ஜெனிவாத் தீர்மானமும் தமிழ்நாடும்

மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் போன்றவற்றை தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும்.ஆதரித்த நாடுகள் தமிழர்களுக்காக அதை ஆதரித்தன என்பதை விடவும் தங்களுடைய பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானத்தை அணுகியுள்ளன என்பது. இரண்டாவதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவை பெருமளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு காரணமாக ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன என்பது.எனவே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன என்பதைவிடவும் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன என்பதே அதிகம் பொருத்தமான விளக்கம். மூன்றாவதாக நடுநிலை வகித்த நாடுகள்.இந்நாடுகள் இலங்கை அரசாங்கத்தோடு தமக்குள்ள உறவை பகை நிலைக்குத் தள்ள விரும்பவில்லை. அல்லது அமெரிக்காவின் மேலாண்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.அல்லது தமிழ்மக்களை கையாளக்கூடிய தூரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கருதும் நாடுகள்.

இந்தியா நடுநிலை வகித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இந்தியா நடுநிலை வகித்தது. இதுவரையிலுமான கடந்த பத்தாண்டுகால ஜெனிவா தீர்மானங்களில் இந்தியா இரண்டு தடவைகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.இம்முறை ஜெனிவாவில் இந்தியாவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தூண்டும் நோக்கத்தோடு தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் முயற்சித்தார்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தது. இந்தியா ஐநாவில் அக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் சிலர் அங்குள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கூடாக இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாமா என்று முயன்றிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களில்  முக்கியமான சிலர்கூட அந்த விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களோடு அதிகம் உறவைப் பேணும் சீமானின் கட்சியும் அதில் அக்கறை காட்டவில்லை. மேலும் பெரிய திராவிடக் கட்சிகளை அணுகிய பொழுது குறிப்பாக திமுக அந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. ஈழப் பிரச்சினையில் தலையிட்டு கையச் சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று திமுகவின் தலைமை தன் கட்சி ஆட்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனமைக்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம்,திமுக இந்த விடயத்தில் தலையிடுவதில்லை என்ற முடிவோடு காணப்படுகிறது.நெருக்கடியான காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கும் அப்பால் ஈழப்பிரச்சினையில் தலையிட திமுக தயங்குகிறது. அதனால் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட ஈழ உணர்வாளர்கள் ஜெனிவாவை முன்வைத்துப் போராடத் தயாரில்லை.

இரண்டாவது காரணம் திராவிடம் எதிர் தமிழ் என்ற ஒரு முரண் நிலை ருவிற்றரிலும் கிளப் ஹவுஸ்சிலும் தீவிரமடைந்து வருகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பங்குண்டு. இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்படி சமூகவலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் மோசமாக மோதிக் கொள்கிறார்கள்.இம்மோதல்களில் அனேகமாக அரசியல் நாகரீகம் பின்பற்றப்படுவதில்லை.

மூன்றாவது காரணம்,சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஏகபோக உரித்தை கொண்டாட முற்படுகிறது. இதனாலும் ஏனைய கட்சிகள் அந்தப் பக்கம் வரத் தயங்குகின்றன.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானுக்கு ஆதரவான தரப்புக்களில் அநேகமானவை ஜெனிவாவை,ஜெனிவா தீர்மானங்களை பிரயோசனமற்றவை என்று கருதுகின்றன.அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு சீமானும் ஜெனிவாவை குறித்து அறிக்கை விடாமல் இருந்திருக்கலாம். மேலும்,சீமான் தன் அரசியல் எதிரிகளைத் தாக்கும் பொழுது ஈழப் பிரச்சினையை ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றார். அதனால் அவருக்கு விழும் அடிகள் ஈழப் பிரச்சினையின் மீதும் விழுகின்றன.

நாலாவது காரணம்,தமிழகத்தில் பாரதிய ஜனதா தன் கால்களை பலமாக ஊன்ற முயற்சிக்கின்றது.ஈழப்பிரச்சினையை அவர்கள் திமுகவுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறார்கள்.தவிர திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சினையை தம் கையில் எடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஐந்தாவது காரணம், புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளில் சிலவும் தாயகத்தில் உள்ள மிகச் சில தரப்புகளும் இந்துத்துவா ராஜதந்திரம் ஒன்றை கையில் எடுக்க முயற்சிக்கின்றன.அதன்படி தமிழக பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கியஸ்தர்களான திருமதி.வானதி சீனிவாசன்,அண்ணாமலை போன்றோரை அணுகுவதன்மூலம் டெல்லியை நெருங்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.இதுவும் திராவிடக் கட்சிகளை ஒதுங்கி நிற்க வைக்கிறது.

மேற்கண்ட காரணங்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் ஈழத் தமிழர்களின் விவகாரம் சிக்கிவிட்டது.இதுதொடர்பாக உரையாடிய ஒரு தமிழகச் செயற்பாட்டாளர் பின்வரும் தொனிப்படச் சொன்னார் “ஈழப்பிரச்சினையை தேர்தலுக்காகப்  பயன்படுத்தும் ஒரு வழமைக்குப் பதிலாக தேர்தலை ஈழப் பிரச்சினைக்காக கையாளும் ஒரு வளர்ச்சி தமிழகத்தில் இன்றுவரை ஏற்படவில்லை. நீங்கள் ஈழத் தமிழர்கள் இந்தியாவை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு தரிசனத்தையும் கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.அதற்கு முதலில் தமிழகத்தை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு கொள்கை அவசியம்” என்று.

இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் ஜெனிவாத் தீர்மானத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை  விமர்சித்து வைகோ ஒரு அறிக்கை விட்டார்.பாட்டாளி மக்கள்கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டார்.தமிழக சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமாகிய வேல்முருகன் ஓர் அறிக்கை விட்டார்.அவ்வளவுதான் நடந்தது. ஆதற்குமப்பால் ஜெனிவாவில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ்நாட்டிலிருந்து பலமான எதிர்ப்புக் காட்டப்படவில்லை

அதேசமயம் தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள சிவில் சமூகங்களை நெருங்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றும் விதத்தில் இலங்கைத்தீவில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தமிழ்க் கட்சிகளும் அதற்குத் தயாராக இருக்கவில்லை.சிவில் சமூகங்களும் உடன்படவில்லை.அதற்கு அவர்கள் வலிமையான ஒரு காரணத்தை முன்வைத்தார்கள்.அது என்னவெனில், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு கட்சிகள் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.இக்கூட்டுக் கோரிக்கையை தயாரிக்கும்பொழுது தமிழரசுக் கட்சி அதில் முதலில் இணையவில்லை. அக்கட்சி அந்த முயற்சிகளில் இணைந்து செயல்பட்ட தொடங்கியபின் கோரிக்கையின் வடிவம் மாறியது. எனினும் மேற்படி கூட்டுக்கோரிக்கையானது சாராம்சத்தில் மாகாண சபையை கடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியது.இதில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிட்டுப் பூங்காவில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது.

இவ்வாறு பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் ஆறு கட்சிகளும் ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியப் பிரதமரை நோக்கி முன்வைத்தன.ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் பதில் கூறவில்லை.கடந்த ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்திருந்தார்.இதன்போது அவர் கூட்டமைப்பை சந்தித்தார்.டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார். ஆனால் ஆறு கட்சிகளையும் ஒன்றாகச் சந்திக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் ஒரு தடவை இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்க் கட்சிகளும் தயாரில்லை குடிமக்கள் சமூகங்களும் தயாரில்லை.

ஆக மொத்தம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை.

அவ்வாறு ஈழத்தமிழர்களும் தமிழகமும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துவதால் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க,இந்திய மத்திய அரசாங்கத்தை  கையாளும் விடயத்தில்,தமிழக ஈழத் தரப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களையும் ஏமாற்றகரமான இடைவெளிகளையும் மேற்படி முயற்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழகம் கொந்தளித்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்ற ஒர் எடுகோளின்  அடிப்படையில் மூத்த அரசறிவியலாளர் திருநாவுக்கரசு உபாயம் ஒன்றை முன்வைத்தார்.அது நாலாங்கட்ட ஈழப்போரின்போது 2006 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.”சென்னையில் திறவுகோல்  என்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில்,சென்னை-டில்லி-வொசிங்டன் ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரும்போது தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சில செயற்பாட்டாளர்கள் தன்னார்வமாக முன்னெடுத்த நகர்வுகள்  வெற்றி பெறாதது  எதைக் காட்டுகிறது? தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான பிணைப்பு ஒரு பேர பலமாக மாற்றப்படவில்லை  என்பதையா ?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *