பாரதி ஒரு நாடோடி

இனி, பலாலி வீதியில் ஒரு தோள்மூட்டைத் தூக்கிக்கொண்டு பையப் பைய நடந்து போகும் பாரதியைக் காண முடியாது.

பாரதிக்கு முதல் எனக்கு அவருடைய சகோதரன் பரதனைத் தெரியும்.பாரதியின் அப்பாவையும் அம்மாவையும் தெரியும்.  பாரதியின் அப்பா ராஜநாயகம் மாஸ்டரும் அம்மாவும்  வசித்த, கோப்பாய் போலீஸ் நிலைய வீதியிலிருந்த அந்தப் புதிய வீட்டுக்கு நானும் மு. திருநாவுக்கரசுவும் பின் மாலை வேளைகளில் போவோம். பெருமளவுக்கு அயலவர்கள் குறைந்த, அப்பொழுதுதான் புதிதாக வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பகுதி அது.

யுத்த காலம். மின்சாரம் இல்லை. ராஜநாயகம் மாஸ்டர் எங்களோடு கதைத்துக் கதைத்து ஹரிக்கன் லாம்பைத் தயார்ப்படுத்துவார்.அவர் லாம்பின் சிமினியை துடைக்கும் விதம் ஒரு கவிதை போல இருக்கும். முதலில் ஒரு சேலைத் தூண்டினால் சிமினியை துப்புரவாக்குவார். பின்னர் அதைவிடச் சுத்தமான ஒரு சீலைத் தூண்டினால் சிமினியைத் துடைப்பார்.அதன்பின் பேப்பரால் சிமினியை மினுக்குவார். பளபளக்கும். திரும்பத் திரும்ப மினுக்குவார். ஒளி சிறு தடையுமின்றி  வீட்டில் பரவவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

ராஜநாயகம் மாஸ்டர் இடதுசாரி மரபில் வந்தவர்.எழுத்தாளர். அவரைப்போல மூப்பு, தெளிவு, முதிர்ச்சி, நிதானம் எல்லாமும் பாரதியிடமும் உண்டு.

லாம்பின் சிமினியை மினுக்குது போலவே ராஜநாயகம் மாஸ்டர் தன் மாணவர்களையும் மினுக்கினார்; பிள்ளைகளையும் மினுக்கினார்.தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் “அடைக்கலம் தந்த வீடுகளில்” அதுவும் ஒன்று.

பாரதி ஒரு கையை இழந்த பின்னர்தான் அவருடன் நான் நெருங்கிப் பழகத் தொடங்கினேன்.கிழக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகியது.அதில் காயப்பட்ட பாரதியின் ஒரு கை துண்டிக்கப்பட்டது.

ஓர் ஊடக ஆசிரியராக அவர் தொடர்ந்தும் ஒரு ஊடகத்திலேயே நிலைத்து நிற்க முடியவில்லை.2009க்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழலையும் ஊடகச் சூழலையும் ஊடக அரசியல் சூழலையும் விளங்கிக் கொள்வதற்கு பாரதியின் ஊடக வாழ்க்கை உதவும்.அவரோடு பணியாற்றிய தேவகௌரி “பாரதியண்ணாவின்  சுய வரலாறு எம் சமூக வரலாறு” என்று கூறியதும் அதைத்தான்.

1990களின் தொடக்கத்தில் “திசை” பத்திரிகையின் அலுவலகத்தில் வைத்து அதன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த ஏஜே கனகரட்னா எனக்குச் சொன்னார்.. “ஊடகவியலாளர் ஒரு நாடோடி” என்று.அது அவருடைய சொந்த வசனம் அல்ல.ஏரிக்கரை பத்திரிகை குழுமத்தின் பிரதான ஆசிரியராக இருந்த ஒரு சிங்கள ஊடகவியலாளரின் மேற்கோள்.

ஊடகவியலாளர் எப்பொழுது நாடோடி ஆகிறார்? ஊடக முதலாளிகளோடு அவர் சுதாரிக்க முடியாமல் போகும்போது; அல்லது அந்த ஊடகச் சூழலோடு ஒத்துப் போக முடியாத போது.அல்லது ஊடகத்தின் அரசியல் அஜெண்டாவுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாத போது ஊடகவியலாளர் நாடோடி ஆகிறார்.

பாரதியின் காலத்தில் நாடோடிகளுக்கு யூடியுப் என்ற புகலிடம் கிடைத்துவிட்டது.அதற்காக யூடியூபர்கள் எல்லாருமே நாடோடிகள் என்பதல்ல.

பாரதி புதிய தொழில்நுட்பத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்ள விரும்பவில்லை.அவர் புதிய தொழில்நுட்பச் சூழலோடு தன்னை முழுமையாக பொருத்திக் கொள்ளாத தலைமுறையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர்.

அவர் ஒரு நாடோடியாக யூடியூப்புக்குள் வர விரும்பவில்லை. அவருடைய ஊடக ஒழுக்கம், தனிப்பட்ட சுபாவம் போன்றன அவரை அதற்குள் வரவிடவில்லை.

காணொளிகளின் யுகத்தில் காட்டப்படுவதற்கும் உண்மைக்கும்; தலைப்புக்கும் உண்மைக்கும்; கூறப்படும் விளக்கத்துக்கும் உண்மைக்கும் இடையிலான தூரம் அதிகமாகிக் கொண்டு போகும் ஓர் ஊடகச் சூழலில், பாரதியைப் போன்றவர்கள் மிக அரிதான ஜீவராசிகள்தான்.

 

அதனால் தொடர்ச்சியாக வெவ்வேறு ஊடகங்களில் பணியாற்றினார். கடைசியாக ஓரளவுக்குத் திருப்தியான ஒரு பொறுப்பு கிடைத்த பொழுது இறந்து போய்விட்டார்.

பெருந் தேகி. துண்டிக்கப்பட்ட கைக்குரிய தோள்பட்டையைத் தூக்கிக் கொண்டு நடப்பார்.தகப்பனைப் போல நறுக்காக கறாராகக் கதைக்க மாட்டார். மென்மையாக மிருதுவாகக் கதைப்பார். பாரதி கோபப்பட்டு நான் கண்டதில்லை.சீறிச் சினந்து கதைக்க மாட்டார்.

ஒரு முனிவரைப் போல எல்லாவற்றையும் சாட்சியாகக் கடந்து போவார்.தனக்குச் சரியெனப்பட்ட விடயத்தையும் ஆக்ரோஷமாகச் சொல்ல மாட்டார்.மற்றவர்கள் ஆக்ரோஷமாகப் பேசும் பொழுது அமைதியாக, சலனமின்றிக் கேட்டுக் கொண்டிருப்பார்.ஆனால் அவருக்கென்று ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது. தகப்பனைப் போலவே அவர் அதில் சமரசம் செய்ததில்லை. அதனால்தான் ஒரு நாடோடியாக இறந்தார். ஆனால் நாடற்ற, அரசற்ற தேசம் ஒன்றின் சாட்சியாக நின்ற ஊடகவியலாளர் அவர். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *