தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்?

சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் “இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே  தேவைப்படுகிறது” என்று கூறியிருந்தார்.அதாவது ஒரு புலமையாளர் தனது ஆன்மாவை இழந்து பதவிகளையும் பொறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வதை  விடவும் தனது பதவிகளையும் சுகங்களையும் துறந்து தனது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்படவே  அவர் அவ்வாறு கூறியிருந்தார் .

யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான குருபரனுக்கும் அறிவியல் செயற்பாட்டுச் சுதந்திரமா? அல்லது உத்தியோகமா? என்ற முடிவை எடுக்க வேண்டிய ஓர் அறிவியல் மற்றும் அரசியல் சூழல் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாக இருக்கும் சட்ட புலமையாளர்கள் தமது கடமை வேளைகளில் நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுக்கக் கூடாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு பரிந்துரைத்ததை முன்பிருந்த பேரவை அங்ககீகரித்திருந்தது. அதற்கு எதிராக குருபரன் ஒரு வழக்கைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு முடிவதற்கிடையிலேயே அவர் தன் பதவியைத் துறந்திருக்கிறார். அம்முடிவை எடுத்த பின் தான் முன்பைவிட நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் சட்டத்தரணிகள் அதிகம் காணப்படும் ஒரு துறை அரசியல் துறையாகும். பெரும்பாலான தமிழ் கட்சிகளின்  முன்னணி உறுப்பினர்களில் சட்டத்தரணிகள் பலர் உண்டு.  பெரும்பாலான தமிழ் சட்டத்தரணிகள் இனப்பிரச்சினையை சட்டக் கண் கொண்டே பார்க்கிறார்கள். ஆனால் இனப்பிரச்சினை சாராம்சத்தில் ஓர் அரசியல் பிரச்சினை.அதை அரசியல் ரீதியாகத்தான் தீர்த்துக் கொள்ளலாம்.அரசியல் எனப்படுவது சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கூட்டு ஒழுக்கமாகும் எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வை காண விழையும் அரசியல் தலைவர்கள் அதை முதலில் ஓர் அரசியல் பிரச்சினையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இனப்படுகொலைக்க எதிரான நீதியைப் பெறமுடியாது என்று வாதிடும் பலரும் அதை ஒரு சட்ட விவகாரம் ஆகவே பார்க்கிறார்கள். ஆனால் இனப்படுகொலைக்க எதிரான பரிகார நீதியோ அல்லது  நிலைமாறுகால நீதியோ இரண்டுமே சட்ட விவகாரங்கள் அல்ல. அவை அரசியல் விவகாரங்கள். இரண்டுமே அரசியல் நீதிகள் தான். ஈழத்தமிழர்கள் கேட்பது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் உலக சமூகமும் ஐநாவும் வழங்கத் தயாராக இருப்பது நிலைமாறுகால நீதியை.  இரண்டுமே  அரசுகளின் நீதிகள்தான். 

தமிழ் அரசியலில் இப்பொழுது அதிகம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சட்டத்தரணியாகிய சுமந்திரனும் விவகாரங்களை சட்டக் கண் கொண்டே பார்க்கிறார். நடந்தது இனப்படுகொலை என்பதனை சட்டப்படி நிரூபிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.இதுவிடயத்தில் அவர் ஒரு சட்டத்தரணியாகத்தான் காணப்படுகிறார். தனக்கு வாக்களித்த மக்களின் பிரதிநிதியாக அல்ல.

அதேசமயம் சுமந்திரனை போலவே கொழும்பு மையத்தில் வாழ்ந்த விக்னேஸ்வரன் அது இனப்படுகொலை என்று கூறுகிறார். இத்தனைக்கும் அவர் சுமந்திரன் இயங்கும் அதே நீதி பரிபாலன கட்டமைப்பில் மிக உயர் பதவிகளை வகித்தவர். பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்புக்குள் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்தவர். அவர் கூறுகிறார் நடந்தது இனப்படுகொலை என்று. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுகிறது. ஆயுதம் இல்லாத போராட்டங்களையும் எப்படி பயங்கரவாத தடைச் சட்டத்துக்குள்  சிக்க வைக்கலாம் என்று சிந்திக்கிறது. இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்றே கருதுகின்றன. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லும்போது அதற்கு அதிகரித்த அழுத்தம் இருக்கும். அந்த வார்த்தைகளுக்கு அரசியல் சட்ட மற்றும் ராஜிய அந்தஸ்தும் அதிகம் என்று மு.திருநாவுக்கரசு கூறுகிறார்.

கூட்டமைப்பு ஐநாவின்  நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொண்டுள்ளது. நிலைமாறுகால நீதியின் கீழ் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்புக்கு ரணில் விக்ரமசிங்கவோடு சேர்ந்து கூட்டமைப்பும் வெள்ளை அடித்தது. மாறாக நிலைமாறுகால நீதி சூழலுக்குள் இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்பை பரிசோதிக்கும் விதத்திலான எத்தனை வழக்குகளை கூட்டமைப்பு நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருக்கிறது?

இவ்வாறு இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்பின் விரிவை; நேர்மையை சோதனைக்கு உள்ளாக்கும் ஒரு வழக்கை குருபரன் முன்னெடுத்தார். நாவற்குழியில் ஒரு சுற்றிவளைப்பின் பின் காணாமல் ஆக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்கள் தொடர்பான வழக்கு அது. அந்த வழக்கில் அவருடைய ஈடுபாட்டை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடுதான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவருடைய தொழில் சார்ந்து அப்படியோர் அறிவித்தலை விட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தவிர தமிழ் பகுதிகளில் முதன் முதலாக தொடங்கப்பட்ட மூலோபாய  கற்கைகளுக்கான ஒரு சிந்தனைக் குழாம் ஆகிய “அடையாளம்” நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் அவர்மீது அழுத்தங்களை பிரயோகிப்பதும் அரசாங்கத்தின் நோக்கம் என்று  கருதப்படுகிறது. 
அதாவது பொழிவாகச் சொன்னால் நிலைமாறுகால நீதியின் கீழ் இலங்கைத் தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் விரிவை ; நேர்மையை பரிசோதிக்க முற்பட்டஒரு சட்டப்  புலமையாளர் இப்பொழுது தனது தொழிலைத் துறக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இது விடயத்தில் அவர் வேலை செய்யும் பல்கலைக்கழக ஆசிரிய சமூகமும் மாணவ சமூகமும் அவருக்காக போராடவில்லை. ஒரு சட்டப் புலமையாளர் தனது புலமைச்  செயற்பாட்டு சுதந்திரத்துக்காக போராடும் ஒரு விடயத்தில் யாழ் பல்கலைக்கழகம் ஏன் பேசாமல் இருந்தது?

பல்கலைக்கழகம் இது விடயத்தில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் கடந்த 11 ஆண்டுகளாக பேசாமல் தான் இருந்து வருகிறது. பல்கலைக்கழகத்தின்  நுண்கலைத்  துறையை சேர்ந்த விரிவுரையாளர் கண்ணதாசன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார் . அவர் தொடர்பாக பல்கலைகழகம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அவர் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். ஒரே நீதி பரிபாலனக் கட்டமைப்புக்குள் ஒருமுறை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட அவருக்கு இரண்டாவது தடவையும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் தமிழ் சட்ட விற்பன்னர்கள் யாருமே கேள்வி எழுப்பவில்லை. குறிப்பாக நிலைமாறுகால நிதியின் கீழ் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் புனர்வாழ்வு ஒரு தண்டனையா இல்லையா என்ற முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமாறுகால நீதிக்கு ஒப்புதலை கொடுத்த கூட்டமைப்பின் சட்ட விற்பன்னர்கள் யாருமே அதை கேள்விக்குட்படுத்தவில்லை.

கண்ணதாசனுக்காக அவருடைய மாணவர்களும் போராடவில்லை. சக ஆசிரியர்களும் போராடவில்லை. அதன்பின் முன்னாள் துணைவேந்தர் திடீரென்று பதவி இறக்கப்பட்டார். ஒரு இடைநிலைப் பள்ளியின் அதிபரைக் கூட அப்படிப் பதவி நீக்க முடியாது. மாணவர்கள் ஒழுங்கு படுத்திய ஒரு விழாவில் நாட்டுக்கு விரோதமான வாசகங்கள் எழுதப்பட்ட ஒரு விருதை துணைவேந்தர் ஒரு வெளிநாட்டு விருந்தாளிக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவ்வாறு பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காகவும் பல்கலைக்கழகம் போராடவில்லை.

அதன்பின் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் படத்தை வைத்திருந்ததாக கூறி இரண்டு பல்கலைக்கழக மாணவ தலைவர்களின் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் இருவரும் இப்பொழுது படிப்பை முடித்து விட்டார்கள். ஒரு மாணவ சமூகமாக இருந்த பொழுது அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இப்பொழுது அவர்கள் உதிரிகளாக வெளிவந்த பின்னரும் அவர்களைப் பின் தொடர்கிறது. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பல்கலைக்கழகம் போராடவில்லை. மாறாக அது விடயத்தில் மாணவ சமூகம்  அரசாங்கத்தோடு ஒரு “டீலுக்கு” போக முயற்சித்ததாக தகவல் உண்டு.

கடந்த 11 ஆண்டுகளாக யாழ் பல்கலைக்கழகம் போராடத் திராணியற்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நினைவு கூர்தலை சாகச உணர்வோடு முன்னெடுத்ததைத் தவிர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று நடத்திய பெரும்பாலான போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் கால்நடையாக அநுராதபுரத்திற்கு சென்றார்கள். ஆனால் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளை ஒருங்கிணைத்து ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் ஆனால் உடன்பாட்டில்  கையெழுத்திட்ட கட்சிகள் உடன்பாட்டை மீறியபோது அவற்றைக் கட்டுப்படுத்த மாணவர்களால் முடியவில்லை.

ஜேவிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரசேகரன் ஒருமுறை சொன்னார் “இலங்கைத் தீவிலேயே அதிகம் போராட வேண்டிய தேவையுள்ள ஒரு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் தான் ஆனால் இலங்கைத் தீவிலே போராடும் சக்தியற்ற பல்கலைக்கழகமும் அதுதான்.”  என்ற தொனிப்பட. 

இலங்கைத்தீவில் பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் சிங்கள மாணவர்களுக்கு படைத்தரப்பு உணவுப் பொதிகளை  வழங்கியது  யாழ் பல்கலைக்கழகத்தில் தான்.  வெசாக்  கொண்டாட்டங்களை படைத்தரப்பு முன்னின்று ஒழுங்கமைப்பதும்  யாழ் பல்கலைக்கழகத்தில் தான். அரசாங்கத்துக்கு எதிராக போராடிய காரணத்துக்காக சில மாணவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டதும் யாழ் பல்கலைக்கழகத்தில் தான். ஒரு படத்தை வைத்திருந்ததற்காக இரண்டு மாணவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தான்.

கடந்த 11 ஆண்டுகளாக யாழ் பல்கலைக்கழகம் போராட முடியாது திணறிக் கொண்டிருக்கிறது. அதற்கு தலைமை தாங்க எந்தக் கட்சியாலும் முடியவில்லை. எந்த அரசியல் இயக்கத்தாலும் முடியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு போராட்டத்தை முழுமையாக முன்னெடுப்பதில்லை. ஓர் அரசியல் இயக்கம் அல்லது கட்சிதான் மாணவர்களை முன்னணிப் படையாக நிறுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதுண்டு. ஆனால் எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு கிடையாது.
இது ஒரு தேர்தல் காலம். தேர்தலுக்கு இன்னமும் மூன்று கிழமைகளே  உண்டு. ஆனால் மக்களுக்கு வழிகாட்டும் அறிக்கை எதையும் மாணவ சமூகம் இன்றுவரையிலும் வெளியிடவில்லை. எப்படிப்பட்ட ஓர் அறிக்கையை  வெளியிடுவது என்பதில்  மாணவ ஒன்றியத்துக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறப்படுகிறது. தமிழ்த்  தேசிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கேட்கிறது இன்னொரு தரப்பு அது தேவையில்லை என்று கூறுகிறதாம்.
இதுதான் யாழ் பல்கலைக்கழகம்.

இப்படிப்பட்ட துர்ப்பாக்கியமான ஓர் அரசியல்  மற்றும் அறிவியற் சூழலில் குருபரனுக்காக  பல்கலைக்கழகம் போராடும் என்று எதிர்பார்க்கலாமா? அறிவுஜீவியாக இருப்பதே தனது விருப்பத் தெரிவு என்று  குருபரன் கூறுகிறார். ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் அறிவியல் சூழலானது அவரை ஒரு சட்டச் செயற்பாட்டாளராக வாழுமாறு தூண்டுகின்றதா?;

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *