இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் காணப்படும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடிய ஒருவரின் தேர்தல் வெற்றியை அவருடைய குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் விசில் ஊதிக் கொண்டாடிய காட்சி தமிழகத்தில் மட்டும்தான் இடம்பெறுமா? அல்லது உலகில் வேறு எங்காவது இடம்பெற்றதுண்டா ?
தாங்கள் வாக்களிக்க முடியாத ஒரு தேர்தல் களத்தில் முதலீடு செய்யும் ஈழத் தமிழர்களைப்போல அரசற்ற மக்கள் கூட்டங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?
அயல்நாடு ஒன்றில் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சருக்காக ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்; எதிர்பார்ப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அந்த அயல்நாட்டு முதலமைச்சர் கச்ச தீவையும் மீட்டுத் தருவார்;யாழ்ப்பாணத்தை இந்தியாவுடன் இணைப்பார் என்ற பொருள்பட நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார்.
அதேசமயம்,இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,கொழும்பில் “உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ” மாநாட்டில் உரையாற்றும்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டத்தைக் குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
“பாக்கு நீரிணைக்குக் குறுக்கே ஒரு பாலம் அல்லது சுரங்கப்பாதை வழியாக தரைவழி இணைப்பு ஏற்படுத்துவது குறித்து பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.உலகம் முழுவதும் இதுபோன்ற வழித் தடங்களுக்குப் போதுமான எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதன் பொறியியல் நன்கு அறியப்பட்டுள்ளது.அதன் பொருளாதாரம் கவர்ச்சிகரமானது. இதுபோன்ற பாலங்கள் எங்கு கட்டப்பட்டிருந்தாலும்,அதன் நன்மைகள் மறுக்க முடியாதவை.ஆனால் நாம் தொடர்ந்து தயங்குகின்றோம். ஆதனால் நான் தெளிவாகச் சொல்கின்றேன்,தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதற்கான காலம் முடிந்துவிட்டது.”
மேற்கண்டவாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் உரை நிகழ்த்திய அதே காலப்பகுதியில்,மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் பகுதிகளில் விஜய்யின் ரசிகர்கள் அவருடைய வெற்றியை அமோகமாகக் கொண்டாடுகிறார்கள்.கொண்டாட்டங்களில் அவர்கள் யுடியூப்பர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கும் கருத்துக்கள் தாங்க முடியாதவைகளாக இருக்கின்றன.எமது தமிழ்க் கட்சிகள் தமிழ் இளையோரை அரசியல் மயப் படுத்துவதற்காக எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை அவை காட்டுகின்றன.
அவர்கள் ரசிகர்கள் அப்படித்தான் கதைப்பார்கள்.தமிழ்நாட்டிலும் அப்படித்தான் ரசிகர்கள் கதைக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழ் ரசிகர்கள் தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதனை தீர்மானிக்க முடியாது.மாறாக தமிழக ரசிகர்கள் தீர்மானிக்கலாம்.அதனால்தான் விஜய் வென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் வர வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது அவர்களுடைய விருப்பத் தெரிவு. இதில் அயலவர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன செய்யலாம்?
யார் முதலமைச்சராக வந்தாலும் ஈழத் தமிழர்கள் அவரோடு தமது நலன்சார்ந்து இடையூடாட வேண்டும்.தமிழகத்துக்கு யார் முதலமைச்சர் என்பது தமிழக மக்களின் விருப்பம்.அந்த விருப்பத்தை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும்.அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரோடு ஈழத்தமிழர்கள் தமது நலன்சார் நோக்கு நிலையில் இருந்து இடையூடாட வேண்டும்.அப்படித்தான் புதுடில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஈழத்தமிழர்கள் அந்த ஆட்சியோடு இடையூடாட வேண்டும்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சர். அவர் இந்தியாவின் அரைச் சமஷ்ரி (Quasi-federal) அரசியலமைப்புக்கு உட்பட்டவர்.இந்தியாவின் அரசியலமைப்பின்படி அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் எதுவரை தலையிடலாம் என்பதில்,எதுவரை செல்வாக்குச் செலுத்தலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. எனவே ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தலாம்?
இதற்கு எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம்.எம்ஜிஆர் செய்யமுடியாத ஒன்றை எந்த ஒரு முதலமைச்சரும் ஈழத் தமிழர்களுக்கு செய்து விட முடியுமா ?
எம்ஜிஆர் தமிழகத்தின் பலமான ஒரு முதலமைச்சராக இருந்தவர்.அவருடைய காலத்தில்தான் முதலாங் கட்ட ஈழப்போர் நடந்தது. அக்காலகட்டத்தில்தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ்நாடு பின்தளமாகத் திறக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது.அது ஓர் அரசியல் உறவு என்பதற்குமப்பால் தனிப்பட்ட நெருக்கமாக வளர்ந்தது. எம்ஜிஆர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்பதனை அந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் வெளிப்படையாகச் சொன்னால்தான் தெரியவரும்.தமிழகத்தின் முதலமைச்சராக அவர் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு உத்தியோகப்பற்றற்ற விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அள்ளி வழங்கியதாகத் தகவல்கள் உண்டு.அவருக்கும் அந்த இயக்கத்துக்கும் இடையிலான தனிப்பட்ட நெருக்கந்தான் பின்னாளில் அந்த இயக்கத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான உறவின் தன்மையையும் தீர்மானித்தது என்று சொல்லலாம்.
முதலாங்கட்ட ஈழப்போரின் முடிவில், இந்திய-இலங்கை உடன்படிக்கை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில்,எம்ஜிஆர் நோயாளியாகிவிட்டார்.எழுந்து நடக்கச் சிரமப்பட்டார். இந்திய-இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட பின் அது தொடர்பான எதிர்ப்புக்கள்,சர்ச்சைகள்,விமர்சனங்களின் மத்தியில் தமிழகத்தில் ஒரு பெரிய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.அக்கூட்டத்திற்கு எம்ஜிஆர் அழைத்து வரப்பட்டிருந்தார்.மேடையில் பேசிக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை கைத்தாங்கலாக மக்கள் முன் அழைத்து வந்தார்.எம்ஜியாருடைய கையை தன்னுடைய கையினால் தூக்கி,உயர்த்திப் பிடித்து இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எம்ஜிஆரும் சம்மதம் என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் எம்ஜிஆரின் கையை தன்னுடைய கையோடு சேர்த்து அசைத்தார்.
தான் மிகவும் நேசித்த ஓர் இயக்கம்,தன்னால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் இயக்கம், தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய நாட்டுப் படையினரோடு மோதும் ஒரு நிலைமை உருவாகி வருவதை எம்ஜிஆர் தடுக்க முடியாதவராக பார்த்துக் கொண்டிருந்தார்.அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே அவரைப் போல விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமாகச் சிந்திக்கவில்லை.
யாழ் நகரம் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் வீழ்ச்சியுற்ற இரண்டு மாதங்களில், 1987 டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் உலகை நீத்தார். எம்ஜிஆரால் முடியாத ஒன்றை இனி எந்த ஒரு முதலமைச்சரும் செய்துவிட முடியாது என்பதுதான் தமிழக யதார்த்தம்.ஏனென்றால் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் அதாவது இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்.அதேசமயம் ஈழ விடுதலை இயக்கம் ஒன்றின் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமானவர்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தாயகத்துக்கு வெளியே அதிகம் உதவிய ஒர் அரசியல் தலைவராக அவரைத்தான் குறிப்பிடலாம்.அப்படிப்பட்ட எம்.ஜி.ஆராலேயே இந்திய-இலங்கை உடன்படிக்கை மீது நிர்ணயகரமான விதத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை.அந்த உடன்படிக்கையின் பின்னரான விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை .
இந்தியாவின் அரைச் சமஸ்டிக் கட்டமைப்புக்குள் அங்குள்ள மாநிலம் ஒன்றின் முதலமைச்சரால் உத்தியோகபூர்வமாக செய்யக்கூடியது அவ்வளவுதான்.அதேசமயம் தமிழ்நாட்டு வெகுசனம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்தால்,அது அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்கும். அது புதுடில்லி மீது தமிழகம் கொடுக்கக்கூடிய நிர்பந்தங்களைத் தீர்மானிக்கும்.ஆனால் அங்கேயும் ஒரு முன்நிபந்தனை உண்டு.ஈழத் தமிழர்கள் கொந்தளிக்காமல் தமிழகம் எப்படிக் கொந்தளிக்கும்? ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியல் இலக்குகளுக்காக தங்கள்தான் போராட வேண்டும்; தாங்கள்தான் நொதிக்க வேண்டும்; தாங்கள்தான் கொந்தளிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்களுக்காக தாங்கள்தான் போராட வேண்டும்.தாங்கள் நொதிக்காமல் தமிழகம் நொதிக்க வேண்டும் என்று எப்படி ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கலாம்?




