நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக மாறியது?அதிகமாக மோட்டார் இயந்திர வாகனங்களில் தங்கியிருப்பதுதான் காரணமா? நாங்கள் அதிகமதிகம் இயந்திரங்களில் தங்கி வாழ்கின்றோமா?
தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருப்பது ஒரு புதிய அனுபவமல்ல.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மகா இடப்பெயர்வோடு ஒப்பிடுகையில் இந்த வரிசைகள் யாவும் ஒரு பொருட்டேய ல்ல. மிகக் குறுகிய காலத்தில், தப்பிச் செல்ல இருந்த ஒரே பிரதான சாலை ஊடாக, கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் ஆகிய இரண்டு பாலங்களைக் கடந்து தென்மராட்சிப் போக வேண்டியிருந்தது. அப்பொழுது முழு வலிகாமமும் தெருவில் நின்றது. அந்தக் காட்சியானது பருந்துப் பார்வைக்கு ஒரு காயப்பட்ட மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து நகர்வதைப் போன்று இருந்தது.கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேல் அந்த இடப்பெயர்வு வரிசை யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரையிலும் தொடர்ச்சியாக நின்றது.வழிநெடுக முதியோர் இறந்தார்கள்.நோயாளிகள் இறந்தார்கள்.முதியோரும் குழந்தைகளும் கைவிடப்படார்கள்.கால்நடைகள் கைவிடப்பட்டன.தாகமான பொழுதுகளில் மழை நீரை சேகரித்து அருந்தியவர்கள் உண்டு. கண்டி வீதியில் அப்படியோரு நெரிசலான வரிசை அதற்கு முன்னரும் காணப்படவில்லை, அதற்கு பின்னரும் காணப்பட்டதில்லை.
அது வீதியோரங்களில் மட்டும் காணப்பட்ட வரிசை அல்ல.வீதி முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்த வரிசை. வாகனங்களும் மனிதர்களும் யார் யாரை முந்துவது என்று நெரித்துக் கொண்டு நின்ற ஒரு வரிசை.போர்க்காலத்தில் எல்லாம் மகா இடப்பெயர்வுகளின் போதும் அவ்வாறன வரிசைகள் காணப்பட்டன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் அது போன்ற பல ஜனத்திரள் வரிசைகளை வன்னி கிழக்கில் காணமுடிந்தது.இந்த வரிசைகளில் இறுதியானது நலன்புரி நிலையத்தில் சாப்பாட்டுக்கும் தண்ணிக்குமாக நின்ற வரிசைகளும், மலம் கழிப்பதற்காக நின்ற வரிசைகளும்தான்.
இறுதிக்கட்டப் போரின் இறுதி நாட்களில் கைகளை உயரத் தூக்கியபடி நிர்வாணமாக சென்ற அவமானகரமான தோல்விகரமான வரிசைகளோடு ஒப்பிடுகையில்,இப்போது நிற்கும் வரிசைகள் அப்படி ஒன்றும் கொடுமையானவை அல்ல. எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது அதிர்ச்சியூட்டும் அனுபவம் அல்ல.
இதற்குமுன்பு தமிழ்மக்கள் யார் யாருக்காகவோ, எதற்காகவோவெல்லாம் காத்திருந்திருக்கிறார்கள்.முதலாம் கட்ட ஈழப்போரில் இந்தியாவுக்காக காத்திருந்தார்கள்.இறுதிக்கட்டப் போரில் ஐநாவுக்காக, அமெரிக்காவுக்காக, வணங்காமண் கப்பலுக்காக காத்திருந்தார்கள். 2009-க்குப் பின்னிருந்து ஐநாவுக்காகக் காத்திருக்கிறார்கள்.காத்திருப்பது தமிழ் மக்களுக்கு புதியது அல்ல.ஆனால் பெட்ரோல் இருக்கா?இல்லையா? என்று தெரியாமல் காத்திருப்பதும்,பெட்ரோல் பவுசரைக் கண்டதும் தேங்காய் உடைத்துக் கொண்டாடுவதும் கொஞ்சம் கூடித்தான் போச்சு.
தென்னிலங்கையில் பெட்ரோலுக்காக காத்திருக்கும் சிங்கள மக்கள் மத்தியில் போலீசாருடன் மோதல் வருகிறது. போலீசுக்கும் ஆமிக்கும் இடையே முறுகல் வருகிறது. ஆனாலும் முடிவில் போலீஸ்தான் நிலைமைகளைக் கையாளுகின்றது.ஆனால் வடக்கில் விசுவமடுவில் ராணுவம் பொதுமக்களைக் கையாண்டிருக்கிறது.அதே சமயம் தெற்கிலோ ஒரு ராணுவ உயர் அதிகாரியை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள்.
எல்லா எரிபொருள் வரிசைகளிலும் சலிப்பு,கோபம்,இயலாமை.அவமானம் போன்ற பல்வேறு எதிர்மறை உணர்வுகளின் கலவையான ஒரு சூழலைக் காண முடியும். குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு அது அவமானகரமான அனுபவமாக இருக்கிறது. முன்னெப்பொழுதும் முகம் பார்த்து கதைத்திராத எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் இரந்து நிற்பது போன்ற ஒரு நிலை. சமூகம் அதன் இயல்பு நிலையை இழந்து விட்டது. இயல்பான ஒரு சமூகக்கட்டமைப்பில் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுண்டு. ஆனால் இயல்பற்ற ஒரு சூழலில், ஓரனர்த்த காலத்தில், ஒரு பொது இடருக்கு முன் எல்லாருமே சமம் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். இதில் யாருக்காவது முன்னுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் சீற்றமடைகிறார்கள்.
அதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை நிரப்ப முற்படும் அரசு ஊழியர்களோடு முட்டுப்படுகிறார்கள்.குறிப்பாக சுகாதாரத் துறைசார் ஊழியர்கள்,பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகளுக்காகவும், அடுத்தநாள் பாடசாலைக்கு போவதற்காகவும் எரிபொருளை நிரப்ப வந்த கல்விச் சமூகத்தை சேர்ந்தவர்கள் போன்றவர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பதில் அதிபர் வீதியில் குந்தியிருந்து போராட்டமே நடத்தியிருக்கிறார்.அதிபர்கள் ஆசிரியர்கள் அவமதிக்கப்படும் ஒரு நிலைமை வந்தால் தாங்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி நிற்கப் போவதாக ஆசிரியர் சங்கம் ஒன்று எச்சரித்துள்ளது.
அதே சமயம் வரிசைகளுக்குள் பதுங்கும் கள்ளச்சந்தை வியாபாரிகளைக் குறித்தும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஒரு சிறு குழுவினர் வரிசைகளுக்குள் வேண்டுமென்று குழப்பத்தை விளைவிப்பதாகவும்,ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை நிரப்புவதாகவும்,கள்ளச் சந்தையில் ஒரு லீற்றர் பெட்ரோல் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இவ்வாறு வரிசைகளில் நின்று அடாவடித்தனம் செய்பவர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய முதலாளிகளுக்கும் அல்லது ஊழியர்களுக்கும் இடையே ஏதோ ஒரு புரிந்துணர்வு உண்டு என்ற ஒரு சந்தேகம் பரவலாக உண்டு.சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வேண்டுமென்றே ரகளைகள் ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவாக போலீசைக் கூப்பிட்டு வினியோகம் நிறுத்தப்படுவதாகவும், வரிசையில் நிற்கும் மக்களை கலைப்பதற்கு இது ஒரு சாட்டாக சில எரிபொருள் நிலையங்கள் பயன்படுத்துகின்றன என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
எனினும்,மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி.ஏரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் பெற்றோல் விலை கூடிய பின்னரும் பெற்றோலை பழைய விலைக்கே விற்றுள்ளார்.மேலும் தேவை அடிப்படையில் எரிபொருளை சீராக விநியோகித்துள்ளார்.தமிழ்ப் பகுதிகளில் அவர் ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறார்.
இக்கட்டுரையை நான் திருத்தி எழுதும்போது பெற்றோல் வரிசைக்குப் பதிலாக டோக்கன் வரிசைகள் வந்துவிடடன.எதிர்காலத்தில் டோக்கன் எடுப்பதற்கும் டோக்கன் எடுக்கவேண்டி வருமா என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் கேட்டிருக்கிறார்
வரிசையில் நிற்பதற்கு நேரம் கிடைக்காத ஒரு பகுதியினர் வித்தியாசமான உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். திருகோணமலையில் வாகனத்திற்கு பதிலாக ஒரு கதிரை வைக்கப்பட்டிருந்தது.அக்கதிரையில் வாகனத்தின் இலக்கம் எழுதப்பட்ட மட்டை கொளுவப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஒரு சலவை இயந்திரத்தின் வெளிக்கோது வைக்கப்பட்டிருந்தது.அதிலும் வாகன இலக்கம் எழுதப்பட்ட மட்டை தொங்கியது.வாகன வரிசையில் சம்பளத்துக்காக நிற்பதற்கும் ஆட்கள் உண்டு. அதுபோல எரிபொருளை நிரப்புவதற்கென்று வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.ஒரு வாகனத்துக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் அறவிடப்படுகிறது.அதில் எரிபொருளை நிரப்பியபின் அதை உறிஞ்சி எடுத்துவிட்டு வாகனம் திருப்பிக் கொடுக்கப்படும்.
இவ்வாறாக எரிபொருள் வரிசை எனப்படுவது சிலருக்கு அவமானம் அல்லது துன்பம். வேறு சிலருக்கு அது வியாபாரம். இன்னும் சிலருக்கு அது ஒரு தொழில். எனினும் ஒரு பகுதியினருக்கு அது கொண்டாட்டமாகவும் இருக்கிறது
அண்மையில் ஒரு முகநூல் பதிவை பார்த்தேன். அதில் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கார்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையாக நின்றபொழுது அந்த நேரத்தை எப்படி குதூகலமாக கொண்டாட்டமாக மாற்றினார்கள் என்று அந்த நண்பர் விவரித்து இருந்தார்.சலிப்பூட்டும் அவமானகரமான அந்தக் காத்திருப்பை எப்படி மது மற்றும் சிற்றுண்டிகள் மூலம் கலகலப்பான பம்பலான ஒரு கொண்டாட்டமாக மாற்ற முடிந்தது என்றும் அவர் விவரித்திருந்தார். இடுக்கண் வருங்கால் நகுக.
படித்த நடுத்தர வர்க்கம் மட்டுமல்ல, கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய நிதிக் கொள்ளளவுக்கு ஏற்ப காத்திருப்பை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகிறார்கள்.தங்களுக்கிடையே காசைப் பகிர்ந்து பிஸ்கட்,சோடா,வெற்றிலை,சிற்றுண்டி போன்றவற்றை வாங்கி அந்த நேரத்தை சந்தோசமாக கழிக்கிறார்கள். எரிபொருள் வரிசை நகர்ந்த தெருக்கள் தோறும் வெற்றிலை சப்பித்துப்பப்பட்ட அடையாளங்களையும்,வெற்று பிஸ்கட் பக்கற்றுக்களையும்,வெற்றுத் தண்ணீர்ப் போத்தல்களையும் காணமுடிந்தது. யார் யாருடையதோ வீட்டு வாசலில் அந்தக் குப்பைகளைக் கொட்டிவிட்டு அந்த வரிசை பெட்ரோலை நிரப்பிக் கொண்டு தன் வீட்டுக்குப் போய்விட்டது.
துன்பத்தை கொண்டாட்டமாக மாற்றுவது அல்லது இடுக்கண் வருங்கால் சிரிப்பது என்பது ஒரு கலை.அது எல்லாருக்கும் வாய்க்கப்பெற்ற ஒரு கலை அல்ல.அதேசமயம் துன்பமான வேளைகளில் மற்றவர்களுக்கு உதவுவது என்பதும் ஒரு பெருங் கலை. எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு அந்தந்த ஊரைச் சேர்ந்த வர்த்தகர்கள்,தன்னார்வலர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள்.அவசரமாக தங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு தின்பாண்டங்கள் சிற்றுண்டிகள் ஏன் ஒரு வேளை உணவைக்கூட வழங்கிய சில ஊர்கள் உண்டு, சில நகரங்கள் உண்டு.
மிக நீண்ட,கிலோமீட்டர் கணக்கான,மணித்தியாலக் கணக்கான எரிபொருள் வரிசை என்பது நாடு தோல்வியடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அரச நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது.அதேசமயம் அந்த வரிசையில் நிற்கும் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு சமூகமாக அவர்கள் தோல்வியடைந்து விட்டார்களா இல்லையா என்பதையும் காட்டுகின்றதா?
ஆதவன் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை