மொனராகலவில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில்,11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பாடசாலைக்கு கைபேசியைக் கொண்டு வந்திருக்கிறான். அதைக் கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கியுள்ளான்.தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் சிறிய காயங்களோடு மொனராகல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இது இம்மாதம் முதலாம் திகதி இடம் பெற்றது.
இன்று ஐந்தாம் திகதி,சர்வதேச ஆசிரியர் தினம்.நாளை இலங்கையில் ஆசிரியர் தினம்.
2016ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2016/12 ஆம் இலக்க புதிய திருத்தப்பட்ட சுற்று நிருபமானது ஆசிரியர்கள் பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிப்பதைத் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகின்றது. இச்சுற்று நிருபம் அமுலுக்கு வந்தபின் பாடசாலைகளில் சரீரத் தண்டனைகள் பெருமளவுக்கு நிறுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் சில பாடசாலைகளில் அந்தச் சுற்று நிருபம் பின்பற்றப்படுவதில்லை என்று மனித உரிமைகள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தண்டனைச் சட்டகோவை (திருத்த) சட்டமூலம் ஒன்றைக் குறித்து விவாதித்து வருகிறது
இவ்வாறு ஆசிரியர்களின் கை கட்டப்பட்டதன் விளைவாகத்தான் பிள்ளைகள் தறி கெட்டுப் போய்விட்டன என்றும் பிள்ளைகள் ஆசிரியரைத் தாக்கும் ஒரு நிலை உருவாகிவிட்டது என்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களும் உட்பட சமூகத்தின் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். பிள்ளைகளில் கை வைக்காமல் பிள்ளைகளின் மனத்தைக் காயபடுத்தாமல் பிள்ளைகளைச் செதுக்குவது கடினமான ஒரு தவம்.
ஒரு காலம் அடித்துப் படிப்பிக்கும் ஆசிரியர்தான் மதிப்போடு பார்க்கப்பட்டார். “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”,”அடியாத மாடு படியாது” என்றெல்லாம் பழமொழிகளைச் சொல்லி அதை நியாயப்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது அடித்து வளர்த்த பிள்ளையை விடவும் அடிக்காமல் வளர்க்கப்படும் பிள்ளை அதிகமாகச் சாதிக்கின்றது என்று புள்ளி விவரங்கள் காட்டப்படுகின்றன.
ஒரு ஆசிரியர் எப்படிப்பட்ட முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு.ஒரு மாணவன் சாப்பிடும் பொழுது எப்பொழுதும் அன்னத்தைச் சிந்தி வந்தான். அவனுடைய தகப்பனார் அவனுடைய வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியரிடம் சென்று அதுதொடர்பாக முறைப்பாடு செய்திருக்கிறார். முறைப்பாடு செய்த பின் ஒவ்வொரு கிழமையும் மகனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறதா என்று அவதானித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் தனது வேண்டுகோளை ஏற்று மகனுக்குப் புத்திமதி சொல்லவில்லை என்று நினைத்த தந்தை மகனை இனித் திருத்த முடியாது என்று சலித்துக் கொண்டார்.ஆனால் கிட்டத்தட்ட மூன்றுமாதங்களின் பின் பையன் திடீரென்று ஒரு நாள் சோறு சிந்துவதை நிறுத்திவிட்டான். சோற்றுத் தட்டை வாய்க்குக் கிட்ட வைத்து,ஒவ்வொரு கவளமாகக் கவனமாக எடுத்துச் சாப்பிட்டிருக்கிறான்.தகப்பனுக்கு அதிசயம்.என்னடா நடந்தது? என்று கேட்டிருக்கிறார். எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சேர் சொல்லித் தந்தவர் என்று மகன் சொல்லியிருக்கிறான். தகப்பன் உடனே கிளம்பி ஆசிரியரிடம் போயிருக்கிறார். உங்களுக்கு நான் சொல்லி மூன்று மாதங்களின் பின்னர்தான் அவனுக்கு இப்பொழுது புத்திமதி சொல்லியிருக்கிறீர்கள். ஏன் இந்த மூன்று மாத கால இடைவெளி? என்று கேட்டிருக்கிறார். ஆசிரியர் சிரிச்சுக்கொண்டு சொன்னாராம், முதலில் நான் அவ்வாறு சோறு சிந்தாமல் சாப்பிடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதை ஓர் ஒழுக்கமாக நான் கற்றுக் கொண்டால்தான் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அந்த அறிவுரைக்கு ஒரு சக்தியிருக்கும்.நான் வாழாத ஒன்றை,நான் முன்னுதாரணமாக இல்லாத ஒன்றை என் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இது எப்படி ஆசிரியர் முன்னுதாரணமாக இருக்கலாம் என்பதற்கான ஒரு கதை. இந்தியத் தமிழில் ஓர் ஆசிரியரிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அவர் “கற்றுக் கொடுக்கிறேன்”. என்று சொல்வார் அதாவது தான் கற்று அதைக் கொடுக்கிறேன் என்று பொருள். அதனால்தான் ஐன்ஸ்டீன் சொன்னார்,”கற்ற ஆசிரியர்களிடம் அல்ல கற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்” என்று. அதாவது ஒவ்வொரு நாளும் கற்றுத் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் ஆசிரியரிடம் பிள்ளைகளை விடுங்கள் என்று.
ஒரு காலம் நமது சமூகத்தில் ஆசிரியருக்குப் புனிதமான இடம் இருந்தது. வாத்தியார் என்றால் ஊரில் அது மதிப்புக்குரிய ஒரு முன்னுதாரணம். அமெரிக்க நீதிமன்றங்களில் ஆசிரியர் எழுந்து நிற்கத் தேவையில்லை. ஆனால் நமது நாட்டில்,கல்வித் திணைக்களத்தில்,பல பாடசாலைகளில் அதிபர்களுடைய அலுவலகத்தில் ஆசிரியர்கள் கதிரையில் இருப்பதில்லை.
ஆசிரியர்களுக்குள்ளும் சாதி வேறுபாடு உண்டு. விஞ்ஞானம்,கணிதம் ஆகிய துறைகளைக் கற்பிப்பவர்கள் உயர் ஜாதி.தமிழ்,வரலாறு.புவியியல் பொருளியல் போன்ற படங்களைப் படிப்பிப்பவர்கள் அடுத்த சாதி. அதற்கு கீழ் தான் ஏனைய சாதிகள். குறிப்பாக அழகியல் பாடத்தைக் கற்பிப்பவர்கள் இந்தச் சாதி அடுக்கில் கீழ் நிலையில் வைக்கப்படுவார்கள்.அதிலும் குறிப்பாக அவர்கள் பெண்களாக இருந்தால் அங்கே பால் அசமத்துவமும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். தனிப்பட்ட ரீதியில் துணிச்சலும் ஆளுமையும் மிக்க ஆசிரியைகள் இந்த சாதிப் படிநிலைகளை மீறி நிமிர்வதுண்டு.
தனியார் கல்வித்துறையிலும் அழகியல் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ஆசிரியர்களைவிட மிகக்குறைந்த கட்டணத்தைதான் பெறுகிறார்கள்.இதில் குறிப்பிட்ட ஆசிரியர்கள் தங்களுடைய கலைப் பெறுமதியை தாங்களே குறைத்துக் கொள்கிறார்கள்.
போட்டிக் கல்வியின் விளைவாக பாடசாலைகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்தோங்கிவிட்டன. சில தனியார் கல்வி ஆசிரியர்கள் உயர்தர வகுப்புப் பிள்ளைகள் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுப் பிள்ளைகள் பாடசாலைக்குப் போக வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்குச் சக்தி மிக்கவர்களாக வளர்ந்து விட்டார்கள்.யாழ்ப்பாணத்தில் அதிகம் உழைப்பவர்கள் வரிசையில் சில முன்னணித் தனியார் கல்வி ஆசிரியர்கள் உண்டு.ஆனால் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறு உழைப்பதில்லை.ஆசிரியரின் குடும்பச் சூழல் அமைதியாக,நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அவருக்குச் செழிப்பான சம்பளம் வழங்கப்பட வேண்டும். பிள்ளைகளின் உளவியலைச் செதுக்கும் தொழிலைச் செய்பவர்களின் உளவியல் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒருபுறம் பொறுப்பு மிக்க தொழில்.பெற்றோருக்குப் பதில் சொல்ல வேண்டும். திணைக்களத்துக்குப் பதில் சொல்ல வேண்டும்.முகம் காட்டாத முகநூல் குழுக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.முகநூல் குழுக்கள்,வாற்ஸ்அப் குழுக்களிடமிருந்து தன்னை மட்டுமல்ல, வீட்டில் உள்ள பெண் புரசுகளையும் பாதுகாக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக தனது தொழில்சார் அறத்துக்கு,மனசாட்சிக்குப் பதில் சொல்ல வேண்டும்.வேலை நேரம் என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும் பாடசாலை முடிந்த பின்னரும் மேலதிக வகுப்புகள் நடாத்த வேண்டும்.பரிட்சை வினாத்தாள்களை வீட்டுக்குக் காவிக் கொண்டு வர வேண்டும்.”வேர்க் அற் ஹோம்” என்பது கொரோனாவுக்கு முன்னரே,ஆதியான காலமிருந்தே ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட ஒரு வாழ்வு.பள்ளிக்கூட வேலைகள் வீட்டுக்கு வரும். ஆனால் அதற்காக மேலதிக கொடுப்பனவுகள் கிடையாது.
ஒரு சமூகத்தில் எந்தத் தொழிலுக்கு பொறுப்பு அதிகமோ அந்தத் தொழிலுக்குத் தான் ஊதியமும் அதிகம். ஆசிரியர் தொழில் என்பது ஒரு தலைமுறையின் ஆளுமையை,அறிவைச் செதுக்கும் தொழில்.ஆனால் இலங்கையில் ஆசிரியருக்கு ஒப்பிட்டுளவில் திருப்தியான சம்பளம் இல்லை. கடைசியாக அமல்படுத்தப்பட்ட சம்பள உயர்வின்படி ஆசிரியர்கள் ஒப்பீட்டளவில் கொஞ்சம் கூடுதலாகச் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவோடு ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு.
இலங்கைத் தீவு அதன் இலவசக் கல்வியைக் குறித்துப் பெருமைப் படுவதுண்டு. ஆனால் நாட்டில் உள்ள எத்தனை ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகள் ஆசிரியர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்? ஒரு தலைமுறையைச் செதுக்கும் தொழிலைச் செய்பவர்களில் அதிகமானவர்கள் தங்களுடைய பிள்ளைகளும் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று விரும்பாதது ஏன்? செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம்.மாதா,பிதா,குரு தெய்வம் என்கிறோம்.ஆனால் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகள் ஆசிரியர்களாக வருவதை விரும்புவதில்லை? கடந்த நூற்றாண்டில் கவிஞர் நீலாவாணன் எழுதினார் “பாவம் வாத்தியார்” என்று..இப்பொழுதும் செயற்கை நுண்ணறிவின் காலத்திலும் அதுதான் நிலைமையா ?