கார்த்திகை 2020

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்
உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்
உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோ
அவனிடமே வேலை செய்கிறான்
விதைக்கப்பட்ட யாரும் முளைக்கக் கூடாது என்று

ஒவ்வொரு நாளும்
கடவுளைப் பிரார்த்திக்கிறவன்
உனது மக்களின் பிரதிநிதியாகி விட்டான்

நிறைவேறாத கனவு நீ
நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரன் நீ
எல்லாப் போகங்களிலும் விற்கப்படும் நினைவும் நீ
எல்லா நீதிமன்றங்களிலும்
அவமதிக்கப்படுகிறாய்

ஈமத்தாழி ஒன்றுதான்
உனக்கிப்பொழுது பாதுகாப்பான இடம்
இல்லாத நடுகல்லின் மீது
சிந்தும்
சூடான துளிக் கண்ணீரில்
இளைப்பாறு
பீட்சாவுக்காக யாருமிங்கே போராடவில்லை என்பதை
உனது மக்கள் நிரூபிக்கட்டும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *