யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்?

598660432
‘நாங்கள்; மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில் அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் இவ்வாறு கூறுவதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்பு சொல்கெய்மும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவிலிருந்து தான் கடுமையான பாடங்களைக் கற்றிருப்பதாக.
குறுகியகால இடைவெளிக்குள் இரு வேறு மேற்கத்தைய பிரதிநிதிகள் இவ்வாறு ஒரே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருவரையும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். ஒருவர் இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் மிக நீண்ட காலம் நீடித்திருந்த சமாதான முயற்சிகளின் அனுசரணையாளர். நோர்வே அனுசரணை செய்த சமாதானம் எனப்படுவதை அதன் மெய்யான பொருளிற் கூறின் மேற்கு நாடுகள் செய்த ஒரு சமாதானம் தான். அதில் நோர்வே ஒரு கருவியாகச் செயற்பட்டது என்பதே சரி. அதாவது சொல்கெய்ம் எனப்படுபவர் ஒரு மேற்கின் கருவிதான். இப்பொழுது அவர் ஐ.நாவின் உறுப்பாக உள்ள ஓர் அனைத்துலக நிறுவனத்திற்கு பொறுப்பாய் இருக்கிறார்.
அவர் அனுசரனை செய்த சமாதான முயற்சிகள் முறிக்கப்பட்ட போது வெடித்தெழுந்த நாலாம் கட்ட ஈழப் போரின் முடிவில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40000ற்கும் அதிகம் என்று ஐ.நா கணிப்பிடுகிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பொழுது அதைத் தடுக்க முடியாத அல்லது தடுக்க விரும்பாத ஓர் உலகப் பொது மன்றத்தில் பொதுச் செயலராக இருந்தவரே பான்கிமூன்.
பான்கிமூனும் ஒரு கருவிதான். ஐ.நாவை விமர்சிப்பவர்கள் அதை மேற்கு நாடுகளின் ‘றபர் ஸ்ராம்ப்’ என்று அழைப்பதுண்டு. கெடுபிடிப் போரின் முடிவிற்குப் பின் ஐ.நா அதிக பட்சம் சமநிலை இழந்து விட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. இத்தகையதோர் பின்னணியில் நாலாம்கட்ட ஈழப்போரின் போது ஐ.நா எடுத்த முடிவுகள் அனைத்தும் சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகளே என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

73b17cef9d136e3500a9d0ecdbf6fd58
எனவே சொல்கெய்மும் பான்கிமூனும் தனிநபர்கள் அல்லர். முழு உலகின் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்படும் ஒரு மேற்கத்தேய கட்டமைப்பின் பிரதிநிதிகளே அவர்கள். அக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை இரு வேறு தளங்களில் முன்னெடுத்த கருவிகளே அவர்கள். இப்பொழுது சொல்கிறார்கள் தாங்கள் இலங்கைத் தீவில் இருந்து பாடங்களைக் கற்றிருப்பதாக. இது அவர்கள் தனிப்பட்ட முறையில் கற்ற பாடங்களல்ல. எந்தக் கட்டமைப்பின் கருவிகளாக அவர்கள் செயற்பட்டார்களோ அந்தக் கட்டமைப்பு பெற்ற பாடங்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை கற்றுக் கொண்ட பாடங்கள் என்று கூறும் பொழுது தனிய 2009 மே வரையிலுமான பாடங்களை மட்டும் கவனத்தில் எடுக்க முடியாது. அதற்குப் பின்னர் ஏறக்குறைய ஏழாண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஏழாண்டு காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களையும் சேர்த்துத்தான் கதைக்க வேண்டும். ஆனால் சொல்கெய்மும், பான்கிமூனும் கடந்த ஏழாண்டுகளில் பெற்ற பாடங்களைப் பற்றியும் பேசுகிறார்களா?
சரி மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் எத்தகைய பாடங்களைக் கற்றிருக்க முடியும்? இக் கேள்விக்கான விடையானது மற்றொரு கேள்விக்கான விடையிலிருந்தே தொடங்குகிறது. அதாவது நோர்வேயின் அனுசரனையுடனான சாமாதானத்திலிருந்து தொடங்கி இன்று வரையிலுமான ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தில் மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் பெற்ற நன்மைகள் எவை? தீமைகள் எவை? என்பதே அந்தக் கேள்வியாகும்.

afp5726245_lanciogrande
2002ல் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்தபொழுது அனைத்துலக பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் அப் பாதுகாப்பு வலைப்பின்னலின் ஒரு பகுதியாகவே நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலிகள் இயக்கம் 2005ல் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை தோற்கடிக்கும் ஒரு முடிவை எடுத்த பொழுது மேற்கின் மேற்படி நிகழ்ச்சி நிரல் குழப்பப்பட்டுவிட்டது. புலிகள் இந்த முடிவை எடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வொசிங்டன் மாநாட்டில் அந்த இயக்கத்திற்கு விசா வழங்கப்படாமையாகும். இரு தரப்புக்களிடையிலான ஒரு சமாதான முன்னெடுப்பில் ஒரு தரப்பை தடை செய்யப்பட்ட இயக்கம் என்றுகூறி அமெரிக்காவிற்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது சமாதானத்தின் வலுச் சமநிலையை பாரதூரமாகப் பாதித்தது. இது பற்றி அந்நாட்களில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜெவ்றி லுன்ஸ்ரெட் (துநககசநல டரளெவநயன) பின்னர் தான் வெளியிட்ட ஓர் உட்சுற்று அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். வொசிங்டன் மாநாட்டில் பங்கு பற்றுவதற்கு புலிகளுக்கு விசாமறுக்கப்பட்டமை சரியா? என்ற தொனிப்பட அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இங்கிருந்து தொடங்கி சமாதானத்தின் வலுச்சமநிலை மேலும் மேலும் தளம்பலாயிற்று. இவ்வாறு அச்சமநிலை தளம்பத் தளம்ப மேற்கு நாடுகளின் பாதுகாப்பு வலைப் பின்னலும் இலங்கைத் தீவில் பலவீனமடையத் தொடங்கியது. இது காரணமாக புலிகள் இயக்கத்தை தமது சொற் கேட்கும் ஒரு நிலை வரை தோற்கடிப்பது என்ற முடிவிற்கு மேற்கு நாடுகள் வந்தன. இந்தியா ஏற்கெனவே அவ்வாறான ஒரு தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தது. ஆசிய மைய வெளியுறவுக் கொள்கையை அமுல் படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த மகிந்தவை சீனா பற்றிப் பிடித்துக் கொண்டது. போரில் மகிந்தவைப் பலப்படுத்துவதன் மூலம் தனது முத்துமாலைத் திட்டத்தில் இலங்கைத் தீவையும் ஒரு முத்தாகக் கோர்க்க சீனா முயற்சித்தது.
இவ்வாறாக பூமியில் சக்தி மிக்க நாடுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தும் ஓரு நிலை ஏற்பட்ட போது புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. தமது பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு இடைஞ்சலாக இருந்த அரசற்ற தரப்பொன்றை மேற்கு நாடுகளும் இந்தியாவும் முதலில் தோற்கடித்தன. இதுதான் 4ம் கட்ட ஈழப் போரில் நடந்தேறியது. இது முழுக்க முழுக்க உலகின் சக்தி மிக்க நாடுகளின் வியூகம்தான். இதில் ஐ.நா சுயாதீனமாக முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைமை அப்பொழுது இருக்கவில்லை. போரின் முடிவில் ஐ.நா தலையிடாமை எனப்படுவது முழுக்க முழுக்க ஓர் அரசியலின் தீர்மானம்தான். பான்கிமூன் அதை தவறு என்று சொல்வாரா?

598660382
அப்படியென்றால் அத்தவறிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்ட பாடம்தான் என்ன? அவர்கள்தான் சொல்ல வேண்டும். தமது பாதுகாப்பு வலைப்பின்னலை குழப்பிய அரசற்ற தரப்பை முதலில் தோற்கடித்தார்கள். அதன் பின் அப்பாதுகாப்பு வலைப்பின்னலை பலவீனப்படுத்திய அரசுடைய தரப்பை அதாவது மகிந்தவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தோற்கடித்தார்கள். தமது பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட புலிகள் இயக்கத்தை தோற்கடித்த பொழுது அவர்கள் தமிழ் மக்களையே பலியெடுத்தார்கள். அதை இனப்படுகொலை என்று அவர்கள் இன்று வரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நடந்து 6ஆண்டுகளின் பின் அரசுடைய தரப்பை அதே தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்றே தோற்கடித்தார்கள். மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக அவர்கள் தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டார்கள். ஆனால் மகிந்த தோற்கடிக்கப்பட்டதும் தமிழ் மக்களை கைவிட்டு விட்டார்கள்.
ஐ.நாவையும் மேற்கு நாடுகளையும் இலங்கையிலிருப்பவர்கள் நம்புவது என்பது ஒருவித ‘ஆபத்தான கூட்டு மாயை’ என்று ‘நியு இந்தியன் எக்ஸ்பிரஸின்’; கொழும்பு முகவரான பி.கே.பாலச்சந்திரன் முகநூலில் எழுதியுள்ளார். அப்படிப் பார்த்தால் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தமிழ் மக்களை கூட்டு மாயைக்குள் மூழ்கடித்து மேற்கு நாடுகளே அதிகம் இலாபம் அடைந்தன என்று எடுத்துக் கொள்ளலாமா? ஏனெனில் 2002ல் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பாதுகாப்பு வலைப்பின்ன்லை இப்பொழுது மேற்கு நாடுகள் அதன் விஸ்தரிக்கப்பட்ட ஆகப் பிந்திய வடிவத்தில் வெற்றிகரமாக முன்நகர்த்தக் கூடியதாக உள்ளது. கடந்த வாரம் இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்புத் துறை சார் வழங்கல்கள் தொடர்பில் ஒரு முக்கிய உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளன. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாக இழுபட்டு வந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் கடந்த வாரம் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் சில வீழ்ச்சிகள், பின்னடைவுகள் அல்லது தாமதங்களோடு மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் தமது வியூகத்தை படிப்படியாக விஸ்தரித்து வருவதை காண முடிகிறது. இந்தியாவும் தனது கரங்களை படிப்படியாக பலப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நரேந்திர மோடி யாழ்ப்பாணத்தில் பொங்கல் பொங்கியபொழுது லண்டனில் வசிக்கும் ஓர் ஆவணச் செயற்பாட்டாளர் தனது ருவிற்றர் பதிவில் பின்வரும் தொனிப்பட எழுதியிருந்தார். ‘இந்திய இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு ஏறக்குறைய கால் நூற்றாண்டின் பின் இந்தியா தடைகள் ஏதுமின்றி யாழ்ப்பாணத்தில் பொங்கல் பொங்கியிருக்கிறது’ என்று.

jaffna1prot4icp
இப்படிப் பார்த்தால் சக்தி மிக்க நாடுகள் கடந்த பத்தாண்டு காலத்திற்குள் இலங்கைத் தீவில் நன்மைகளைப் பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களும் நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள். ராஜபக்ஷவை வைத்து அவர்கள் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்தார்கள். அதனால் அனைத்துலக அரங்கில் தமது அரசுக்கு ஏற்பட்ட கறையைக் கழுவுவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளையும் பாவித்தே ராஜபக்ஷவை அகற்றினார்கள். அதன் மூலம் அனைத்துலக கவர்ச்சி மிக்க ரணில்-மைத்திரி அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இவ்வரசாங்கமானது மேற்கின் விசுவாசி தான் என்றாலும் நூறு வீதம் குருட்டு விசுவாசியாகத் தெரியவில்லை. அது சீனாவை முழுமையாகக் கைவிடவில்லை. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய முப்பெரும் இழுவிசைகளுக்கிடையே கெட்டித்தனமாக சுழித்துக் கொண்டோடுகிறது. ஏறக்குறைய சீனாவிற்கு நெருக்கமாக இருந்த பர்மிய அரசு எப்படி உலகப் போக்குடன் தன்னை சுதாகரித்துக் கொண்டு உலகின் அபிமானத்தை வென்றெடுத்ததோ அப்படித்தான் இதுவும். அதாவது சிங்கள அரசியல் வாதிகள் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தையும் தோற்கடித்து விட்டார்கள். அதே சமயம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று உலகத்தின் அபிமானத்தையும் வென்றெடுத்து விட்டார்கள். ஆனால் தமிழர்கள்?
அனைத்துலக விசாரணையும் இல்லை. கலப்பு விசாரணையும் இல்லை. பாதுகாப்புக் கொள்கையிலோ, காணிக் கொள்கையிலோ மாற்றமுமில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் அகற்றப்படவுமில்லை, சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்படவுமில்லை, அரசியல் கைதிகளுக்கு விடுதலையுமில்லை, ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றமுமில்லை, முழுமையான வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை, சமஷ;டியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் மக்களுக்கே இழப்புக்கள் அதிகம். தமிழ் மக்களுக்கே பின்னடைவுகள் அதிகம். இதிலிருந்து ஐ.நா எதைக் கற்றுக் கொண்டது? சொல்கெய்ம் எதைக் கற்றுக் கொண்டார்?
‘சமாதானத்திற்கும் நீதிக்குமான ஸ்ரீலங்காவின் முன்னெடுப்பு’ என்ற அமைப்பு பான்கி மூனின் கொழும்பு வருகையையொட்டி ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியது. நடந்த தவறுகளுக்காக பான்கிமூன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. ஆனால் பான்கிமூன் மன்னிப்பு கேட்கவில்லை. தவறு நடந்து விட்டது பாடங்களைக் கற்றிருக்கிறோம் என்று ஒப்புக்காகக் கூறிய அவருக்கு ஒப்புக்காகவேனும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க தோன்றவில்லை.

protest_against_un
லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் ஆற்றிய உரையின் ஓர் இடத்தில் அவர் ஐ.நா கடந்த காலங்களில் பல தவறுகளை இழைத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 1993ல் ஸ்ரெபரெனிகாவில் ஐ.நா கையாலாகாத ஒரு சாட்சி போல நின்றது. அடுத்த ஆண்டில் ருவாண்டாவில் ஐ.நா ஒரு இனப் படுகொலையை தடுக்கத் தவறியது. அதன் பின் பதினைந்து ஆண்டுகள் கழித்து முள்ளிவாய்க்காலில் மற்றொரு இனப்படுகொலையை தடுக்கத் தவறியது. ‘ஸ்ரீலங்காவில் நாங்கள் மேலும் செயலூக்கத்தோடு பங்குபற்றியிருந்திருந்தால் எங்களால் மேலும் பல உயிர்களை பாதுகாத்திருந்திருக்க முடியும்’ என்று பான்கி மூன் மேற்படி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 16 ஆண்டுகால இடைவெளிக்குள் ஐ.நா இவ்வாறு ‘தவறு நடந்து விட்டது…..தவறு நடந்து விட்டது’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? அத்தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது எப்பொழுது? ஐ.நா கூறுகிறது தவறு நடந்திருப்பதாக. டிக்சிற் கூறுகிறார் தவறு நடந்திருப்பதாக. நட்வர்சிங் கூறுகிறார் தவறு நடந்திருப்பதாக இனியும் யார் யாரெல்லாம் இவ்வாறு கூறப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாரும் விட்ட தவறுகளுக்காக தமிழ் மக்களே இரத்தம் சிந்தினார்கள், தமிழ் மக்களே வதைபட்டார்கள், தமிழ் மக்களே தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழ் மக்களே இப்பொழுதும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *