கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .எனவே தவராசாவை சுமந்திரன் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி ஒரு அணித் திரட்சி ஏற்படத் தொடங்கியது. அதோடு மாவை சேனாதிராசாவின் மகன் உட்பட ஒரு பகுதி கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு எதிராக திரள்வது போல ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவை உண்மையாகவே திரட்சிகளா ? அல்லது கட்சிக்கு வெளியே போகக் கூடிய அதிருப்தி வாக்குகளை கவர்வதற்கான உத்திகளில் ஒன்றா?
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழ்மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் வைரஸை நோக்கியே குவிக்கப்பட்டிருந்தன. ஆனால் சிங்கள ஊடகமொன்றுக்கு சுமந்திரன் வழங்கிய பேட்டியோடு தமிழ்மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் உயிரியல் வைரஸிலிருந்து அரசியல் வைரஸ்களை நோக்கி திருப்பி விட்டது. அதன்பின் தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் சுமந்திரனுக்கும் தவராசாவுக்கும் இடையிலான மோதல் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி பகிரங்கதுக்கு வந்துவிட்டது.
சுமந்திரன் ஏற்கனவே தமிழ் ஊடகப் பரப்பில் தன்னைக் குறித்து ஒருவித நெகட்டிவ் ஆன பிம்பம் ஒன்றை கட்டமைத்து வைத்திருக்கிறார். ஒரு பகுதி தமிழ் ஊடகங்கள் அவரை முற்கற்பிதத்தோடு அணுகுகின்றன. அதே சமயம் அவரும் தமிழ் ஊடகங்களை ஒருவித முற்கற்பிதத்தோடு அணுகி வருகிறார். தமிழ் ஊடகங்களை எதிர் கொள்ளும் பொழுது அவர் இரண்டு விதமான மனோ நிலைகலின் கலப்பாகக் காணப்படுகிறார்.எல்லாக் கேள்விகளுக்கும் தன்னால் பதில் கூறமுடியும் என்று நம்புகின்ற ஒரு சட்டத்தரணியின் தொழிசார் துணிச்சல்.இரண்டாவது தன்னை நோக்கி வீசப்படும் எந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக அடித்து சிக்ஸர்களைக் குவிக்க முடியும் என்று நம்பும் ஒரு துடுப்பாட்ட வீரரின் மனோபாவம். இந்த இரண்டு மனோபாவங்களின் காரணமாகவும் அவர் தமிழ் ஊடகப் பரப்பில் தன்னைக் குறித்து ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
அதற்கு நேர்மாறான ஒரு பிம்பத்தை தவராசா ஏற்படுத்தி வருக்கிறார் அதுமட்டுமல்ல 40 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளை கைதிகளுக்கு சார்பாக வென்றெடுத்த ஒரு சட்டவாளர் ஆகவும் அவர் காணப்படுகிறார். இதனால் அவர் சுமந்திரனின் தெரிவு என்று கருதும் அம்பிகாவையும் தன்னுடைய 40 ஆண்டுகால சட்டத்துறைச் சாதனைகளுக்கூடாக அணுகி விமர்சித்தும் வருகிறார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். சுமந்திரன் ,தவராசா, அம்பிகா இந்த மூவரில் யார் கூடுதலான பட்சம் சட்டச் செயற்பாட்டாளர்? யார் கூடுதலான பட்சம் தொழில்சார் சட்டவாளர் ?சுமந்திரன் ஒரு சட்ட செயற்பாட்டாளர் அல்ல. அவர் ஒரு கெட்டிக்கார சட்டத்தரணி.அரசியல்வாதியாக மாறிய ஒரு தொழிசார் சட்டத்தரணி. தவறாசாவும் ஒரு தொழில்சார் சடடதரணிதான். அம்பிகா ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராகவும் அரசாங்கத்தின் ஒரு சுயாதீன ஆணைக் குழுவின் மனித உரிமைகள் ஆணையாளராகவும் இருந்தவர்.மனித உரிமைகள் என்ற தளத்தில் அவர் ஒரு செயற்பாட்டாளராக இருக்கக்கூடும். ஆனால் தமிழ் அரசியல் தளத்தில் அவர் எந்தளவு தூரத்திற்கு ஒரு செயற்பாட்டாளராக காணப்படுகிறார் ?
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் குமார் பொன்னம்பலத்தை போலவோ அல்லது அப்பாத்துரை விநாயகமூர்த்தியைப் போலவோ அல்லது ரட்ணவேலைப் போலவோ தங்களை சட்ட செயற்பாட்டாளர்கள் என்று துணிந்து சொல்லக்கூடிய சட்டவாளர்கள் எத்தனைபேர் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?அரசியல் கைதிகளுக்காக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இலவசமாக வழக்காடும் சட்டச் செயற்பாட்டு நிறுவனங்கள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு ?
கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் எனப்படுவது மூன்று தடங்களைக் கொண்டது. முதலாவது தடம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது. இரண்டாவது போரின் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு சட்டரீதியாக ஆகக் கூடிய பட்சம் நீதியைப் பெற்றுக் கொடுப்பது. மூன்றாவது கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக அதாவது அரச திணைக்களங்களுக்கு எதிராக உள்நாட்டின் சட்ட வரையறைகளுக்குள் போராடுவது.
இம்மூன்று விடயங்களையும் முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை சட்டச் செயற்பாட்டு நிறுவனங்கள் உண்டு ?எத்தனை சட்ட செயற்பாட்டாளர்கள் உண்டு?இது ஒரு பாரதூரமான கேள்வி. அனைத்துலக அளவில் நீதியைப் பெறப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் சட்ட செயற்பாட்டாளர்களை விடவும் அரசியல்வாதிகளாக மாறிய தொழில்சார் சட்டத்தரணிகளும் நீதிபதிகளுமே அதிகமாக இருப்பது. இப்படிப்பட்டதொரு பின்னணியில் வைத்துத்தான் சுமந்திரனையும் தவறாசாவையும் அம்பிகாவையும் எடை போட வேண்டும்.
மேலும் இச்சட்டவாளர்களுக்கு இடையிலான மோதலை அரசியல் அர்த்தத்தில் மேலும் ஆழமாகப் பார்க்கவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினை எனப்படுவது ஒரு சட்டப் பிரச்சினையல்ல . அது ஒரு அரசியல் பிரச்சினை. சட்டமன்றங்களில் கெட்டித்தனமாக தர்கபூர்வமாக வாதாடுவதன் மூலமாகவும் அல்லது நீதிமன்றங்களில் வாதாடி வெல்வதன் மூலமும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுவிட முடியாது. அதற்காக அரசியல் ரீதியாகப் போராட வேண்டும்.
சட்டத்துறை நிபுணத்துவம் எனப்படுவது எதிர்தரப்பை கவர்ச்சியான தர்க்கத்தின் மூலம் தோற்கடிக்க உதவக்கூடும். ஆனால் ஒரு மேற்கோளில் கூறப்படுவதுபோல “தர்க்கத்தின் இறுதி நோக்கம் எதிர்த்தரப்பை தோற்கடிப்பது அல்ல நீதியை நிலைநாட்டுவதுதான்”. இப்படிப் பார்த்தால் கடந்த பல தசாப்த கால சட்டவாளர்களின் அரசியல் எனப்படுவது தமிழ் மக்களுக்கு பொருத்தமான நீதியை பெற்றுத்தர தவறிவிட்டது.ஒரு சட்டத்துறை தகமை மட்டும் அரசியல்வாதியாக இருப்பதற்கு போதாது. அரசியல் எனப்படுவது பல துறைசார் நிபுணத்துவங்களின் கூட்டு ஒழுக்கம். அவ்வாறான கூட்டு ஒழுக்கமுடைய ஒருவரால்தான் தமிழ் மக்களின் அரசியலை அதற்குரிய பொருத்தமான வடிவத்தில் முன்னெடுக்க முடியும்.
எனவே தமிழ்மக்களின் அரசியல் விடுதலை எனப்படுவது சட்டவாளர்கள் வழக்காடிக் கிடைத்துவிடாது. அது கம்பன் கழகத்தின் வழக்காடு மன்றங்களில் கிடைக்கும் தர்க்கப் பரவசத்தைப் போன்றதல்ல. எனவே கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவு எனப்படுவது சட்டக் செயல் வாதத்திற்கும் தொழிசார் வாதத்துக்கு இடையிலானது அல்ல. அது முழுக்க முழுக்க ஆசனப் பங்கீட்டுக்கானது.
இம்மோதலின் விளைவாக சுமந்திரனுக்கு எதிரான ஓர் அணிதிரட்டி வேகமாக நடைபெறுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இது ஒரு தோற்றமா அல்லது உண்மையா ?ஏற்கனவே சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்களப் பேட்டியையடுத்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனும் சார்ள்ஸ் நிர்மலநாதனும் சுமந்திரனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.ஏனெனில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் உணர்வலைகள் சுமந்திரனுக்கு எதிராக காணப்படுகின்றன என்று அவர்கள் நம்பியதுதான் காரணம். திருக்கேதீச்சரம் வளைவு விவகாரத்தில் இந்துக்களுக்கு சார்பாக சுமந்திரன் வழக்கை கையில் எடுத்திருப்பதனால் கத்தோலிக்கர்கள் அவர்மீது கோபமாக இருக்கிறார்கள். எனவே தமது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு சுமந்திரனை எதிர்க்க வேண்டிய தேவை அந்த இரண்டு மன்னார் மாவட்ட அரசியல்வாதிகளுக்குமுண்டு. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கட்சியின் வாக்குகளை வெளி வழிய விடாது பாதுகாக்க கூடும். அவர்கள் சுமந்திரனை உண்மையாகவே இலட்சிய பூர்வமாக எதிர்ப்பதென்றால் கட்சியின் உயர்மட்டக் கூட்டங்களிலும் அதை காட்ட வேண்டும்.
இப்படித்தான் ஆர்னோல்டும். அவர் ஏற்கனவே சுமந்திரனோடு சேர்த்து பார்க்கப்பட்டவர். இப்பொழுது தேர்தலில் நிற்கிறார். அவருடைய வாக்கு வங்கி பெருமளவிற்கு கரையோரப் பகுதிகளில் வாழும் கத்தோலிக்கர்கள்தான். சுமந்திரனின் கூற்றுக்கள் அந்த மக்களுடைய மனதை புண்படுத்தி இருக்கலாம் என்று ஆனோல்ட் கருதுகிறாரா ?மேலும் தமிழ் கத்தோலிக்கர்களின் வாக்குகள் எத்திசை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்பதனை பெருமளவுக்கு தீர்மானிப்பது திருச்சபையே என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. சுமந்திரனின் கருத்துக்களால் அதிருப்தி அடைந்திருக்கும் கத்தோலிக்க மதகுருக்கள் தமது பிரசங்கங்களில் வாக்காளர்களை சுமந்திரனுக்கு எதிராக திருப்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் ஆர்னோல்ட் தன்னை சுமந்திரனிலிருந்து வேறானவராகக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல கட்சிக்குள் ஓர் இளைஞர் அணி துடிப்பாக செயற்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த அணிக்குள் மாவையின் மகனும் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.. இந்தக் இளைஞரணி கட்சிக்குள் சுமந்திரனுக்கு எதிரான ஓர் அணிச் சேர்க்கையை தூண்டி வருவதாக ஒரு தோற்றம் எழுந்திருக்கிறது. இந்த அணியின் நோக்கம் கட்சிக்குள் அதிருப்தியடைந்து வெளியேறக்கூடிய தரப்புகளை கவர்ந்திழுப்பதுதான் என்று கருத இடமுண்டு.
இந்த அணி சுமந்திரனை மட்டும் வில்லனாகக் காட்டப் பார்க்கிறது. ஆனால் இங்கு பிரச்சினையாக இருப்பது சுமந்திரன் மட்டுமல்ல. அவரை கட்சிக்குள் கொண்டுவந்து இப்போதிருக்கும் ஸ்தானத்திற்கு அவரை உயர்த்தியது சம்பந்தர் தான்.எனவே சம்பந்தரும் இதில் குற்றச்சாட்டுக்கு உரியவரே. மட்டுமல்ல கட்சிக்குள் தமது அடுத்தடுத்த கட்ட பதவி உயர்வுகளை பாதுகாக்கும் நீண்டகால நோக்கத்தோடு சுமந்திரனைச் சுதாகரித்துக் கொண்டு போகும் ஒரு தொகுதியினர் உண்டு. இவர்களும் கட்சி வாக்குகளை பாதுகாப்பதன் மூலம்தான் தங்களுடைய எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். இவர்களும் சுமந்திரனைப் பாதுகாக்கிறார்கள்.எனவே இங்கு சுமந்திரனை மட்டும் பிரச்சினையாகக் காட்டுவது உண்மையான பிரச்சினையை மறைத்துவிடும் கூட்டமைப்பே பிரச்சினைதான். ஒரு தமிழ் முதுமொழி உண்டு. “உப்பிட்ட பாண்டமும் உண்மையில்லா நெஞ்சும் தட்டாமல் தானே உடையும்?