தமிழ்த் தேசியப் பேரவை ?

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில்  துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது  என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும்.

இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவது இச்செய்தியின் மூலத்தை அதன் உண்மைத் தன்மையை ஒருவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்கள். கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு பத்திரிகையின் ஊடகவியலாளரே  இந்த செய்தியின் மூலம் என்று ஒரு தகவல் கூறுகிறது. அண்மையில் இந்திய தூதுவர் சம்பந்தரை சந்தித்த பொழுது இதுதொடர்பாக பேசப்பட்டது என்ற தொனிப்பட சம்பந்தர் குறிப்பிட்ட ஊடகவியலாளருக்கு சொன்னதாகவும் அவர்தான் விடயத்தை ஊடகங்களுக்கு கசிய விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கூட்டமைப்பின் உயர்மட்டமோ அல்லது இந்திய தூதரக வட்டாரங்களோ இச்செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

எனினும் அவ்வாறு இந்தியா கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்தியா போன்ற பேரரசுகளை அணுகுவதற்கும் ஐநா போன்ற உலகப் பொது நிருவனங்களை அணுகுவதற்கும் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் நிறுவனங்களையும் அணுகுவதற்கும் தமிழர் தரப்பில் பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட குழுக்கள் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுக்களையும் உருவாக்க வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். ஆராய்ச்சி மையங்களையும் சிந்தனைக் குழாம்களையும் உருவாக்காமல் தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த முடியாது. தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துவதென்றால்  அதற்கு முதலில் தமிழ் அறிவியலும் அரசியலும் ஒன்று மற்றதை இட்டு நிரப்ப வேண்டும். ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு ஈழத்தமிழர்கள் மத்தியில் இல்லை. பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் சட்டவாளர்களாக இருப்பதனால் அவர்கள் எல்லாவற்றையும் சட்டக் கண்கொண்டு பார்க்கிறார்கள். மாறாக அரசியலை ஒரு பல்துறை ஒழுக்கமாக பரந்த தளத்தில் அவர்கள் விளங்கிக் கொள்வதாக தெரியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் ஒரு செய்தி வந்தது. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய ஓரமைப்பை உருவாக்கி இருக்கிறார் என்று. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வியை அடுத்து சுமந்திரன் கிழக்கில் அதிகம் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. குறிப்பாக காணி விவகாரங்களில் அவர் தனி ஒருவராக வழக்குகளை தாக்கல் செய்வதாகத் தகவல்கள் வெளிவந்தன. அது ஒரு பொருத்தமான நடவடிக்கைதான். எனினும் அதனை ஒரு தனி ஓட்டமாக ஓடாமல் ஒரு குழு நிலைச் செயற்பாட்டாக மாற்றுவது அவசியம் என்று நான் ஐ.பி.சி ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது குறிப்பிட்டிருந்தேன். சுமந்திரன் அதனை ஒரு தனிநபர் செயற்பாடாக முன்னெடுக்காமல் அதற்குப் பொருத்தமான ஒரு சட்டச் செயற்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய சட்டவாளர்களையும் இணைத்தால் செயற்படுவது இலகுவாக இருக்கும் என்றும் அந்த நிகழ்ச்சியில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் ஒரு சட்டவாளர் அமைப்பை  உருவாக்கியிருக்கிறார். அவர் இதைச் செய்வதற்கு பல கிழமைகளுக்கு முன்னரே மணிவண்ணன் தனக்கு ஆதரவான சட்டவாளர்கள் உள்ளடக்கிய ஓரமைப்பை உருவாக்குவதற்கான சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தார். மணிவவண்ணனோ அல்லது சுமந்திரனோ யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக இப்படிப்பட்ட சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்குவது வரவேற்கத்தக்கதே.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் பெருகிய அளவுக்கு செயற்பாட்டாளர்கள் பெருகவில்லை. அவ்வாறு உருவாகிய செயற்பாட்டாளர்களும் சில புறநடைகளைத் தவிர அதிகமானவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்கள். அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பவர்கள். அல்லது புலம் பெயார்ந்தவர்களின்  காசில் தங்கியிருப்பவர்கள்.

அதேசமயம் தென்னிலங்கையில் யுத்த வெற்றி வாதம் தன்னை மேலும் அறிவியல் மயப்படுத்திக் கொண்டு விட்டது. கோத்தாபய ராஜபக்ச தன்னை தவிர்க்கப்பட முடியாத ஒரு ஜனாதிபதி வேட்பாளராக கட்டியெழுப்பும் நோக்கத்தோடு வியத்மக என்ற  சிந்தனைக் குழாத்தை உருவாக்கினார். அந்த அமைப்பே அவருடைய அரசியல் பாதையை அதிகபட்சம் தொழிற்திறன் கொண்டவர்களின் ஆலோசனையோடு வடிவமைத்து கொடுத்திருக்கிறது. அவருடைய தேர்தல் வெற்றிகளுக்கும் அவர் எடுக்கும் பெரும்பாலான அரசியல் முடிவுகளுக்கும் பின்னால் அந்த அமைப்பே நிற்பதாகக் கருதப்படுகிறது. இதைக் குறித்து அண்மையில் மனோகணேசன் பின்வருமாறு கூறியிருக்கிறார்……“அரசுக்குள் இன்னுமொரு குட்டி அரசாங்கம் செயற்படுகிறது. அதுதான் வியத்மக என்ற ஒரு சான்றோர் அமைப்பு .பிரதமருக்குச் செல்வாக்கு அதிகாரத்தால் தங்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும் என்பதால் அவர்கள் ஜனாதிபதியைச் சுற்றி வளைத்துச்  செயற்படுகிறார்கள்.”

இவ்வாறு ஒரு பெரிய இனம் அதுவும் அரசுடைய  தரப்பு ; வெற்றி பெற்ற தரப்பு தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு சிந்தனைக் குழாம்களை  உருவாக்கியிருக்கும் ஒரு சிறிய தீவில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள் அதுவும் சிறிய இனம் அதிலும் குறிப்பாக அரசற்ற தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தின் போதும் தமிழ் மக்களிடம் சிந்தனைக் குழாம்கள் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்துக்கு பின்னரான கடந்த பத்தாண்டுகளிலும் வினைத்திறன் மிக்க சிந்தனைக் குழாம்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அடையாளம் என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழாமும் திருகோணமலையில் மூலோபாயக் கற்கைகளுக்கான நிலையம் என்ற ஒரு சிந்தனைக் குழாமும் உண்டு. ஆனால் அவை முழுவளர்ச்சி பெறவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வறண்ட பின்னணியில் மணிவண்ணனும் சுமந்திரனும் சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்குவது வரவேற்கத்தக்கதே. தமிழ் மக்கள் மத்தியில் காணிப் பிரச்சினைகள் ; அரசியல் கைதிகளின் விவகாரம்;  மரபுரிமை சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை; இல்ல வன்முறைகள்; பெண்கள் சிறுவர் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் போன்ற விவகாரங்களை கையாளும் செயற்பாட்டு அமைப்புகள் வேண்டும். நகர்ப்புற ஆஸ்பத்திரிகளில் இருந்து தொலைவிலிருக்கும் கிராமங்களுக்கு உதவி புரிவதற்கு மருத்துவ செயற்பாட்டாளர்கள் தேவை. கல்வி செயற்பாட்டாளர்கள் தேவை.

எனவே இது விடயத்தில் மணிவண்ணனும் சுமந்திரனும் உருவாக்க முயலும் சட்டவாளர்கள் அமைப்பை பாராட்ட வேண்டும். இது போன்ற வெவ்வேறு துறைசார் நிபுணர்களை கொண்ட பல்வேறு குழுக்களை உருவாக்குமிடத்து தமிழ் அரசியல் அதிகம் அறிவியல்பூர்வமானதாக மாறும்.

அண்மையில் காலைக்கதிர் பத்திரிகையில் ஒரு தலைப்புச் செய்தி வந்திருந்தது. அதில் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்கப் போவதாக கூறப்பட்டிருந்தது. தென்னாபிரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆகிய ஜஸ்மின் சூக்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையர் ஆகிய நவநீதம்பிள்ளை போன்றோரை உள்ளடக்கி அந்த தமிழ் தேசிய பேரவை உருவாக்கப்படும் என்றுமிருந்தது. இச்செய்தி வெளிவருவதற்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தில் டாண் டிவியில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அந்நிகழ்ச்சி டாண் டிவியில் ஒளி பரப்பப்படுவதற்கு  முதல் நாளே விடயத்தை காலைக்கதிர் பத்திரிகை செய்தியாக்கிவிட்டது என்று தெரியவருகிறது.

யஸ்மின் சூகாவின் ருவிட்டர் தளத்தில் தான் அவ்வாறு தமிழ் தேசிய பேரவையில்  இணையவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பில் மாவை சேனாதிராஜாவைக்  கேட்டபொழுது ஜஸ்மின் சூக்கா போன்றவர்களை உள்ளடக்கி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றே தான் கூறியதாகவும் அவர்களை இணைத்துக் கொண்டு விட்டதாகத் தான் கூறவில்லை என்றும் பதிலளித்தார்.

மாவை எந்த உள்நோக்கத்தோடு செயற்படுகிறார் என்பது தனியாக ஆராயாப்ட வேண்டும் ஆனால், ஜஸ்மின் சூக்கா நவிப்பிள்ளை போன்ற உலகளாவிய ஆளுமைகளை இணைத்துக் கொண்டு செயற்படும் பொழுது தமிழ் மக்களின் பலம் அதிகரிக்கும். 2009க்குப்பின் ஈழத்தமிழர்களுக்கு ஜஸ்மின் சூக்கா, நவிப்பிள்ளை , கொலம் மக்ரே போன்ற பல்வேறு உலகளாவிய ஆளுமைகள் நண்பர்களாக கிடைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய நிபுணர் குழுக்களை உருவாக்கும் பொழுது தமிழகம் தமிழ் புலம் பெயர் சமூகம் இரண்டிலுமிருக்கக்கூடிய நிபுணர்களை உள்ளீர்க்க வேண்டும்.ஜஸ்மின் சூக்கா நவிப்பிள்ளை போன்ற உலகளாவிய ஆளுமைகளின் ஒத்துழைப்பை எப்படிப் பெறுவது என்று சிந்திக்கலாம்.

2015ஆம் ஆண்டு நவிப்பிள்ளை அம்மையார் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் தமிழ் மக்கள் தமது அரசியலை அறிவியல் மயப்படுத்தத் தவறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒரு பெண்மணி மேற்படி கருத்தை நவிப்பிள்ளை அம்மையார் 2006ஆம் ஆண்டு கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது 2020. தமிழ் மக்கள் தமது அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்றால் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளிலும் நிபுணர் குழுக்களை உருவாக்க வேண்டும்.

உதாரணமாக அண்மையில் அரசாங்கம் தொழில் முனைவோருக்கு காணித் துண்டுகளை வழங்கப் போவதாக அறிவித்தது. இதுவிடயத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பை தமிழ் மக்கள் எப்படி எதிர் கொள்வது என்று சிந்தித்து அதற்கு வேண்டிய தந்திரோபாயங்களையும் உத்திகளையும் வகுப்பதற்கு எந்த ஒரு தமிழ் கட்சியாவது சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை ஒன்றுகூட்டிக் கலந்துரையாடியதா? இல்லையே.

இதுதான் பிரச்சினை. 2006 ஆம் ஆண்டு தான் கூறியதையே நவிப்பிள்ளை அம்மையார் இரண்டாயிரத்து இருபத்தியாறிலும் கூறும் ஒரு நிலைமை வரக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *