ஒரு கனேடிய நண்பர்,அவர் ஒரு பொறியியலாளர்,இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது.அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது.டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார்.1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம் செய்து கொண்டார்கள்.முதலாவது தொகுதி இரும்பு மோதிரங்கள் உடைந்து விழுந்த கியூபெக் பாலத்தின் இரும்புத் தூண்களில் இருந்து தயாரிக்கப்பட்டன.
இது கனேடியப் பொறியியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.மருத்துவர்களுக்கும் அவ்வாறு உலகளாவிய “ஹிப்போகிரடிஸ் ஓத்” என்று அழைக்கப்படும் சத்தியப்பிரமாணம் உண்டு.
பொறுப்புக்கூறல் எனப்படுவது மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் மட்டுமல்ல எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.ஒரு சமூகப் பிராணியாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். மருத்துவர் தவறுவிட்டால் உயிர் போகும் உறுப்புகள் போகும்.பொறியியலாளர் தவறுவிட்டால் பாலம் இடிந்து விழும்;அல்லது கட்டடம் இடிந்து விழும்;உயிர் போகும்;உறுப்புகள் போகும்;சொத்துக்கள் போகும்.ஆசிரியர் தவறுவிட்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் நாசமாகும். தலைவர்கள் தவறு விட்டால் ஒரு நாடு அழிந்து போகும்.எனவே மனிதத் தவறுகளுக்கு மனிதர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.நிறுவனங்களுக்குள் கட்டமைப்பு சார்ந்து,தொழில் தர்மம் சார்ந்து,பதவிவழி சார்ந்து,பொறுப்புக்கூற வேண்டும்.தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.ஆகக் குறைந்தது எல்லா மனிதர்களும் தங்களுடைய மனச் சாட்சிக்காவது பொறுப்புக் கூற வேண்டும்.
மருத்துவர் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை அதிகப்படுத்தியுள்ளார்.மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சமூகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர் அதிகப்படுத்தியுள்ளார்.அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றினார்.அப்பாவித்தனமாகவும் வெகுளித்தனமாகவும் தனக்குச் சரியெனப்பட்டதை நேரலையில் கூறினார். அவரிடம் உள்ள அப்பாவித்தனமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சலும் கலகக் குணமும் அவரை மக்களுக்கு நெருக்கமானவர் ஆக்கின.அதேசமயம் அந்த அப்பாவித்தனமும் அவசரமும் நிதானமின்மையும் பக்குவமின்மையும் ஊடகங்கள் முன் அவரை சிலசமயம் பலவீனமானவராகவும் காட்டின.
சுகாதாரத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வெவ்வேறு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் அதுதொடர்பாக கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால் அர்ஜுனா இதில் எங்கே வேறுபடுகிறார் என்றால்,அவர் அந்த சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டே அந்த சிஸ்டத்தைக் கேள்வி கேட்கின்றார் என்பதுதான். அதுதான் அவருக்கு கிடைத்த கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை அவர் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா இல்லையா;அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எத்தகையது;அவருடைய தனிப்பட்ட சுபாவம் எத்தகையது… போன்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால்,அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு துறைசார் உயர் அதிகாரிகள் பதில் கூறுவதே பொருத்தமானது.ஏனெனில் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மருத்துவத்துறைக்கு அது தொடர்பில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
தமிழ்ச் சமூகத்தில் கிராமவாசிகள் அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகள் என்று அழைப்பார்கள்.அங்கு மருந்தும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது என்று பொருள்.ஆனால் அவை மெய்யான பொருளில் தர்மாஸ்பத்திரிகள் அல்ல.அங்கே வேலை செய்யும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள்.அந்தச் சம்பளம் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து திரட்டப்படுவது.அங்கு வழங்கப்படும் இலவச மருந்தும் சிகிச்சையும்கூட மக்களுடைய வரிப் பணம்தான்.எனவே அங்கே யாரும் யாருக்கும் தானம் செய்யவில்லை.யாரும் யாரிடமும் தானம் பெறவும் இல்லை.
ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தமது தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்கள் அநேகர் உண்டு.தாம் பொறுப்பேற்ற நோயாளியை காப்பாற்றுவதற்காக ஊண் உறக்கமின்றி சேவை புரியும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவமனைக்குப் போகக்கூடாது என்பதனை ஒரு தவம் போல கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவத் துறைக்கு போனாலும் அங்கே நோயாளியின் நிதிநிலையைக் கருத்தில் எடுத்து காசு வாங்காத மருத்துவர்கள் உண்டு.வாங்கிய காசை உண்டியலில் சேகரித்து தானம் செய்யும் மருத்துவர்கள் உண்டு.எனவே அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மருத்துவர்களுக்கும் பொருந்தாது.போர்க்காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது.பெருந்தொற்றுநோய் காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. இப்பொழுதும் தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்களுக்கு அது பொருந்தாது.
அரச மருத்துவமனையை தர்மாஸ்திரியாக பார்க்கும் மக்கள் அங்கு மருத்துவர்கள் தாதியர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக இல்லை எனும் பொழுது அதிருப்தி அடைகிறார்கள், கோபமடைகிறார்கள்.குறிப்பாக தனியார் மருத்துவத்துறை மீதான விமர்சனங்கள் அந்தக் கோபத்தை அதிகப்படுத்துகின்றன.அந்தக் கோபங்களை கேள்விகளை அதிருப்தியை அர்ஜுனா குவிமயப்படுத்தினார்.அதனால்தான் சாவகச்சேரியில் அத்தனை மக்கள் திரண்டார்கள்.சில நாட்களுக்கு முன் சம்பந்தரின் அஞ்சலி நிகழ்வில் திரண்டதைவிட அதிக தொகையினர் ஒரே நேரத்தில் திரண்டார்கள்.
அர்ஜுனா எப்பொழுதும் நேரலையில் தோன்றினார் அதுதான் அவருடைய பலம்.பின்னர் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறியது.அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தின் மத்தியில் மருத்துவர்களுக்கு உயர்வான பவித்திரமான ஒரு இடம் உண்டு.பொதுவாக மருத்துவர்கள் அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை.ஆனால் அர்ஜுனா வெளியே வந்தார்.பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வெளியே வந்தார். இப்பொழுது முகநூலில் சில மருத்துவர்கள் அவ்வாறு வெளியே வருகிறார்கள்.ஆனால் இவர்கள் அனைவரும் விதிவிலக்கு.பொதுவான மருத்துவர் குணம் என்பது தனக்குரிய பவித்திரமான ஸ்தானத்தைப் பேணுவதுதான்.
ஆனால் அர்ஜுனா அப்படியல்ல.அவர் மருத்துவர்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவான பிம்பத்துக்கு வெளியே நிற்கிறார்.நேரலைமூலம் அவர் சமூக வலைத்தளங்களில் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பமும் திடீர் வீக்கமாக இருக்கலாம்.அவர் தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை,பலவீனங்களை சிஸ்டத்தின் மீதான விமர்சனங்களாக மாற்றுவதில் வெற்றி கண்டு விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு.
எனினும்,அவர் சார்ந்த சிஸ்டத்தின் மீது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் விசாரணைக்குரியவை.திணைக்களம் சார்ந்த உள்ளக விசாரணைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம்.அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அதை மணந்து கண்டுபிடிக்கலாம்.அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உண்மைகளை புலனாய்ந்து வெளியே கொண்டுவர வேண்டிய துறைசார் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.அது ஊடகத்துறை சார்ந்த பொறுப்புக் கூறல்.
அதேசமயம் துறைசார் அரச உயர் அதிகாரிகள் அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக மக்களுக்கு பதில்கூற வேண்டும். அதைவிட முக்கியமாக அர்ஜுனா ஒரு பொறியைத் தட்டிப்போட்டதும் அது எப்படி சாவகச்சேரியில் தீயாகப் பரவியது என்பதற்குரிய சமூக உளவியலையும் தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அர்ஜுனாவின் கலகம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட அதிருப்தி,கோபம்,பயம், சந்தேகம் போன்றவற்றின் தொகுக்கப்பட்ட விளைவுதான். ஏற்கனவே பொதுப் புத்திக்குள் இருந்த பயங்களையும் கோபத்தையும் அதிருப்தியையும் அர்ஜுனா ஒருங்குவித்தார் என்பதுதான் சரி.
அர்ஜுனாவின் விமர்சனங்கள் விவகாரம் ஆகிய பின் சில நாட்கள் கழித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒரு குறிப்பை முகநூலில் போட்டார்.அது போதனா வைத்தியசாலை மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் நோக்கிலானது. ஆனால் அதற்கு கீழே வந்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், 500க்கும் அதிகமான கருத்துக்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானவை மருத்துவத் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை.அதில் ஒரு செய்தியுண்டு.பொதுசன மனோநிலை ஏன் அவ்வாறு அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படுகின்றது?
ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பு அதிகரிப்பது நல்லது.ஒவ்வொருவரும் தொழில் சார்ந்தும் அறம் சார்ந்தும் குறைந்தது மனச்சாட்சிக்காவது பொறுப்புக்கூற வேண்டும்.ஒரு மருத்துவர் கூறியதுபோல,பொது வைத்தியசாலைகளில் கழிப்பறைகளை பயன்படுத்துவதிலும் பொதுச்சொத்தை நுகர்வதிலும் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பொறுப்போடு காணப்படுகிறார்கள்?எல்லாப் பொது மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மோசமாகக் காணப்படுகின்றன.ஏன் அதிகம் போவான்? முருகண்டியில் கழிப்பறைக்குக் காசு வாங்கப்படுகின்றது.ஆனால் அந்தக் கழிப்பறையின் சுகாதாரச்சூழல் எப்படியிருக்கிறது? மேற்கத்திய சமூகத்தின் சமூகப் பொறுப்பை கண்டுபிடிக்கக் கூடிய இடங்களில் ஒன்று கழிப்பறைகள் ஆகும்.அங்கே பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும்.அது நலன்புரி அரசுக் கட்டமைப்பு.தவிர அங்கே கழிப்பறைகள் உலர்ந்தவை.ஆனால் நமது கழிப்பறைகளோ ஈரமானவை.எனவே எமது சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாகச் சிந்தித்து கழிப்பறைகளில் சுத்தத்தைப் பேண வேண்டும்.ஆனால் பொதுக் கழிப்பறைகளை வைத்து ஒரு சமூகத்தின் பொறுப்புணர்ச்சியை மதிப்பிடலாம்.எனவே பொறுப்புக்கூறல் எல்லாத் தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.பொது மக்களில் தொடங்கி அரசாங்கம் வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் என்ற வார்த்தைக்கு அதிகம் பிரயோக அழுத்தம் உண்டு.அரசியல் அடர்த்தி உண்டு.2015 ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட30/1 தீர்மானம் பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு உரியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு யாருமே இதுவரை பொறுப்புக் கூறவில்லை.இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் பொறுப்புக் கூறப்படாத ஒரு நாட்டுக்குள்,அல்லது பொறுப்புக்கூற யாருமற்ற ஒரு நாட்டுக்குள், பொறுப்புக் கூறலை பன்னாட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம்,தனக்குள்ளும் அந்தந்தத் துறை சார்ந்து அல்லது ஆகக்குறைந்தது அவரவர் தமது மனச்சாட்சிக்காவது பொறுப்புக் கூறத்தானே வேண்டும்?