

“போராட்டம்” ஓர் அரசியல் திரைப் படம்.அதில் ஓர் அரசியல் இருக்கிறது. அந்தப் படத்துக்கு என்று ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது, அது பெருமளவுக்கு வணிக சினிமாவின் பண்புகளை அதிகமாகக் கொண்டிருக்கும் ஒரு படம். அதேசமயம் பாத்திர உருவாக்கம், நடிகர் தெரிவு, நடிப்பு போன்றவைகளில் அது பெருமளவுக்கு சீரியஸாக இருக்கிறது.இயல்பாக நடித்திருக்கிறார்கள்.ஒரு கலைப் படத்துக்கு இருக்கக்கூடிய தகைமை ஒரு தொகுதி நடிகர்களின் நடிப்பில் இருந்தது.
மூன்றாவதாக, அதன் இசையும் ஒளி அமைப்பும்.அதாவது ஒலி ஒளி அமைப்பு போன்றன பெருமளவுக்கு வணிகப் பண்புமிக்கவை.ஒரு வணிக சினிமாவின் விறுவிறுப்பை நோக்கி ரசிகர்களை ஈர்த்திழுத்து உச்சகட்டத்தை-கிளை மாக்ஸ்ஸை-நோக்கிக் கொண்டு போகும் நோக்கத்தைக் கொண்டவை.
நாலாவது,யாழ் நகரப் பகுதியில் உள்ள,மூன்று கத்தோலிக்கக் கரையோரக் கிராமங்களின் கால்பந்து விளையாட்டுப் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் ஒரு படம்.கால்பந்து விளையாட்டுக்கூடாக அங்கே அரசியல் சொல்லப்படுகிறது.படத்தின் இறுதிக்கட்டம் வணிகப் பண்போடு இன முரண்பாட்டை வெளியே கொண்டு வருகிறது.எனினும் கால்பந்து விளையாட்டை முன்வைத்து அரசியல் உரையாடலும் சமூகச் சீரழிவின் மீதான உரையாடலும் குவிமையப்படுத்தப்படுகின்றன.
இன முரண்பாட்டின் அரசியலை,அதன் சமூக விளைவைத்தான் படம் பேசுகிறது.ஒரு தியாகியின் பெயரை அது அந்த நோக்கத்தோடுதான் பயன்படுத்துகிறது.வெளிப்படையாகப் பேசமுடியாத அரசியலை அது மறைமுகமாக,குறியீடாகப் பேசுகிறது.
அந்த அடிப்படையில் அது பேசும் அரசியல் சீரியஸ் ஆனது.இன முரண்பாட்டின் அரசியலும் அதன் விளைவுகளில் ஒன்று ஆகிய போதைப் பொருள் வலையமைப்பும் கதையின் மையக் கருக்களாக உள்ளன.போதைப்பொருள் வலையமைப்பை படம் வெளியே கொண்டு வருகிறது.அதன் பின்னால் இருக்கும் அரசியலை ஓரளவுக்குக் கொண்டு வருகிறது.போதை வலையமைப்பின் உள்ளூர் முகவர் ஒருவரே வில்லன்.போதைப் பொருள் பாவனை மீதான, போதைப்பொருள் வலையமைப்பின் மீதான விழிப்பை படம் ஏற்படுகிறது.
ஒளியும் ஒலியும் வணிக சினிமாவுக்குரிய விறுவிறுப்பைக் கட்டி எழுப்புகின்றன.இறுதிக்கட்டம் அதாவது கிளைமாக்ஸ்ஸை நோக்கி ரசிகர்களைக் கட்டியெழுப்புகின்றன.எனினும் இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பு காணாது என்ற விமர்சனமும் உண்டு.வணிக சினிமாவுக்கு வாலாயப்பட்ட ரசிகர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.
நடிப்பும் நடிகர் தெரிவும் படத்தின் பிரதான கலை அடைவு எனலாம். பெருமளவுக்கு அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடிக்கும் பாத்திரங்கள். வில்லனாக நடிப்பவர் வளமையான வணிக சினிமாவின் வில்லன் தனங்களை வெளிப்படுத்துகிறார்.ஆனால் ஏனைய பெரும்பாலான நடிகர்கள்,நடிகைகள் இயல்பாக அசைகிறார்கள்;இயல்பாக மனதில் பதிகிறார்கள்; நம்பிக்கையூட்டும் நடிகர்கள்.நம்பிக்கையூட்டும் நடிப்பு.
கதாநாயகன் ஈழத்தமிழ் வேரில் பிறந்த,ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ச் சூழலுக்குள் வளர்ந்தவர்.தமிழ்ச் சினிமாவின் வணிகப் பண்புகள் அவரிடம் குறைவாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பாடல்கள் பெருமளவுக்கு வணிக சினிமாப் பண்புமிக்கவை.ஆடல்களும் அப்படித்தான்.இந்த விடயத்தில் கோடம்பாக்கத்து வணிக சினிமாத் தொழில்துறையோடு ஒப்பிட்டு பாராட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.இக்கட்டுரை அந்த ஒப்பீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.ஈழத் தமிழ் சினிமாவை வேறு சினிமா தொழில்துறைகளோடு ஒப்பிட வேண்டிய தேவை இல்லை.
முதலாவதாக அது ஒரு கலை படைப்பாக வெற்றி பெற்றதா என்று பார்க்க வேண்டும்.அது ஒரு கலைப் படமா?அல்லது வணிக மசாலாப் படமா? என்று பார்க்க வேண்டும்.இரண்டாவதாக அது ரசிகர்களை எந்த அளவுக்குக் கவர்ந்து இழுக்கிறது என்று பார்க்கவேண்டும்.மூன்றாவதாக அது ஈழத்தமிழ் தனித்துவங்களை எந்த அளவுக்கு வெளியே கொண்டு வருகிறது என்று பார்க்க வேண்டும்.இங்கே ஒப்பீடு முக்கியம் இல்லை.
இக்கட்டுரையில் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல படம் ஓர் அரசியலைப் பேசுகிறது.அதேசமயம் படத்துக்கு என்று,அதைத் தயாரித்தவருக்கு என்று அரசியல் உள்நோக்கங்கள் உண்டு என்பதையும் அது வெளியே கொண்டு வருகிறது.ஈழத் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் துருத்திக்கொண்டு தெரியும் ஆளுமைகளில் ஒரு தொகுதி படத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன.அரசியல் சமூகச் செயற்ற்பாட்டாளர்கள்,கலைச் செயற்பாட்டாளர்கள்,அதிகாரிகள், அறிவியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,ஊடகவியலாளர்கள்,யூடியூப்பர்கள்… என்றிவ்வாறாக சமூகத்தில் ஏற்கனவே துருத்திக் கொண்டு தெரிகின்ற, முன்னணியில் நிற்கின்ற,அல்லது மேலெழுந்து வருகின்ற பல்வேறு வகைப்பட்டவர்களையும் தயாரிப்பாளர் அந்த படத்துக்குள் ஒன்றிணைத்து இருக்கிறார்.
அது ஒரு கலைப் படைப்பு என்ற அடிப்படையில்,கலைத்துறை சார்ந்த மூத்த விமர்சகர்களை,சீரியஸான படங்களை தமிழ்ச் சமூகத்தில் அறிமுகப்படுத்துபவர்களை அவ்வாறு படத்துக்குள் இணைக்க முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.எனினும்,ஈழத் தமிழர்கள் மத்தியிலுள்ள குறிப்பாக வெகுசன பரப்பில் உள்ள கணிசமான தரப்புகளை தயாரிப்பாளர் கால்பந்து மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றிணைக்கிறார்.2009 க்கு பின்னரான கடந்த 17 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலில் அவ்வாறு ஆகக்கூடிய மட்டும் வெவ்வேறு அடுக்குகளைச் செய்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.அவ்வாறான ஒரு முயற்சியாக இந்தப் படத்தைக் கூறலாம். ஒரு கலப்படைப்பு என்பதற்குமப்பால் அரசியல்,கலை,பண்பாடு என்ற தளத்தில் அவ்வாறான ஒரு மையத்தை நோக்கி ஒன்றிணைக்கும் முயற்சி ஆர்வமூட்டக்கூடியது.ஆழமாக அணுகப்பட வேண்டியது.




