரங்களில் முகமூடி அணியத் தொடங்கி விட்டார்கள். ஏனெனில் காற்று மாசாகத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் சீனர்கள் இறக்கிறார்கள்.இது, சீனாவில் இது வரையிலுமான கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை விடப்  பல மடங்கு  அதிகமானது.

இப்படிப் பார்த்தால் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் ஒப்பீட்டளவில் சுத்தமாகியிருக்கிறது. இயற்கை தன்னை ஏதோ ஒரு விகிதமளவுக்காவது சமநிலைப் படுத்திக்கொள்ள அவகாசம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் மனிதர்களும் இயற்கைக்கும் தமக்கும் இடையிலான ஒரு புதிய சமநிலையை குறித்து சிந்திக்க வேண்டிய காலம்.

ஒருபுறம் பூகோளமயமாதல் அதன் இயலாமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் தகவல் புரட்சி மட்டும் மனிதனுக்கு இன்பத்தை தராது அதை விடவும் அதிகமான இன்பங்கள் வாழ்க்கையில் உண்டு என்பதனை ஓர் உலக பெருந் தொற்று நோய் உணர்த்தியிருக்கிறது. இலத்திரனியல் இன்பம் மட்டும் போதாது என்று கருதிய ஐரோப்பியர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் பொழுது பல்கனிகளில் நின்றபடி கைகளைத் தட்டிப் பாடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு பேருண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.வைரஸின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக அவர் கூறும் ஆலோசனைகளில் ஒன்றில் மனிதர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை மட்டும் செய்திகளை வாசிப்பது நல்லது என்று அவர் கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? செய்திகளுக்குப் பதிலாக வதந்திகளே மனிதர்களை வேகமாக வந்தடைகின்றன. இது ஒரு பெருநோயை எதிர்கொள்வதற்கான உளவியல் தயாரிப்பை பலவீனமாக்குகிறது. எனவேதான் தகவல் யுகத்தில் ஓர் உலகப் பொது நிறுவனத்தின் தலைவர் குறைந்த அளவு தகவல்களை நுகருங்கள் என்று கூறும் ஒரு நிலைமை.

எனவே கொரோனா வைரசுக்கு பின்னரான உலகம் எனப்படுவது அரசியல் சமூக பொருளாதார மற்றும் உளவியல் அர்த்தத்தில் ஒரு புதிய வடிவத்தை பெறுமா ?

இலங்கைத்தீவில் ராஜபக்சக்கள் கொரோனாவை வைத்து தமது அரசியல் வெற்றிகளை திட்டமிட தொடங்கிவிட்டார்கள். ராணுவ தளபதிக்கும் படைத் தரப்புக்கும் வெள்ளை அடிப்பதற்கு இது மிகச் சிறந்த ஒரு தருணம் என்று அவர்கள் கருதக்கூடும். அதுமட்டுமல்ல பொதுமக்களை கொன்றதற்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட படைவீரருக்கு மன்னிப்பு கொடுப்பதற்கும் இதுதான் தருணம் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது. கொரோனாக் காலத்திலும் இனவாதம் பதுங்கவில்லை. ராஜபக்சக்களைப் பொறுத்தவரை கொரோனா ஒரு வரப்பிரசாதம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை?

கொரோனா வைரசுக்கு முன்னரே தமிழ் மக்களிடம் தீண்டாமை இருந்தது. அது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிரானது. சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மத்தியில் தீண்டாமையானது வைரஸைப் போல தன்னை அப்டேட் செய்து வருகிறதா? 2009 க்குப் பின்னரான கடந்த 10 ஆண்டுகால அரசியலில் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்களைக் கூறுபோடும் நிலைமைகளே அதிகரித்து வருகின்றன.தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் கொரோனாக்கள் அதிகரித்து வந்த ஒரு சூழலில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் யாழ்ப்பாணத்துக்கு வைரஸை கொண்டுவந்தவர் என்று ஒரு போதகரைச் சுட்டிக்காட்டி அதன் பெயரால் தமிழ் மக்களை மதரீதியாகப் பிரித்துத் தோற்கடிக்க முற்படும் சில வைரஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. கொரோனாவை வெற்றி கொண்டபின் உடனடியாக இந்த வைரஸ்களுக்கு தமிழ் மக்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டி இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *