இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள். சாட்சிகளைப் பலப்படுத்துவதன் மூலமும் சாட்சிகளை உலகம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் விஞ்ஞானபூர்வமாக முன்செலுத்துவதன் மூலமும்தான் தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அனைத்துலக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், சாட்சிகளைச் சோரச் செய்யும் நடவடிக்கைகளே அதிகரித்து வருகின்றன. முன்பு சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இப்பொழுதோ சோரச் செய்யப்படுகிறார்கள். இது சாட்சிகளின் காலம் என்பதன் அடிப்படையில் தங்களுக்குரிய முக்கியத்;துவத்தையும் இன்றியமையாத் தன்மையையும் சாட்சிகள் உணர்ந்து வைத்துள்ளார்களா? அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது யாருடைய பொறுப்பு?
அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தபபட்டன.
இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கால எல்லை குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி விரைவாகச் செலவழிக்கலாம். அதற்கு எப்படிக் கணக்குக் காட்டலாம் என்ற அவசரமே தெரிந்தது.
அது தான் உண்மை என்று ஐ.என்.ஜி.ஓ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமாறு கால கட்ட நீதி குறித்து சாதாரண சனங்களுக்கு விழிப்பூட்டுமாறு ஐ.நா. ஒரு தொகுதி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏறக்குறைய 5000 டொலர்கள் வழங்கியுள்ளதாம். அந்தப் பணம் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்துக்குள் செலவழிக்கப்பட வேண்டுமாம்.
இதில் சாதாரண சனங்கள் விழிப்பூட்டப்படுகின்றார்களோ இல்லையோ அதில் பங்கேற்பவர்களுக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் பயணச் செலவாகத் தரப்படுகிறது. பொதுவாக சிற்றூண்டியும் குடிபானமும் தரப்படுகின்றன. சிலசமயம் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இதில் பங்குபற்றுபவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்கள் ஒன்றில் அடிமட்டச் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிலசமயம் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவர்கள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. அடிமட்டச் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த யாருக்கு இது தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டுமோ அவர்களில் அநேகர் இவ்வாறான கருத்தரங்குகளுக்கு வருவது குறைவு. பதிலாக, குடும்பப் பெண்களே அதிகமாகப் பங்குபற்றுகின்றார்கள். ஆண்கள் இக்கருத்தரங்குகளுக்கு வந்தால் அவர்களுடைய ஒரு நாள் உழைப்பு கெட்டுவிடும். அந்த உழைப்பை விட இக்கருத்தரங்குகளில் வழங்கப்படும் பயணச் செலவு குறைவானது. எனவே, பெருமளவுக்குப் பெண்களே வருகை தருவதுண்டு. அவர்களில் காணாமற் போனவர்களின் உறவினர்களும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பதுண்டு.
இவ்வாறான கருத்தரங்குகள் ஆட்சிமாற்றத்தின் பின்னிருந்து தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் வளவாளர்களாகப் பங்குபற்றும் எல்லாருமே தாங்கள் கூறவந்த விடயத்தை தெளிவாகவும் கூர்மையாகவும் குறிப்பாக, தமிழ் மக்களின் நோக்கு நிலைகளிலிருந்தும் எடுத்துக் கூறவல்லவர்கள் என்று சொல்வதற்கில்லை. சில கருத்தரங்குகளில் வெளிநாட்டு நல்லிணக்கச் செயற்பாடுகளில் பங்குபற்றியவர்களால் எழுதப்பட்ட பிரசுரங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் சில மோசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று பெரும்பாலான பங்குபற்றுனர்கள் விளங்கிக் கொள்வதே இல்லை. இது பற்றி வளவாளர்களுக்கோ கருத்தரங்கை ஒழுங்கு படுத்தும் நிறுவனத்துக்கோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
அப்படியானால், இக்கருத்தரங்குகளின் இறுதி இலக்கு என்ன? அடிமட்டச் சிவில் அமைப்புக்களை விழிப்பூட்டுவதா? அல்லது சில என்.ஜி.ஓக்களுக்கு சம்பளம் வழங்குவதா? இதில் உள்ள மிகக் கொடுமையான பக்கம் எதுவெனில், இவற்றில் பங்குபற்றும் சாதாரண சனங்களுக்கு என்ன நடக்கிறது என்பது அநேகமாக விளங்குவதே இல்லை. தங்களையும் பங்காளிகளாக வைத்துக்கொண்டு ஒரு அனைத்துலக நாடகம் அரங்கேற்றப்படுவது குறித்து ஆழமாகச் சிந்திக்குமளவிற்கு அவர்கள் அரசியல் மயப்படுத்தபபட்டும் இல்லை.
அவர்களில் பலருக்கு ஒரு கருத்தரங்கிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அங்கு வந்தால் காணாமற்போன தமது உறவுகளைக் குறித்து ஏதும் நற்செய்தி கிடைக்கக்கூடும் என்ற நப்பாசையோடு அவர்களும் வருகிறார்கள். அல்லது திரும்பக் கிடைக்காத தமது காணி பற்றி ஏதும் புதிய திரும்பம் ஏற்படப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன்; வருகிறார்கள். ஆனால், கருத்தரங்கிலோ அவர்களுக்கு என்னவென்றே விளங்காத பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விளங்கக் கடினமான வார்;த்தைகளைப் பிரயோகித்து யாரோ ஒருவர் வகுப்பெடுக்கிறார். அவரிடம் அவர்கள் கேட்க வந்தது தமது இழப்புக்களைப் பற்றி. ஆனால், அவர் எடுக்கும் வகுப்போ அவர்களுக்குப் பொதுவாக விளங்குவதில்லை.
கேள்வி நேரங்களில் அவர்கள் வழமை போல தமது கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றிற்கு வழமைபோல சலிப்பூட்டும் பதில்களே வழங்கப்படுகிறன. இதனால், அவர்கள் சலிப்பும் விரக்தியும் அடைகிறார்கள். ஏற்கனவே, ஆணைக் குழுக்களுக்கு முன் சாட்சியமளிக்கப் போய் அவர்கள் சலிப்படைந்துவிட்டார்கள். இந்நிலையில் இப்படிப்பட்ட வகுப்புக்களுக்குப்போய் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்ததுபோல குந்தியிருந்துவிட்டு பயணச் செலவையும் வாங்கிக் கொண்டு திரும்பி வருகிறார்கள். இனி இப்படிக் கூப்பிட்டால் வரக்கூடாது என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு.
ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் றெடிமேற் ஆர்ப்பாட்டாக்கார்களாகப் பயன்படுத்தப்பட்ட மக்கள் அவர்கள். அந்நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரும்பாலான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் அவர்களே முன்வரிசையில் காணப்பட்டார்கள். சுலோகங்களையும் காணாமற்போன தமது உறவுகளின் படங்களையும் காவிக் கொண்டு அவர்கள் முன்னால் வந்தார்கள். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சில வெளிநாட்டுத் தூதரகங்கள் போன்றவற்றால் ஊர்வலங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து அவர்கள் ஏற்கனவே களைத்துப்போய்விட்டார்கள். ஒருவேளைச் சாப்பாட்டை நிறுத்தி அந்தக் காசில் ஆணைக்குழுவின் விசாரணைகளில் பங்கேற்பதற்காக பயணங்களைச் செய்தும் விரக்தியுற்றுவி;ட்டார்கள். இந்நிலையில் கடந்த 16 மாதங்களாக சந்திப்புக்கள், கருத்தரங்குகள் என்று எல்லாவற்றிற்கும் அவர்களே இழுபட வேண்டியிருக்கிறது. இதனால், அவர்களில் பலர் தொய்ந்து போய்விட்டார்கள். சலிப்பும், விரக்தியும் அடைந்துவிட்டார்கள்.
எந்த மக்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரப்போவதாகக் கூறிக்கொண்;டு குழுக்களும், உப குழுக்களும் உருவாக்கப்படுகின்றனவோ, எந்த மக்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும் என்பதற்காக கருத்தரங்குகளும் சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றனவோ அந்தச் சந்திப்புக்களிலும் செயலமர்வுகளிலும் அந்த மக்களே பார்வையாளர்களாக குந்தவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான செயலமர்வுகளில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு விளங்குவதில்லை. பெரும்பாலான கருத்தரங்களில் என்ன சொல்லப்படுகின்றது என்பதும் அவர்களுக்கு விளங்குவதில்லை. தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஏதோ பெரிய விவகாரங்களைப் பற்றி படிப்பாளிகள் வகுப்பெடுக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுடைய தலைவிதியோடு சம்பந்தப்பட்ட உரையாடல்களிலும் சந்திப்புக்களிலும் அவர்கள் பார்வையாளர்களாக வைக்கப்பட்டுள்ளார்கள். அதாவது, மக்கள் கல்வியூட்டப்படுவதைவிடவும் களைப்பூட்டப்படுகிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.
இது தான் நடக்கிறது. சாட்சிகள் களைத்துப்போய்விட்டார்கள் அவர்களுக்கு வயதாகிறது. துக்கமும் ஏமாற்றமும் அவர்களைப் பெருமளவுக்கு அரித்துத் தின்றுவிட்டன. இப்பொழுது சலிப்பும் தொற்றிக்கொள்ள அவர்கள் சாட்சியமளிப்பதிலிருந்து பின்வாங்கிவிடுகிறார்களா?
ஆனால், இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள். சாட்சிகளைப் பலப்படுத்துவதன் மூலமும் சாட்சிகளை உலகம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் விஞ்ஞானபூர்வமாக முன்செலுத்துவதன் மூலமும்தான் தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அனைத்துலக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், சாட்சிகளைச் சோரச் செய்யும் நடவடிக்கைகளே அதிகரித்து வருகின்றன. முன்பு சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இப்பொழுதோ சோரச் செய்யப்படுகிறார்கள். இது சாட்சிகளின் காலம் என்பதன் அடிப்படையில் தங்களுக்குரிய முக்கியத்;துவத்தையும் இன்றியமையாத் தன்மையையும் சாட்சிகள் உணர்ந்து வைத்துள்ளார்களா? அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது யாருடைய பொறுப்பு?
சாட்சிகளுக்கு அவர்களுக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம் இக்கால கட்டத்தில் சாட்சியாக இருப்பது என்பது ஒரு பொறுப்புமிக்க தேசியக் கடமை என்பதோடு தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடித்தளமும் அது என்பதை உணர்த்துவதற்குப் பதிலாக அவர்களைச் சோரச் செய்யும் ஏற்பாடுகளே அதிகரித்து வருகின்றனவா?.
நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டமானது சாட்சிகளற்ற ஒரு யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், தொழில்நுட்ப அர்த்தத்தில் அது அப்படியல்ல. உலகின் சக்திமிக்க நாடுகளின் தூரநோக்குச் செய்மதிகளால் படம்பிடிக்கப்பட்ட ஒரு போர்க்களம் அது. எனவே, உயிருள்ள வெளிச்சாட்சிகளற்ற யுத்தம் அதுவெனலாம். அதேசமயம் உட்சாட்சிகளிருந்தார்கள். போரிலீடுபட்ட இரு தரப்பிலுமிருக்கிறார்கள். அந்த யுத்தகளத்திலிருந்து தப்பிப்பிழைத்த எல்லாரும் சாட்சிகள்தான். அந்தச் சாட்சிகளின் காலமே இது. ஆனால், அந்தச் சாட்சிகள் இப்பொழுது என்.ஜி.ஓக்களின் வரவு செலவுத் திட்டத்தில் ஐநூறு ரூபாய் பயணச் செலவைப் பெறும் பயனாளிகளாகச் சுருக்கப்பட்டுவிட்டார்களா?
போரின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கம் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டபோது வன்னியிலிருந்து எல்லா உலகப் பொது நிறுவனங்களும் ஐ.என்.ஜி.ஓக்களும் ஏ-9 சாலையில் வரிசை கட்டி நின்று வெளியேறின. அந்நாட்களில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களைக் கைவிட்டுச் செல்வது தமக்களிக்கப்பட்ட அனைத்துலக ஆணையைக் கைவிடுவதற்குச் சமம் என்று கூறி கேள்வி எழுப்பிய சில ஐ.என்.ஜி.ஓ. அலுவலர்களை கொழும்பில் உள்ள தலைமையகங்களும் தூதரகங்களும் பாதுகாக்கவில்லை. அந்நாட்களில் வன்னியில் இயங்கிய நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவராக ஒரு இத்தாலியர் இருந்தார். அரசாங்கத்தின் உத்தரவை அவர் விமர்சித்தார். தமக்கு வழங்கப்பட்ட அனைத்துலக ஆணையின்படி போரில் சிக்குண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டுமே தவிர கைவிடக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், உள்நாட்டில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் உத்தரவை மீறி எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் செயற்பட முடியாது என்று கூறி அவரை வன்னியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
இது நடந்து சில ஆண்டுகளின் பின் போரின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளராகவிருந்த ஓர் அலுவலர் தனது அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். உலகப் புகழைப் பெற்ற அந்நூலைப் பற்றி மேற்சொன்ன இத்தாலியர் சலிப்போடு பின்வரும் தொனிப்படச் சொன்னார். ”போரில் சிக்குண்டிருந்த மக்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அந்நாட்களில் அரசாங்கம் உத்தரவிட்டபோது அதை எந்தவித எதிர்ப்பும் காட்டாது உலக அரங்கில் அதை ஒரு விவகாரமாக மேலெழுப்பாது அமைதியாக வன்னியை விட்டு வெளியேறிவிட்டு இப்பொழுது நூல் எழுதுகிறோமா?’ என்று. இறுதிக் கட்டப் போரில் ஐ.என்.ஜி.ஓக்களும் உலகப் பொது நிறுவனங்களும் போரில் சிக்குண்டிருந்த சாதாரண சனங்களை அம்போ என்று கைவிட்டுவிட்டு வன்னியைவிட்டு வெளியேறின.
இப்பொழுது கடந்த 16 மாதங்களாக உலகப் பொது நிறுவனங்களும் என்.ஜி.ஓக்களும் சாட்சிகளை 500 ரூபாய் பயணச் செலவைப் பெறும் பயனாளிகளாகச் சுருக்கிவிடப் பார்க்கின்றனவா? நிலைமாறு கால கட்ட நீதிக்குரிய முன்னெடுப்புக்களும் நல்லிணக்கச் செயற்பாடுகளும் என்.ஜி.ஓக்களின் நிகழ்ச்சித் திட்டங்களாகச் சுருங்கப்பட்டுவிடுமா? இது விடயத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? திறப்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்களா?
10-06-2016