தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா?

தமிழரசுக் கட்சியை முன்னரைவிட அதிகமாகத் தேசியமயப்படுத்துவது 

தமிழரசுக்  கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது.தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது.அவ்வாறு வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது.1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா,பாலகிருஷ்ணன்,சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில்  பேசினார்கள்.அவர்களுடைய கருத்தை,அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம்  ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்,எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு  போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள்.எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்?2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில்,நான் ஆற்றிய உரையில்,சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன்.அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார்.2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர்,ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார்.அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள்.சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல.அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல.இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர்.அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன்.சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான்.அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார்.அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார்.பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்….”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் .பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?”என்று.

சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

எனவே,சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை.அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும்.இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும்.தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள்.தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு.போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது.ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல.தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர்.ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

சுமந்திரன் அணியின் எழுச்சி என்பது தேர்தலோடு ஏற்பட்ட ஒரு தோற்றப்பாடு அல்ல.தேர்தலோடு அது மேலும் பலமடைந்தது என்பதே சரி.அது கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடு.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொள்கின்ற; ஐக்கிய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பு கட்சிக்குள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.

எனவே அந்த உட்கட்சி யதார்த்தத்தை உள்வாங்கி சிறீதரன் கட்சியைச் சீரமைக்க வேண்டியவராக இருக்கிறார்.சுமந்திரன் கட்சியைத் தேசிய நீக்கம் செய்தார் என்று அவர் கருதினால்,கட்சியை முன்னரை விட அதிகமாக தேசிய மயப்படுத்த வேண்டியது இப்பொழுது சிறீதரனுடைய பொறுப்பு.

குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகளின் விளைவாக கட்சிக்குள் மற்றொரு சிறு பிளவு மேற் கிளம்பும் ஆபத்துத் தெரிகிறது.அது மட்டக்களப்பு-திருகோணமலை என்ற முரண்பாடு. கிழக்கை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதில் மட்டக்களப்பா?திருக்கோணமில்லையா? என்ற ஒரு போட்டி அங்கே தோன்றியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சிக்கு விட்டுச் சென்றிருக்கும் மற்றொரு தீங்கான விளைவு அது. கிழக்கை மையமாகக் கொண்ட சம்பந்தர் தலைவராக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் கிழக்கில் பிள்ளையானின் கட்சிக்கு பலமான வாக்காளர் வங்கி ஒன்று உருவாகியது. அது கிழக்கின் யதார்த்தங்களில் ஒன்று.பிள்ளையானின் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வசித்தவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் கிழக்கின் யதார்த்தம்தான்.இவ்வாறு ஏற்கனவே வடக்குக் கிழக்காகப் பிரிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில்,இப்பொழுது கிழக்குக்குள்ளேயே ஒரு பிரிவு தோன்றக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அதாவது ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் ஒரு தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு புதிய உடைவுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. சிறீதரன் அதையும் கையாள வேண்டியுள்ளது

அவர் பதவியேற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றார்.அது கொழும்பில் உள்ள மேற்கத்திய தூதரகங்களால் பெரிய அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கப்படவில்லை என்று சுமந்திரனுக்கு நெருக்கமான சிலர் கூறியதாக அறிகிறேன்.எனினும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள்.அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் சிங்கள ஊடகவியலாளராகிய சுனந்த தேசப்பிரிய பின்வருமாறு ருவிற் பண்ணியிருந்தார் “தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனை  சிறீதரன் வென்றமையானது தமிழ் அரசியல் தீவிரப்போக்கடைவதைக்  காட்டும் ஒரு  சமிக்ஞையாகும்”

அதாவது சிறிதரனின் தலைமைத்துவம் தமிழ் அரசியலில் தீவிரவாத போக்கை மேலும் அதிகப்படுத்தப்போகிறது என்று கொழும்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களக் கடும்போக்கு வாக்குகளைக் கவர விரும்புகிறவர்களுக்கு அது வழிகளை இலகுவாக்கிக் கொடுக்குமா? குறிப்பாக நடந்து முடிந்த சுதந்திர தினத்திலன்று சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதில் சிறீதரன் நடந்து கொண்ட விதமும்,அவர் கட்சியை எந்த திசையில் செலுத்த விரும்புகிறார் என்பதனை உணர்த்துகின்றதா?சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுவதுபோல தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கஜேந்திரகுமார் கிடைத்திருக்கிறாரா?

சுதந்திர தினமன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியிலானது.கட்சிக்குள் தன்னுடைய நிலையைப்  பலப்படுத்துவதற்கு அது சிறிதரனுக்கு உதவும்.

சிறீதரன் முதலில் கட்சிக்குள் தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியானது கொழும்பை நோக்கி அதிகம் அதிகம் திருப்பப்பட்டு விட்டது. அதை மீண்டும் வாக்காளர்கள் நோக்கித் திருப்பவேண்டும்.அதே சமயம் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதுபோல ஒரு சமஸ்ரியை அடைவதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.சுதந்திர தினத்தன்று ஆதரவாளர்களுக்கு வீரமாகத் தலைமை தாங்குவது கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்த உதவலாம்.அதற்குமப்பால் சமஸ்ரியை அடைவதற்கான செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *