ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம்! இலங்கைத் தீவிற்கு நல்லதா? கெட்டதா?

obamaபொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக் கூடிய அதியுச்ச பதவி அது. அதற்கு மேல் ஒரு பதவி கிடைப்பதற்கில்லை.

எனவே, இரண்டாவது பதவிக் காலத்தின்போது வரலாற்றில் தமது பெயரைப்பொறிக்கத்தக்க சாதனை எதையாவது செய்ய முயற்சிப்பார்கள். ஒப்பிட்டளவில் சர்ச்சைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது வெற்றி இலக்கை நோக்கி தீர்மானகரமாக, தயவுதாட்சண்யமின்றி முன்னேற முயற்சிப்பார்கள்.
குறிப்பாக, பராக் ஓமாபாவைப் பொறுத்தவரை, அவர் அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்பதால் அவருடைய உளவியலானது முன்பிருந்த ஜனாதிபதிகளின் உளவியலிலிருந்து ஏதோ ஒருவிதத்தில் வேறுபட்டே இருக்கும். தனக்கு முன்பிருந்த வெள்ளையின ஜனாதிபதிகளினால் முடியாதிருந்த ஏதாவது ஒன்றை தான் சாதிக்க வேண்டும் என்றே அவர் முயற்சிப்பார். அவர் அப்படி முயற்சிப்பதற்குரிய ஓர் உலகச் சூழலே தற்பொழுது நிலவுகின்றது. கவித்துவமாக இதைச் சொன்னால், ஓபாமா ஒரு யுகசந்தியில் நிற்கிறார் எனலாம்.

ஓர் அமெரிக்க ஜனாதிபதிக்குரிய சாதனை வெளி எனப்படுவது உள்நாட்டில் அல்ல. வெளியரங்கில். அதாவது, அனைத்துலக அரங்கில்தான் அதிக பட்சம் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னிருந்த அநேகமான அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களை ஒரு நாட்டின் தலைவராக உணர்ந்துகொண்டதைவிட உலக நாடுகளின் தலைவர்கள் என்று உணர்ந்துகொண்டதே அதிகம் எனலாம்.

இத்தகைய விளக்கத்தின்படி பார்த்தால், ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலத்திற்குரிய சாதனைப் பரப்பு எனப்படுவது அவருடைய வெளியுறவுக் கொள்கையில்தான் தங்கியிருக்கின்றது. எனவே, அனைத்துலக அரங்கில் அவருடைய சாதனை இலக்கை அடையத்தக்கதாகவே அவருடைய இரண்டாவது பதவிக் காலத்திற்குரிய வெளியுறவுக் கொள்கையும் அமைய முடியும். தனது இரண்டாவது பதவிக் காலத்திற்குரிய பிரதானிகளை அவர் அண்மையில் நியமித்திருக்கின்றார். வெளியுறவுச் செயலாளராக ஜோன் ஹரியும், பாதுகாப்பு செயலாளராக சத் ஹகெலும், சி.ஐ.ஏ.யின் பணிப்பாளராக ஜோன் பிரண்ணனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவைப் போன்ற பேரரசுகளில், செயலர்கள் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விடவும், ஏற்கனவே, வகுக்கப்பட்ட கொள்கைகளை அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள் என்பதே பெருமளவிற்குச் சரி. நிர்ணயகரமான காலங்களில் செயலர்கள் கொள்கைகள் தொடர்பில்; புதிய போக்குகளை உருவாக்குபவர்களாக மேலெழுவது உண்டு. ஹென்றி கீசிங்கரை இங்கு சுட்டிக்காட்டலாம். இப்படிப் பார்த்தால் ஓபாமாவின் நியமனங்கள் எதைப் பிரதிபலிக்கின்றன?

முதலில் அவர் யார் யாரை நியமித்திருக்கின்றார் என்று பார்க்கலாம். ஜோன் ஹெரியும், சக் ஹகெலும் வியாட்நாம் யுத்தத்தின் விளைவுகள் ஆகும். ஓபாமாவைப் பொறுத்த வரை அவர், அவருடைய வயதின் காரணமாக வியாட்நாமிய ஞபாகங்களுக்கு வெளியில் வந்த ஒரு தலைவராகப் பார்க்கப்படுகின்றார். ஆனால், அவருடைய இரு பிரதானிகளும் வியாட்நாமிய போரின் கசப்பான அனுபவங்களின் விளைவாக உருவானவர்களாக கருதப்படுகின்றார்கள். வியாட்நாம் போரில் பங்குபற்றிய ஹெரி அதற்கு எதிராக திரும்பிய முன்னாள் போர் வீரர்களின் பேச்சாளராகவே பிரபல்மடைந்தவர். அதைப் போலவே ஹகெலும் 2002இல் நியூஸ் வீக்கிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார். ‘’நாட்டை யுத்தத்தை நோக்கி விரைவாக இட்டுச் செல்லும் பலரும் அது இலகுவானது, விரைவானது என்று நினைக்கின்றார். ஆனால், அவர்களில் பலருக்கு யுத்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது.”

எனவே, ஹெரியும், ஹகெலும் போரின் கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்ற முன்னாள் போர் வீரர்களாகக் காணப்படுவதால் புதிய வெளியுறவுக் கொள்கையானது யுத்த வாதத்திலிருந்து ஓரளவிற்கேனும் விலகிச் செல்லாம் என்று ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது.

மேலும், சக்ஹகெல் தன்னை யூதர்களுக்கு நெருக்கமற்றவராக இதுவரையும் காட்டி வந்திருக்கிறார். இஸ்ரேலின் யுத்த முன்னொடுப்புகளுக்கு முழு அளவு ஆதரவு தராதவராகவும், அதனாலேயே இஸ்லாமிய நாடுகளை நோக்கி நெருங்கி வரக்கூடியவராகவும் வர்ணிக்கப்படுகின்றார். ஆனால், பதவி யேற்ற பின், அவரைச் சந்தித்த செனற்றர் ஸ்கியுமர் (ளூரஅநச) உடன் அவர் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாகக் கதைத்திருக்கிறார்.

மூன்றாமவர் ஜோன் பிரண்ணர். சர்ச்சைக்குரியதும் ஆனால், அமெரிக்கர்கள் மத்தியில் சாகச உணர்வை தூண்டவல்லதுமாகிய ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை நெறிப்படுத்திய பிரதானிகளில் ஒருவரான இவர், சி.ஐ.ஏ.இன் பணிப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஆளில்லா விமானங்கள் ட்ரோன் (னுசழநெ) என்று அழைக்கப்படுகின்றன. ஈழப்போரில் இவை வண்டு என்று அழைக்கப்பட்டன. இங்கு அவை சிறியரக வேவு விமானங்கள் தான். ஆனால், அமெரிக்காவின் ‘’பச்சை ஆபத்திற்கு” எதிரான போரில் அவை குண்டு வீச்சு விமானங்களாக வளர்ச்சிபெற்றுவிட்டன. இஸ்லாமிய ஆயுத பாணிகளுக்கு எதிராக குறிப்பாக குறிவைக்கப்பட்ட தலைவர்கள், பிரதானிகளுக்கு எதிரான தாக்குதல்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் அமெரிக்கர்களுக்கு உயிர் சேதம் இருக்காது. குறி பிசகினால், சாதாரண பொதுசனங்களே கொல்லப்படுகின்றார்கள். பாகிஸ்தானில் மட்டும் ஆயுத பாணிகள் மற்றும் பொதுசனங்கள் உள்ளடங்கலாக சுமாராக 2000இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிகரமானது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு தாக்குதல் பொறிமுறையாக அமெரிக்கர்கள் மத்தியில் பிரபல்யமுற்றிருக்கும் ரோன்கள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் உண்டு. முதலாவது பொதுசன இழப்பு. இரண்டாவது பிறநாட்டு வான் பரப்பினுள் அத்துமீறி நுழைவதால் சர்வதேச நெறிமுறைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு. இத்தகைய விசமர்சனங்களின் பின்னணயில்தான் பிரண்ணன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

எனவே, மேற்படி நியமனங்களின் மூலம் ஓபாமா ஒருவித கலப்புச் சமிக்ஞைகளையே வெளிப்படுத்தியிருக்கின்றார். அது தான் யதார்த்தமும் கூட. ஏனெனில், கவர்ச்சியான இலட்சியங்கள் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில்லை. மாறாக குரூரமான, கேவலமான யதார்த்தங்களே வெளியுறவுக் கொள்கையின் இறுதி வடிவம் எது என்பதைத் தீர்மானிக்கின்றன.
ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலமானது சர்வதேச அரங்கில் இருபெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. இதில் உடனடியானது இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போர். மற்றது சீன விரிவாக்கம்.

இஸ்லாதியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரானது ஒரு கவர்ச்சியான பதாதை மட்டுமே. யுதார்த்தத்தில் அது நேட்டோ விரிவாக்கம்தான். இஸ்லாமியத் தீவிரவாத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் நேட்டோ விரிவாக்கமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த நூற்றாண்டில் ரஷ்ய பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா ஏகப் பெரு வல்லராக எழுச்சிபெற்ற போது கிழக்கு ஐரோப்பாவில் புதிய சிறிய நாடுகள் பல பிரிந்து செல்ல ஊக்குவிக்கப்பட்டன. வெளித்தோற்றத்திற்கு அவை விடுதலை பெற்றதுபோலத் தோன்றினாலும் அதன் இறுதி இலக்கு எனப்படுவது சோவியத் யூனியனின் சிறகுகளை அரிவதுதான். அதாவது நேட்டோ விரிவாக்கம்தான். இதைப் போலவே அண்மை ஆண்டுகளில் அரபு நாடுகளில் தூண்டப்பட்டு வரும் அரப் ஸ்பிறிங் எனப்படும் உள்நாட்டு கிளர்ச்சிகளும் அவற்றின் இறுதி விளைவைப் பொறுத்த வரை நேட்டோ விரிவாக்கம்தான்.

ஒருபுறம், இஸ்லாமியத் தீவிரவாததத்திற்கு எதிரான போராகவும், இன்னொருபுறம் அரபு நாடுகளில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போராகவும் வௌ;வேறு வடிவங்களை எடுத்துள்ளபோதிலும் அவை அவற்றின் இறுதி இலக்கைப் பொறுத்த வரை நேட்டோ விரிவாக்கம் தான். இப்பொழுது மேற்காசியாவில் நேட்டோ விரிவாக்கம் அதன் இறுதி கட்டத்தை நெருங்கத் தொடங்கிவிட்டது. சிரியா வீழ்ச்சி அடைந்தால் மத்திய தரைக் கடல் நேட்டோ வாவியாகிவிடும் என்று நம்பப்படுகின்றது. இந்நிலையில் மேற்காசியாவில் நேட்டோ விரிவாகத்திலுள்ள இறுதிச் சவால் ஈரான்தான். ஈரானை முறியடிக்காமல் அந்தப் பிராந்தியத்தில் நேட்டோ விரிவாக்கத்தை புரணப்படுத்த முடியாது. ஈரானைத் தோற்கடிக்காமல் விடுவதற்கு ஓபாமா ஒன்றும் யேசு கிறிஸ்துவோ அல்லது கௌதம புத்தரோ அல்ல. இலட்சிய வாதங்கள் வெளியுறவுக் கொள்கைகள் ஆகிவிடாது. அது போலவே சீன விரிவாக்கத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

சீன விரிவாக்கமானது நேட்டோ விரிவாக்கத்தைப் போல ஒரு படைத்துறை நடவடிக்கை அல்ல. தாய்வானையும் தீபெத்தையும் தவிர்த்துப் பாரத்தால் சீன விரிவாக்கம் எனப்படுவது வெளிப்படையாக இரத்தம் சிந்தும் நடவடிக்கை அல்ல. வறிய ஆபிரிக்க, ஆசிய நாடுகளைப் பொறுத்த வரை சீனாவானது இந்த நூற்றாண்டின் நிகரற்ற ஒரு கொடை வள்ளலாக காட்சி தருகின்றது. நேட்டோ விரிவாக்கத்தின் விளைவாக உலகின் சில தலைநகரங்கள் அமெரிக்க தூதுவர்களுக்கும், அமெரிக்க பிரஜைகளுக்கும் பாதுகாப்பற்றவையாகக் காணப்படுகின்றன. மாறாக, சீன விரிவாக்கத்தின் விளைவாக உலகின் அநேகமாக எந்தவொரு தலைநகரத்திலும்; சீனப் பிரதானிகளுக்கோ அல்லது சீனப் பிரஜைகளுக்கோ உயிர் ஆபத்து என்ற அச்சுறுத்தல் இல்லை. 21ஆம் நூற்றாண்டின் சக்தி மிக்க முதலாளித்துவமாக எழுச்சி பெறும் சீனாவின் புதிய தலைவராக ச்ஷி (ஓi) வரும் மார்ச் மாதம் பொறுப்பேற்கிறார். முன்பிருந்த தலைவரை விடவும் அதிகப்படியான ஒரு தேசியவாதியாக அவர் அறியப்படுகின்றார்.

இத்தகையதொரு பின்னணியில் அமெரிக்காவானது ஒன்றில் சீனாவின் துருவ இழுவிசைக்கும், நேட்டோ விரிவாக்கத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது சீனாவின் சிறகுகளை கத்தரிக்கவேண்டும். இப்படிப் பார்த்தால் ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் எனப்படுவது மிகவும் நிர்ணய கரமான ஒரு காலப்பகுதியாகவே இருக்கப்போகின்றது.

இத்தகையதொரு பின்புலத்தில் வைத்தே, இலங்கைத்தீவு குறித்து அமெரிக்கா எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்று சிந்திக்கவேண்டும். ஒருதுருவ உலக ஒழுங்கானது ஆசியாவில்தான் அதன் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். உலகின் மிகப் பெரிய அதேசமயம் மிக வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்கள் (சீனா-இந்தியா) ஆசியாவில்தான் அருகருகே காணப்படுகின்றன. உலகின் மிகக் கவர்ச்சியான நுகர்வுச் சக்தி மிக்க இரு பெரும் மத்திய தரவர்க்க சந்தைகளும்; இவ்விரு நாடுகளிலும்தான் காணப்படுகின்றன. இவைதவிர உலகின் அணுவாயுதப் பகை எல்லைகள் என்று பார்த்தால் அவை ஆசியாவில்தான் உண்டு. ஒன்று இந்திய-சீன எல்லை, மற்றது இந்திய – பாகிஸ்தான் எல்லை. எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஓபாமாவின் சோதனைக் களம் ஆசியாதான்.

இலங்கைத் தீவு இந்தச் சோதனைக் களத்தின் இரு பெரும் இழுவிசைகளுக்கு இடையே சிக்குண்டிருக்கும் ஒரு குட்டித்தீவாகும். துருவ இழுவிசைகளுக்கு இடையில் சிக்கியே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் பலமாகக் காணப்பட்டபோது ஈழத் தமிழ் அரசியல் அரங்கு எனப்படுவது வெளிச் சக்திகளால் இலகுவாக கையாளப்பட முடியாதபடி மூடப்பட்டிருந்தது. இப்பொழுது அது திறக்கப்பட்டுள்ளது.

சீனாவின் துருவ இழுவிசைக்குள் கொழும்பு பூரணமாக ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே புதுடில்லி கொழும்பை ஆரவணைத்து வருகின்றது. ஆனால், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னரும் எந்த நோக்கத்திற்காக இந்தியா தமிழர்களைக் கைவிட்டு கொழும்பைத் தொடர்ந்து தழுவி வருகின்றதோ அந்த நோக்கம், அதாவது சீனாவின் இழுவிசைக்குள் கொழும்பு செல்வதை தடுப்பது என்பது ஈடேறவில்லை. பர்மாவை எப்படி சீனாவின் ஈர்ப்பு வலையத்திற்குள் இருந்து ஓரளவிற்காவது வெளியில் எடுக்க முடிந்ததோ அப்படியே கொழும்பையும் அசைத்துப் பார்க்கலாம் என்று அமெரிக்காவும், இந்தியாவும் முயற்சிக்கின்றன. வெற்றிபெறாத இம்முயற்சிகள் காரணமாக இலங்கை பொறுத்து அவர்களுக்குள்ள தெரிவுகள் மிகவும் சுருங்கிச் செல்கின்றன. விடுதலைப்புலிகள் இருந்தபோதும் நிலைமை இப்படித்தான் இருந்தது. இந்நிலையில் தமக்குரிய புதிய தெரிவுகளை உருவாக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும். கொழும்பானது தொடர்ந்தும் சீனாவின் ஈர்ப்பு விசைக்கு இணக்கமான முடிவுகளை எடுக்கிறதா? இல்லையா? ஏன்பதில்தான் எல்லாம் தங்கியிருக்கின்றது. அதாவது ஓபாமாவின் புதிய நியமனங்களில் யாருக்கு இலங்கைத்தீவில் அதிகம் வேலை இருக்கின்றது என்பது. இராஜீய வழிமுறைகளை வலியுறுத்தும் சக் ஹகெல் மற்றும் ஜோன் ஹெரிக்கு அதிகம் வேலை இருக்குமா? அல்லது ஆளில்லா விமானங்களை அதிகம் நம்பும் ஜோன் பிரண்ணனுக்கு அதிகம் வேலை இருக்குமா? என்பது.

20.01.2013
உதயன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *