ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா?
ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம்,பில்லிசூனியம்,எண்ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு மந்திரம்,மாயம்,பில்லிசூனியம்,எண் ஜோதிடம் என்பவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலுக்குள் இருந்து வருகிறார்கள். அக்கூட்டு உளவியல் காரணமாகத்தான் மே மாதத்தில் இருந்து தொடங்கி ஜூலை மாதம் வரையிலுமான ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாட்களாக காணப்பட்டன.எனவே அந்த நம்பிக்கையை முறியடிக்க வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. அவர் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்.கடந்த ஒன்பதாந் திகதி ரணில் அகற்றப்படவில்லை,மாறாக கோட்டா கோகம கிராமம் காலி முகத்திடலில் இருந்து வெளியேறியது.
தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளால் அரகலய பெருமளவுக்கு செயலிழந்து விட்டது.இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது போராடும் தரப்புக்கே தெளிவில்லாமல் இருக்கிறது.ஒரு மையத்திலிருந்து தகவல்களைத் திரட்டமுடியாத அளவுக்கு மையம் இல்லாத,தலைமை இல்லாத ஒரு போராட்டமாக அது அமைந்திருந்ததா? யார் யார் கைது செய்யப்படுகிறார்கள் என்பதைத் தொகுத்துக் கூறமுடியாத ஒரு நிலை.
ராஜபக்சக்கள் அகற்றப்படும் வரை போராட்டத்தின் கவசம் போல காணப்பட்ட சட்டத்தரணிகள் அமைப்பு ரணில் வந்தபின் போராட்டத்தை ஏறக்குறைய கைவிட்டுவிட்டது.இளம் சட்டத்தரணிகள் சிலர் மட்டும் கைது செய்யப்படுகிறவர்களுக்காக நீதிமன்றங்களில் தோன்றுகிறார்கள்.
மேலும் ஒன்பதாம் திகதியையொட்டி பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களில் வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டார்கள். வாக்குமூலம் வழங்குவதிலேயே ஒரு நாளின் ஏறக்குறைய அரைவாசி கழிந்து விட்டது.இவ்வாறு போலீஸ் நிலையத்தில் மினக்கெடும் பொழுது போராட்டத்தை எப்படி ஒழுங்கமைப்பது?
போராட்டத்தின் பக்கபலமாக காணப்பட்ட தொழிற்சங்கங்களையும் ரணில் வெற்றிகரமாகப் பிரித்துக் கையாண்டு விட்டார். சில கிழமைகளுக்கு முன் அரகலயவில் காணப்பட்ட ஒரு தொழிற்சங்கத் தலைவர் இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம் வந்து விட்டார்.
மொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னை நோக்கி வந்த ஒன்பதாம் திகதியை போராட்டக்காரர்களுக்கே தோல்விகரமான ஒரு நாளாக மாற்றி விட்டாரா?
மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக மேலெழுந்த நெப்போலியன், புரட்சியின் கனிகளை சுவீகரித்துக் கொண்டு தன்னைப் பேரரசனாக முடி சூட்டிக்கொண்டார்.ஏறக்குறைய ரணில் விக்கிரமசிங்கவும் அப்படித்தான்.அரகலயவின் கனிதான் அவர். அதேசமயம் அரகலயவை முறியடித்தவரும் அவரே.அரகலயக்காரர்கள் அமைப்பு மாற்றத்தைக் கேட்டார்கள். ஆனால் அதே அமைப்பு புதிய ஜனாதிபதியின் கீழ் தன்னை பாதுகாத்துக் கொண்டுவிட்டது. அதே நாடாளுமன்றம்;அதே தாமரை மொட்டுக் கட்சி;அதே பெரும்பான்மை;அதே அமைச்சர்கள்.
2015 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து, பல சந்திப்புகளை நடத்தி,பல்வேறு வகைப்பட்ட முகவர்களைக் கையாண்டு, ராஜபக்ஷ அணிக்குள் பிளவை ஏற்படுத்தி,ஓர் ஆட்சி மாற்றத்தைச் செய்தன. அந்த ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரி அதனை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காட்டிக்கொடுத்தார்.இப்பொழுது நான்கு ஆண்டுகளின் பின் கத்தியின்றி,ரத்தமின்றி,தேர்தல் இன்றி ஒரு ஆட்சி மாற்றத்திற்கான நம்பிக்கையூட்டும் தொடக்கமாக மேற்கு நாடுகள் இதை பார்க்குமா?
தமிழ்மக்களின் நோக்கு நிலையில் இருந்து அரகலய தொடர்பில் விமர்சனங்கள் உண்டு.தமிழ்மக்கள் அந்தப் போராட்டத்தை எதிர்க்கவில்லை.ஆனால், பங்களியாமைதான் தமிழ் மக்களின் பங்களிப்பு என்று கருதத்தக்க ஒரு நிலைமைதான் பெரும் போக்காகக் காணப்பட்டது.
எனினும் அதற்காக அரககலயவின் பெறுமதியை குறைத்து மதிப்பிட முடியாது.உலகில் அண்மை காலங்களில் இடம்பெற்ற தன்னெழுச்சியான மக்கள் எழுச்சிகளில் அரகலயவுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. 69 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஒரு குடும்பத்தை தோற்கடித்த ஒரு மக்கள் எழுச்சி அது. அதில் ஒரு படைப்புத்திறன் இருந்தது.அரசியல் கலந்துரையாடல் இருந்தது. அறவழிப் போராட்டங்கள் தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பல முன்னுதாரணங்கள் அதில் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலில் மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு வெளியே மக்கள் அதிகாரத்தை உருவாக்குவதில் அரகலய ஒரு முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறது.
அரசியலில் மக்கள் அதிகாரத்தை ஒன்றில் தேர்தல் மூலம் பெறலாம். அல்லது துப்பாக்கி முனையில் பெறலாம். இவை இரண்டுக்கும் வெளியே மக்கள் அதிகாரத்தை ஸ்தாபிப்பது என்றால் அதை மக்கள் எழுச்சிகளால்தான் சாதிக்க முடியும்.அரகலய சில மாதங்களுக்காவது அதைச் சாதித்தது.ஆனால் அந்த மக்கள் அதிகாரம் தற்காலிகமானதாக காணப்பட்டது.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அது கருநிலையிலேயே காணப்பட்டது.அதை ஒரு உடலாக வளர்த்தெடுக்க அரகலயக்காரர்களால் முடியவில்லை.
ஏனென்றால் அரகலய என்பது ஒரு கதம்பமான அமைப்பு.தீவிர இடதுசாரிகளில் தொடங்கி தீவிர வலதுசாரிகள்வரை அங்கே காணப்பட்டார்கள். எல்லா மதப் பிரிவினரும் அங்கே காணப்பட்டார்கள்.தன்னார்வலர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், போரில் உறுப்புகளை இழந்த முன்னாள் படைவீரர்கள்,என்று வெவ்வேறு கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் அங்கே ராஜபக்ஷ என்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக அணி திரண்டார்கள். அவர்களுக்கு பொது எதிரி இருந்தது.ஆனால் ஒரு பொதுத் தலைமை இருக்கவில்லை. ஒரு பொதுவான சித்தாந்த அடித்தளமும் இருக்கவில்லை.
ஒன்றுக்கொன்று முரணான வெவ்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்களை ஒரு தலைமையின்கீழ் அணி திரட்டுவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.அதனால் அந்தப் போராட்டத்துக்குள் இருந்து துலக்கமான தலைமைகள் மேலெழவில்லை. பதிலாக பேச்சாளர்கள் சிலர் மேலெழுந்தார்கள்.ஒரு கத்தோலிக்க மதகுருவும் பௌத்த பிக்கவும் முன்னிலைக்கு வந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் மெய்யான இயக்குனர்கள் அவர்கள் அல்ல என்பது இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறைக்குத் தெரியும்.இந்த போராட்டத்தின் பின்னணியில் நின்ற பல செயற்பாட்டாளர்கள் முன்னரங்கிற்கு வரத் தயங்கினார்கள். அதற்கு பலமான ஒரு காரணம் உண்டு. இலங்கைத் தீவு ஏற்கனவே மூன்று தடவைகள் தன் சொந்த மக்களின் குருதியில் குளித்த ஒரு நாடு.அரசுக்கு எதிரான போராட்டங்களை எப்படிக் குரூரமாக நசுக்கலாம் என்பதற்கு இலங்கைத் தீவு ஒரு கெட்ட முன்னுதாரணம்.
அவ்வாறு தம்மையும் நசுக்கலாம் என்று அஞ்சிய காரணத்தால் அரகலயவின் பின்னணியில் நின்ற செயற்பாட்டாளர்கள் முன்னரங்கிற்கு வரத் தயங்கினார்கள். இதனால் அரகலய துலக்கமான தலைமைகளை மக்களுக்கு வெளிக்காட்டவில்லை. மக்களுக்கு எப்பொழுதும் துலக்கமான தலைமைகள் வேண்டும்.அருவமான தலைமைகளின் பின் மக்கள் தொடர்ச்சியாக அணிதிரள மாட்டார்கள். பொதுமக்கள் எப்பொழுதும் குறியீடுகள், சின்னங்கள், ஜன வசியம் மிக்க தலைவர்கள் போன்றவற்றின் பின் அணி திரள்வதுண்டு. ஆனால் 69 லட்சம் வாக்குகளை பெற்று வென்ற ஒரு குடும்பத்தை தோற்கடித்த அரகலய அவ்வாறு துலக்கமான தலைமைகளை மக்கள் முன் நிறுத்தத் தவறியது.
அது மேலிருந்து கீழ்நோக்கிய பலமான தலைமைத்துவத்தை கொண்டதோர் அமைப்பு அல்ல.பக்கவாட்டாக ஒவ்வொருவரும் மற்றவரோடு பலவீனமான பிணைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. பலமான சித்தாந்த அடித்தளமும் அந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இறுக்கமான ஒரு மக்கள் இயக்கமும் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க அரகலியவை முறியடிக்க முடிந்திருக்கிறது.
அது ஒரு தற்காலிக வெற்றியா அல்லது நிரந்தர வெற்றியா என்பது பொருளாதார நெருக்கடியை ரணில்+ தாமரை மொட்டு அரசாங்கம் எப்படிக் கையாளப் போகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது. குறிப்பாக ரணிலை மேற்கு நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும் எவ்வாறு பலப்படுத்தப் போகின்றன என்பதிலும் அது தங்கியிருக்கின்றது.
இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இதற்கு முன்னப்பொழுதும் நிகழ்ந்திராத ஒரு மக்கள் எழுச்சியானது கிட்டத்தட்ட நான்கு மாதங்களின் பின் ஓய்வுக்கு வந்திருக்கிறது. அதிலிருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் உண்டு. ஆயுதப் போராட்டம் அல்லாத வழிகளில் எப்படிப் படைப்புத் திறனோடு போராடலாம் என்ற முன்னுதாரணத்தை அது உலகம் முழுவதுக்கும் வழங்கியது.பிரதிநிதித்துவ ஜனநாயகப்பரப்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எப்படி மக்கள் அதிகாரத்தைத் தாற்காலிகமாகக் கட்டியெழுப்பலாம் என்பதனை அது உலகத்துக்கு நிரூபித்தது.அதேசமயம் பலமான சித்தாந்த அடித்தளமோ,கட்டமைப்போ,தலைமைத்துவமோ இல்லையென்றால் ஒரு போராட்டம் எவ்வாறு பலவீனமடையும் என்பதற்கும் அது ஆகப்பிந்திய ஓர் உதாரணம்.
அரகலயவின் முடிவு தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தை ஞாபகப்படுத்துகிறதா? கடந்த சுமார் 50 ஆண்டுகாலப் பகுதிக்குள் இலங்கைத்தீவு மூன்று ஆயுதப் போராட்டங்களையும் தன்னெழுச்சியான ஒரு மக்கள் போராட்டத்தையும் தோற்கடித்திருக்கிறது. சிங்களபௌத்த அரசியல் பண்பாடு அரை நூற்றாண்டாக வரலாற்றில் இருந்து எதைக் கற்றிருக்கிறது ?