மாட்டு வண்டியைக் கொத்தி
விறகாக்கிய ஓர் ஊரிலே
நெருப்பிருந்தது
அடுப்பிருக்கவில்லை
தென்னைகளாயிரம் பனைகளாயிரம்
தோப்பாய்க் காய்த்த
ஒரு கடற்கரையிலே
கஞ்சியிருந்தது அதில்
பாலிருக்கவில்லை
மலத்துக்கும் பிணத்துக்கும்
விலகி நடந்தவொரு நெய்தல் நிலத்திலே
கடலிருந்தது படகிருந்தது
மீனிருக்கவில்லை
ஆலமிலை பாலையிலை பனையோலை தவிர
பச்சையாக இருந்த எல்லாவற்றையும்
சமைத்த ஒரூரிலே
கஞ்சி இருந்தது ; வாய்பன் இருந்தது
பசியிருக்கவில்லை
நீரிலே தொடங்கி
நீரேரியில் முடிந்த ஒரு போரிலே
கடைசி மூன்று நாட்களும்
நீர் இருக்கவில்லை
தாகமிருந்தது