எங்கட புத்தகங்கள்;எங்கட பொடியள் ;எங்கட படங்கள்; எங்கட கதை ;எங்கட இயக்குனர்;எங்கட;எங்கட எங்கட..இது அண்மை ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பும் வார்த்தைகள். “எங்கட புத்தகங்கள்” என்ற அமைப்பு கந்தர் மடப்பகுதியில் இயங்குகிறது. இந்தியாவின் பிரமாண்டமான புத்தகச் சந்தையோடு ஒப்பிடுகையில் எங்கட புத்தகச் சந்தை மிகச் சிறியது.அந்த பெரிய சந்தைக்குள் தங்களுடைய தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு வணிக ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எங்கட புத்தகங்களை,எங்கட வெளியீடுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். எனினும் எங்கட புத்தகங்களால் எங்களுக்குக் கிடைக்கும் லாபம் ஒப்பீட்டுளவில் குறைவு. எங்கட எழுத்தாளர்கள் எங்கட புத்தகங்களை எங்கட சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்த முடியுமா?
ஆனால் தமிழகப் பெரும் சந்தையில் தமது புத்தகங்களைத் திட்டமிட்டு வெளியிடுகின்ற அதாவது புத்தகத் திருவிழாக்களை நோக்கி புத்தகங்களை வெளியிடுகின்ற எங்கள் எழுத்தாளர்கள் சிலர் சந்தை நிலவரங்களைக் கணித்து புத்தகம் எழுதி ஓரளவுக்குச் சம்பாதிக்கிறார்கள்.
அதேசமயம் எங்கட பொடியள் என்று இப்பொழுது அழைக்கப்படுகின்ற தமிழ் ராப் குழுவினர் ஐரோப்பாவில் எங்கட புலம்பெயர்ந்த சனத்தால் கொண்டாடப்படுகிறார்கள்.தாராளமாக உழைக்கிறார்கள். புலம்பெயர் சமூகம் எங்கட பொடியளின் பாடல்களைக் கேட்க தாகத்தோடு திரள்கிறது. எங்கட பொடியளும் இவ்வளவு பவுன்ஸ் வையுங்கள் என்று டிமான்ட் பண்ணி உழைக்கிறார்கள்.
ஆனால் எங்கட திரைப்படங்கள் அப்படி உழைக்கின்றனவா?எங்கட திரைப்படங்கள் தாயகத்தில் இப்பொழுதும் சிறிய சந்தையை நோக்கித்தான் வருகின்றன.சிறிய தொகைப் பார்வையாளர்கள்; சிறு தொகை லாபம்; அல்லது முதலுக்கே நட்டம்?
இவ்வாறு எங்கட எங்கட என்று அழைக்கப்படுகின்ற ஒரு காலச் சூழலில் “நீளிரா” என்ற படம் வெளி வந்திருக்கிறது. அது முழுக்கமுழுக்க எங்கட படம் அல்ல. அது ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்பு.அங்கே எங்கட கதை இருக்கிறது.எங்கட இயக்குனர்;எங்கட கலைஞர்கள் சிலர்.ஆனாலது முழுமையாக எங்கட சினிமா அல்ல.அது ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்பு.
இதற்கு முன் ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்புகளாக வெளிவந்த பல படங்கள் ஒப்பீட்டு ரீதியாக உழைத்திருக்கின்றன. ஆனால் துயரம் என்னவென்றால், எங்கட போராட்டத்தை, எங்கட காயங்களை, கண்ணீரைப் படமாக்கிய நீளிராவை எங்கட சனங்கள் திரண்டு போய்ப் பார்த்தார்களா?
நான் பார்க்கப் போனது படம் வெளியிடப்பட்ட இரண்டாம் நாள். திரையரங்கில் அரைவாசிகூட நிரம்பவில்லை.முதலாவது நாளும் அப்படித்தான். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல மட்டக்களப்பிலும் நிலைமை மோசம். வவுனியாவில் 70க்கும் குறையாத தொகை வந்திருந்தது.கொழும்பிலும் கடந்த சனிக்கிழமை,யாழ்ப்பாணத்திலும் இயக்குனரும் தயாரிப்பாளரும் வந்திருந்த காட்சியில் அரங்கு நிரம்பியது.அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழ் அரங்குகளிலும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை மிகக்குறைந்த ஆட்களே வந்திருக்கிறார்கள்.கனடாவில் முதலாவது காட்சியில் மொத்தம் 20 பேர் என்று நண்பர் சொன்னார்.
எங்கட பொடியளை காவிக் கொண்டு திரியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கட துயரங்களைக் காவிக் கொண்டு வரும் ஒரு படத்தை ஏன் கவனிக்கத் தவறுகிறார்கள்? ஆட வேண்டும்,பாட வேண்டும்,துள்ள வேண்டும், குதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் கடந்து வந்த வரலாற்றின் ஒரு பகுதியை வழமையான வணிக சினிமாவைப் போலன்றி சீரியஸான திரைமொழியில் முன்வைக்கும் ஒரு திரைப்படத்தை ஏன் எங்கட சனம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை திரளாகப் போய்ப் பார்க்கவில்லை? தாயகத்திலும் தாயக்கத்துக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அந்தப் படம் வணிக ரீதியாக தியட்டர்களை எந்தளவுக்கு நிரப்பியது ?
குறிப்பாக டொலர்களாக,பவுண்ஸ்களாக,யூரோக்களாக காசைக் கண்ணை மூடிக்கொண்டு அள்ளி வீசும் எங்கட புலம்பெயர்ந்த மக்கள், இப்பொழுது தமிழ் வணிக சினிமாவின் காசு காய்க்கும் மரங்களாக மாறிவிட்டார்கள். தங்களுடைய ரத்தம் சிந்தும் இறந்த காலத்தை முன்வைக்கும் ஒரு படத்தை, பெருமளவுக்கு வணிக சினிமாவுக்கு வெளியே வரும் ஒரு படத்தை, அவர்கள் போற்ற வேண்டும்.
தமிழர்கள் ரூபாய்களோடு இருந்தாலும் டொலர்களோடு இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகில், ஜனரஞ்சகத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் இடையிலான இடைவெளி எப்பொழுதும் அதிகமாகத்தான் இருக்குமா?
அதனால்தான் ஈழச் சினிமா இப்பொழுதும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்று கார்த்திக் சுப்புராஜ்-அவர்தான் நீளிராவுக்கு முதலீடு செய்தவர்-கூற வேண்டி வந்ததா? அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு குறிப்பு பின்வருமாறு கூறுகிறது…”ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால் ஈழத் தமிழ்ச் சினிமாவுக்கான ஈஸ்டர் ஞாயிறு இன்னும் வரவில்லை. பல வருடங்களாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டும் முடியும். தயவு செய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்..”
எங்கட காயங்களை,எங்கட கண்ணீரை, எங்கட கதையைக் கூறும் ஒரு படத்துக்கு ஒரு தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர் முதலிட்டிருக்கிறார். எங்கட,எங்கட என்று வாய் ஓயாமல் உச்சரிக்கின்ற எங்கட சனம் அதைத் தேடித்தேடித் பார்கின்றதா?
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழக சினிமா பிரபல்யங்களுக்கும் பாடகர்களுக்கும் அரங்கமைத்துக் கொடுத்து காசை அள்ளிக் கொட்டும் எங்கட புலம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் கதையைப் பேசும் ஒரு திரைப்படத்தை இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரை திரண்டு போய்ப் பார்க்கவில்லை.
படத்தைச் சந்தைப்படுத்தும் பொறுப்பு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதனால் அந்த நிறுவனம்தான் அதைப் பார்த்துக் கொள்ளும் என்று சோமிதரன் எனக்குச் சொன்னார்.அந்த நிறுவனம் தமிழ் பகுதிகளில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய விளம்பரத்தைச் செய்ததாகத் தெரியவில்லை. உள்ளூர் ஊடகங்களில் அதற்குரிய விளம்பரத்தை அதிகமாகக் காண முடியவில்லை.உள்ளூர் மதில்களில் குறிப்பாக ஆஸ்பத்திரி வீதியும் பலாலி வீதியும் வெட்டும் நாற் சந்தியில் முன்னிலை சோசியலிச கட்சியின் அமெரிக்காவுக்கு எதிரான பெரிய சுவரொட்டி காணப்படுகிறது. நீளிராவை காணவில்லை .
விளம்பரம் போதாது.ஆனால் சமூக வலைத்தளச் சூழலில் நீளிரா அதிகம் விவாதிக்கப்படுகிறது;போற்றப்படுகிறது;கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சினிமாப் பிரபலங்கள் பலர் அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதில் ஒரு கூட்டுணர்வு,சகோதரத்துவம் வெளிப்படுகிறது.“டூரிஸ்ட் பமிலி” படத்தில் வெளிப்பட்டதுபோல.ஆனால் துயரம் என்னவென்றால்,சமூக வலைத்தளச் சூழலும் தமிழ்ப் பௌதிகச் சூழலும் ஒன்று அல்ல.
தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படுவது போல, சமூக வலைத்தளச் சூழலும் பௌதீக நிஜச் சூழலும் வேறுவேறு என்பதைத்தான் தாயகத்தில்,திரையிடப்பட்ட பெரும்பாலான காட்சிகளில் மிச்சமிருந்த வெறும் கதிரைகள் உணர்த்துகின்றனவா?
நிதி ரீதியாக அந்தத் தயாரிப்பாளர் தோல்வியடைந்தால் தமிழக முதலீட்டாளர்கள் இதுபோன்ற படங்களில் கைவைக்க யோசிப்பார்கள். நிதிப் பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எங்கே காசைக் கொட்டுவது என்று தெரியாமல் சில சமயங்களில் காசை வீண் விரையம் செய்கிறது. அல்லது முழுக்க முழுக்க வணிகத் திரை முதலீடுகளில் தமது காசை முதலீடு செய்கிறது. கோடம்பாக்கத்தில் அவ்வாறு வெற்றி பெற்ற புலம் பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் உண்டு.ஆனால் அவர்களில் எத்தனை பேர் இது போன்ற எங்கட படங்களில்,எங்களோட கதைகளில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள்?
ஒருபுறம் இதுவரை சொல்லப்படாத போர்க் கதைகள். இன்னொருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம். இரண்டுக்குமிடையே எங்கட கதைக்கு ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யத் தயாராக இருக்கும் தமிழகத் தயாரிப்பாளர்கள்.அரசு இல்லாத ஈழத் தமிழர்கள் இந்த வளங்களை ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.இந்த வளங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் போதே கார்த்திக் சுப்புராஜ் கூறியதுபோல ஈழச் சினிமாவுக்கான உயிர்த்த ஞாயிறு உதிக்கும்.





