சம்பந்தருக்குப் பிறகு?

சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும்.சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்?

சம்பந்தர் சிதறிப்போன;தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம்.முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள்.

அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை.தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம்.அந்த அமைவிடம் காரணமாகத்தான் இனப்பிரச்சினை பிராந்தியமயயப்பட்டது.பின்னர் பூகோளமயப்பட்டது.அந்த அமைவிடம் காரணமாகத்தான் திம்புவிலிருந்து ஒஸ்லோ வரையிலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன.அந்த அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின்  இழுவிசைகளுக்குள் சிக்கிக் கிழிபடும் மக்களாக மாறியிருக்கிறார்கள்.எனவே எது ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருக்கின்றதோ அதையே வெற்றிக்குரிய அடிப்படையாக மாற்றுவதில் சம்பந்தர் வெற்றி பெறவில்லை. அவர் ஈழத் தமிழ் அரசியலை பெருமளவுக்கு சர்வதேச மயநீக்கம் செய்வதிலும் பிராந்திய மயநீக்கம் செய்வதிலும் ஆர்வமாகக் காணப்பட்டார்.

இந்தியாவிடம் போனால் சிங்களமக்கள் கோபிப்பார்கள் என்று கருதி இந்தியாவின் அழைப்பை நிராகரித்தார்.அதுபோலவே ஐநாவில் பரிகார நீதியை கேட்க அவர் விரும்பவில்லை.அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை.அவர் கேட்கவில்லை.மாறாக நிலை மாறு கால நீதியைத்தான் சம்பந்தர் ஆதரித்தார்.அதற்குரிய ஐநாவின் தீர்மானத்தில் அவர் பங்காளியாகவும் இருந்தார். ஆனால் ” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார்.எனவே பரிகார நீதியும் இல்லை;நிலைமாறுகால நீதியும் இல்லை.இப்பொழுது ஐநாவில் ஒரு பலவீனமான சான்றுகளைச் சேகரிக்கும் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதுதவிர  புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். குறிப்பாக கனடாவில் குறிப்பிட்ட செல்லக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் அவற்றை எல்லாம் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச்செல்லத் தேவையான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை தாயகத்தில் இருந்து சம்மந்தர் வழங்கத் தவறினார்.அதனால் அவர் இனப்பிரச்சினையை உள்நாட்டுக்குள் சுருக்க விரும்பிய சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குத் துணைபோனார் என்பதுதான் சரி.அதாவது சர்வதேச அளவில் சம்பந்தர் தமிழ் மக்களின் அரசியலை குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்கடித்து விட்டார். இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு அனைத்துலகப் பிரச்சினைதான்.அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.உள்நாட்டுத் தீர்வு கிடையாது.எனவே இனப்பிரச்சினையை அதன் சர்வதேச, பிராந்தியப் பரிமாணங்களில் இருந்து வெட்டி எடுப்பது என்பது தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்குச் சமம்.சம்பந்தர் அதைத்தான் செய்தார்.

உள்நாட்டில் அவர் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் அவருடைய இறுதி நிகழ்வு அதற்குச் சான்று.நூற்றுக்கணக்கானவர்கள்தான் அதில் பங்குபற்றினார்கள். அவருடைய கட்சி அவரை ஒரு முதுபெரும் தலைவர் என்று அழைக்கின்றது.ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வழிநெடுக மக்கள் காத்திருந்து மலர் தூவவில்லை. அதுமட்டுமில்லை, அவருடைய கட்சித் தொண்டர்கள்கூட ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அதைவிட முக்கியமாக, சம்பந்தரின் பூத உடல் அடுத்த நாள் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு இடைப்பட்ட இரவில் தந்தை செல்வா கலையரங்கில் ஓர் அறையில் விடாது சுற்றும் விசிறிகளின் கீழே அனாதையாக வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தி. அது மிகத் தோல்விகரமானது.சில கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு வெளியே நின்று இருக்கலாம். ஆனால் ஒரு முதுபெரும் தலைவரின் உடல் ஒர் இரவு முழுவதும் அனாதையாக விடப்பட்டிருந்தமை என்பது சம்பந்தரின் அரசியல் தோல்வியை காட்டுகின்றது.

பொதுவாக ஊரில் ஒரு கிராமவாசி இறந்தால், இரவில் அந்த உடலைத் தனியே விட மாட்டார்கள்.அந்த உடலுக்கு அருகே யாராவது உறங்குவார்கள்.ஒரு குத்துவிளக்கு அல்லது மெழுகுதிரி கால்மாட்டில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.யாராவது தேவாரம் பாடுவார்கள் அல்லது ஜெபம் பண்ணுவார்கள்.இடைக்கிடை பெண்கள் ஒப்பாரி வைப்பார்கள்.ஆனால் சம்பந்தருக்கு தந்தை செல்வா கலையரங்கில் இவை எவையும் இருக்கவில்லை. சம்பந்தரின் தோல்வியை மதிப்பிட அது ஒன்றே போதும்.

நவீன தமிழ் அரசியலில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரு கூட்டணி அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருந்தது. 22 ஆசனங்கள்.ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த ஆசனங்களின் தொகை குறைந்து இப்பொழுது மொத்தம் 13 ஆசனங்கள்.அவைகூட சம்பந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முதலில் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு சம்பந்தர்  கூட்டமைப்பைப் புலி நீக்கம் செய்தார்.அதன்பின் படிப்படியாக சர்வதேச நீக்கம், பிராந்திய நீக்கம் செய்தார்.கஜேந்திரகுமார் அணி வெளியேறத்தக்க சூழ்நிலைகளை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக ஆயுதப் போராட்ட மரபில் வந்த பங்காளிக் கட்சிகள் விலகிப் போகக்கூடிய நிலைமைகளை அவருடைய பட்டத்து இளவரசர் ஏற்படுத்தினார்.முடிவில் தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது.இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதுமட்டுமல்ல,அவருடைய காலத்தில் கிழக்கில் வடக்கை எதிர்த்துக்கொண்டு தெற்குடன் கைகோர்க்கும் ஒரு கட்சி மேலிருந்து விட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின்போது யாருக்கு செயலாளர் பதவி கொடுப்பது என்ற விவாதங்களில் திருகோண மலையா? மட்டக்களப்பா? எது உண்மையாகக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது? என்ற ஒரு விவாதமும் எழுந்தது.அதாவது சம்பந்தரின் காலத்தில் கிழக்கில் உப பிரதேசவாதம் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது.ஆயின்,சம்பந்தர் தமிழரசியலை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்?

இந்த தோல்வி எங்கிருந்து வந்தது? சம்பந்தரின் அரசியல் வழியின் விளைவு அது.சிங்கள மக்களைப் பயமுறுத்தககூடாது என்று அவர் உறுதியாக நம்பினார்.ஆனால் தமிழ் மக்களின் பயங்களை ; கூட்டுக் காயங்களை; கூட்டுத் துக்கத்தை கூட்டு மனவடுக்களை அவர் பொருட்படுத்தவில்லை.ஆயுத மோதலுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டுத் துக்கத்துக்கும் கூட்டச் சிகிச்சையாக அமையவில்லை ஒரு அரசியலை; பண்புரு மாற்ற அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு தலைவர் அவர்.ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.செய்யத் தேவையான அரசியல் உள்ளடக்கம் அவரிடம் இருக்கவில்லை.

2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஒரு விளைவுதான்.அது மூல காரணம் அல்ல.மூல காரணம் இன ஒடுக்கு முறைதான்.அதாவது இலங்கைத்தீவின் இனப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளாமை.யுத்த வெற்றிகளின் மூலம் மூலகாரணம் மேலும் வீங்கித் தடித்தது.அது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை.மாற்றவும் முடியாது.ஏனென்றால் அது ஓர் இனப்படுகொலை.

போரில் வெற்றி பெற்ற ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சியைக் கட்டி எழுப்பினார்கள்.அதன்மூலம் யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கினார்கள்.யுத்த வெற்றி வாதம் எனப்படுவது நாட்டைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலே பேணுவதுதான்.வென்றவர்களும் தோற்றவர்களுமாக நாடு தொடர்ந்து பிளவுண்டிருக்கும்.இவ்வாறு யுத்த வெற்றிவாதிகள் நாட்டைப் பிளவுண்ட நிலையில் பேணும்பொழுது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் தலைவராகிய சம்மந்தரோ “பிளவுபடாத இலங்கைக்குள்;பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டு,சிங்கள மக்களின் பயங்களைப் போக்குகிறோம் என்று புறப்பட்டு,இறுதியிலும் இறுதியாக யுத்த வெற்றிவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார்.

யுத்தவெற்றி வாதம் எனப்படுவது, சிங்கள பௌத்த இனவாதத்தின் 2009க்கு பின்னரான “அப்டேட்டட் வேர்சன்”தான்.யுத்தவெற்றி வாதமானது தொடர்ந்து ஒடுக்கு முறைகளையும் ஆக்கிரமிப்பையும் முன்னெடுத்துக் கொண்டிருக்க, அதாவது நாட்டைப் பிளவுண்ட நிலையிலே தொடர்ந்தும் பேண, சம்பந்தாரோ நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்தார்.முடிவில் யுத்த வெற்றி வாதம் சம்பந்தரின் வழியைத் தோற்கடித்தது.அவருடைய விசுவாசத்துக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகையை இறக்கும்வரை அவருக்கு வழங்கியது.

இப்படித்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட்டார். தென்னிலங்கையோடு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அவர் வகுத்த வழியின் விளைவாக கூட்டமைப்பு உடைந்தது.முடிவில் அவருடைய தாய்க்கட்சியும் உடைந்து விட்டது.சம்பந்தர் தோற்றுப் போனார்.தோல்வியுற்ற ஒரு தலைவராகத்தான் அவர் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் யாழ்ப்பாணத்தில் தனித்து விடப்பட்டிருந்த அந்த இரவிலிருந்து எதிர்காலத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சம்பந்தர் தமிழ் மக்களைச் சிதறடித்து விட்டார்.தமிழ் மக்களின் அடிப்படைப் பலங்களைப் பொருத்தமான விதங்களில் கையாளத் தவறி, தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார். முடிவில் தானும் தனிமைப்பட்டுப் போனார்.எனவே சம்மந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது, சம்பந்தர் சிதறடித்தவற்றை சேர்த்துக் கட்டுவதுதான். சம்பந்தர் தமிழ் மக்களின் எந்தெந்த பலங்களைச் சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் மீண்டும் ஒன்றிணைப்பதுதான். எந்தெந்த கட்சிகளை சிதறடித்தாரோ, அவற்றை எல்லாம் ஒன்றாக்குவதுதான்.சம்பந்தருக்கு பின்னரான தமிழ் அரசியல் என்பது ஒன்று திரட்டும் அரசியலாக இருந்தால்தான் அது அதன் கடந்த 15 ஆண்டு கால தோல்வியின் தடத்திலிருந்து வெளியே வரலாம்.

இங்கேதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு  கால முக்கியத்துவம் பெறுகின்றது.இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால்,அதில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசனமான தெரிவுதான் உண்டு.ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது.ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை ஒன்றாக்குவது.சம்பந்தரின் வழியிலிருந்து விலகி வருவதென்றால் அதைவிட வேறு வழி இல்லை. சிதறடிக்கப்பட்டவற்றை ஒன்று சேர்ப்பது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *