ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை?

 

மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின.அதில்  பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன.பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன?

நடந்து முடிந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருந்தார்.அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி வருகின்றன என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தை முன் கொண்டுவரும் நாடுகளை நோக்கி கூட்டமைப்பு தமிழ்மக்களின் கோரிக்கையை வலிமையாக முன்வைக்கவில்லை என்பது அவருடைய முதலாவது குற்றச்சாட்டு.இரண்டாவது குற்றச்சாட்டு, பிரித்தானியா,ஆவுஸ்ரேலியா,கனடா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தொடர்ந்து தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன என்பது.அதாவது மேற்படி நாடுகள் ஜெனிவாவில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தமது பூகோள அரசியல் இலக்குகளுக்காக நீர்த்துப்போகச் செய்யும்பொழுது அதுவிடயத்தில் மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக கீழ்படிவாக செயல்படுகின்றன என்ற தொனிப்பட அவர் குற்றம் சாட்டுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில்,2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது தமிழ்த்தரப்பில் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை ஆதரித்தது.அது நிலைமாறுகால நீதியின் பங்காளியாக மாறியது.அவ்வாறே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன.அதே சமயம் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை.அவை இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கேட்டன.

எனினும்,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் கூட்டமைப்பு எனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று  அக்கடிதம் கேட்டிருந்தது.நிலைமாறுகால நீதியைப் பரிசோதித்தோம் அதில் தோல்வியுற்றுவிட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.ஆனால் ஜெனீவாத் தீர்மானத்தின் சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது கூட்டமைப்பு தலைகீழாகி நின்றது.இப்பொழுதும் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருக்குழு நாடுகளின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். அதுபோலவே அவர் குற்றஞ்சாட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துவதில்லை என்ற தொனிப்பட அவருடைய குற்றச்சாட்டு அமைகிறது.

இக்குற்றச்சாட்டுகளை தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் பலரும் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள்.குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டு.தவிர காணாமல் போனவர்களுக்கான அமைப்புகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஆசனங்களில் ஆறை இழந்தது.அதன் ஏகபோகம் சரிந்தது.

ஆனால் அவ்வாறு இழந்த ஆறு ஆசனங்களையும் யார் பெற்றார்கள்?மூன்றே மூன்று ஆசனங்களைத்தான் மாற்று அணி பெற்றது.எனைய மூன்று ஆசனங்களும் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே போயின.அவ்வாறு மூன்று ஆசனங்கள் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே போனதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும்.ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அக்கட்சியிடம் இன்றுவரை இல்லை.எப்பொழுதும் ஏனைய கட்சிகளை குறைகூறி ஏனைய கட்சிகளில் குற்றம் கண்டுபிடித்து தங்களைப் பரிசுத்தர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு போக்குதான் அக்கட்சியிடம் இன்றுவரை உண்டு. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அவமதிக்கப்பட்ட போதும் அக்கட்சி தன் அரசியல் எதிரிகளைத்தான் குற்றஞ்சாட்டியது.

தன் உள் அரசியல் எதிரிகளை குற்றச்சாட்டுவது என்பது தேர்தல்மைய அரசியலின் ஒரு பகுதிதான்.ஆனால் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதுமட்டுமே தேச நிர்மாணத்தின் பிரதான பகுதியாக அமைய முடியாது.ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையால் நீர்த்துப்போன ஒரு மக்கள் கூட்டம். புலப்பெயற்சி, தோல்வி, கூட்டு காயங்கள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றால் தொடர்ந்தும் சிதறிப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எனவே இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் தமது அரசியல் எதிரிகளை திட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அதைவிட முக்கியமாக தாம் சரியெனக் கருதும் ஓர் அரசியல் இலக்கை நோக்கி மக்களைத் திரட்டவேண்டும்.ஒரு தேசத் திரட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேர்தல்மைய அரசியலை எப்படி ஒரு தேச நிர்மாணத்தின் பகுதியாக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும்.ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் உட்பட கூட்டமைப்பை விமர்சிக்கும் பலரிடமும் அவ்வாறான அரசியல் தரிசனம் உண்டா? என்ற கேள்வியை கடந்த 13 ஆண்டு கால அனுபவம் கேட்க வைக்கின்றது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோஅக்டிவ் – proactive- ஆக, அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை.அது ரியாக்டிவ்- reactive- ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத் தான் காணப்படுகிறது.அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர் தரப்புக்கு எதிர்வினை ஆற்றும் தற்காப்பு நிலை அரசியலாகதான் மாறியிருக்கிறது.மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும் வெளி எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்பிடமும் இல்லை.கூட்டமைப்பின் எதிரிகளிடமும் இல்லை.

கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி ஏகபோகத்தை இழந்தது.ஆனால் அந்த தோல்வியை தன்னுடைய முழுமையான வெற்றியாக மாற்றிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முடியவில்லை.எனைய தமிழ்த்தேசிய கட்சிகளாலும் முடியவில்லை.இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறி,தமிழ்மக்களின் பேரபலம் சிதைந்தது. அதாவது தேசத் திரட்சி பலவீனமடைந்தது.

இப்பொழுதும் ஜெனிவா விவகாரத்தில் கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ஏனைய கட்சிகள் அதை தோற்கடிக்க வேண்டும்.அதற்கு வேண்டிய மக்கள் ஆணையை முதலில் பெற வேண்டும். அந்த மக்கள் ஆணையை பெறுவதற்கு ஒரு பலமான மாற்று அணியை கட்டி எழுப்ப வேண்டும். மக்களாணையை பெற்ற பின் பொருத்தமான வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்து வெளியுறவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக ஜெனிவாவையும் இந்தியாவையும் எனைய தரப்புகளையும் அணுக வேண்டும். ஆனால் அப்படியான சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ தமிழ் அரசியலில் மிகக் குறைவாகவே காணமுடிகிறது.ஒப்பிட்டுளவில் அதிக ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்போடுதான் வெளியுலகம் பேசும்.

தன் உள் அரசியல் எதிரியைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சக்தி பெருமளவுக்கு விரயம் செய்யப்படுகிறது.இது ஒரு விதத்தில் நெகட்டிவ் ஆனது. மாறாக பொசிட்டிவாக தனக்கு சரி என்று தோன்றும் ஓர் அரசியல் இலக்கை முன்வைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த கட்சிகளால் முடியவில்லை.இதனால்தான் கடந்த 13 ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. பேராசிரியர் ஜூட் லால் கூறுவது போல தமிழ்மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெற்ற முடியவில்லை.வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படலாம்.

தனது உள் அரசியல் எதிரிகளைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்து அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதிலேயே தமிழ்ச் சக்தி வீணாகிக் கொண்டிருக்கிறது.மாறாக,ஆக்கபூர்வமான விதத்தில் பொசிட்டிவாக, புரோஅக்டிவாக,ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை தயாரித்து முன் செல்லும்போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து  போய் விடுவார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் கூட்டாக கடிதமெழுதி கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழிந்துவிட்டன.இந்த 20 மாதங்களிலும் தாம் ஜெனிவாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இக்கட்சிகள் என்னென்ன செய்திருக்கின்றன?கூட்டமைப்பு தொடர்ந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால்,அவ்வாறு ஏமாற்றாத ஏனைய கட்சிகள் கடந்த 20மாதங்களாக என்ன செய்திருக்கின்றன? கூட்டமைப்பு ஏமாற்றுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது.தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும்.பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோகும் விடயத்தில் இவர்கள் இதுவரை சாதித்தவை என்ன? மிகக்குறிப்பாக அந்த விடயத்தை நோக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புகள் எத்தனை?

பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடந்த 20 மாத காலத்தில் எதுவரை முன்னேறி இருக்கிறோம் என்பதனை மூன்று கட்சிகளும் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் மேற்படி கட்சிகள் தமது வாக்குறுதிகளுக்கும் அதை நம்பும் தமது மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *