மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார்.தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார்.சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார்.அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட்பட தமிழ் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் அப்படிப்பட்ட உயர்தர விருந்தகங்களில்தான் உணவு அருந்துகிறார்கள்.தமது ஆதரவாளர்களையும் அங்கே அழைத்துச் செல்கிறார்கள். இது முதலாவது சம்பவம்.
இரண்டாவது சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு விருந்தினர் விடுதியில் தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.தேர்தல் திணைக்களத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவது குறித்தும் தேர்தல்கள் தொடர்பில்,மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளதுபோல நிரந்தரமான ஒரு நேர அட்டவணை அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்களைத் திரட்டுவதற்கான ஒரு கருத்தமர்வு அது.
இதில் கலந்து கொண்ட வளவாளர்கள் மற்றும் பயனாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்பட்டது. பொதுவாக அரசு சார்பற்ற நிறுவனங்களின் கருத்தரங்குகளில் அப்படித்தான், பெரும்பாலும் விருந்தினர் விடுதிகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது;வருகை பதிவை எடுப்பது; முதலில் சிற்றுண்டியும் பின்னர் மதிய உணவும் கொடுத்து முடிவில் பயணச் செலவு என்று சொல்லி ஒரு தொகையை கொடுப்பது. இதுபோன்ற பெரும்பாலான கருத்தரங்குகள் “ஏசி” வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில்தான் நடக்கும். மின்விசிறிகளைக் கொண்ட, ஜன்னல்கள் திறந்து விடப்படும் சாதாரண மண்டபங்களில் நடப்பது குறைவு.
பவ்ரல் எனப்படுவது நேர்மையான,முறைகேடுகளற்ற ஒரு தேர்தல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகச் செயற்படும் ஒரு சிவில் அமைப்பு. அது தனது கூட்டத்தை வளிபதன வசதி கொண்ட விருந்தினர் விடுதிகளில் நடத்துவதோடு பயனாளிகளுக்கு பணமும் கொடுக்கின்றது.அதாவது நேர்மையான தேர்தலைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு வருபவர்களை ஊக்குவிப்பதற்கு காசு கொடுக்க வேண்டியிருக்கிறதா? இதுபோன்ற கருத்தரங்குகளை ஏன் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொதுவான வாய்ப்பாட்டுக்கு வெளியே போய் சாதாரண மண்டபங்களில் நடத்தக்கூடாது?
பவ்ரல் போன்ற அமைப்புக்கள் அப்படிச் செய்யலாமென்றால், கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, அதில் வருபவர்களுக்கு சாப்பாடும் சிற்றுண்டியும் குடிபானமும் காசும் கொடுத்து அழைத்துக் கொண்டு வருவதில் என்ன தவறு?
தமிழ்ப் பகுதிகளில் சில கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு அல்லது சிற்றுண்டி, குடிபானம் என்பவற்றோடு காசும் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 2500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. தேர்தல் நாளன்று தூர இடங்களில் இருக்கும் வாக்காளர்களை வாகனம் விட்டு ஏற்றி இறக்குவதற்கும் அதாவது வாக்களிப்பதற்கும் காசு கொடுக்கப்படுகிறது.அல்லது மது கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் உண்டு.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? வேட்பாளர்களில் ஒரு தொகுதியினர் உயர்தர விருந்தகங்களில் உணவருந்துகிறார்கள். அங்கே தமது ஆதரவாளர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நோக்கத்தோடு நடாத்தப்படும் கருத்தரங்குகளும் அப்படிப்பட்ட விருந்தகங்களில்தான் நடக்கின்றன.அங்கேயும் பயனாளிகளுக்கு அந்த விருந்தினர் விடுதியின் தரத்துக்கு ஏற்ப உணவு கொடுக்கப்படுகிறது. சராசரி வாக்காளர்கள் அண்ணாந்து பார்க்கும் விருந்தகங்களில் வேட்பாளர்கள் சாப்பிடுகிறார்கள். நேர்மையான தேர்தலை குறித்து வகுப்பெடுப்பவர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் சராசரி வாக்காளர்கள் எங்கே சாப்பிடுகிறார்கள்?
நட்சத்திர அந்தஸ்த்துள்ள விருந்தகங்களில் உணவருந்தும் வசதி வாய்ப்புகளைக் கொண்டிராத சராசரி வாக்காளர்கள் “மந்தை மனோநிலை”யோடு வாக்களிக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார். லண்டனில் வசிக்கும் அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களைக் குறித்து முகநூலில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்..”பொதுகட்டமைப்பு என்ற தற்காலிக அமைப்பு (ad hoc committee) முன்வைத்த கோசங்களுக்காக மக்கள் வாக்களித்தார்களா? அல்லது ஒரு மந்தை மனப்பாங்கில் (herding mentality) தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தார்களா? முதலாவது எனில் அரசியல் விழிப்புணர்வுமிக்க இரண்டு லட்சம் பேரை திரட்டிவிட்டீர்கள் என்று கூறுவீர்களா?” இங்கு அவர் மந்தை மனப்பாங்கு என்று குறிப்பிட்டிருப்பது தமிழ்மக்கள் இன உணர்வின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததைத்தான்.அதாவது ஒரு தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்த சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் மக்களும் மந்தை மந்தை மனப்பாங்கோடு வாக்களித்ததாக அவர் கூறுகிறார்.
சுமந்திரன்,யாழ்ப்பாணத்தில்,சஜித் பிரேமதாசாவின் மேடையில் வைத்து கூறினார்,பொது வேட்பாளருக்குப் போடும் வாக்குகள் வீணாகப் போகும் வாக்குகள் என்று. அதாவது, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழுந்த இரண்டு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் குறையாத வாக்குகள் வீணாய்ப்போன, மந்தைத்தனமான வாக்குகளா?
ஆயின்,தமிழ் வாக்காளர்களை, விமர்சன பூர்வமாக சிந்திக்கும்(Critical thinking), “அரசியல் விழிப்புணர்வுமிக்க” வாக்காளர்களாக வளத்தெடுப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமாவது ஏதாவது ஒரு பொறிமுறை உண்டா? இல்லையே? எல்லாக் கட்சித் தலைவர்களும் குருட்டு விசுவாசிகளைத்தானே அருகில் வைத்திருக்கிறார்கள்? விழிப்படைந்த தொண்டர்களை ஏன் அருகில் வைத்திருப்பதில்லை ? குருட்டு விசுவாசிகளை, விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த வாக்காளர்களாக மாற்றுவதற்கு கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லை.கட்சித் தலைவர்களிடமும் அதற்குரிய கொள்ளளவு இல்லை.
இந்நிலையில்,தேர்தலை புத்திபூர்வமாக அணுக முற்றப்படும் பவ்ரல் போன்ற அமைப்புகள் தமது விழிப்பூட்டும் கருத்தரங்குகளை ஏசி வசதிகளைக் கொண்ட விருந்தகங்களில் நடத்துவதை விடவும் கிராமங்களை நோக்கிச் சென்றால் என்ன? தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டும் ஊர்களை நோக்கிச் செல்லாமல்,தொடர்ச்சியாகத் தமது ஆதரவாளர்களுக்கு விழிப்பூட்டும் கூட்டங்களை நடத்தினால் என்ன?
தமிழ்க் கட்சிகள் பெரும்பாலானவை விசுவாசிகளைத்தான் கட்சி உறுப்பினர்களாக வைத்திருக்கின்றன. விமர்சனபூர்வமாக சிந்திக்கும் விழிப்படைந்த அரசியல் செயற்பாட்டாளர்களை அல்ல. விசுவாசிகள் முகநூலில் ஒருவர் மற்றவரைத் துரோகி என்பார்கள். நேற்று நண்பனாக இருந்தவர் இன்று கட்சி மாறிவிட்டால் அவர் துரோகியாகி விடுகிறார். தமது கட்சித் தொண்டர்களுக்கு விழிப்பூட்டி அவர்களை அரசியல் மயப்படுத்தும் வேலை திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. இந்த லட்சணத்தில் ஒரு கட்சியின் ஆதரவாளர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களை மந்தைகள் என்று கூறுகிறார்.
ஆனால் தமிழ் வாக்காளர்களை மந்தைகளாக வைத்திருக்கத்தான் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். இனமான மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டி அதன்மூலம் தங்களைத் தியாகிகளாகக் காட்டிக் கொள்ளும் மந்தைகள்; சாராயப் போத்தலுக்கு வாக்களிக்கும் மந்தைகள்;காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏற்றுக் கொண்டு வரப்படும் மந்தைகள் ; முகநூலில் நேரலையில் தோன்றும் மருத்துவரை நம்பிக் காசை விசுக்கும் மந்தைகள்;போன்ற எல்லா எல்லாவகை மந்தைகளையும் குருட்டு விசுவாசிகளையும் மேய்க்கத்தான் எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.வாக்காளர்களை மந்தை மனோநிலையில் இருந்து விடுவித்து அரசியல் விளக்கமுடைய விழிப்படைந்த வாக்காளராக மாற்றுவதற்கு எந்தக் கட்சியாவது தயாரா? அல்லது எந்த என்.ஜி.யோவாவது தயாரா?