தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு 

 

பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம்.

அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனால் அண்மை நாட்களாக தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் எரிபொருள் வரிசைகளை வைத்துப் பார்த்தால் அப்படியான நிர்வாகத்திறமை எங்கே போனது என்று கேட்கத் தோன்றுகிறது.

இது நாடு முழுவதற்குமான ஒரு தோற்றப்பாடு, இதில் தமிழ்ப் பகுதியை தனித்துப் பார்க்க முடியாது என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம்.ஆனால் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதையும் தாக்கியபோது தமிழ்ப் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக காணப்பட்டன. இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் தமிழ் பகுதிகளில் குறைவு என்று கூறப்படுகிறது. யுத்தமும்  வைரசும் ஒன்று அல்ல என்பதனை ராஜபக்ஷக்களுக்கு உணர்த்திய ஒரு நெருக்கடி அது. டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்தின்போது தமிழ்ப் பகுதிகளில் மருத்துவ சுகாதார கட்டமைப்புக்கள் இயங்கிய விதம் முன்பு யுத்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் விளைவு என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறாக அனர்த்த காலங்களின்பொழுது தமிழ் மக்களின் கூட்டு உளவியலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகளும் சரி முன்னைய யுத்த கால அனுபவத்தை அடியொட்டி சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலே யாருக்கும் கிடைக்காத நூதனமான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்தன. இந்தப்பூமியிலேயே யாரும் அனுபவித்திராத துன்பங்களை தமிழ்மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.நவீன வரலாற்றில் மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்கள் கூட்டங்களுக்குள் தமிழ் மக்களும் அடங்குவர்.மரணத்தோடு நீண்டகாலம் உரையாடிய மக்கள் அவர்கள். மரணத்துள் வாழ்ந்து தப்பிப் பிழைத்த மக்கள் அவர்கள். அதாவது சாவினால் சப்பித் துப்பப்பட்ட மக்கள். ஒரு இனப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். தமிழ் அதிகாரிகள் போரிலீடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும் இடையே சான்ற்விச் ஆக்கப்பட்டவர்கள்.இக்கூட்டு அனுபவங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்வார்கள்.

யூதர்களின் வரலாற்றைக் கூறும் எக்சோடஸ் என்றழைக்கப்படுகின்ற நாவலில் அதன் ஆசிரியர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது இவர் இந்த பெயருடைய  நாசி வதைமுகாமின் பட்டதாரி என்று அறிமுகப்படுத்துவார். அதாவது நாசி வதை முகாம்களில் இருந்து தப்பிய ஒவ்வொரு யூதரும் பட்டப்படிப்புக்கு நிகரான அனுபவங்களை கொண்டிருந்தார் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.தமிழ் மக்களைப் பொருத்தவரை எல்லா இடப்பெயர்வுகளும் புலப்பெயர்ச்சிகளும் அவர்களுக்குப்  பட்டப்படிப்புகள்தான். எல்லாக் கூட்டுக் காயங்களும்,கூட்டு மனவடுக்களும் சித்திரவதைகளும், அகதிமுகாம்களும் நலன்புரி நிலையங்களும் அவர்களைச் செதுக்கின. இப்படிப் பார்த்தால் இந்தப் பூமியிலேயே மிகக்கொழுத்த  அனுபவங்களைக் கொண்ட மக்கள். இப்படியான அனுபவத்தைக் கொண்ட ஒரு சமூகம் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையின்போது எப்படிச் செயல்பட வேண்டும்?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வளவுதான் எரிபொருள் உண்டு என்றால் அந்த அடிப்படையில் வாகனங்களை முதலில் பதிவு செய்து டோக்கன் கொடுத்து ஏதோ ஒரு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை கொண்டு வரலாம் தானே? ஏன் இப்படி நாட்கணக்காக வாகனங்களையும் சாதிகளையும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்?

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினரைப் பார்த்தால், ஒரு இனப்படுகொலையில் இருந்து கற்றுக்கொண்ட மக்களாகத் தெரியவில்லை.ஒருபகுதியினர் வரிசைகளில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை மீள நிரப்புகிறார்கள்.அதை ஒரு குழுவாகத் திட்டமிட்டு வியாபாரமாகச்  செய்கிறார்கள்.அந்த எரிபொருள் கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிர்வாகம் சீர்குலைந்தால் கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடும். யார் அதைக் கட்டுப்படுத்துவது? தெற்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பொறுமையிழந்து மோதலுக்கு போனால் அதை போலீஸ் கட்டுப்படுத்துகிறது.ஆனால் வடக்கில், விசுவமடுவில் அதை ராணுவம் கையாண்டிருக்கிறது.

எரிபொருள் வரிசைகள் மட்டுமில்ல, கடந்த வாரம் பாடசாலைகளை இயக்குவது தொடர்பிலும் அவ்வாறான குழப்பத்தைக் காணமுடிந்தது.இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்வின் அசைவுகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. எனினும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக கல்விப் பொதுச்சாதாரணம், உயர்தரம்,மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போன்ற தேசிய பரீட்சைகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.அவற்றை நோக்கி ஆயிரக்கணக்கில் தமது பிள்ளைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி இறக்குகிறார்கள். ஒரு நண்பர் பகிடியாக சொன்னார்…..பெட்ரோல் கியூவில் நிற்கும் ஒரு பகுதியினர் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகத்தான் எரிபொருளைச் சேமிக்கிறார்களா? என்று.

அரசாங்கம் மாறிமாறி  அறிக்கைகளை விடுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்த பின்னரும்கூட நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று கேட்குளவுக்குத்தான் நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் குழம்பிப் போனதால் நிர்வாக அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள்,நிர்வாகக் கட்டமைப்பும் குழம்பிபோய் விட்டது,என்று ஒரு விளக்கத்தை தரமுடியும்.

கடந்த வாரம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற விடயத்தில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முதலில் பாடசாலைகளை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மூடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்,என்றும் ஏனைய மாகாணங்களுக்கு பொருந்தாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. அதேசமயம் கிட்ட உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் இணைய வழியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்று கூறப்பட்டது. அதாவது ஹைபிரிட் முறைமை. முடிவில் அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில் நெருக்கடிக்குள் ரிஸ்க் எடுத்து துணிவாக முடிவெடுக்க எத்தனை அதிபர்கள் தயார்? அவ்வாறு ரிஸ்க் எடுத்து முடிவெடுக்கக்கூடிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு நாட்டில் உண்டா? துணிந்து முடிவெடுக்கும் அதிபர்கள் அதன் விளைவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அவர்கள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும்?கல்வித் திணைக்களம், பெற்றோர்,பழைய மாணவர் என்று எல்லாத் தரப்பும் அதிபரைத் தான் பிடுங்குவார்கள்.கிளிநொச்சி மாவடடத்தைச் சேர்ந்த ஒரு அதிபர் பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார்…”நினைச்சு நினைச்சு கலியாணம் முடிக்கிறாங்கள்.என்னெண்டு பிரயோக முடிவுகளை எடுப்பது? சீ”.

இதுவிடயத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மட்டும் குழம்பிப் போயிருந்தன என்பதல்ல,ஊடகங்களும் குறிப்பாக இணையவழி ஊடகங்கள்  குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமையைக் குளப்பின என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஒரு செய்தியின் மூலத்தை விசாரிக்காமல் பரபரப்பிற்காக செய்திகளைப்  போடும் ஒரு போக்கை சமூக வலைத்தளங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன.இதனால்,உண்மையை விட வதந்தியே அதிகம் பரவலாகச் சென்றடைகிறது.இது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடந்தது.பதினோரு மணியளவில் அடுத்த நாள் பாடசாலைகள் இயங்காது என்று இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் சுமார் அரை மணித்தியால இடைவெளிக்குள் அச்செய்தியை  அதே ஊடகங்கள்  மறுத்தன. நாட்டைக் குழப்புவதில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்,அல்லது பரபரப்பு செய்திகளுக்கும் ஒரு பங்கு உண்டு.குறிப்பாக பொருட்கள் பதுக்கப்படுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் பரபரப்புச் செய்திகளும் ஒரு விதத்தில் காரணம். ஓர் அனர்த்த காலத்தில் மக்களை குழப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு.

அத்தியாவசிய சேவைகளுக்குரிய நிர்வாகக் கட்டமைப்பின்படி நாட்டின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலரும் பதவி வழியாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராகச்  செயற்பட முடியும்.அதாவது மாவட்ட செயலர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக முடிவெடுக்கத்  தேவையான முழு அளவு அதிகாரம் உண்டு. அவர்கள் தமது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கத்  தயாராக இருந்தால் சரி. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள் இல்லை. இதனால் கொழும்பினால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பே உண்டு. இதுவும் தமிழ் நிர்வாகிகளின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறான ஒரு நிர்வாகச் சூழலில்ஆளுநர் ஒருவரின் கூற்றில் தொடங்கிய இக் கட்டுரையை மற்றொரு ஆளுநரின் அறிவிப்பில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சில நாட்களுக்கு முன் வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு ஒன்றை  ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.அது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு மாகாண ஆளுநர் அதைவிடக்கூடுதலாகச் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எரிபொருள் வரிசைகளை எப்படிப் புத்திபூர்வமாக ஏதோ ஒரு முறைமைக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே அது. பதவி வழி அதிகாரமுடைய நிர்வாகிகள் துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. தமிழ் அதிகாரிகள் மதிப்புக்குரிய,முன்னுதாரணம்மிக்க இறந்தகால அனுபவங்களைப் பின் தொடர வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *